நபி (ﷺ) பிறந்தநாளைக் கொண்டாடுவது ஏன் 'பித்அத்' என்று கூறப்படுகிறது?

நபி (ﷺ) பிறந்தநாளைக் கொண்டாடுவது ஏன் 'பித்அத்' (மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செயல்) என்று கூறப்படுகிறது? 

அதற்கான காரணங்கள்:

ஆதாரங்கள் இல்லை : நபி (ﷺ) அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவது குறித்து திருக்குர்ஆனில் ஒரு வசனமோ, அல்லாஹ்வின் தூதர் (ﷺ)  அவர்களின் சஹீஹான (ஆதாரப்பூர்வமான) அல்லது ழயீஃபான (பலவீனமான) ஒரு ஹதீஸோ, அல்லது எந்தவொரு ஸஹாபியிடமிருந்தும் (நபித் தோழர்களிடமிருந்தும்) ஒரு அறிவிப்போ கூட இல்லை.
நபி(ﷺ) அவர்களோ நபித்தோழர்களோ செய்யவில்லை: நபி(ﷺ) அவர்கள் தம் வாழ்நாளில் தனக்காகவோ, அல்லது அவர்களின் தோழர்களோ,   குடும்பத்தினரோ அவர்களுக்காகவோ இந்த விழாவை நடத்தவில்லை.

அபூபக்ர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக் காலம்: 

உம்மத்தின் 'ஸித்தீக்' (உண்மையாளர்) என்றும், குகையில் நபி(ﷺ) தோழராகவும் இருந்த அபூபக்ர்  (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் ஆட்சி செய்த (2) ஆண்டுகளில் இந்த விழாவைக் கொண்டாடவில்லை.

உமர்  (ரழியழ்ழாஹு அன்ஹு)  அவர்களின் ஆட்சிக் காலம்: 

உம்மத்தின் 'ஃபாரூக்'என்று அழைக்கப்பட்ட உமர்  (ரழியழ்ழாஹு அன்ஹு)  அவர்கள் ஆட்சி செய்த (10) ஆண்டுகளிலும் இதைக் கொண்டாடவில்லை.

உஸ்மான்(ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக் காலம்: 

நபி(ﷺ) அவர்களின் இரண்டு மகள்களை மணந்தவர் (துன்னூரைன்), இரண்டு ஹிஜ்ரத்துகளை மேற்கொண்டவர் மற்றும் இந்த உம்மத்திலேயே மிகுந்த நாணமுடையவருமான உஸ்மான்
(ரழியழ்ழாஹு அன்ஹு)  அவர்கள் ஆட்சி செய்த (12) ஆண்டுகளில் இதைக் கொண்டாடவில்லை.

அலி (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக் காலம்: 

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களின் சிறிய தந்தை  மகனும், சொர்க்கத்துப் பெண்களின் தலைவியான ஃபாத்திமா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்களின் கணவருமான அலி (ரழியழ்ழாஹு அன்ஹு)  அவர்கள் ஆட்சி செய்த (5) ஆண்டுகளிலும் இதைக் கொண்டாடவில்லை.

முஆவியா (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக் காலம்: 

வஹியை எழுதியவரும், இஸ்லாத்தின் சிறந்த ஆட்சியாளருமான முஆவியா (ரழியழ்ழாஹு அன்ஹு)  அவர்களும் இதைக் கொண்டாடவில்லை.

ஹஸன் , ஹுஸைன் (ரழியழ்ழாஹு அன்ஹுமா ) : 
சொர்க்கத்து வாலிபர்களின் தலைவர்களான ஹஸன் மற்றும் ஹுஸைன் (ரழியழ்ழாஹு அன்ஹுமா ) ஆகிய இருவரும் தம் பாட்டனார் அல்லாஹ்வின் தூதர் (ﷺ)  அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை.

ஸஹாபாக்கள் (நபிகளாரின் தோழர்கள்): 

நபி (ﷺ)  அவர்கள் மரணிக்கும்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஸஹாபாக்கள்  இருந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட நபி (ﷺ) பிறந்தநாளைக் கொண்டாடவில்லை.

தாபிஈன்கள் (அடுத்த தலைமுறையினர்):

 ஸஹாபாக்களுக்குப் பின் வந்த தாபிஈன்களில் ஒருவர் கூட அல்லாஹ்வின் நபி (ﷺ) அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை.

நான்கு பெரும் இமாம்கள்: 

அபூ ஹனீஃபா (ரஹி மஹுல்லாஹ் ), மாலிக் (ரஹி மஹுல்லாஹ் ), ஷாஃபியீ (ரஹி மஹுல்லாஹ் ) மற்றும் அஹ்மத் (ரஹி மஹுல்லாஹ் ) ஆகிய பின்பற்றப்படும் நான்கு பெரும் இமாம்களில் ஒருவர் கூட அல்லாஹ்வின் நபி (ﷺ) அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை.
அவர்கள் நன்மையில் முந்திவிட்டனர்: இது ஒரு சிறந்த செயலாக இருந்திருந்தால், அவர்கள் நமக்கு முன்பாகவே இதைச் செய்திருப்பார்கள்.

தவறான புரிதல்: 

திங்கட்கிழமை நோன்பு போன்ற ஆதாரங்களை வைத்து பிறந்தநாள் கொண்டாட்டத்தை அனுமதிப்பவர்களின் புரிதல் சரியானது என்றால், மேற்கூறிய சான்றோர்கள் அதை ஆதாரமாகக் கொண்டாடியிருப்பார்கள். அவர்கள் அதை விட்டுவிட்டது, இந்த ஆதாரங்களை இவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதையே காட்டுகிறது.
இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ் ) அவர்களின் பொன்மொழி: "அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களது காலத்திலும், அவர்களின் தோழர்கள் காலத்திலும் எது மார்க்கமாக இருக்கவில்லையோ, அது இன்றைக்கும் 
மார்க்கமாக ஆக முடியாது."

மார்க்கத்தின் பூரணத்துவம்: 

அல்லாஹ்வின் தூதர்(ﷺ) அவர்கள் மரணிப்பதற்கு முன்பாகவே அல்லாஹ் மார்க்கத்தை முழுமையாக்கி, தன் அருட்கொடையையும் பூர்த்தி செய்துவிட்டான் என்பது தெளிவான உண்மை. "இன்று நான் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; எனது அருட்கொடையையும் உங்களில் பூர்த்தியாக்கி விட்டேன்; உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்." ( 5:3)

புதுமைகளுக்கு எச்சரிக்கை:

 மார்க்கத்தில் புதிதாக உருவாக்குவதையும், தானோ அல்லது தன் தோழர்களோ செய்யாதவற்றைச் செய்வதையும் பற்றி நபி(ﷺ)அவர்கள் எச்சரித்துள்ளார்கள்: "யார் நமது இந்த மார்க்கத்தில் அது அல்லாததைப் புதிதாக உருவாக்குகிறாரோ, அது நிராகரிக்கப்பட்டதாகும்." புகாரி 2697, முஸ்லிம் 1718 

சிறந்த மூன்று தலைமுறைகள்: 

சிறப்பிக்கப்பட்ட முதல் மூன்று தலைமுறையினரும் (ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஅத் தாபிஈன்கள்) நபிகளாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற ஒன்றை அறிந்திருக்கவே இல்லை.  நபி(ﷺ)அவர்கள் கூறினார்கள்: "மக்களில் சிறந்தவர்கள் எனது தலைமுறையினர், பிறகு அவர்களுக்கு அடுத்து வருபவர்கள், பிறகு அவர்களுக்கு அடுத்து வருபவர்கள்." 
ஆதார நூல்கள் : புகாரி 6695, முஸ்லிம் 2535, அபூதாவூத் 
4657, திர்மிதி 2221 
அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது நமக்குப்போதாதா?!

ஆதாரங்கள் இல்லை : 

இதன் மூலம், பிறந்தநாளைக் கொண்டாடுபவர்களிடம் குர்ஆன், ஸுன்னா, இஜ்மாஃ (ஏகோபித்த முடிவு), ஸஹாபாக்களின் செயல் அல்லது சரியான கியாஸ் (ஒப்பீடு) என எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது. மாறாக, அவர்களிடம் உள்ளதெல்லாம் தவறிழைத்த சில அறிஞர்களின் கூற்றுகளே; அவர்கள் அந்தத் தவறிலேயே அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.
நபிகளாரின் பிறந்தநாளைக் கொண்டாடுபவர்களிடம் கேட்கப்படும் 4 கேள்விகள்:

முதல் கேள்வி: பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது நன்மையளிக்கும் வணக்கமா ? அல்லது பாவச் செயலா? 
இது பாவச் செயல், இதைச் செய்தால் குற்றம் சேரும் என்று நீங்கள் கூறினால், உங்களுடனான கருத்து வேறுபாடு இத்துடன் முடிந்துவிட்டது.
மாறாக, இது நன்மை தரக்கூடிய ஒரு வணக்கம் என்று 
நீங்கள் கூறினால்!

இரண்டாவது கேள்வி: இந்த வணக்கம் நபி(ﷺ) அவர்களுக்குத் தெரியுமா?, அல்லது தெரியாதா?
அவர்களுக்குத் தெரியாது என்று நீங்கள் கூறினால்  நபி(ﷺ) அவர்களுக்கே தெரியாதது உங்களுக்கு எப்படி தெரியவந்தது ?  அவர்களுக்குத் தெரியும் என்று நீங்கள் கூறினால்!

மூன்றாவது கேள்வி: முஸ்லிம்களுக்கு நன்மை தரக்கூடிய, நபி(ﷺ) தெரிந்த இந்த வணக்கத்தை, அவர்கள் இந்த உம்மத்திற்கு எத்திவைத்தார்களா, இல்லையா?
அவர்களுக்குத் தெரிந்திருந்தும் எத்திவைக்கவில்லை என்று நீங்கள் கூறமாட்டீர்கள். ஏனெனில், அது தூதுத்துவத்தின் ஒரு பகுதியை நபி(ﷺ) மறைத்துவிட்டார்கள் என்று குற்றம் சுமத்துவதற்குச் சமமாகும். 
"தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எத்திவையுமீர்! நீர் (அவ்வாறு) செய்யாவிட்டால், அவனுடைய தூதுத்துவத்தை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்." (அல்குர்ஆன் 5:67)
அவர்கள் எத்திவைத்து விட்டார்கள் என்று நீங்கள் கூறினால்: நபி (ﷺ)  பொன்மொழிகளிலிருந்து அதற்கான ஆதாரம் எங்கே? என்று கேட்கிறோம்.
அவ்வாறு நீங்கள் சில ஆதாரங்களைக் 
குறிப்பிட்டால்!

நான்காவது கேள்வி: இந்த ஆதாரங்கள் அனைத்தும் சிறந்த மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த ஸஹாபாக்கள், தாபிஈன்கள் மற்றும் தபஅத் தாபிஈன்களுக்குத் தெரியாமல் மறைந்து, உங்களுக்கு மட்டும் வழிகாட்டப்பட்டு விட்டதா?!
அல்லது, அவர்கள் இந்த ஆதாரங்களை அறிந்து வைத்திருந்தும், அதைப் புறக்கணித்துச் செயல்படாமல் விட்டுவிட்டார்கள்; ஆனால் நீங்கள் மட்டும் அதன்படி செயல்பட வழிகாட்டப்பட்டு விட்டீர்களா?!

கண்ணியமிக்க அல்லாஹ்விடம், நம் அனைவரையும் நேரிய சத்தியப் பாதையிலும், நேரான வழியிலும் செலுத்துமாறு பிரார்த்திக்கிறோம்.
நம்முடைய நபியும், அன்பிற்குரியவரும், தலைவரும், கண்கள் குளிரக் காரணமானவருமான முஹம்மத் பின் அப்தில்லாஹ்  (ﷺ) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர், மனைவியர், தோழர்கள் மற்றும் இறுதி நாள் வரை அவர்களைச் சரியாகப் பின்பற்றுபவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் உண்டாவதாக!

நேர்வழிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்
( اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَعَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ) 

“யா அல்லாஹ்! ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்), மீக்காயீல் (அலைஹிஸ்ஸலாம்), இஸ்ராஃபீல் (அலைஹிஸ்ஸலாம்) ஆகியோரின் இரட்சகனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! உனது அடியார்களுக்கிடையில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்த விஷயங்களில் நீயே தீர்ப்பளிக்கிறாய். சத்தியத்தில் எது குறித்து கருத்து வேறுபாடு நிலவியதோ, அதில் உனது அனுமதியைக் கொண்டு எனக்கு நேர்வழி காட்டுவாயாக. நிச்சயமாக, நீ நாடியவர்களை நேரான பாதையில் செலுத்துகிறாய்.”

ஆதார நூல்கள் ; அபூதாவூத் 767, திர்மிதி 3420, நாஸாயி 1625, இப்னு மாஜா 1357 

s. யாஸிர் ஃபிர்தௌஸி 
அல் - ஜுபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா
أحدث أقدم