அல்குர்ஆன் அஸ்ஸுன்னா ஆகிய இரண்டுக்கும் மாற்றமாக இருக்க கூடிய ஒவ்வொன்றும் ஜாஹிலிய்யத் ஆகும்
ஆதாரம் :
اَفَحُكْمَ الْجَـاهِلِيَّةِ يَـبْغُوْنَ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّـقَوْمٍ يُّوْقِنُوْنَ
அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?
(அல்குர்ஆன் : 5:50)
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் “ஸைனப்' என்றழைக்கப்படும் “அஹ்மஸ்' குலத்துப் பெண்ணொருத்தியிடம் (அவளது இல்லத்துக்குச்) சென்றார்கள். அவளை (மௌன விரதம் பூண்டு) பேசாமலிருப்பவளாகக் கண்டார்கள். உடனே, “இவளுக்கென்ன ஆயிற்று? ஏன் பேசாமலிருக்கிறாள்?” என்று கேட்டார்கள். மக்கள், “(இவள் ஹஜ் செய்யும்வரை) எவருடனும் பேசமாட்டேன் என்று நேர்ச்சை செய்திருக்கிறாள்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளிடம், “நீ பேசு. ஏனெனில் இ(வ்வாறு மௌனவிரதம் பூணுவ)து அனுமதிக்கப் பட்ட செயலன்று; இது அறியாமைக் காலச் செயலாகும்” என்று சொன்னார்கள்.
ஆகவே, அவள் (மௌன விரதத்தைக் கலைத்துப்) பேசினாள். “நீங்கள் யார்?” என்று கேட்டாள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “முஹாஜிர்களில் ஒருவன்” என்று பதிலளித் தார்கள். அப்பெண், “முஹாஜிர்களில் நீங்கள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்?” என்று கேட்க, அபூபக்ர் (ரலி) அவர்கள், “குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவன்” என்று பதிலளித்தார்கள். அப்பெண், “குறைஷி யரில் நீங்கள் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்?” என்று கேட்க, அபூபக்ர் (ரலி) அவர்கள், “நீ அதிகமாகக் கேள்வி கேட்கிறாயே? நான்தான் அபூபக்ர்” என்று பதிலளித்தார்கள்.
அப்பெண், “அறியாமைக் காலத்திற்குப் பிறகு எங்களிடம் வந்த இந்த (இஸ்லாம் எனும்) நல்ல நிலையில் நாங்கள் நீடித்து நிலைத்திருக்க வழி யாது?” என்று கேட்டாள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “உங்கள் தலைவர்கள் உங்களைச் சீராக நிர்வகித்து வரும்வரை அதில் நீங்கள் நீடித்து நிலைத்திருப்பீர்கள்” என்று பதிலளித்தார்கள்.
அந்தப் பெண், “அந்தத் தலைவர்கள் யார்?” என்று கேட்க, அபூபக்ர் (ரலி) அவர்கள், “உங்கள் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடவும், அதற்கு அவர்கள் கீழ்ப்படியவும் செய்கின்ற தலைவர்களும் முக்கியஸ்தர்களும் உங்களுக்கு இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், “ஆம், இருக்கிறார்கள்” என்று பதிலளித்தாள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அவர்கள்தான் மக்களின் தலைவர்கள்” என்று சொன்னார்கள்.
(நூல் புஹாரி 3834)
மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவுக்கு அருகிலுள்ள) ‘ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர்மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதைப் போன்றே) அவருடைய அடிமைமீது ஒரு ஜோடி ஆடையும் இருப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் உரிமையாளரும் ஒரே விதமான உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:
நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக்கொண்டிருக்கையில் அவருடைய தாயைக் கொண்டு அவரை இழிவு படுத்திப் பேசிவிட்டேன்.
அப்போது என்னைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், “அபூதர்! அவருடைய தாயைக் குறிப்பிட்டு இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர். உங்களின் அடிமைகள் உங்களின் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின்கீழ் வைத்துள்ளான். எனவே, தம் சகோதரரைத் தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உணவளிக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு கொடுத்தால், அவர்களுக்கு நீங்கள் ஒத்துழையுங்கள்” என்று கூறினார்கள்.
(நூல் புஹாரி )
(அல்லாஹ் மிக அறிந்தவன் )