மணப்பெண்ணிற்கான சில உபதேசங்கள்

உமாமா பின்த் ஹாரிஸா, அரபு பெண்களுக்கு மத்தியில் நற்குணங்களிலும், உபதேசம் செய்வதிலும் சிறந்தவர்களாகவும், பிரபல்யமானவர்களாகவும் இருந்தார்கள்.

ஹாரிஸ் இப்னு அம்ரு என்பவருக்கு தனது மகள் உம்மு இயாஸை திருமணம் செய்து வைத்தபோது முதலிரவில் கணவனிடம் அனுப்பும் போது தனது மகளுக்கு பெறுமதி மிக்க சில உபதேசங்களை செய்தார். 

என் அருமை மகளே!

நல்லொழுக்கம் உண்டு என்ற அடிப்படையில் ஒருவருக்கு உபதேசம் செய்யாமலிருப்பதாக இருந்தால் உனக்கு உபதேசம் செய்திருக்க மாட்டேன். 

காரணம் உனக்கு அனைத்து நல்லொழுக்கங்களையும் நான் கற்றுத் தந்துள்ளேன். என்றாலும் இது அறிவுடையோருக்கு உதவியாகவும், கவனக் குறைவுடையோருக்கு நினைவூட்டலாகவும் இருக்கும்.

என் அருமை மகளே!

ஒரு பெண்ணிற்கு தனது தந்தையிடமிருந்து அன்பு கிடைத்த காரணத்தினால், அப்பெண்ணிற்கு கணவன் தேவையில்லை என்று தீர்மானிப்பதாக இருந்தால் உனக்கு கணவன் தேவை இல்லை என்று நான் தீர்மானித்திருப்பேன். (அந்த அளவிற்கு உன் மீது நாங்கள் அன்பு செலுத்துகிறோம்) 

என்றாலும் பெண்களுக்காக ஆண்கள் படைக்கப்பட்டிருப்பது போல்
ஆண்களுக்காக பெண்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். 

நீ வளர்ந்த சூழல், நீ வாழ்ந்த வீடு, இவற்றையெல்லாம் விட்டு விட்டு உனக்கு அறிமுகமில்லாத ஒரு வீட்டில் உனக்கு அறிமுகமில்லாத நெருங்கிய ஒருவரோடு  வாழப்போகின்றாய்... 

உன்னை திருமணம் முடித்ததால் அவனுக்கு உன் மீது அதிகாரமுண்டு என்பதை நீ புரிந்து கொள்.
நீ அவனிடத்தில் அடிமையைப் போல் வாழ்ந்தால் அவனும் உனக்கு அடிமையாக இருப்பான். 

என்னிடமிருந்து பத்து விஷயங்களை சுமந்து கொள். அது உனக்கு சொத்தாகவும் நல்லுபதேசமாகவும் இருக்கும்.

முதலாவது,
இரண்டாவது உபதேசங்கள்:

இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்து அவனது (கணவனின்)  தோழமையைப் பெற்றுக்கொள்.

கணவன் சொல்வதை அழகிய முறையில் கேட்டு, கட்டுப்பட்டு அவனோடு வாழ்ந்து கொள். 

இருப்பதைக் கொண்டு திருப்தி அடைதல் உள்ளத்திற்கு ஆனந்தமளிக்கும். 
கணவன் சொல்வதை  கேட்டு கட்டுப்படுவது அல்லாஹ்வின் பொருத்ததை பெற்றுத்தரும். 

மூன்றாவது,
நான்காவது உபதேசங்கள்:
 
கணவனின் கண்ணின் பார்வையிலும், மூக்கின் நுகர்விலும் கவனமாக இரு!
உன்னிடமிருந்து அசிங்கமானவற்றை அவன் பார்க்காமலிருக்கட்டும். 
உன்னிடமிருந்து நறுமணத்தை அவன் நுகரட்டும்.

நீ சுர்மா இட்டுக் கொள்வது அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும்.
நீ சுத்தமாக இருப்பதும் நறுமணம் பூசுவதும் இழந்த (அழகை) பெற்றுத்தரும்.

ஐந்தாவது
ஆறாவது உபதேசங்கள்:
 
அவனின் உணவின் நேரத்திலும், உறக்கத்தின் நேரத்திலும் கவனமாக இரு!
பசியின் சூடு ஆத்திரத்தை அதிகப்படுத்தும். 
குறைவான தூக்கம் கோபத்தை ஏற்படுத்தும்.
 
ஏழாவது
எட்டாவது உபதேசம்:
 
அவனது செல்வத்திலும், குடும்பத்திலும் கவனமாக இரு!
அவனது செல்வத்தை பாதுகாப்பது பாராட்டை பெற்றுத்தரும்.
அவனது குடும்பத்தில் கவனமாக இருந்தால், கணவனின் நேசத்தையும்
கணவனின் குடும்பத்தாரின் நேசத்தையும் பெற்றுதரும்.

ஒன்பதாவது
பத்தாவது உபதேசம்:

கணவனின் ரகசியங்களை வெளிப்படுத்தாதே! அவனது கட்டளைக்கு மாறு செய்யாதே!
அவனுடைய ரகசியத்தை வெளிப்படுத்தினால் அவனுடைய துரோகத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியாது.  
அவனது கட்டளைக்கு மாறு செய்தால் உள்ளத்தில் ரோஷத்தை ஏற்படுத்தும்.
 
இன்னும் சில கூடுதலான உபதேசங்கள்... 

என் அருமை மகளே!
கணவன் சோகமாக இருக்கும் நிலையில் அவன் முன்னிலையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே!
அவன் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் அவன் முன்னிலையில் சோகத்தை வெளிப்படுத்தாதே! 

அவன் சோகமாக இருக்கும் நிலையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது உனக்கு வீழ்ச்சியாகும்.
அவன் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் சோகத்தை வெளிப்படுத்துவது உனது சீரிய சிந்தனையிலிருந்து வெளியாகுவதின் அடையாளமாகும். 

நீ அவனை கண்ணியப்படுத்தினால் அவனும் உன்னை கண்ணியப்படுத்துவான். 

அவனோடு நீ அதிகம் ஒத்துப் போனால் அவனும் உன்னோடு ஒத்துப்போவான். 
நீண்ட காலம் தோழமையோடு இருக்கலாம்.
 
எனதருமை மகளே!
நீ அறிந்து கொள்!
உனது திருப்தியை விட அவனது திருப்திக்கு முன்னுரிமை வழங்காத வரை, உனது விருப்பத்தை விட அவனது விருப்பத்திற்கு முன்னுரிமை வழங்காத வரை, கணவனின் நேசத்தை நீ அடைய முடியாது.

உனது விருப்பம், உனது வெறுப்பை விட அவனுக்கு நீ முன்னுரிமை வழங்க வேண்டும்.

அல்லாஹ் உனக்கு நன்மை செய்யட்டும். அல்லாஹ் உன்னை பாதுகாக்கட்டும்.


தொகுப்பு : யாஸிர் ஃபிர்தௌசி 
அழைப்பாளர்
அல்- ஜுபைல் தஃவா நிலையம், 
சவூதி அரேபியா 
Previous Post Next Post