இஸ்லாமிய பார்வையில் ரஜபும் , நாம் தேடிக் கொண்டிருக்கும் பரக்கத்தும்

- உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
 
பரக்கத் பெற்ற ரமழான் மாதத்தை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், அல்லாஹ் நம் அனைவருக்கும் இறையருளைப் பெற்ற அந்த மாதத்தை அடையச் செய்து நற்கருமங்கள் அதிக அதிகமாக புரிவதற்கு நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!!

கண்ணியமானவர்களே ரஜப் மாதம் வந்துவிட்டாலே அனைத்து பள்ளிகளிலும் வெள்ளி மேடைகளிலும் உலமா பெருமக்கள் ரஜப் மாதத்தின் பரக்கத்தைப் பற்றி பயான்கள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்,

அதில் சிலர் பொதுமக்களுக்கு ஆதாரபூர்வமான நபிமொழிகளையும் முறையான மார்க்க விடயங்களை இந்த சொற்பொழிவுகளில் தெளிவுபடுத்துவதுமில்லை,

எதில் பரக்கத்தை பெறமுடியும் எதில் பரக்கத்தை பெற முடியாது தடுக்கப்பட்டது எது? அனுமதிக்கப்பட்டது எது? என்று கூட அந்த பயானில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை!!

வளைத்து நெளித்து ஆதாரங்களை முன்வைத்து ரஜப் மாதத்தில் குறிப்பாக பரக்கத் பெற்ற மாதம் என்று மிக பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட நபிமொழிகளை கூறி பொதுமக்களை வழிதவறுச் செய்கின்றனர்,

பரக்கத் என்பது  குறைவாக இருந்தாலும் நமது அதிகப்படியான தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றி வைத்து விடுவான்
அது ஓர் இறை அருள் .

திருக்குர்ஆனின் கீழ்காணும் வசனத்தில் நாம் இந்த பரக்கத்தின் விளக்கத்தை பற்றி பார்க்கலாம்

سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌  اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 17:1)

(மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம் , அதாவது பரக்கத் செய்திருக்கிறோம் என்பதாக வந்துள்ளது,

நபியவர்கள் தங்களது வாழ்வில் கீழ்காணும் நபிமொழியில் இருப்பது போன்று பரக்கத்தை அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறார்கள்...

இறைவா நீ வழங்கிய விடயங்களில் பரக்கத் செய்வாயாக 
(ஸுன்னத் அபூதாவூத்)

நபியவர்களே பரக்கத் கூறியவர்கள் இறையருள் பெற்றவர்கள் அவர்களின் காலங்களில் நபியவர்களின் முபாரக்காண உமில் நீரும், வேர்வையும் அவர்கள் செய்த ஒழுவின் தண்ணீரிலும் அவர்களின் முபாரக்கான தலை முடிகளும் பரக்கத் பெற்றதாக ஸஹாபாக்களிடம்  காணமுடிகிறது,

இதற்கு ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகளையும் நாம் காணலாம்,

ஆக முறையாக மார்க்கம் நமக்கு கற்றுக்கொடுத்த விதத்தில் பரக்கத்தை தேடுவது தவறில்லை,
ஆனால் அதை மரணித்தவர்களிடத்திலோ அல்லது சான்றோர்கள் பெரியோர்கள் என்று சிலரால் புனிதப்படுத்தப்பட்ட சில பொருள்களாலோ பரக்கத்தை தேடுவது ஹராமாகும்.

ஜாஹிலிய்யா அறியாமை காலத்தில் எவ்வாறு முஸ்லீம்கள் தங்களுடைய சிலைகளை தடவுவதன்  மூலம் பரக்கத்தை பெற்று வந்தார்களோ அதை முகர்ந்து கொள்வார்கள் தங்களது உடல்களில் தடவிக் கொள்வார்கள் இந்த அனைத்து மூடப் பழக்கங்களையும் இஸ்லாம் முற்றிலுமாக ஒழித்தது,

ஆனால் நபியவர்களின் மரணத்திற்கு பின்பு நபியவர்கள் காட்டித்தராத எதை எதையெல்லாம் மக்கள் பரக்கத்தாக கருதினார்களோ
அவைகளை சஹாபாக்கள் வன்மையாக கண்டித்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்கள் அதற்கு வரலாற்றில் பல உதாரணங்களைச் சொல்லலாம்,

"பைஅதுர் ரிழ்வான்",  என்று சொல்லக்கூடிய ஹுதைபிய்யா உடன்படிக்கையில் எந்த மரத்தின் கீழ் நின்று நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு உபதேசம் செய்தார்களோ அந்த மரத்தை சிலர் தவறுதலாக பரக்கத் பெற்றதாக கருதினர் நபியவர்களின் மரணத்திற்கு பின்பு உமர் ரலியல்லாஹீ அன்ஹூ அவர்கள் அவ்வாறு தவறாக கருதப்பட்ட அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார்கள்,

"இக்திழாவுஸ் ஸிராதில் முஸ்லீம்",
என்ற புத்தகத்தில் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் இவ்வாறு கூறுகிறார்கள்.

காரணம் மக்கள் அதை பரக்கத் புரிந்ததாக மாற்றி ஷிர்க்கை இணைவைப்பை செய்ய ஆரம்பித்து விட்டனர்,

ரஜப் மாதத்தை பரக்கத் பொதிந்ததாக எண்ணி யார் நோன்பு வைத்தார்களோ அவர்களை இப்னு அப்பாஸ்  ரலியல்லாஹீ அன்ஹூ அவர்கள் அறிவித்த நபி மொழியை வைத்து  உமர் ரலியல்லாஹீ அன்ஹூ  கண்டித்தும், தடுத்தும் இருக்கிறார்கள் ,

ரஜப் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்தஹப் ஆனது என்று வேறு சில மாற்றுக் கருத்துக்கள் உடைய அறிஞர் பெருமக்கள் மிக பலவீனமான நபிமொழியை ஆதாரமாக எடுக்கின்றார்கள்.

வழமையாக ஒருவர் நோன்பு நோற்று வருகிறார் என்று சொன்னால் தவறு இல்லை பிரத்தியோகமாக குறிப்பிட்டு ரஜப் உடைய 27 ஆம் நாளில் மெஃராஜ் உடைய நாளாக கருதி அதில் நோன்பு நோற்பது, விழித்திருந்து விசேடமான அமல்கள் செய்வது பித்அத்தாகும்.

ஆக இஸ்லாத்தின் ஆணிவேரான ஏகத்துவமே சீர்குலையும் விதத்தில் நாம் இன்று ரஜப் மாத தோரணையில் நாம் அல்லாஹ்வும் தூதரும் காட்டித் தராத வழிமுறைகளில் பரக்கத்தை தேடிக் கொண்டிருக்கிறோம்,

அந்த மாதத்திற்கென்று சில தொழுகைகள் வித்தியாசமான நோன்புகள் இபாதத்கள் என்று செய்வதன் மூலம் நாம் இறை அருளைப் பெற முடியாது இறை அதிருப்தியை தான் பெற முடியும்

தொழுகத் தானே செய்கிறார்கள் நோன்பு தானே வைக்கிறார்கள் நல்ல காரியத்தை ஏன் தடுப்பது என்று சில முஸ்லிம்களும் குர்ஆன் சுன்னா சொல்லுகின்ற, சத்திய சஹாபாக்கள் ,  சங்கையான  இமாம்கள்போதித்து வந்த சத்தியமான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை உடைய  மார்க்க கல்வியை பெறாததால் இவ்வாறு கூறிவிடுகிறார்கள்
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதாக கூறுகிறார்கள்

யார் நமது மார்க்க விடயத்தில் நூதனமான முறையில் மார்க்கம் சொல்லாத விடயங்களை மார்க்கமாக ஆக்க விரும்புகிறார்களோ அது மறுக்கப்பட வேண்டியவையாகும்
(முஸ்லிம்)

ரஜப் மாதம் வந்து விட்டால் 
'அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப வஷஃபான வபல்லிக்னா ரமழான' 

யா அல்லாஹ் ரஜபிலும், ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக, இன்னும் றமழான் மாதத்தை அடைந்துகொள்ளும் பாக்கியத்தை தந்தருள்வாயாக!

என்று துஆ செய்யம் பழக்கம் அதிகமானவர்களிடம் இருக்கிறது.

இந்த துஆவை நபி (ஸல்) கற்றுத்தந்ததாகவே பலரும் சொல்லவும் செய்கின்றனர்.

அப்படி ஒரு ஹதீஸ் இருப்பது உண்மையே. ஆனால் அந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் இருவர் ஹதீஸ் துறை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் என்பதால் அந்த ஹதீஸ் மிகவும் பலகீனமானது என்பதே ஹதீஸ் துறை அறிஞர்களின் முடிவு.

எனவே இந்த துஆவை நபி கற்றுத் தந்த துஆ என்று கூறுவதும் அவ்வாறு நம்பி ஓதிவருவதும் தவறாகும்.

ஆனால் நமது சான்றோர்கள் ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே ரமளானை வரவேற்க ஆரம்பிப்பார்கள் ரமலானில் நல் அமல்கள் புரிய  இறைவனிடத்திலே பிரார்த்தித்துக் கொள்வார்கள் என்று இமாம் இப்னு ரஜப் ஹம்பலி ரஹிமஹுல்லாஹ் தனது புத்தகமாகிய 
"லதாயிபிஃல் மஆரிபிஃல்" குறிப்பிடுகிறார்கள்

நபி கற்றுத்தந்த துஆ என்று இல்லாமல் நாம் அல்லாஹ்விடம் இந்த வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்திக்கிறோம் என்று யாராவது கூறினால் அப்படி துஆ கேட்பதில் தவறு ஏதும் இருப்பதாக கூறவோ அதனைத் தடுக்கவோ முடியாது.

ரஜப் மாதத்தில் மாத்திரம் குறிப்பான பிரத்தியேகமான வணக்கவழிபாடுகள் என்ற ஒன்று குறிப்பிடப்பட்டதாக வரவில்லை. அதிலே சில ஸலவாத்துக்கள் என்றும் பிரார்த்தனைகள் என்றும் வரக்கூடிய அறிவிப்புக்கள் அனைத்துமே ஆதாரபூர்வமற்றது. அவைகளைப் பற்றி கீழே விளக்கமாகப் பார்ப்போம்.

அல்ஹாபில் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ரஜப் மாதத்தின் சிறப்பு சம்பந்தமாகவோ அல்லது அதிலே நோன்பு நோற்பது சம்பந்தமாகவோ அல்லது அவைகளில் குறிப்பிட்ட சில நோன்புகள் நோற்பது பற்றியோ அல்லது அதிலே குறிப்பிட்ட இரவில் நின்று வணங்குவது சம்பந்தமாகவோ எந்தவித ஆதாரபூர்வமான ஹதீஸ்களோ வரவில்லை. மேலும் “அல்ஹாபில் அபூ இஸ்மாஈல் அல்ஹரவி” அவர்களும் எனக்கு முன்னர் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள்.” (தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் – இப்னு ஹஜ்ர் – பக்கம் 23)

இன்னும் கூறினார்கள்: ரஜப் மாத சிறப்பைப் பற்றியோ அல்லது அதில் நோன்பு நோற்பது பற்றியோ அல்லது அதில் சில நாட்கள் தெளிவாக நோன்பு நோற்பது பற்றி வரக்கூடிய ஹதீஸ்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்: ஒன்று பலவீனமானது மற்றையது இட்டுக்கட்டப்பட்டது. (தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் – இப்னு ஹஜ்ர் – பக்கம் 23)

ரஜப் மாதம் குறித்து வரக்கூடிய சில பொய்யான மற்றும் பலவீனமான ஹதீஸ்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.

1. சுவர்க்கத்தில் ஓர் ஆறு உண்டு, அதன் பெயர் ரஜபாகும். இது பலவீனமான ஹதீஸாகும்.

2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாதம் வந்தால், எனது இறைவனே எங்களுக்கு ரஜப் மற்றும் ஷஃபான் மாதத்தில் அபிவிருத்தி செய்வாயாக. இன்னும், எங்களுக்கு ரமழான் மாதத்தை அடையச்செய்வாயாக என்று கூறுவதாக இடம் பெற்ற ஹதீஸும் பலவீனமானதாகும்.

3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுக்குப் பின்பு  ரஜப் மற்றும் ஷஃபானைத்தவிர வேறு தினங்களில் நோன்பு நோற்கவில்லை. இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

4. ரஜப் அல்லாஹ்வுடைய மாதமாகும். இந்த ஹதீஸ் பொய்யானதாகும்.

5. ஏனைய மாதங்களைவிட ரஜப் மாதத்திற்கு சிறப்பு உள்ளதாக வரும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும்.

6. ரஜப் மாதத்தின் நாட்கள் ஆறாவது வானத்தின் வாசல்களில் எழுதப்பட்டுள்ளன. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஒரு பொய்யன் இருக்கின்றான்.

7. ரஜப் மாதத்தின் முதலாவது இரவில் தொழுவதின் சிறப்பு குறித்து வரக்கூடிய ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும்.

8. ரஜப் மாதம் இருபத்தி ஏழாம் தினத்தில் நான் நபியாக அனுப்பப்பட்டேன். இதன் அறிவிப்பாளர் வரிசை மறுக்கப்பட்டதாகும்.

இன்னும், பல செய்திகள் இது குறித்து இடம்பெற்றுள்ளன. அவைகளில் ஒன்று கூட சரியான ஹதீஸாக இடம்பெறவில்லை.

அல்இஸ்ராஃ, அல்மிஃராஜ் - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இராப்பயணம் மற்றும் விண்ணுலகப் பயணம் - இடம்பெற்றது ரஜப் மாதத்திலா?

அபூஷாமா என்ற அறிஞர் அல்பாஇஸ் அலா இன்காரில் பிதஇ வல்ஹவாதிஸ் என்ற தன்னுடைய நூலில் இஸ்ரா ரஜப் மாதத்தில் நடைபெறவில்லை என்று குறிப்பிடுகின்றார்.

சில கதை கூறும் வழக்கமுடையவர்கள் இஸ்ரா ரஜப் மாதத்தில் நடைபெற்றது என்று கூறியிருக்கின்றார்கள். இது ஹதீஸ் கலை அறிஞர்களிடத்தில் பொய்யான ஒரு தகவலாகும்.

அபூ இஸ்ஹாக் அல்ஹர்பீ என்ற அறிஞர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விண்ணுலகப் பயணத்தை ரபீஉல் அவ்வல் இருபத்தி ஏழாம் தினத்தில் மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.

இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இஸ்ரா மிஃராஜுடைய இரவு குறித்து அது எம்மாத்தில் இடம்பெற்றது என்பதில் அறியப்பட்ட ஆதாரங்கள் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

إن شهر رجب شهر عظيم ، من صام منه يوماً كتب الله له صوم ألف سنة

'நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்'

இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206, 207). தப்யீனுல் அஜப் பக்: 26

நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்

அறிவிப்பவர்- ஆயிஷா (ரலி) அவர்கள் 

நூல் ஸஹீஹுல் புகாரி-2697, முஸ்லிம்-3242

اَلْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ 
 இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; 
(அல்குர்ஆன் : 5:3)
أحدث أقدم