குஃப்ர் நடிப்பு கூடாது

நடிப்பு அடிப்படையிலையே கூடாது என அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள், ஷேய்க் ஸாலிஹ் அல்உஸைமீன் போன்ற சில அறிஞர்கள் சில நிபந்தனைகளுடன் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருமாக சொன்ன ஒரு விஷயம் தான் குப்ஃரான வார்த்தைகளை பேசும் குஃப்ரான செயல்களை செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்ககூடாது என்பது. இஸ்லாமிய குறும்படம் என்று வரக்கூடிய அனைத்திலும் இந்த தவறான வழிமுறையை நிறையவே காணலாம்.
 ‍‍‍‍‍‍ ‍‍
முர்ஜியாக்களே ஈமான் என்பது உள்ளத்தோடு மாத்திரம் தொடர்புடையதாக சித்தரிப்பார்கள். ஆனால் எமது பேச்சும், செயற்பாடுகளும் ஈமானாகும் என்பதே உண்மையான அஹ்லுஸ் ஸுன்னாஹ்க்களின் நிலைப்பாடாக இருக்கிறது. ஸஹாபாக்களுடைய வார்த்தைகள் செயற்பாடுகளை சிலாகித்து பேசுகிறோம், அது ஈமான் ஒன்றால் மாத்திரம் ஏற்பட்ட விளைவு இல்லை என்று எம்மில் எவருடைய மனசாட்சியும் மறுக்கபோவதில்லை! வார்த்தைகள் செயற்பாடுகள் ஈமானில் ஒரு பகுதி.
 ‍‍‍‍‍‍ ‍‍
இதுக்கு சிறந்த உதாரணம் தான், தபூக் யுத்ததிற்கு செல்லும் போது அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் ஒரு முனாபிக் சொன்னார், "என்ன நேர்ந்தது எமது காரிகளுக்கு, எங்களில் அவர்களே சாப்பாட்டை மிகவும் விரும்பக்கூடியவர்கள், எங்களில் அவர்களே அதிகம் பொய் பேசக்கூடியவர்கள், யுத்தகளத்தில் அவர்களே மிகவும் கோளையானவர்கள்.
 ‍‍‍‍‍‍ ‍‍
இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எத்திவைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட போது ஏற்கனவே அது பற்றி குர்ஆன் வசனம் இறங்கியிருந்தது. 
" (இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக, காரணம் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள். ..... (9:65-66)
 ‍‍‍‍‍‍ ‍‍
இந்த சம்பவத்தில், விளையாட்டுக்கு சொன்னோம் ஷோர்ட் பில்முக்கு சொன்னோம் மக்களுக்கு புரியவைப்பதற்கு சொன்னோம் என்பதெல்லாம் கணக்கல்ல, "காரணம் சொல்லவேண்டாம், ஈமான் கொன்ட பிறகு நிராகரித்துவிட்டீர்கள்!"
 ‍‍‍‍‍‍ ‍‍
எனவே, ஒரு முஸ்லிம் மார்க்கத்துடைய விஷயத்தில் ஈமானுடைய விஷயத்தில் எப்பொழுதும் நாவளவிலும் செயலளவிலும் பேணுதலாகவே இருக்க வேண்டும், மார்க்க விஷயங்களில் ஜோக் கேலி செய்யவும் விளையாடவும் கூடாது, விளையாட்டுக்கேனும் நிராகரிப்பான வார்த்தைகள் பேசிடவும் கூடாது!
 ‍‍‍‍‍‍ ‍‍
- Hamdhan Hyrullah, Paragahadeniya
أحدث أقدم