மகத்தான இரவு

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்றபின் சுமார் பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. அப்போதிலிருந்து நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன; அவருடைய சொந்த குலத்தினரே அவருக்கு எதிராக மாறி விட்டிருந்தனர். அவரைப் பின்பற்றியவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாயினர், சுமையா (ரலி), யாஸிர் (ரலி) போன்றவர்கள் உயிரை இழக்கும் அளவிற்கு கொடுமை படுத்தப்பட்டனர்.

துயரம் மிகுந்த ஆண்டு
அருள்மிக்க மக்க மாநகரத்தில் முஸ்லிம்கள் தங்களுக்கு ஒரு இடம் கிடைக்க போராடிக்கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் கவலை மிக்க காலகட்டமாக அது இருந்தது.

குறுகிய கால இடைவெளியில் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இரு மிகவும் நெருங்கிய குடும்பத்தினரை இழந்து விட்டார்கள். அதில் ஒருவர், நபி (ஸல்) அவர்களை மணந்து 25 ஆண்டுகள் கழிந்து மறைந்த நம் அன்னை கதீஜா (ரலி) அவர்கள்.

அவர் சாதாரண மனைவியாக இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களை ஒருவரும் நம்பாமல் இருக்கும் போது அவர் நம்பினார்; ஜிப்ரீல் (அலை) அவர்களை முதன் முதலில் சந்தித்த பின் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் இருந்த நபி (ஸல்) அவர்கள் தன் புத்தி சுவாதீனத்தை பற்றியே சந்தேகமடைந்தார்கள். அச்சமயத்தில் அவர்களுக்கு தெம்பு கொடுத்தது கதீஜா (ரலி) அவர்களே. அவர்கள் தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒரு போதும் அவர்களைக் கைவிட மாட்டான் என்பதை நினைவூட்டினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், தனக்கு நபித்துவம் கிடைத்ததை யார் நம்புவார்கள் என்று வியந்தபோது, அன்னை கதீஜா (ரலி) அவர்கள் ‘வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சட்சி கூறுகிறேன்.” என்று கூறினார்கள்.

அவர்கள் மிகவும் வெற்றிகரமான, செல்வச்சீமாட்டியாக இருந்தார். அவருடைய செல்வத்தை, பெரும் துன்பத்திலிருந்த பலவீனமான, ஆதரவற்ற மக்கத்து முஸ்லிம்களுக்காக செலவழித்தார்.
அவர்கள் மறைந்த சிறிது காலத்திலேயே, நபி (ஸல்) தனக்கு ஆதரவாக இருந்த தன்னுடைய பெரிய தந்தை அபு தாலிபையும் இழந்தார்.

குரைஷிகள் முஸ்லிம்களில் பலரையும் துன்புறுதினாலும், நபி (ஸல்) அவர்களை நெருங்காமல் இருந்ததற்கு காரணம், அவர்கள் அபு தாலிப் மேல் கொண்டிருந்த மரியாதை தான். நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே தந்தையை இழந்து விட்டதால், தன் தந்தையைப் பார்த்ததேயில்லை. அவருடைய தாயாரையும், தன்னுடைய சிறு வயதிலேயே இழந்து விட்டார்கள். அபு தாலிப் அவர்கள் தான் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து, முஹம்மது நபி (ஸல்) அவர்களை தன்னுடைய மகனைப்போல் வளர்த்தார்கள்.
நபித்துவம் பெற்ற பின், அபு தாலிப் அவர்கள், நபி (ஸல்) அவர்களை குரைஷிகளுடைய எல்லா தாக்குதல்களிலிருந்தும் காப்பாற்றி வந்தார்கள். இறைதூதரைப் பாதுகாப்பதை அவர் தன்னுடைய காரியமாக எடுத்துக் கொண்டார்.

அபு தாலிப் அவர்கள் இறந்த பின், குரைஷிகளை தடுப்பதற்கு எவருமில்லை. அதற்கு மேலாக, அபு தாலிப் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமலேயே மரணமடைந்தார்கள். தன் பெரிய தந்தையின் மரணம் அவர்களை மிகவும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தன்னுடைய இழப்பு மற்றும் தன் பெரிய தந்தையை இஸ்லாத்தை ஏற்கும்படி செய்ய முடியாத இயலாமையும் அவர்களை துக்கத்தில் ஆழ்த்தியது. நபியவர்களை இவ்விரு மரணங்களும் எந்த அளவிற்கு தாக்கியிருந்தன என்றால், அல்லாஹ் (சுபஹ்) அவர்களுக்கு ஆறுதல் வழங்க குர்’ஆன் வசனங்களை அருளினான்.

அதன்பின், குரைஷிகளுடைய கொடுமைகள் பெருமளவில் பெருகி விட்டன. நபி (ஸல்) அண்டை நகரமான தைஃபுக்கு சென்று அங்குள்ள மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்களா என பார்க்க நினைத்தார்கள். தைஃபின் தலைவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்திக்கக்கூட தயாராக இல்லை.
தைஃபில் மறுக்கப்பட்டு, அவமதிக்கப்படுதல் சில வரலாற்று இலக்கியங்களின்படி, நபி (ஸல்) அவர்கள் தாயிஃப்க்கு பத்து நாட்கள் தொடர்ந்து சென்று, கதவுகளைத் தட்டி, மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்திருக்கிறார்கள். அவருடைய அறிவுரையை யாரும் ஏற்றுக் கொள்ளவவில்லை. அவர்களை மறுத்தது மட்டுமல்லாமல், தங்களுடைய குழந்தைகளை விட்டு நபியவர்களை கற்களால் அடிக்க வைத்தார்கள். எந்த அளவிற்கு அடித்தார்கள் என்றால், அவர்களுடைய தலையிலிருந்து வழிந்த ரத்தம் அவர்களுடைய காலணிகளை நனைத்தன. நபியவர்கள் கிட்டத்தட்ட மயங்கி விழுந்தார்கள்.

அவர்கள் அல்லாஹ்விடம் துவா செய்து, அவனுடைய கருணைக்காக வேண்டினார்கள். அல்லாஹ் (சுபஹ்), ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் மலைகளின் வானவரை அனுப்பி, நபி (ஸல்) அவர்கள் அந்நகரத்தை அழிக்க விரும்புகிறார்களா என்று கேட்டான். நபி (ஸல்), “அவர்களுடைய சந்ததியரிலிருந்து விசுவாசம் கொள்ளக்கூடிய சமுதாயம் வரக்கூடும்” என்று கூறி மறுத்து விடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களுடைய வாழ்வில் ‘துக்க ஆண்டாக’ வர்ணிக்கப்பட்ட காலகட்டத்தின் பின்னணி இது தான். அப்போது தான் நபி (ஸல்) மிகவும் துயரத்துடன், மனதளவில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தார்கள்.
மேலும், அப்போது தான் அல்லாஹ் (சுபஹ்) அவர்களை மிகுந்த உயரத்திற்கு எடுத்துச்சென்றான். மனிதகுலத்தின் வரலாற்றில் இதுவரை நடந்திராத இந்த மிகவும் வியக்கத்தக்க பயணத்தில், ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை புராக் என்ற இறக்கைகள் உள்ள புராக் என்ற விலங்கின் மேலேற்றி மக்காவிலிருந்து, ஜெருஸலத்திற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றார்கள்.

நபிமார்களை சந்தித்தல்
ஜெருஸலத்தில், நபி (ஸல்) அவர்கள் முன்னிருந்த நபிமார்கள் அத்தனை பேருக்கும் இமாமாக இருந்து தொழுகை நடத்தினார்கள். அவர்கள் ‘இமாம் அல் முர்ஸலீன்’ (இறைதூதர்களின் தலைவர்) என்பதை குறிப்பாக உணர்த்துவதாக இந்த தொழுகை அமைந்தது.

அவருக்கு அவர்களுடைய துன்பங்கள் நினைவூட்டப்பட்டன. அதன்பின், அவர்கள் வானங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக உயர்த்தப்பட்டார். ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு வானிலும், நபியவர்கள் முன்னால் வந்த நபிமார்களில் சிலரைப் பார்த்து அவர்களுடன் ஸலாத்தைப் பரிமாறிக்கொண்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள், “முஹம்மதே, உம்முடைய சமுதாயத்திற்கு என்னுடைய ஸலாமை அறிவிப்பீர்களாக.” என்று கூறினார்கள்.

மூஸா (அலை) அவர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய உம்மத் எப்படி தன்னுடைய சமுதாயத்தை விட பெரிதாக இருக்கப்போகிறது என்று கூறினார்கள். நபித்துவத்தில் தன்னுடைய சகோதரர்களுடைய நல்வார்த்தைகளுடன், நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வானாக ஏறி, இறுதியில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூட அடைய முடியாத இடத்தை அடைந்தார்கள்.

அல்லாஹ்வுடன் ஒரு உரையாடல்
அல்லாஹ்வை நோக்கி உலகில் உள்ள எந்த படைப்பும் நெருங்க முடியாத நெருக்கம் இது தான். அங்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடன் உரையாடினார்கள். அல்லாஹ் (சுபஹ்) நபி (ஸல்) அவர்களுக்கு தொழுகையாகிய பரிசை அளித்தார்கள். இருப்பினும், அல்லாஹ் (சுபஹ்) ஒரு நாளுக்கு 50 தொழுகைகளைக் கட்டளையிட, மூஸா (அலை) அவர்களுடைய அறிவுரையின்படி, தன்னுடைய உம்மத்திற்கு 50 தொழுகைகளை நிறைவேற்ற முடியாது என்பதால், மீண்டும் மீண்டும் அல்லாஹ்விடம் சென்று கேட்டு, அதை ஐவேளை தொழுகையாக குறைத்தார்கள். மூஸா (அலை) அல்லாஹ்விடம் சென்று அதையும் குறைக்கும்படி கேட்குமாறு நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள். ஆனால், நபி (ஸல்) அதற்கு மேல் அல்லாஹ்விடம் கேட்பதற்கு வெட்கப்பட்டார்கள். அத்துடன், நாம் அறிந்துள்ள ஐவேளைத் தொழுகைகள் கட்டாயக் கடமையாக்கப்பட்டன.
.
இஸ்ரா வல் மெஹ்ராஜ் இரவு
இஸ்ரா வல் மெஹ்ராஜ் நபி (ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த அற்புதங்களில் மிகவும் மகத்தானது. அதில் நமக்கு மிக ஆழமான படிப்பினைகள் உள்ளன. அவற்றில் சில:
1. நபி (ஸல்) அவர்கள் பெரும் துக்கத்தில் இருந்த காலத்தில் அல்லாஹ் (சுபஹ்) அவர்களுக்கு தொழுகையை அருளினான். அல்லாஹ் (சுபஹ்) குர்’ஆனில் கூறுகிறான்: “பொறுமையுடனும், தொழுகையுடனும் உதவி தேடுங்கள்.” என்று. [அல் குர்’ஆன் 2:45]. வாழ்வில் சிரமங்கள் நெருக்கும்போது, நாம் அதை தொழுகையுடன் சமாளிக்க வேண்டும்.

2. நபி (ஸல்) அவர்கள் இரவுப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் முற்கால நபிமார்கள் அனைவரையும் சந்தித்தார்கள். முற்கால நபிமார்களின் வரலாறுகளும், அறிவுரைகளும், சிரம காலங்களில் நமக்கு பெரும் உந்துதலாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்கின்றன.

3. அல்லாஹ் (சுபஹ்) நபி (ஸல்) அவர்களிடம் பேசுவதற்கு தன்னிடம் அழைத்தான். நாம் சிரமத்தில் இருக்கும்போது நாம் செய்யக்கூடிய மிகச்சிறந்த செயல்களில் ஒன்று, துவா செய்வதும், அல்லாஹ்விடம் பேசுவதும் தான். அவனை விட நன்றாக வேறு எவரும் நம்முடைய நிலையை அறிய முடியாது.

4. நபி மூஸா (அலை) இந்த உம்மத்திற்கு ஸலாம் கூறினார்கள். இந்த உம்மத் ஆசீர்வதிக்கப்பட்டது என்பதையும், நபிமார்களின் தந்தையுடைய ஸலாம் உங்களுக்கும், எனக்கும் வந்துள்ளது என்பதையும் அறிந்து மகிழ்ச்சியடையுங்கள்.

5. தன்னுடைய மிக நெருக்கமான தோழர்களுக்காக, அவர்களை கவனித்துக் கொள்ளவும், அவர்கள் மனநிலையை முன்னேற்றவும், அல்லாஹ்வால் இயற்கையின் சட்டங்களைக் கூட வளைக்க முடியும். அல்லாஹ்வை நெருங்கி அவனுடைய நேசர்களில் ஒருவராக ஆவதற்கு உழைப்பது நம் கையில் தான் உள்ளது.

இஸ்ரா வல் மெஹ்ராஜ் நடைபெற்றது ரஜப் மாதத்தில் என்பதற்கு ஆதாரபூர்வமான செய்திகள் இல்லாவிட்டாலும், ரஜப் மாதத்தில் நடந்ததாக சில அறிஞர்கள் கருதுகிறார்கள். ரஜப் மாதம் முடியும் போது, நாம் ரமதானை இன்னும் நெருங்கி விடுகிறோம். அல்லாஹ் (சுபஹ்) நமக்கு பரிசாக அளித்த தொழுகைக்கு புத்துணர்ச்சி அளிப்போம். அதற்கு சிறந்த நேரம் இப்போதை விட வேறெதுவும் இருக்க முடியாது.
أحدث أقدم