அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான் என்பதை எவ்வாறு நம்ப வேண்டும்!

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், நமது இரட்சகன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இரவில் மூன்றாவது பகுதி இருக்கும்போது இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன், யாரேனும் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னக்கிறேன் என்று கூறுகிறான். (அறிவிப்பாளர்: அபு ஹுரைரா, நூல்: புகாரி – 1145)

           இந்த ஹதீஸில் அல்லாஹ் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இறங்கி வருவதாக வந்துள்ளது. இதனை எப்படி விளங்குவது? இதற்கு நேரடியான பொருள் கொடுப்பதா? 

அல்லது மாற்று பொருள் கொடுப்பதா? இதில் எது சரியான நம்பிக்கை என்பதை தெளிவுப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்!

 இறங்குதல் என்பது அல்லாஹ்வின் செயல்களோடு தொடர்புடைய பண்பாகும். இதனை அரபியில் ஸிஃபத் ஃபிஹலிய்யா என்பார்கள்.

         அவனது கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும் தக்கவாறு அவன் நாடும் போது இறங்குவான் என்று நாம் நம்ப வேண்டும்.

அல்லாஹ்வின் பெயர், பண்புகளோடு தொடர்புடைய இந்த இறங்குதல் என்ற பண்பு அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அல்லாஹ்வின் மற்ற பண்புகளை எவ்வாறு நேரடியான பொருளில் விளங்குவோமோ அதுபோன்று இந்த பண்பையும் நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும்.
 
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவனே (யாவற்றையும்) செவியேற் கிறவன், பார்க்கிறவன் (அல்குர்ஆன் 42:11)

அல்லாஹ்வின் பண்புகளை பொருள் மாற்றாமலும், மறுக்காமலும், உதாரணம் கூறாமலும், இப்படிதான் இருக்கும் என்று சொல்லாமலும், படைப்பினங்களோடு ஒப்பிடாமலும் மற்றும் சுயவிளக்கம் அளிக்காமலும் நேரடியான பொருளில் நம்ப வேண்டும். முன்சென்ற நல்லோர்களான ஸஹாபாக்கள் தாபியீன்கள் இப்படிதான் நம்பினார்கள்.

ஜஹமிய்யாக்கள், அஷாயிராக்கள் போன்ற வழிதவறியவர்கள் தான் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தும், மாற்று பொருள் கொடுத்தும் நம்பினார்கள்.

நபி அவர்களிடமிருந்து நேரடியாக மார்க்கத்தை பெற்ற ஸஹாபாக்கள் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் விளங்கினார்கள். எனவே நாமும் அவ்வாறே விளங்குவோம். அவ்வாறு விளங்குவது தான் சரியென்பதற்கான ஆதாரத்தினை இனி காண்போம்,

ஹதீஸ்களில் 28 ஸஹாபாக்கள் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான் என்ற அறிவிப்பை அறிவிக்கிறார்கள். இமாம் தாருகுத்னி, இமாம் அபுபக்கர் அஸ்ஸாபுனி, ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா மற்றும் இமாம் தஹபீ போன்ற மார்க்க அறிஞர்கள் அத்தகைய ஹதீஸ்களை தொகுத்து நூல்களை எழுதியுள்ளார் கள். அவை அனைத்திலும் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும் என்பதை ஆணித்தரமான ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறார்கள்.
 
عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِى فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِى فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِى فَأَغْفِرَ لَهُ (البخاري – 1145)

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், நமது இரட்சகன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இரவில் மூன்றாவது பகுதி இருக்கும்போது இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், யாரனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன், யாரேனும் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். (அறிவிப்பாளர்: அபு ஹீரைரா, நூல்:புகாரி – 1145)

அரபியில் ஒரு பொருள் மேலிருந்து கீழ் நோக்கி இறங்குவதற்கு (النزول) என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அந்த வார்த்தையே இங்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது. 

மேலும் அல்லாஹ் இறங்கி வருதல் என்ற வார்த்தையை தன்னோடு இணைத்து கூறுகிறான். எனவே இதனை நேரடியான பொருளில் தான் எடுக்க வேண்டும்.

என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று இந்த ஹதீஸில் உள்ளது.

அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால், இதனை யார் கூறுவதாக எடுத்துக் கொள்வது? அல்லாஹ்வின் அருளும், சிறப்பு கவனமும் பேசுமா?

 
عَنْ أَبِى هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « يَنْزِلُ اللَّهُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا كُلَّ لَيْلَةٍ حِينَ يَمْضِى ثُلُثُ اللَّيْلِ الأَوَّلُ فَيَقُولُ أَنَا الْمَلِكُ أَنَا الْمَلِكُ مَنْ ذَا الَّذِى يَدْعُونِى فَأَسْتَجِيبَ لَهُ مَنْ ذَا الَّذِى يَسْأَلُنِى فَأُعْطِيَهُ مَنْ ذَا الَّذِى يَسْتَغْفِرُنِى فَأَغْفِرَ لَهُ فَلاَ يَزَالُ كَذَلِكَ حَتَّى يُضِىءَ الْفَجْرُ

2 – அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும்போதுஇ கீழ் வானிற்கு இறங்கிவந்து, ‘நானே அரசன்; நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்’என்று கூறுகிறான். ஃபஜ்ர் நேரத்தின் வெளிச்சம் வரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான். (முஸ்லிம் – 1387)

இந்த ஹதீஸில் (أنا الملك أنا الملك) நானே அரசன்! நானே அரசன்! என்று கூறுவதாக வந்துள்ளது. அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால், நானே அரசன்! நானே அரசன்! என்று கூறுவதை யார் கூறுவதாக எடுத்துக் கொள்வது?
இதனை அல்லாஹ் கூறுவதாக நேரடியான பொருளில் தான் எடுக்க வேண்டும். அதுவே சரியான முடிவாகும்.

 
عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا كَانَ ثُلُثُ اللَّيْلِ الْبَاقِى يَهْبِطُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى السَّمَاءِ الدُّنْيَا ثُمَّ تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ ثُمَّ يَبْسُطُ يَدَهُ فَيَقُولُ هَلْ مِنْ سَائِلٍ يُعْطَى سُؤْلَهُ فَلاَ يَزَالُ كَذَلِكَ حَتَّى يَطْلُعَ الْفَجْرُ (احمد – 3673)

3 – அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், இரவின் மூன்றாவது பகுதி மீதம் இருக்கும் போது அல்லாஹ் முதல் வானத்தை நோக்கி இறங்குகிறான். பிறகு வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. பிறகு அல்லாஹ் தனது கையை விரித்தவாறு கூறுவான், எவரேனும் (தனது தேவையை) கேட்பவர் உண்டா? அவரது கேள்விக்கு பதிலளிக்கப்படும். ஃபஜ்ர் நேரம் உதயமாகும் வரை இவ்வாறு தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறான். (நூல்: அஹமத், 3673) ஸஹீஹ்)

(يهبط) இவ்வார்த்தைக்கு அரபியில் இறங்கி வருதல் என்று பொருள்.
இந்த ஹதீஸில் அல்லாஹ் இறங்கி வருகிறான் பிறகு தனது கையை விரிக்கிறான் என்று வந்துள்ளது. அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் இறங்குகிறது அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால், அல்லாஹ்வின் அருளுக்கும், சிறப்பு கவனத்திற்கும் கை இருக்குமா?

எனவே அல்லாஹ் இறங்குகிறான் என்பதற்கு நேரடியான பொருள் கொடுப்பதே தெளிவான முடிவாகும்.
 
عن الْأَغَرُّ أَبُو مُسْلِمٍ، قَالَ: أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ يَشْهَدَانِ لَهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ” إِذَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ الْأَوْسَطِ هَبَطَ الرَّبُّ تَعَالَى إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَقُولُ: هَلْ مِنْ [ص:29] دَاعٍ؟ هَلْ مِنْ سَائِلٍ؟ هَلْ مِنْ مُسْتَغْفِرٍ؟ هَلْ مِنْ تَائِبٍ؟ حَتَّى يَطْلُعَ الْفَجْرُ ثُمَّ يَصْعَدُ

4 – புகாரி, முஸ்லிமில் வந்துள்ள அதே கருத்தில் முஸ்னத் அபி அவனா என்ற நூலிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அதில் கூடுதலாக பிறகு ஃபஜ்ர் நேரம் வந்த பிறகு மேலே உயர்கிறான் என்று நபி அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா, அபு சயீத் அல்குத்ரி அவர்கள் அறிவிக்கும் சஹீஹான ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. (முஸ்னத் அபி அவானா)

மேலே உயர்கிறான் என்ற வார்த்தையை நபி அவர்கள் கூறியதின் மூலம் அல்லாஹ் முதல் வானத்திற்கு நேரடியாக இறங்கி வருகிறான் என்ற பொருளில் தான் நம்ப வேண்டும். அப்படி இருந்தால் தான் மேலே உயர்கிறான் என்ற வார்த்தைக்கு சரியான பொருள் அளிக்க முடியும்.

இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் வைத்து அல்லாஹ் இறங்குகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் நம்ப வேண்டும் என்பதை அறியலாம். இதுவே அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வதில் சரியான, தெளிவான, உண்மையான மற்றும் உறுதியான நம்பிக்கை ஆகும்!

அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் வருகிறது அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பவர்களுக்கு மறுப்பு
1- இவ்வாறு மாற்று பொருள் கொடுப்பதற்கு என்ன ஆதாரம்?

2- அல்லாஹ்வின் அனைத்து பண்புகளையும் நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும் என்று விதி இருக்கும் போது, இறங்கி வருகிறான் என்ற பண்பிற்கு மட்டும் மாற்று பொருள் கொடுப்பதற்கான அவசியம் என்ன?

3- அல்லாஹ் இறங்கி வருகிறான் என்று கூறிய நபி அவர்கள் அவன் எப்படி இறங்குகிறான் என்ற விளக்கத்தை எங்கும் கூறவில்லை. எனவே அல்லாஹ்வின் பண்புகள் தொடர்பான விதியான நேரடியான பொருளில் தான் விளங்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு இங்கும் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் எடுக்க வேண்டும். அப்படி தான் இந்த ஹதீஸை அனுகிய ஸஹாபாக்கள், தாபியீன்பகள், ஹதீஸ்கலை இமாம்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் எடுத்திருக்கிறார்கள்.

அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மாற்று பொருள் கொடுப்பது தான் சரியென்றால்,
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இவ்விஷயத்தில் தவறு செய்துவிட்டார்களா?

மார்க்கத்தை முழுமையாக நபி அவர்கள் எத்திவைத்து விட்டார்கள் என்றிருக்கும் போது, அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பது பற்றி கூறிவிட்டு வேறு விளக்கம் அளிக்காமல் இருந்ததை அவர்கள் கூறியதை நேரடியான பொருளில் விளங்க வேண்டும் என்று எடுத்துக் கொள்வதா?

அல்லது நபி அவர்கள் இதற்கு விளக்கம் கூறாமல் மறைத்து விட்டார்கள் என்று எடுத்துக் கொள்வதா?

4- . அவ்வாறே அல்லாஹ் முதல் வானத்திற்கு இரவின் மூன்றாவது பகுதியில் இறங்கி வருகிறான் என்று நபி அவர்கள் கூறிய ஹதீஸ் ஸஹாபாக்களுக்கு தெரியும். எத்தனையோ சந்தேகங்களை நபி அவர்களிடம் கேட்ட ஸஹாபாக்கள் இதனை ஏன் கேட்கவில்லை?

பதில் இதுதான்:
அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்போடு ஒப்பிடக் கூடாது, மாற்று பொருள் கொடுக்க கூடாது. மாறாக நேரடியான பொருளில் விளங்க வேண்டும் என்ற அடிப்படையை அவர்கள் நபி அவர்களிடமிருந்து அறிந்து வைத்திருந்தார்கள். ஆகவேதான் இதுப்பற்றி நபி அவர்களிடம் கேட்கவில்லை.

5- அல்லாஹ் இறங்கி வருவதை நேரடியான பொருளில் விளங்கினால் அர்ஷ் காலியாகி விடும் என்ற வாதத்தை வைத்து சிலர் அல்லாஹ்வின் இந்த பண்பை மறுக்கின்றனர். அல்லாஹ் இறங்கி வருகிறான் என்ற ஹதீஸை கூறிய நபி அவர்களுக்கு அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்திருக்கிறான் என்பது தெரியும். நபி அவர்களிடமிருந்து இதனைக் கேட்ட ஸஹாபாக்களுக்கும் இது தெரியும். ஆனாலும் அவர்கள் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடியான பொருளில் தான் விளங்கினார்கள்.

மேலும் மனிதன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் போது முதல் இருந்த இடம் காலியாகி விடும். அதுபோலவே அல்லாஹ் இறங்கி வந்தால் அர்ஷ் காலியாகி விடும் என்று ஒருவர் கூறினால், அவர் அல்லாஹ்வை படைப்பினங்களோடு ஒப்பிடுகிறார். இதனை (التشبيه) தஷ்பிய் என்பார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்போடு ஒப்பிட்டதால் சிலர் வழிகேட்டில் சென்றார்கள்.

அல்லாஹ்வின் பண்புகளை இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளபடி நேரடியான பொருளில் நம்புவது அவசியமாகும். அதில் சுயவிளக்கத்தை வைத்து மாற்று பொருள் கொடுப்பது வழிகேடாகும். அல்லாஹ் இத்தகைய வழிகேட்டிலிருந்து நம்மை காப்பானாக! ஆமீன்!


(விமர்சனங்களும்- விளக்கங்களும்)

அல்லாஹ் இரவின் மூன்றாம் பகுதியில் முதல் வானத்திற்கு இறங்கி வருவதை நேரடி பொருளில்  தான் நம்ப வேண்டும் என்பதை ஏற்க மறுக்கும் சிலர், அல்லாஹ் இறங்கி வருவதில்லை. அவனது  அருள் தான் இறங்குகிறது என்று மாற்று விளக்கம் அளிக்கின்றனர்.

அவர்கள் அளிக்கும் மாற்று விளக்கத்திற்கு வலுசேர்க்கும் விதமாக சில விமர்சனங்களை முன்  வைக்கின்றனர். 

1 -அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருவதை நேரடி பொருளில் நம்பினால், அர்ஷ் காலியாகி விடும். எனவே அல்லாஹ்வின் அருள் தான் இறங்குகிறது.

2 - இரவின் மூன்றாம் பகுதி ஒவ்வொரு நாட்டிலும் மாறி மாறி வருவதினால் அல்லாஹ் முதல் வானத்திலேயே இருப்பான் என்ற தவறான கருத்து வந்துவிடும். எனவே அல்லாஹ்வின் அருள் தான் இறங்குகிறது.

 
இதுபோன்ற வியாக்கியானங்களை எழுப்பி அல்லாஹ் இறங்கி வருவதற்கு நேரடி பொருள் தரக்கூடாது. மாற்று பொருள் தான் தர வேண்டும் என்று கூறுகின்றனர்.

இந்த விமர்சனங்களுக்கான  விளக்கங்களை இனி பார்ப்போம்,

1 - அல்லாஹ்வின் அனைத்து பண்புகளையும் நேரடி பொருளில் தான் நம்ப வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும். அதனடிப்படையில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகின்ற பண்பையும் நம்ப வேண்டும். ஆகவே தான் நபி ஸல் அவர்களிடமிருந்து மார்க்கத்தை பெற்ற ஸஹாபாக்களிலிருந்து இன்று வரை நேர்வழியில் பயணிப்பவர்கள் அல்லாஹ் இறங்கி வருவதை நேரடியான பொருளில் தான் நம்புகின்றனர்.

2 - அல்லாஹ்வின் பண்புகளின் பொருள் தெரியும். அதன் நிலை நமக்கு தெரியாது. அதனை அல்லாஹ் தான் அறிவான் என்பது அஹ்லுஸ் ஸூன்னாவினரின் கொள்கையாகும். எனவேதான் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான் என்பதை நேரடி பொருளில் நம்பும் அறிஞர்கள், அல்லாஹ் இப்படி தான் இறங்கி  வருவான் என்று அதன் நிலைப்பற்றி எல்லாம் விளக்கம் அளிப்பதில்லை.

அல்லாஹ்வின் பண்புகளை திரித்து கூறும்  வழிதவறிய கூட்டத்தினர் தான் இப்படி தான் இறங்கி வர வேண்டும், இறங்கி வந்தால் அர்ஷ் காலியாகி விடும் என்று  வியாக்கியானம் அளிக்கின்றனர்.

3 - அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதற்கு நேரடி விளக்கமளிக்காமல் மாற்று விளக்கம் அளிப்பது தான் சரியென்றால் அதற்கான ஆதாரம் என்ன? அறிஞர்களில் யாரெல்லாம் இந்த கருத்தை கூறியுள்ளார்கள்?

4 - அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான் என்றால் அவனது அருள் இறங்குகிறது என்று பொருள் கொள்வது தான் சரி என்றால்? ஒருவர் இந்த விளக்கத்திற்கு மாற்றமாக அல்லாஹ் இறங்குகிறான் என்றால், அவனது கட்டளை இறங்குகிறது என்கிறார். இன்னொருவர் அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் மலக்குகள் இறங்குவார்கள் என்கிறார். இவ்வாறு ஆதாரமில்லாமல் ஒவ்வொருவரும்  கூறுகின்ற விளக்கத்தை சரியானது என கூற முடியுமா? நிச்சயமாக முடியாது!

ஆனால் வழிகேட்டில் பயணிப்பவர்கள் இந்த வியாக்கியானங்களை எல்லாம்  சரிகண்டு தான் ஆக வேண்டும். ஏனெனில் அவர்களில் எந்த ஒருவரிடத்திலும் இதற்கான ஆதாரம் இல்லை எனும் போது எதனை வைத்து தன்னுடைய நிலைபாடு தான் சரி என அவர்களால் வாதிட முடியும்?

5 - இரவு ஒவ்வொரு நாட்டிலும் மாறி  வருவதினால், உலகின் ஏதாவது ஒரு பகுதியில் இரவு இருந்துக் கொண்டே இருக்கும். அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதை நேரடி பொருளில் எடுத்தால், அல்லாஹ் முதல் வானத்திலே இருப்பான் என்ற தவறான கருத்து வந்து விடும் எனவே தான் நாங்கள் மாற்று விளக்கம் அளிக்கின்றோம் என்று சிலர் தங்களின் வழிகேடான கருத்திற்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கின்றனர்

இந்த வியாக்கியானத்தை அளிப்பவர்கள் அல்லாஹ்வை படைப்பினங்களோடு ஒப்பிடுகின்றனர். இவ்வாறு ஒப்பிடுவதே அடிப்படையில் தவறாகும்.

 لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏
அவனைப் போன்று எதுவுமில்லை. அவன் செவியேற்கின்றவன், பார்க்கின்றவன்.
(அல்குர்ஆன் : 42:11)

இந்த வசனத்தில் அல்லாஹ் செவியேற்பவன், பார்க்கின்றவன் என கூறுகிறான். மனிதனும் செவியேற்கிறான்,  பார்க்கிறான். 
எப்படி இந்த இரண்டையும் ஒப்பிடாமல் அல்லாஹ்வின் பண்புகள் வேறு, படைப்பினங்களின் பண்புகள் வேறு என்பதை நாம்  நம்புகின்றோமோ,  அதுபோன்றே அல்லாஹ் இறங்கி வருவதை, படைப்பினங்கள் இறங்கி வருவதோடு ஒப்பிடாமல் நம்பினால் இந்த கொள்கை குழப்பத்திலிருந்து தெளிவை பெறலாம்.

6 - நேரம், காலம் எல்லாம் மனிதர்களுக்கு உட்பட்டது. அல்லாஹ்விற்கு அதனை பொருத்தக் கூடாது. மேலும்  படைப்பக்கப்பட்ட எந்த ஒன்றும் அல்லாஹ்வை சூழவும்  முடியாது.

7 - அல்ஃபாத்திஹா (அத்தியாயம்) எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல்,பிரார்த்தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைத்  துதித்துவிட்டான் என்று கூறுவான். அடியான் மாலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான் என்றும் கூறியுள்ளார்கள்.)
மேலும், அடியான் இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். அடியான் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான்.
ஸஹீஹ் முஸ்லிம் : 655. 

இந்த ஹதீஸின்  படி உலகெங்கும் வாழும்  முஸ்லிம்கள் எல்லா நேரங்களிலும் ஏதாவது ஒரு பகுதியில் தங்களின்  தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதும் போது, அல்லாஹ் இவ்வாறு பதிலளிப்பதாக வந்துள்ளது.
அல்லாஹ் எவ்வாறு பதிலளிக்கிறான் என்றே கேள்வியே இங்கு நமக்கு  வருவதில்லை. காரணம் அல்லாஹ் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் பெற்றவன் என்று நம்பிக்கை கொள்கிறோம்.

இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடம் அல்லாஹ் மறுமை நாளில் எப்படி ஒரே நேரத்தில் எல்லா மனிதர்களிடம் விசாரணை நடத்துவான் என்று கேட்கப்பட்டது? அதற்கவர்கள் உலகில் எல்லா மக்களுக்கும் ஒரே நேரத்தில் எப்படி  உணவளிப்பானோ அதுபோன்று  மறுமையில் விசாரணை நடத்துவான் என பதிலளித்தார்கள்.

இறுதியாக அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகின்ற பண்பை நேரடி பொருளில் நம்புவதே சரியான நம்பிக்கை ஆகும்!!!

ஆக்கம் 
ஹசன் அலி உமரி
أحدث أقدم