கிலாஃபாவைப் பற்றி கனவு காண்பது பயனுள்ளதா?

முஸ்லீம்களின் வீழ்ச்சிக்கு ஒரே காரணம் கிலாஃபாவின் முடிவுதான் என்று முஸ்லீம் இளைஞர்கள் நம்பவைக்கப்பட்டிருக்கின்றனர். கிலாஃபத் மீண்டும் நிறுவப்பட்டால், முஸ்லிம்களின் தற்போதைய மோசமான நிலை மாற்றப்பட்டு, மீண்டும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் முஸ்லிம்கள் உலகின் ஆட்சியாளர்களாக மாறுவார்கள் எனவும் கிலாஃபா இல்லாத காரணத்தினால்தான் முஸ்லீம்கள் தற்போது நடக்கும் எல்லாப் பிரச்சனைகளையும், கருத்து வேறுபாடுகளையும் போர்களையும் சந்திக்கிறார்கள் எனவும் நம்ப வைக்கப்படுகின்றனர். இப்படியான ஒரு கற்பனைக் கனவைத் தூண்டி  முஸ்லிம்களை அதி அற்புத கற்பனையான அலங்கார உலகில் அவர்களை வாழச் செய்கிறார்கள் இந்த கிலாஃபாவாதிகள்!

ஜமாஅத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன், ஹிஸ்புத் தஹ்ரீர் மற்றும் இதுபோன்ற பல அமைப்புகளும், இந்த அமைப்புகளால் தாக்கத்திற்காளான புத்திஜீவிகளும் எந்நேரமும் கிலாஃபாவின் கனவைப் பற்றி பேசி அதை வளர்க்கப் பாடுபடுகின்றனர். எந்தளவிற்கென்றால், தகுதியற்ற தனிப்பட்ட எந்தவொரு நபரும் ஒரு கிலாஃபாவை பகிரங்கமாக அறிவிக்கலாம், அதன்மூலம் அவரைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களை எளிதில் ஈர்க்கலாம் என்ற தவறான சிந்தனையின் வாசலை அவர்கள் திறந்துவிட்டிருக்கிறார்கள். நாம் வாழும் இந்த நூற்றாண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பின் தவறான செயல்பாடு இதற்கு ஒரு சிறந்த உதாரணம். கிலாஃபாவாதம் பேசிய இந்த அமைப்பின் மூலம் உலகம் முழுவதும் மார்க்கம் அறியாத பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வழிகெடுக்கப்பட்டனர்.   ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் பல தவறான செயல்பாடுகளினால் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்களும் உடமைகளும் காவு வாங்கப்பட்டு முஸ்லிம் உலகம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. வெற்று வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் இஸ்லாத்தின் எதிரிகளுக்கும், உலக ஊடகங்களுக்கும் தீனி போடப்பட்டு இஸ்லாமும் முஸ்லிம்களும் பல ஆண்டுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டதை நிச்சயம் நம்மால் மறக்க முடியாது. இதுபோன்று கிலாஃபாவாதம் பேசி அழிவில் வீழ்ந்தது முஸ்லிம் சமுதாயத்திற்கு இது முதல் முறையா என்றால் நிச்சயமாக இல்லை.கர்னல் கடாஃபி, ஜமால் அப்துந் நாசிர், ஜெனரல் ஒமர் அல் பஷீர், ஜெனரல் ஜியா உல் ஹக் போன்ற சர்வாதிகாரிகளுக்கு எதிராக புரட்சி செய்கிறோம் என்ற பெயரில் இறுதியில் குழப்பத்தைதான் இவர்கள் ஏற்படுத்தினார்கள்.

1924 ம் ஆண்டு உஸ்மானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், அந்தந்த பகுதிகளில் இருந்த செல்வாக்குமிக்க குடும்பங்கள் அவர்களின் பகுதிகளை ஆட்சி செய்யத் தொடங்கின; ஆனால் கிலாஃபாவின் கனவுகளை ஓயாது வளர்ந்தவர்களோ ஈராக், எகிப்து, சிரியா போன்ற நாடுகளில்  ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து மிகப்பெரிய இரத்தக்களரிக்கு வழிவகுத்தனர். இந்த செயல்பாடுகள் அனைத்தும் கிளர்ச்சியையும் அரசியல் ஸ்திரமின்மையையும் ஆதரிக்கும் ஒரு மதமாக இஸ்லாத்தை முஸ்லிம் அல்லாத உலகிற்கு சித்தரிக்கவே பெரும் உதவி செய்ததுz

கிலாஃபாவாதிகளின் தவறான வழிகாட்டுதல்களால் நிலைமை மேலும் மேலும் மோசமடைந்த போதிலும், துரதிருஷ்டவசமாக அவர்கள் இன்னும் தங்கள் தவறை உணரவே இல்லை என்பது வேதனையான விஷயம். கிலாஃபாவின் கனவை வளர்ப்பவர்களின் தவறுகள்தான் என்ன...?

1. கிலாஃபாவை நிறுவ வேண்டும் என்ற வைராக்கியம் கலந்த ஆர்வத்தில், அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளான தவ்ஹீத் ,அகீதா, மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிராகப் பேசுகிறார்கள்; செயல்படுகிறார்கள்*. *நேர்வழி பெற்ற கலீபாக்களின் ஆட்சிக் காலத்தில் உருவெடுத்த வழிகெட்ட கிளர்ச்சிக் கூட்டமான ஹவாரிஜ்கள் பல சஹாபாக்கள்  உயிருடன் இருந்த காலகட்டத்தில் கூட, நபி(ஸல்) அவர்களின் மருமகன் உஸ்மான்(ரழி) அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்ததைக் கூட அவர்கள் தங்கள் தவறாகக் கருதவில்லை.

 இறுதி நபித்துவத்தின் முதல் நூற்றாண்டிலிருந்து, அதாவது ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இன்றுவரை நேர்வழி சென்றவர்களில் இருந்து பிரிந்து தனித்து செயல்பட்ட இந்த கிளர்ச்சிப் பாதையான ஹவாரிஜ்களின் வழிமுறையை சரிகண்ட எந்த ஒரு அறிஞரையும் எனக்குத் தெரியாது. இன்னும் எந்த ஒரு அறிஞரும் இந்தப் பாதையை இஸ்லாமிய கொள்கை சார்ந்ததாகக் கருதவில்லை. இதுபோன்ற சூழல்களில் ஆயுதங்களை ஏந்துமாறும் யாரும்  ஊக்கப்படுத்தவுமில்லை.

2. இன்னும் ஆட்சியாளர்களுக்கு மற்றும் மன்னராட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்கள் உண்மையில் நபி (ஸல்) அவர்களுக்கு முற்றிலும் எதிரானவர்களே! ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

‎"الخلافة بعدي في أمتي ثلاثون سنة ثم ملك بعد ذلك"

" கிலாஃபா என்பது எனக்குப் பின்னர் என்னுடைய சமுதாயத்தில் முப்பது ஆண்டுகள் நீடிக்கும். அதற்குப்பின்னர் மன்னராட்சிதான்." (அபுதாவூத் ,ஹாகிம்,)

சஹீஹ் அல்- ஜாமி ' சாகீர் 3257 ( ஸஹீஹ் என்று இமாம் அல்பானி (ரஹ்) அறிவித்தார்).

முதல் நூற்றாண்டிலிருந்து இன்று வரை அனைத்து அறிஞர்களுமே, இந்தத் தெளிவான ஹதீஸின் காரணமாக, வம்சாவளி ஆட்சி முறையைத் தவறாகக் கருதியதில்லை. உண்மையில், ஹிஜ்ரி 61 முதல் முஆவியா(ரழி) அவர்கள் தங்களின் மகன் யஸீதை  கலிஃபாவாக  நியமித்தபோதே முஸ்லீம் உலகின் பெரும்பாலான பகுதிகளில் முடியாட்சி முறை செயல்படுத்தப்பட்டுவிட்டது.

அந்தக் காலகட்டங்களில் கிலாஃபாவைக் கொண்டுவர எந்த ஒரு அஹ்லுஸ் ஸுன்னாஹ் அறிஞரும் முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் கிலாஃபா என்பது  இஸ்லாமிய உலகின் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருந்தாலும், ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருக்கும் முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்கியதற்குப் பின்பே அதைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள்.

அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபிமார்கள் யாரும் கிலாஃபாவை நிறுவுவதற்காக மக்களிடம் அழைப்புப்பணி செய்யவில்லை. நபிமார்களின் பிரதான முதல் அழைப்பே உண்மையான ஓர் இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற தவ்ஹீதை நிலைநாட்டுவதின் பக்கமே இருந்தது.

தவ்ஹீதை நிலைநாட்டுதல் என்பது சமூகத்தின் சமூக-அரசியல் சீர்திருத்தத்திற்குத் தேவையான அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு சரியான சங்கிலித் தொடர்பை இயல்பாகவே அது ஏற்படுத்திவிடும். இதுபோன்ற காரணங்களால்தான் முன்சென்ற எந்த நல்லறிஞரும் மக்களை கிலாஃபாவை நிருவுவதற்கு அழைக்கவில்லை. தவ்ஹீதின் பக்கமே மக்களை அழைத்தார்கள்.

நவீன கிலாஃபாவாதிகள் மட்டுமே மன்னராட்சியை வெறுக்க வைத்து மக்களை கிலாஃபாவின் பக்கம் அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால் இந்த கிலாஃபா என்ற இஸ்லாமிய அரசாங்கத்தை இப்போது நிருவ முடியாது என்ற உண்மையை ஏனோ மக்களிடம் மறைத்து விடுகிறார்கள். இஸ்லாத்தின் சிறந்த நூற்றாண்டுகளிலேயே இதை உறுதியாக நிருவ முடியாத சூழல் இருந்தபோது, முஸ்லிம்களின் வாழ்வில் இஸ்லாம் தேய்பிறையாக இருக்கும் இந்தக் காலத்தில் எப்படி அதை நிருவ முடியும்?

இந்த சிக்கலில் இருந்து விடுபட ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.முழு முஸ்லிம் சமூகமும் நேர்மையாகவும் தன்னலமற்றும் மார்க்கத்தில் கூறப்பட்ட இறைவனின் உத்தரவுகளை அப்படியே பின்பற்றுவது ஒன்றுதான் இதற்கான தீர்வாகும். அது மட்டுமே அல்லாஹ்வின் உதவியை நமக்குப் பெற்றுத்தரும்.

ஒரு மகன் தன் தந்தைக்காக தியாகம் செய்ய முடியாத, ஒரு மனைவி தன் கணவனுக்காக தியாகம் செய்ய முடியாத ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு முழு சமூகமும் பிறருக்காக விட்டுக் கொடுக்கக்கூடிய அளவு தியாகத்தை நம்மால் எப்படி ஏற்படுத்த முடியும் ? இந்த வாதத்தைதான் முஆவியா(ரழி) அவர்கள் தனது மகனை கலீஃபாவாக ஆக்கும் சமயத்தில் பிற சஹாபாக்களிடம் வைத்தார்கள். அன்றைய மக்களில் பலர் அவரது நியாயத்தை ஒப்புக் கொண்டு அவரது மகன் யஸீத் அவர்களை கலீஃபாவாக ஏற்றுக் கொண்டார்கள். ஒரு சிலர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட வன்முறை வழிமுறைகளையோ அல்லது கிளர்ச்சிப் பாதையையோ கலிஃபாவுக்கு எதிராக தேர்ந்தெடுக்கவில்லை.

மேலும், கிலாஃபாவை நிறுவுவதற்கான சிந்தனையானது அடிப்படையில் ஒரு பொருளாதார சார்புடையதாகவே இருக்கிறது. இது உலக வெற்றி மற்றும் உலகியல் சிந்தனை சார்ந்த நோக்கத்தில்தான் உருவாகிறது. நவீன சிந்தனையாளர்களுக்கு முஸ்லிம்கள் ஏன் தீனைப் பின்பற்றவில்லை என்ற வருத்தமோ கவலையோ ஏற்படுவதில்லை. மாறாக, முஸ்லீம்கள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பலவீனமாக இருக்கிறார்களே என்பதில் மட்டும்தான் கவலை கொண்டு அதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இதனால் அவர்கள் இஸ்லாம் பற்றிய தெளிவான போதனைகளைப் புறக்கணித்து, கிலாஃபத் மாயையை உருவாக்கி  முஸ்லீம்களை உலக வாழ்வில் உயர்த்தும் வழிவகைகளை செய்து வருகின்றனர். இது மார்க்கத்தின் வழிமுறை கிடையாது என்பது மட்டுமல்ல. சாத்தியமற்றதும் கூட!

உலக வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் விஷயங்களை மக்கள் தங்கள் அறிவால் கற்றுக்கொள்ளலாம் அல்லது வளர்க்கலாம்.ஆட்சி அதிகாரமும் உலக முன்னேற்றம் சார்ந்த விஷயமே.இந்த உலக முன்னேற்றம் சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க நபிமார்கள் வரவில்லை.அவர்கள் தவ்ஹீதை போதிக்கவே உலகிற்கு வந்தார்கள். அதன் மூலமே அவர்கள் இம்மை மறுமை வெற்றியை அடைந்தார்கள்.

சரியாக வழிநடத்தப்பட்ட நான்கு கலிஃபாக்களை அடுத்து, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இஸ்லாமிய உலகத்தை ஆண்டன. அவர்கள் அனைவரும் முடிசூட்டும் மன்னர் ஆட்சி முறையைத்தான் பின்பற்றினர்.

கிலாஃபாவின் ஆதரவாளர்கள்  மன்னர்களாகப் புகழ்பெற்ற ஹாரூன் அல் ரஷீத், ஸலாஹுத்தீன் அய்யூபி, முஹம்மது அல் ஃபாதித், முகமது பின் காசிம், அவுரங்கசீப் போன்ற பிரபலமாக அறியப்பட்ட ஆட்சியாளர்களை ஆதரிக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே மன்னராட்சி முறையில் பதவிக்கு வந்தவர்களே! கிலாஃபாவை வாதிடுபவர்கள் முடிசூட்டும் மன்னராட்சி முறையை வெறுக்கிறார்கள்.ஆனால் மேற்கூறிய முடியாட்சி முறையால் ஆட்சிக்கு வந்தவர்களை ஆதரிக்கிறார்கள் என்றால் இவர்களின் போக்கு உண்மையில் விசித்திரமாகத்தான் இருக்கிறது.  முடியாட்சி முறையால் வந்தவர்களில் ஏன் சிலர் மட்டும்  பாராட்டப்படுகிறார்கள்? மற்ற சிலர் ஏன் கண்டிக்கப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை? அவர்களின் கொள்கையில் அவர்கள் உறுதியற்ற தன்மையில் இருப்பதாலா? அல்லது மன இச்சையை மட்டுமே பின்தொடர்வதாலா?

கிலாஃபாவாதிகளில் பெரும்பாலோனோர் உஸ்மானிய கிலாஃபாவைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுகின்றனர்.1924 ஆம் ஆண்டில் இந்த கிலாஃபா வீழ்த்தப்பட்டது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.1924லே கிலாஃபா வீழ்ச்சியடைந்துவிட்டதாகக் கூறும் இவர்களின் அறியாமையைத்தான் இது காட்டுகிறது.

உஸ்மானிய அரசாட்சி முறையானது மற்ற முடியாட்சி போன்றே பரம்பரை ஆட்சிமுறைதான்! இந்தப் பரம்பரை ஆட்சிமுறை அவர்களுக்கு முன்னரும் பின்னரும் இருக்கத்தான் செய்தது.இதை மறைத்து பிரச்சாரம் செய்யும் கிலாஃபாவாதிகளின் அறிவுசார்ந்த கல்வி மோசடியை இது காட்டுகிறது.

கிலாஃபா வாதத்தால் கூர்மையாக்கப்பட்ட பெரும்பாலான புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்கள்  முஸ்லிம் நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் அரசுகளை வெறுக்கிறார்கள்; சொல்லப்போனால் அந்த அரசாங்கங்கள் முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை; அவர்களால் முடிந்த அளவு முஸ்லீம்களுக்கு பயனளிக்கும் செயல்களையே அவர்கள் செய்து வருகின்றனர் என்பதே உண்மை!.

(உலக அரசியல் லாபங்களுக்காகவும், நிர்பந்தங்களுக்காகவும் இந்த ஆட்சியாளர்கள் சில தவறுகளையும் செய்கிறார்கள்)

 இருந்தாலும் கிலாஃபா மற்றும் கிளர்ச்சி சிந்தனையின் தாக்கத்தால் பாதிப்படைந்தவர்கள் இந்த முஸ்லிம் மன்னர்களையும் ஆட்சியாளர்களையும் வெறுக்கிறார்கள் என்பது உண்மையில் வேதனை கலந்த விநோதம்தான்!.

அஷ்ஷெய்க். அப்துஸ்ஸலாம் மதனி

أحدث أقدم