இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
முஹம்மத் இப்னுல் ஃபத்ல் அஸ்ஸூஃபி அஸ்ஸாஹித் கூறினார்கள்:
இஸ்லாத்துடைய அழிவானது நான்கு வகையான மக்களுடைய கைகளினால் ஏற்படும்.
1. அறிந்ததைக் கொண்டு அமல் செய்யாத ஒரு வகையினர்,
2. அறியாததைக் கொண்டு அமல் செய்யக்கூடிய ஒரு வகையினர்,
3. அறிந்து கொள்ளாத, அமலும் செய்யாத ஒரு வகையினர்,
4. மேலும், மக்களை (கல்வியை) கற்றுக் கொள்வதிலிருந்து தடுக்கக்கூடிய ஒரு வகையினர்.
நான் (இப்னுல் கைய்யிம்) கூறினேன்:
முதலாவது வகை: அமல் இல்லாமல் கல்வியை (மட்டும்) கொண்டவர்.
இவர் பொது மக்களின் மீது அதிக தீங்கை விளைவிக்கக்கூடியவர். ஏனெனில், ஒவ்வொரு குறைபாட்டிற்கும், தீமைக்கும் இவர் அவர்களுக்கு (அதனை செய்து கொள்வதற்கு) ஆதாரமாவார்.
இரண்டாவது வகை: அறிவிலியான வணக்கசாலி.
ஏனென்றால், மக்கள் அவருடைய இபாதத் மற்றும் அவருடைய சீரான நிலையின் காரணத்தால் அவர் மீது நல்லெண்ணம் கொள்வர். பின்பு, அவருடைய அந்த அறிவிலித்தனத்தின் மீது அவரைப் பின்பற்றுவர்.
இவ்விரு வகையினரைத் தான் சில ஸலஃபுகள் அவர்களுடைய கூற்றுகளில் குறிப்பிட்டுள்ளார்கள்: “பாவியான ஆலிம் மற்றும் அறிவிலியான வணக்கசாலி ஆகிய (இருவரின்) ஃபித்னாவை விட்டும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!”
ஏனெனில், இவ்விருவருடைய ஃபித்னாவும், ஃபித்னாவிற்கு ஆளான ஒவ்வொரு நபருக்கும் ஃபித்னாவாகும். ஏனென்றால், மக்கள் அவர்களுடைய உலமாக்களையும், அவர்களுடைய வணக்கசாலிகளையுமே முன்மாதிரியாக எடுத்துப் பின்பற்றுவர். எனவே, உலமாக்கள் பாவிகளாகவும், வணக்கசாலிகள் அறிவிலிகளாகவும் இருந்தால், அவ்விருவரின் மூலமாக சோதனைகள் பரவிவிடும். மேலும் பொதுமக்களின் மீதும், (கல்வி, செல்வம் முதலியவற்றில்) சிறப்புமிக்க மக்களின் மீதும் ஃபித்னாவானது மிகப்பெரிதாகி விடும்.
மூன்றாவது வகை: கல்வியும் இல்லாத, அமலும் செய்யாதவர்கள்
இவர்கள் மேய்கின்ற கால்நடைகளைப் போன்றவர்கள் மட்டுமே.
நான்காவது வகை: பூமியில் உள்ள இப்லீஸுடைய பிரதிநிதிகள்
அவர்கள் தான் மக்களை கல்வியைத் தேடுவதில் இருந்தும், இன்னும் மார்க்கத்தில் அவர்கள் விளக்கம் பெறுவதில் இருந்தும் தடுப்பவர்கள். எனவே, இவர்கள் ஜின்களில் உள்ள ஷைத்தான்களை விடவும் அவர்களின் மீது அதிகமாக தீங்கை விளைவிப்பவர்கள். இவர்கள் அல்லாஹ்வுடைய நேர்வழி மற்றும் அவனுடைய பாதைக்கும், (அடியார்களுடைய) உள்ளங்களுக்கும் மத்தியில் தடையை ஏற்படுத்துபவர்கள்.
எனவே, இந்த நான்கு வகையினரை தான் இந்த அறிந்தவர் - அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக - (அவருடைய கூற்றில்) குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் அரிக்கப்பட்டு விழுந்துவிடும் ஓரக்கரையின் விளிம்பிலும், அழிவின் பாதையின் மீதும் இருப்பவர்கள்.
மிஃப்தாஹு தாரிஸ் ஸ’ஆதா, 1/160