அறிஞர்களின் பெருந்தன்மை

நிகழ்வு 01 :

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) கூறுகிறார்கள் :

 'ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்களையும் அவர்களது தூய பிரசாரத்தையும் மிக கடுமையாக எதிர்த்து பல இன்னல்களையும் இழைத்த ஒருவர் மரணித்த போது அச்செய்தியை விரைந்து சென்று இமாம் அவர்களிடம் பூரிப்புடன் கூறினேன். சந்தோஷத்துடன் அத்தகவலை கூறியதற்காக இமாம் அவர்கள் என்னை கடுமையாக கடிந்துகொண்டது மட்டுமன்றி, உடனடியாக எழுந்து மரணித்தவரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தாரிடம் ' இதோ நான் இருக்கிறேன். அவரது இடத்தில் இருந்து நான் உங்களை கவனிக்கிறேன். எந்த தேவையாயினும் என்னிடம் கேளுங்கள். உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன்' என்று கூறிவிட்டு வந்தார்கள் "

நூல் : ' மதாரிஜுஸ் ஸாலிகீன்' 

நிகழ்வு 02 :

ஸஊதி அரேபியாவின் தலைமை முப்தியாக இருந்த பேரறிஞர் ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் தனது சபையில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த ஒருவர் ஷெய்க் அவர்களை தாறுமாறாக ஏசினார். ஷெய்க் அவர்கள் எதுவும் கூறாமல் மௌனமாகவே இருந்தார்கள். சில காலங்களின் பின் ஹஜ்ஜுக்காக ஷெய்க் அவர்கள் மக்காவுக்கு சென்றிருந்த வேளை முன்னர் அவர்களை கடுமையாக திட்டிய மனிதர் மரணித்துவிட்டார். ஜனாஸா தொழுகைக்காக மஸ்ஜிதுக்கு கொண்டுசெல்லப்பட்ட போது மஸ்ஜித் இமாமாக இருந்த அப்துல் அஸீஸ் பின் உஸ்மான் அவர்கள் 'ஷெய்க் இப்னு பாஸ் அவர்களை கடுமையாக திட்டிய இந்த மனிதனுக்கு நான் ஒருபோதும் ஜனாஸா தொழுகை நடத்தமாட்டேன், வேறு யாராவது தொழுவியுங்கள்' என்று கூறி விலகிகொண்டார். வேறு ஒருவரால் தொழுகை நடத்தப்பட்டு அடக்கம்செய்யப்பட்டது.  அல்லாமா இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜிலிருந்து திரும்பிய போது இவ்விடயத்தை அறிந்தவுடன் குறித்த மஸ்ஜிதுக்கு சென்று மஸ்ஜிதின் இமாம் தொழுவிக்க மறுத்தது தவறு என்று சுட்டிகாட்டியதோடு,  அங்கு அடக்கம்செய்யப்பட்ட அந்த மனிதரின் கப்ருக்கு சென்று அவருக்கு ஜனாஸா தொழுகை தொழுததோடு அவருக்காக நீண்ட நேரம் பிரார்த்தனையும் செய்தார்கள்.

நூல் : 'ஜவானிப் மின் ஸீறதில் இமாம் அப்தில் அஸீஸ் பின் பாஸ்'

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
أحدث أقدم