சினிமா நடிகர்கள் ஊதித் தள்ளுவதை ஒரு ஸ்டைலாகவும், அதை வீரமாகக் காட்டி வருவதால் வளரும் இளைஞர்களிடம் இந்த ஆபத்து விரைவாக ஒட்டிக்கொள்கின்றது. சில இளைஞர்கள் புகையை ஒரு இழு இழுத்து விட்டு, வட்ட வட்டமாக அதை விடும் போது அதில் நமது ஆண்மை உறுதிப்படுத்தப்படுவதாக உணர்கின்றனர்.
நட்புக்காக:
சில இளைஞர்கள் நட்புக்காக இந்த நரக நடத்தையில் மாட்டிக்கொள்கின்றனர். “நண்பன் ‘டம்’ அடிக்கும் போது சும்மா ‘கம்பனி’ கொடுப்பதற்காகக் குடிக்கின்றேன்!” என நொண்டிச் சாட்டுக் கூறிக்கொள்கின்றனர். உங்கள் நட்புப் பிரிந்த பின்னர் கூட நட்புக்காக உங்கள் வாயில் வைத்த சிகரட்டைப் பிடித்து, எடுத்துத் தூர எறிய உங்களால் முடியாமல் போய் விடும். எனவே நட்புக்காகவென உங்கள் உடலையும், உள்ளத்தையும், மறுமையையும், பணத்தையும் புகைக்கு இரையாக்க முனையாதீர்கள்!
அறியும் ஆவல்:
பெரியவர்கள் “டம்” அடிக்கும் போது அதைப் பார்க்கும் இளைஞர்களுக்கு அப்படி என்ன அதிலிருக்கின்றது? ஒரு முறை அடித்துத்தான் பார்ப்போமே! என்ற ஓர் ஆர்வம் பிறக்கின்றது. மதுபானத்தையும் சிலர் இப்படித்தான் குடிக்க ஆரம்பிக்கின்றனர். பின்னர் மது அவர்களைக் குடிக்க ஆரம்பித்து விடுகின்றது. பின்னர் அதை விட்டும் கழன்றுகொள்ளும் சக்தி அற்றவர்களாக இவர்கள் மாறி விடுகின்றனர்.
அப்படி என்ன இருக்கின்றது? என்று ஆராயும் நண்பனே! நீ என்ன பெரிய விஞ்ஞானி என்று நினைப்பா உனக்கு? எதையும் அனுபவித்துத்தான் ஆராய வேண்டுமா? விஷத்தைக் குடித்துப் பார்த்து ஆராய்வாயா? சிங்கத்தின் வாயில் தலை விட்டுப் பார்ப்பாயா?
இது தேவையற்ற ஆராய்ச்சி!
முன்னர் இப்படி ஆராயப் போனவர்கள் இன்றைய குடிகாரர்கள்! நாளைய குடிகாரப் பட்டியலில் இடம்பிடிக்கத்தான் இன்று ஒரு “டம்” அடித்துப் பார்ப்போம் என்று அடம்பிடிக்கின்றாயா?
கவிதை வரும்! கற்பனை வரும்!
சிலர், “சிகரெட்டினால்தான் கற்பனை ஊற்றெடுக்கும்! கவிதை வரும்! கற்பனை வளம் கொழிக்கும்!” என்று தமது தவறை நியாயப்படுத்தி, பொய் கூறுவதில் நீ ஏமாந்து விட வேண்டாம்! சிகரெட் பிடித்தால் கவிதை-கற்பனையெல்லாம் வராது; வாயில் நாற்றம் வரும்; நுரையீரலில் நோய் வரும்; புற்றுநோய் வரும்; காசு போகும்; ஆண்மை குறையும். இந்த மாதிரி ஜடங்கள்தான் வரும்-போகுமே தவிர, கற்பனை-கவிதையெல்லாம் வராது! நம்முடைய நாட்டில் எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களெல்லாம் “டம்” அடித்துத்தான் கவிதை எழுதுகின்றனரா?
“டம்” அடித்தால் நல்ல எழுத்து வரும்!” என்றும் கூறுவார்கள். யாராவது பரீட்சை மண்டபத்தில் “டம்” அடித்துக்கொண்டு பரீட்சை எழுதுவதைப் பார்த்ததுண்டா?
“டம்” அடித்தால்தான்..
மற்றும் சிலர் இப்படியும் உளருவர்;
“எனக்கு “டம்” அடித்தால்தான் காலையில் காலைக் கடனைக் கூட ஒழுங்காகச் செய்ய முடியும்!” என்பர். இப்படியும் கன்றாவித் தனமாக உளர முடிகின்றதே! என்று ஆச்சரியமாக உள்ளது.
நமது நாட்டுச் சிறுவர்கள் காலையில் மலம் கழிப்பதில்லையா? பெண்கள் மலம் கழிப்பதில்லையா? ஏன்! இப்படிக் கூறுபவனே “டம்”முக்கு அடிமையாகும் முன்னர் மலம் கழித்ததில்லையா? ஒழுங்காக மலம் கழிக்காத சிறுவர்களுக்கு ஒரு “டம்” அடிக்கக் கொடுங்கள்! அனைத்தும் சரியாகி விடும்! என்று கூறும் ஒரு மருத்துவரையாவது நீங்கள் கண்டதுண்டா? மொட்டைத் தலைக்கும், ழுழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்று அர்த்தமற்ற வாதமாக இது தென்படவில்லையா? அல்லது “டம்” அடித்த போதையில்தான் இப்படி இவர்கள் உளறுகின்றனரா என்று புரியவில்லை.
“டம்” அடித்தால் ஆழழன வரும்:
இது சிலரது வரட்டு வாதம். தனது தவறை நியாயப்படுத்த அவர்களாக அடுக்கிக்கொண்டு செல்லும் அசட்டு வாதங்கள்தான் இவை. சரி! ஆழழன வருவதற்காக அடிப்பவன் வீட்டில் இருக்கும் போது தாம்பத்தியத்திற்கான சாத்தியம் இருக்கும் போது மட்டும் தானே புகைக்க வேண்டும். பயணத்தின் போதும், மனைவி பக்கத்தில் இல்லாத போதும் அடிக்கிறானே! அப்போது ஆழழன வந்தால் எங்கே போய் முட்டும் எண்ணம்! இதுவே இது போலிக் காரணம் என்பதைப் புரிய வைக்கப் போதிய சான்றாகும். ஆழழன வருவதற்காக அடிப்பவரின் மனைவிக்கு ஆழழன வர சிகரெட் பிடிக்க அனுமதிப்பாரா? சிகரெட் பிடித்து விட்டு, உனக்கு ஆழழன வந்தாலும் அந்த நேரத்தின் நாற்ற வாயுடன் இல்லறத்திற்கு நுழையும் போது மனைவிக்கு வாந்தி வரப் பார்க்குமே! “சனியன்! எப்ப தொலையுமோ!” என அவள் மனதுக்குள் வெறுத்துக்கொள்வாளே! அதற்கு என்ன செய்வதாம்? சிகரெட் பிடிப்பது ஆண்மையைக் குறைக்கின்றது என்பதுதான் அறிஞர்களின் கூற்றே தவிர, அது ஆண்மையை வளர்க்கும் என்பதல்ல என்பதைக் கவனத்திற்கொள்ளவும்!
அறிவு அற்றவன் செயல்:
“புகைத்தல்” என்பது அறிவற்றவர்களின் செயலாகும். நீங்கள் ஒரு கடைக்குச் சென்று “நாற்றமெடுக்கும் வாடை கிடைக்குமா? அழுகிய பெட்டீஸ் கிடைக்குமா?” என்று கேட்டு வாங்குவீர்களா? ஒருவன், “பழைய பழுதான உணவு உண்டு!” எனக் கூறி அழைத்தால் அதனை உண்டு மகிழ்வீர்களா? அறிவிருந்தால் இதைச் செய்ய மாட்டீர்கள்! ஆனால், சிகரெட் பெட்டியிலேயே “புகைத்தல் உடல் நலத்திற்குக் கேடானது!” என்று எழுதியுள்ளார்கள். அதைக் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கின்றீர்கள் என்றால் இது அறிவுள்ளவர்களின் வேலையா? புத்தியுள்ள எவரும் இதைச் சரி காண்பார்களா? எனவேதான் “புகைத்தல்” என்பது புத்தியற்றவர்களின் செயல் என்கின்றேன்.
புகைத்தலின் மார்க்க நிலைப்பாடு:
“சிகரெட், பீடி, சுருட்டு என்று அனைத்து வகைப் புகைத்தலும் ஹறாம்!” என்பது இஸ்லாமிய உலக அறிஞர்கள் அனைவரினதும் ஏகோபித்த முடிவாகும்.
நபி(ஸல்) அவர்களது பணிகள் பற்றி அல்லாஹ் கூறும் போது;
“அவர்கள்தான் (எழுத்தறிவற்ற) உம்மி நபியான இத்தூதரைப் பின்பற்றுவார்கள். அவர் குறித்து எழுதப் பட்டிருப்பதைத் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் கண்டுகொள்வார்கள். அவர் அவர்களுக்கு நன்மையை ஏவித் தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கித் தீயவற்றை அவர்களுக்குத் தடை செய்வார். மேலும் அவர்களது சுமையையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டும் நீக்குவார். எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப் படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.” (7:157)
நபி(ஸல்) அவர்கள் நல்லவற்றை ஆகுமாக்குவார்கள்; கெட்டவற்றைத் தடுப்பார்கள். புகைத்தல் என்பது ஒரு கெட்ட நடத்தை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த வகையில் இது இஸ்லாமிய சட்டவாக்கத்தில் “ஹறாம்” என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது.
“(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மனிதர்களுக்குச் (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப் பெரியதாகும்!” எனக் கூறுவீராக! மேலும், தாம் “எதைச் செலவு செய்வது?” என்றும் உம்மிடம் கேட்கின்றனர். “(தேவைக்குப் போக) மீத முள்ளதை!” எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.” (2:219)
மேற்படி வசனம் மதுபானத்தில் சில நன்மைகளும், பெரிய தீமைகளும் இருப்பதாகக் கூறுகின்றது. சில நன்மைகள் இருந்து, அதை விட அதிகத் தீமைகளிருந்தால் அது ஹறாம் என்றிருக்குமானால் தீமைகள் மட்டும் நிறைந்த, எந்த நன்மையுமற்ற சிகரெட்டின் நிலை என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!
தற்கொலைக்கு நிகர்:
சிகரெட்டின் நுணியில் நீங்கள் நெருப்பு வைக்கும் போதே அது உங்கள் உயிரிலும், உடலிலும் தீ மூட்டி விடுகின்றது.
இன்று இளவயது மரண விகிதாசாரம் அதிகரித்துச் செல்வதில் சிகரெட்டுக்குக் கூடிய பங்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருடாந்தம் இலட்சக்கணக்கானோர் சிகரெட் மூலம் மரணத்தைத் தழுவுகின்றனர்.
ஒரு போட்டி நடத்தப்பட்டது:
ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து அந்தச் சிகரெட் முடியும் போது அதே சிகரெட்டில் இன்னுமொரு சிகரெட்டைப் பற்ற வைக்க வேண்டும். இப்படி “அதிக சிகரெட் பிடிப்பவர்கள் யார்” என்பதுதான் போட்டி. ஒருவர் 18 உம், மற்றவர் 17 உம் பிடித்து முறையே முதலாம், இரண்டாம் இடங்களைப் பிடித்தனர். மற்றவர்கள் இடைநடுவில் தோல்வியை ஏற்றுக்கொண்டனர். இந்தப் போட்டியின் பரிசுகளை வழங்குவதற்கு முன்னரே வெற்றியாளர்கள் இருவருக்கும் சிகரெட் மரணத்தைப் பரிசாக வழங்கி விட்டது. சராசரியாக ஒரு சிகரெட் ஒரு மனிதனது ஆயுளில் 11 செக்கன்களைக் குறைக்கின்றது எனக் கணிப்பீடுகள் கூறுகின்றன. எனவே, புகைத்தல் என்பது தற்கொலைக்குச் சமமானது.
“மேலும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய் யுங்கள்! (செலவு செய்யாமல்) அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள்! நன்மையும் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.” (2:195)
எனவே, இந்த அடிப்படையிலும் சிகரெட் “ஹறாம்” என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது.
வீண்-விரயம்:
இஸ்லாம் வீண்-விரயம் செய்வதைத் தடுக்கின்றது. 10 ரூபா பணத்தை எடுத்து எந்த விதத்திலும் நன்மை நல்காத, தீமையைத் தரக் கூடிய சிகரெட்டை வாங்கி ஊதித் தள்ளுவதென்பது மிகப் பெரிய வீண்-விரயமாகும். ஒரு சிகரெட் 10 ரூபா என்று வைத்துக்கொள்வோம். ஒருவன் சராசரியாகக் குறைந்தது ஒரு நாளைக்கு 7 சிகரெட் குடிப்பதாக இருந்தால்..
ஒரு நாளைக்கு ” 70 ருபாய்
ஒரு வாரத்துக்கு ” 490 ருபாய்
ஒரு மாதத்திற்கு ” 2,100 ருபாய்
ஒரு வருடத்திற்கு ” 24,200 ருபாய்
பத்து வருடங்களிற்கு ” 242,000 ருபாய்
நாற்பது வருடங்களிற்கு ” 968,000 ருபாய்
இவ்வாறு பார்க்கும் போது சிகரெட்டின் விலை 40 வருடங்களிற்குக் கூட்டப்படாவிட்டாலும், சிகரெட் குடிப்பவர் குடிக்கும் எண்ணிக்கையைக் கூட்டாவிட்டால் கூட வருடத்திற்குச் சுமார் 242,000 ரூபா சிகரெட்டுக்குச் செலவாகின்றது. தனது பிள்ளையின் படிப்புக்குக் கூட ஒருவன் வருடத்திற்கு 25,000 செலவழிப்பதில்லையே! 10 வருடங்களிற்கு இதே கணக்கு என்று எடுத்துக்கொண்டால் கூட 250,000 அதிகமாகச் செலவாகின்றதே! இது வீண்-விரயமில்லையென்று கூற முடியுமா?
இதே வகையில் இருந்தால் 40 வருடங்களாகின்ற போது 10 இலட்சத்திற்கும் அதிகமாக செலவிடப்படுகின்றதே! இந்த வீண்-விரயத்திற்கு அல்லாஹ்விடம் என்ன பதில் கூறப் போகின்றீர்கள்?
“நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். ஷைத்தான் தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.” (17:27)
என்ற வசனத்தின் படி சிகரெட் குடிப்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாகின்றனரே! ஷைத்தானின் சகோதரனாக இருக்க உங்களுக்குச் சம்மதமா?
நாளை மறுமையில் ஒவ்வொரு மனிதனதும் பணத்தைத் தான் எப்படிச் சம்பாதித்தேன்? என்றும், எந்த வழியில் செலவழித்தேன்? என்றும் கணக்குக் காட்ட வேண்டும். 40 வருடங்கள் சிகரெட் குடித்த ஒருவன், “பத்து இலட்சம் ரூபாப் பணத்தைப் பற்ற வைத்து ஊதித் தள்ளினேன்!” என்று அல்லாஹ்விடம் கூற முடியுமா? அப்படிக் கூறி விட்டுத் தப்பி விடத்தான் முடியுமா? எனவே, உங்களை அழிக்கும்/உங்கள் பொருளை அழிக்கும் இந்தப் “புகை” எனும் பகைவனுடன் ஏன் இன்னும் உங்களுக்கு நட்புறவு? புகைத்தலைப் பகைத்தல் என்பது மார்க்கக் கடமை என்பதை உணர்ந்து உறுதியான முடிவை எடுங்கள்!
பிறருக்குத் தொல்லை:
“நல்ல முஸ்லிம் யார்?” என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “தன் கையாலோ, நாவாலோ பிறருக்குத் தீங்கிழைக்காதவனே சிறந்த முஸ்லிம்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி)
ஒருவன் புகைப்பதால் அவன் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவன் ஊதித் தள்ளும் புகையைச் சுவாசிப்பவர்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றனர். ஒரு கர்ப்பிணி புகைத்தால் அவளது குழந்தையும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றது. வீட்டில் ஊதித் தள்ளும் ஊதாரித் தந்தையர்களால் குழந்தைகள் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்; மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய குழந்தைகள் வெகு விரைவாகப் புகைத்தலுக்கு அடிமையாகின்றனர். சில சிறுசுகள் தந்தை வீசும் பீடி/சிகரெட் துண்டுகளை எடுத்துத் தாமும் ஒரு முறை ஊதிப் பார்த்துக்கொள்கின்றனர். நீங்கள் ஒரு சிறந்த முஸ்லிமாக இருக்க உங்களுக்கு ஆசையில்லையா? அடுத்தவருக்குத் தீங்கிழைக்காத ஒரு சராசரி நல்ல மனிதனாக இருக்க உங்களுக்கு ஆசையில்லையா? பரவாயில்லை! உங்கள் மனைவியைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!
பொதுவாகப் பெண்களுக்கும், சிகரெட் குடிக்காதவர்களுக்கும் அந்த நாற்றம் பிடிக்கவே பிடிக்காது. வயிற்றைக் குமட்டிக்கொண்டு வரும். நீங்கள் இல்லறத்தில் ஈடுபடும் போது சிகரெட் நாற்றம் பிடிக்காமல் உங்கள் மனைவி வேண்டா வெறுப்புடன் வாழ்க்கை நடத்தினால் அது எவ்வளவு பெரிய கொடுமை என்று எண்ணிப் பாருங்கள்! வாழ்க்கையில் திருப்தியற்ற இத்தகைய பெண்கள் வேலி தாண்டிய வெள்ளாடுகளாகிப் போனால் அந்தக் குற்றத்தில் உங்கள் நறுமனம் சிகரெட்டினால் கமழும்(?) வாய்க்கும் முக்கிய பங்கிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!
வெங்காயமும், வெள்ளைப்பூடும்:
வெங்காயம். வெள்ளைப்பூடு. இவையிரண்டும் சிறந்த மருத்துவக் குணங்கொண்டவையாகும். இவற்றை உண்பதை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். எனினும் இவற்றைப் பச்சையாக உண்டவர், பல் துலக்காமல் பள்ளிக்கு வர வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (புகாரி)
ஏனெனில், வெங்காயம்-வெள்ளைப்பூடு சாப்பிட்டால் வாயில் வாடை வரும். அந்த வாடை அருகில் தொழுபவர்களுக்கு மட்டுமன்றி மலக்குகளுக்குக் கூட அவை வெறுப்பை உண்டுபண்ணுவதாகக் கூறினார்கள். அனுமதிக்கப்பட்ட வெங்காயம்-வெள்ளைப்பூட்டின் நிலையே இதுவென்றால் சிகரெட்டின் நிலை என்னவென்று நிதானமாகச் சிந்தியுங்கள்!
எனவே, புகைக்கும் நண்பர்களே!
புகைக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று உறுதியாக முடிவு எடுங்கள்! அதில் உறுதியாக இருங்கள்! சிகரெட்டுப் பிடிக்கும் நண்பர்களை விட்டும் கொஞ்சம் ஒதுங்குங்கள்! நீங்கள் சிகரெட் குடிக்கும் நேரங்களில் உங்கள் மனம் விரும்பும் ஏனைய காரியங்களில் ஆர்வம் காட்டுங்கள்! அப்படியும் முடியவில்லையென்றால் ஒரு டொஃபியையோ(மிட்டாய்), சுவிங்கத்தையோ அந்நேரத்தில் வாயில் போட்டுக்கொள்ளுங்கள்! நண்பர்களாகச் சேர்ந்து “டம்” அடித்த இடங்களைத் தவிருங்கள்!
“ரமழான்” – நல்ல வாய்ப்பு:
புகைத்தலை விடுவதற்கு “ரமழான்” நல்ல வாய்ப்பாகும். 14 மணி நேரம் உண்ணாமல், பருகாமல் பயிற்சி எடுக்கின்றோம். இப்படிப் பயிற்சியெடுத்த சிலர் சிகரெட்டை ஒரு கடமை போன்றும், அதைக் கழாச் செய்து விட வேண்டும் என்பது போன்றும் கருதி, நோன்பு திறந்ததிலிருந்து ஸஹர் வரைக்கும் ஊதித் தள்ளிப் பகல் குடிக்காததையும் ஈடு செய்து விடுகின்றனர்.
சிகரெட் குடிப்பதில்லை என நீங்கள் உறுதியான முடிவெடுத்து விட்டால் இஃப்தாருக்குப் பின்னர் சற்று நேரந்தான் நீங்கள் ஓய்வாக இருக்கின்றீர்கள். அந்த நேரத்தில் உறுதியாக இருந்து விட்டால் அதன் பின் கியாமுல்லைல்; அதன் பின் உறக்கம்; விழித்ததும் ஸஹர் என்று காலம் போனால் சிகரெட்டை முழுமையாகக் கைவிட முடியும். நீங்களாக ஏற்படுத்திக்கொண்ட இந்த வீணான செயலை நீங்களேதான் விட வேண்டும். வேறு யாரும் வந்து உங்களுக்கும் சிகரெட்டுக்குமிடையில் பிரிவை ஏற்படுத்த மாட்டார்கள்.
எனவே, புகைத்தலின் தீமையை உணருங்கள்! அதை விட்டு விடுவதாக உறுதியாக முடிவு செய்யுங்கள்! நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. இந்த நோன்பிலாவது இதை நீங்கள் விட்டு விடவில்லையென்றால் உங்கள் வாழ்வை ஹறாத்தை விட்டும் நீங்கள் காத்துக்கொள்ளவில்லையென்றால் நீங்கள் சிகரெட்டில் வைத்த நெருப்பு நாளை நரக நெருப்பு வரை உங்களைக் கொண்டு சென்று விடலாம் என்பது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!