நமது முன்மாதிரிகள்

பிரபல ஸஹாபாக்களில் ஒருவரான ஜரீர் அல்பஜலி (றழி) அவர்கள் ஒருநாள் தனது பணியாளரிடம் தனக்கு குதிரை ஒன்றை வாங்கிவருமாறு பணித்தார்கள். சிறிது நேரத்தில் பணியாளர் முந்நூறு திர்ஹம் பெறுமதி மதிக்கப்பட்ட குதிரையையும் அதன் உரிமையாளரையும் கொண்டு வந்து நிறுத்தினார்.

குதிரையை பார்வையிட்ட ஜரீர் (றழி) அவர்கள் அதன் உரிமையாளரிடம், 'இக்குதிரை நீர் விலைமதித்த முந்நூறு திர்ஹமை விட பெறுமதிமிக்கதாகத் தெரிகிறது, இதை நானூறு திர்ஹமுக்கு எனக்கு விற்கிறாயா?' என்று கேட்டார்கள். 'சரி, அவ்வாறே தருகிறேன்' என்றார் குதிரையின் உரிமையாளர்.

மீண்டும் ஜரீர் (றழி) 'நானூறு திர்ஹமை விடவும் இது பெறுமதிமிக்கதாக தெரிகிறது. ஐநூறு திர்ஹமுக்கு எனக்கு அதை விற்றுவிடு' என்று கேட்டார்கள்.

மீண்டும் மனம் நிம்மதியடையாமல் நூறு, நூறு திர்ஹமாக விலையை அதிகரித்துச் செல்ல, உரிமையாளரும் திருப்தியடைந்து கொண்டே சென்றார்.

இறுதியில் எண்ணூறு திர்ஹமை கொடுத்து ஸஹாபியவர்கள் குதிரையை பெற்றுக்கொள்ள, குதிரை உரிமையாளரோ மிகத் திருப்தியோடு பெறுமதியைப் பெற்றுச்சென்றார்.

அருகிலிருந்தவர்கள், பொருளை வாங்குபவரே விலையை அதிகரிப்பதா என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்கள்.

அப்போது ஜரீர் (றழி) அவர்கள், 'நான் ஒவ்வொரு முஸ்லிமின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டுமென நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒப்பந்தம் செய்திருக்கிறேன்' என்று கூறினார்கள்.

நூல் : ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் - இமாம் நவவி (றஹ்) : 1/40

எத்தகைய உத்தமர்கள் இவர்கள்! தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியேனும் பிறரை மகிழ்ச்சிப்படுத்தியவர்கள்!!

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
Previous Post Next Post