சமூக அந்தஸ்த்து அற்றவரையும் மணமுடிக்க சம்மதித்த பெண்:
ஜுலைபீப்(வ) அவர்கள் அந்தக் கால மக்கள் மத்தியில் சமூக அந்தஸ்த்து அற்றவராகக் கருதப்பட்டவராவார். எனினும் இஸ்லாத்தில் இவர் சிறப்புப் பெற்ற ஒரு ஸஹாபியாவார். இவர் ஒரு போரில் ஏழு காபிர்களைக் கொலை செய்து பின்னர் ஷஹீதானார். ஜுலைபீப்(வ) அவர்களின் சிறப்பு என்ற பாடத்தில் ஸஹீஹ் முஸ்லிமில் இது குறித்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.
“நபி(ச) அவர்கள் ஒரு அன்ஸாரியிடம் உங்களது மகளை ஜுலைபீப்(வ) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கின் றீர்களா? எனக் கேட்டார்கள். அவர் மனைவியிடம் கேட்டுச் சொல்வதாகக் கூறினார். அவர் மனைவியிடம் சென்று செய்தியைக் கூறிய போது எமது மகளை இன்னின்னவர்களெல்லாம் பெண் கேட்டும் கொடுக்கவில்லை. ஜுலைபீபுக்காகக் கொடுப்பதா? என ஏளனமாகக் கூறினார்கள். அவர் செய்தியைத் தெரிவிப்பதற்காக வெளிவரத் தயாராகும் போது மணப்பெண் யார் என்னைப் பெண் கேட்டார்கள் எனத் தகவல் அறிந்த பின்னர்,
நபி(ச) அவர்கள் கூறிய ஒருவரையா மறுக்கப் போகின்றீர்கள்! அவரை உங்களுக்கு மாப்பிள்ளையாக நபி(ச) அவர்கள் விரும்பி உள்ளாhர்கள் என்றால் அவரையே மணமுடித்து வையுங்கள் என்றாள். இது கேட்ட பெற்றோரும், உண்மைதான் கூறுகின்றாய் என ஏற்றுக் கொண்டனர். அந்தப் பெண்ணின் தந்தை நபி(ச) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! அவரை நீங்கள் பொருந்திக் கொண்டால் நாங்களும் அவரை ஏற்றுக் கொள்கின்றோம் எனக் கூறினார். ஜுலைபீப் அந்தப் பெண்ணை மணந்தார்.அதன் பின் ஷஹீதானார்” (அஹ்மத்: 12393, 19784, 41423)
ஜுலைபீப்(வ) அவர்களை அந்தப் பெண்ணோ பெண்ணின் தாயோ விரும்பாத போதும் நபியவர்களது தேர்வு என்றதும் அதற்குக் கட்டுப்பட்டதைப் பார்க்கின்றோம்.
பாதையில் அமர்ந்திருந்த இப்னு மஸ்ஊத்:
“நபி(ச) அவர்கள் வெள்ளிக்கிழமை தினம் (மிம்பரில் இருந்து) அமருங்கள் என்று கூறினார்கள். அப்போதுதான் வந்து கொண்டிருந்த இப்னு மஸ்ஊத் மஸ்ஜிதின் வாயிலில் அமர்ந்துவிட்டார்கள். அதைக் கண்ட நபியவர்கள் அவரை வாரும் அப்துல்லாஹ்வே! என உள்ளே அழைத்தார்கள்.” (அபூதாவுத்: 1092, 1091, ஹாகிம்: 1048, 1056, இப்னு குஸைமா: 1780, பைஹகி: 5958)
“இதே போன்றதொரு சம்பவம் அப்துல்லாஹ் இப்னு ரபாஹா(வ) அவர்களுக்கும் ஏற்பட்டது. அவர்கள் நபியவர்களின் உரை முடியும் வரை மஸ்ஜிதுக்கு வெளியேயே அமர்ந்து விட்டார்கள்.” (பைஹகி)
நபி(ச) அவர்களது சொல்லைக் கேட்டதும் அதற்கு உடனேயே கட்டுப்பட வேண்டும் என்ற பேரார்வத்தின் வெளிப்பாடாகவே இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
கோபத்தைப் போக்கிய குர்ஆன்:
ஒருவர் உமர்(வ) அவர்களிடம் வந்து பண்பாடு தெரியாமல் அநாகரீகமாக நடந்து கொண்டார். உமர்(வ) அவர்கள் கோபத்துடன் அவரை நோக்கிச் சென்ற போது அருகில் இருந்தவர்,
“(நபியே!) நீர் மன்னிப்பைக் கடைப் பிடித்து, நன்மையை ஏவி, அறிவீனர் களைப் புறக்கணித்து விடுவீராக!” (7:199)
என்ற வசனத்தை ஓதினார். உமர்(வ) உடனேயே தனது கோபத்தை அடக்கி இந்த ஆயத்தைச் செயற்படுத்தினார்கள்.
“இவ்வாறே அலி(வ) அவர்களின் மகன் ஹுஸைன்(வ) அவர்களிடம் ஒரு அடிமைப் பெண் இருந்தாள். அவள் தொழுகைக்கு வுழூச் செய்வதற்காக தண்ணீர் கொண்டு வந்த கேத்தலுடன் விழுந்தாள். அந்தக் கேத்தல் ஹுஸைன்(வ) அவர்களின் முகத்தில் விழுந்து காயத்தை ஏற்படுத்தியது. அவர் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அவள் அல்லாஹுதஆலா (முஃமின்கள் பற்றிக் கூறும் போது) கூறுகிறான்.
“அவர்கள் கோபத்தை விழுங்குவார்கள்” என்றாள். அதற்கு ஹுஸைன்(வ) அவர்கள் “நான் எனது கோபத்தை விழுங்கிவிட்டேன்” என்றார்.
அதன் பின் அவள் “அவர்கள் மக்களை மன்னிப்பார்கள்” என்ற வசனத்தை ஓதினாள். அதற்கு ஹுஸைன்(வ) “நான் உன்னை மன்னித்துவிட்டேன்” என்றார்கள்.
பின்னர் அவள் “அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான்” என்று கூறினாள். உடனே ஹுஸைன்(வ) அவர்கள் “நீ சுதந்திரம் பெற்றுவிட்டாய்! நான் உன்னை உரிமை விடுகிறேன். நீ போகலாம்” என்றார்கள்.”
(தாரீகுத்திமிஸ்க்: 41ஃ387)
ஸஹாபாக்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த தாபியீன்களும் குர்ஆன் சுன்னாவை முழுமையாக ஏற்றுக் கொள்வது என்ற அடிப்படையில் உறுதியாக இருந்தனர். இவை இரண்டிற்கும் மாற்றமாக யார் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதிலும் உறுதியாக இருந்தனர். ஹதீஸிற்கு முரணாக யாருடைய பேச்சையோ, கருத்தையோ அல்லது உணர்வுகளையோ முற்படுத்தும் மனநிலை அவர்களிடம் இருந்ததில்லை.
இது குறித்து இமாம் இப்னுல் கையிம் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறும் போது ஸலபுகள் எனும் முன்னோர்கள் குர்ஆன், சுன்னாவுக்கு முரணாக அறிஞர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிப்பதைக் கடுமையாக எதிர்த்தனர். அத்தகைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள் என்று “அஸ்ஸவாயிகுல் முர்ஸலா” என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
தமத்துஃ ஹஜ் குறித்து மக்கள் இப்னு உமர்(வ) அவர்களிடம் கேட்டார்கள். அது ஆகுமானது என இப்னு உமர் பதில் கூறினார். அப்போது மக்கள், நீங்கள் உங்கள் தந்தை உமருக்கு மாற்றமாகக் கூறுகின்றீர்களே! எனத் திருப்பிக் கேட்டனர். அதற்கு இப்னு உமர் நீங்கள் கூறும் கருத்தில் எனது தந்தை கூறவில்லை என விளக்கினார்கள். எனினும், தொடர்ந்தும் மக்கள் இது குறித்து அதிகமாக சர்ச்சை செய்த போது,
“அல்லாஹ்வின் வேதம் பின்பற்றத் தகுதியானதா? அல்லது உமரா? எனக் கேட்டு குர்ஆனின் கூற்றை ஏற்றுக் கொள்ளுங்கள் என வலியுறுத்தினார்கள்.”
(பைஹகி: 9135)
“அம்ர் இப்னு ஹுதைல்(வ) அவர்கள் ஒரு காபிரைக் கொன்ற முஸ்லிமும் கொல்லப்படுவான் எனக் கூறிவந்தார்கள். அவரைச் சந்தித்த அப்துல் வாஸித் இப்னு ஸையாத் என்ற அறிஞர் “ஒரு காபிருக்காக முஸ்லிம் கொல்லப்படமாட்டான்” என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.”
(புஹாரி: 3047)
நீங்கள் கொல்லப்படுவான் என்று கூறுகின்றீர்கள் என்று கூறினார். இது கேட்ட அம்ர் இப்னு ஹுதைல்(ரஹ்) அவர்கள் இந்த நிமிடத்திலிருந்து நான் எனது கருத்திலிருந்து மீண்டு விடுகின்றேன் என்பதற்கு உம்மை நான் சாட்சியாக ஆக்குகின்றேன் எனக் கூறி தனது கருத்திலிருந்து மீண்டுவிட்டார்கள். இது குறித்து இமாம் தஹபி(ரஹ்) அவர்கள் கூறும் போது இவ்வாறுதான் அறிஞர்கள் ஆயத்துக்கள், ஹதீஸ்களுக்கு மீறிப் போகாத போக்கை கடைப்பிடித்தனர் எனக் குறிப்பிடுகின்றார்கள்.
(ஸியர் அஃலாமுன் னுபலா: 8ஃ40)
இப்னுல் முபாறக் (ரஹ்) அவர்கள் “விபச்சாரம் புரிபவன் முஃமினான நிலையில் விபச்சாரம் புரிவதில்லை” என்ற ஹதீஸைக் கூறிய போது ஒரு மனிதர் இந்த ஹதீஸின் கருத்தை மறுக்கும் தொனியில் என்ன இது என்று கேட்டார். இதனால் கோபப்பட்டவராக,
“இவர்கள் நபி(ச) அவர்களது ஹதீஸ்களை அறிவிப்பதை விட்டும் எம்மைத் தடுக்கின்றனர். ஹதீஸின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளாத போதெல்லாம் ஹதீஸை நாம் விட்டுவிட வேண்டுமா? இல்லை. நாம் செவியேற்றது போல் ஹதீஸை அறிவித்துக் கொண்டே இருப்போம். (ஹதீஸை மறுக்காமல்) எங்களிடம்தான் அறியாமை இருக்கின்றது என ஏற்றுக் கொள்வோம் என்ற கருத்துப்பட கூறினார்கள்.”
(தஃழீமு கத்ருஸ் ஸலாத்: 1/504)
இந்த செய்தி ஹதீஸ் தொடர்பான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாட்டை எமக்குத் தெளிவுபடுத்துகின்றது. ஒரு ஹதீஸின் கருத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் ஹதீஸை மறுக்க முடியாது. ஹதீஸை ஏற்றுக்கொள்கின்ற அதே நேரம் இதன் விளக்கம் எனக்குத் தெரியாது என எமது அறியாமையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் நாம் அறியாத ஏதோ ஒரு தவறு ஹதீஸில் உள்ளது என ஹதீஸை மறுக்க முடியாது. இதற்கு மாற்றமாக ஹதீஸ்களை மறுக்க முனைவது கண்டிக்கத்தக்கதாகும்.
அபூ முஆவியா என்ற அறிஞர் கூறுகின்றார்.
“நான் அறிஞர் அல் அஃமஸ் அவர்களது ஹதீஸ்களை கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களுக்கு வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தேன். நபி(ச) அவர்கள் கூறினார்கள் என்று கூறும் போதெல்லாம் கலீபா ஹாரூன் ரஷீத் அவர்கள், எனது தலைவர்! எனது எஜமான்! என நபி(ச) அவர்களைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.
நான் ஆதம்(அலை) நபியும் மூஸா(அலை) நபியும் சந்தித்தனர்… என்ற ஹதீஸைக் கூறிய போது கலீபாவின் சாச்சா அபூமுஆவியாவே எங்கே சந்தித்தனர் என (ஏளனமாகக்) கேட்டார்.
இது கேட்ட ஹாரூன் ரஷீத் கடுமையாகக் கோபம் கொண்டார். எனது வாளும் சவுக்கும் எங்கே? என்றார். அவை கொண்டு வரப்பட்டன. கூட இருந்தவர்கள் கலீபாவின் சாச்சாவுக்காகப் பரிந்து பேசினர்.”
எனவே, கலீபா அவரைச் சிறையிலிட்டார்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்தக் கேள்வியை(யும் ஹதீஸை மறுக்கும் போக்கையும்) இவரிடம் கொண்டு வந்தது யார்? எனக் கூறும் வரையில் இவரைச் சிறையிலிருந்து விடுவிக்க மாட்டேன் என்றும் சத்தியம் செய்தார்.
பின்னர் கலீபாவின் சாச்சா இந்தக் கருத்தைத் தனக்கு யாரும் சொல்லவில்லை என்றும் இது தனது வாயில் இருந்து சாதாரணமாக வந்த வார்த்தை என்றும் தான் அந்த ஹதீஸை நம்புவதாகவும், தனது தவறுக்காக வருந்தி தவ்பா செய்வதாகவும் கூறிய போது அவரை சிறையிலிருந்து விடுவித்தார்.” (ஸியர் அஃலாமுன் னுபலா:9/288)
தனது அறிவுக்கு எட்டாத போது ஹதீஸ்களை ஏளனமாகப் பேசுவது, அலட்சியம் செய்வது என்பது ஆபத்தான போக்கு என்பதில் குர்ஆன், ஹதீஸை ஏற்றுக் கொள்ளும் அறிஞர்களிடம் இருந்த உறுதியை இந்த செய்தி எடுத்துக் காட்டுகின்றது.
இந்த சம்பவம் பற்றி அபூ இஸ்மாயீல் அஸ்ஸாபூனி குறிப்பிடும் பொது “இவ்வாறுதான் நபியவர்களது ஹதீஸ்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும். அவை ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் உண்மைப்படுத்தப்படவும் வேண்டும். அவற்றை மறுப்போரை ஹாரூன் ரஷீத் கண்டித்தது போன்று கடுமையாகக் கண்டிக்கவும் வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்கின்றார்கள்.”
(அகீததுஸ் ஸலப் வஅஸ்ஹாபுல் ஹதீஸ்: 117)
இந்த அடிப்படையில் அறிஞர்கள் ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதில் பெரிதும் உறுதியாக இருந்தனர். அதற்கு மாற்று அபிப்பிராயம் கூறுவதையும் கண்டித்தனர்.
“ஒரு மனிதர் சுபஹுடைய அதானுக்குப் பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத் தொழுத பின்னர் மேலும் அதிகமாகத் தொழுதார். இது கண்ட ஸயீத் இப்னுல் முஸையப்(ரஹ்) அவர்கள் உங்களில் ஒருவருக்கு ஒரு விடயத்தில் தெளிவில்லை என்றால் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதான் கூறப்பட்ட பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத் தொழுவதைத் தவிர வேறு தொழுகையும் இல்லை என்றார்கள்.
உடனே அந்த மனிதர் அதிகமாகத் தொழுததற்காக அல்லாஹ் என்னைத் தண்டிப்பான் என்று நீங்கள் பயப்படுகின்றீர்களா? எனக் கேட்டார். அதற்கு இமாமவர்கள் “இல்லை. (அதானுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்) என்ற சுன்னத்தை விட்டதற்காக அல்லாஹ் உன்னைத் தண்டிப்பான் என அஞ்சுகின்றேன் என்று கூறினார்கள்.”
(அல் பகீஹ் வல் முதபக்கிஹ் 1/214)
குர்ஆன் சுன்னாவில் கூறப்பட்டுள்ளதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதுதான் ஸலபுகளின் அடிப்படையாகும். குர்ஆனையும் சுன்னாவையும் புரிந்து கொள்வதில் பின்வந்தோர்களின் கருத்துக்களை விட நபி(ச) அவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த நல்லறிஞர்களின் கூற்றுக்களுக்கு முன்னிலை அளிப்பர். குறிப்பாக, அகீதா நம்பிக்கை சார்ந்த விடயங்கள், குர்ஆன் சுன்னாவின் பொருளைத் தீர்மானிக்கும் விடயங்களில் இவர்களது கருத்துக்கு முன்னிலை அளிப்பதே ஸலபுக் கொள்கையாகும். இது ஒரு வழிகெட்ட போக்கு அல்ல….
-இஸ்மாயில் ஸலபி