ஹதீஸ்கள் - சுருக்கமான அறிமுகம்



‘அல்-ஹதீஸ்” என்பது அண்ணல் (நபி) அவர்கள்

சொன்னவை (கவ்லீ)

செய்தவை (பிஃலீ)

அங்கீகரித்தவை (தக்ரீரி)

இவை அனைத்தும் ஹதீஸ் எனப்படும்.

இது திருக்குர் ஆனுக்கும் ஒரு விளக்கமாக அமைந்துள்ளது. இறை வேதத்துக்கு அடுத்தபடியாக கொள்ளத்தக்கது இதுவேயாகும்.

ஹதீஸ்கள் பல காரணங்களை அடிப்படையாக கொண்டு பெரும் பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன அவை:

1) i. ஹதீஸ் குத்ஸீ:
இறைவனின் கருத்தை ஜிப்ரீல் (அலை) தம் சொல்லால் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாகும்.

ii. ஹதீஸ் நபவீ:
அண்ணல் நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் ஹதீஸ் நபவீ என்றும் (ஹதீஸ் கைர குத்ஸீ என்றும்) வழங்கப்படும்.

2) i. ஸஹீஹ் – ஆதாரப்பூர்வமானது.

ii. மவ்ளூவு - இட்டுக்கட்டப்பட்டது.

iii. மத்ருக் – விடப்படுவதற்கு ஏற்றது.

iv. லயீஃப் - பலவீனமானது.

3) i. முதவாத்திர்: முதவாத்திர் என்பது ஒவ்வொரு அறிவிப்பாளர் தொடரிலும் பல நபர்கள் இடம் பெறுவதாகும். 

ii. அல் ஆஹாத்: ஒரே ஒரு அறிவிப்பாளர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் ஆஹாத் எனப்படும்.

இவை தவிர ஹதீஸ்கலையில் ஹதீஸ்களை ஸஹீஹ் லிதாதிஹி, ஸஹீஹ் லிஙைரிஹி, ஹஸன் லிதாதிஹி, ஹஸன் லிஙைரிஹி என்றும் தரம் பிரிப்பர். (விரிவாக அறிந்து கொள்ள ஹதீஸ்கலை பகுதியை படிக்கவும்)

முதலில் ஹதீஸ்கள் ஏன் நூல் வடிவில் தொகுக்கப்படவில்லை?

நபி (ஸல்) அவர்களது காலத்திலேயே ஹதீஸ்கள் ஆங்காங்கே ஒரு சில ஸஹாபாக்களால் தொகுக்கப்பட்டு எழுத்துருப் பெற்றிருந்தாலும் (பார்க்க : ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டு தொகுக்கப்பட்ட வரலாறுஇறைவசனங்களோடு நபிமொழிகள் ஒன்றறக் கலந்து விடக்கூடாது என்பதற்காகவும், எல்லாப் பிரச்சனைகளுக்கும் பரிகாரம் கூறக்கூடிய அல்லாஹ்வின் திருத்தூதர் மக்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்ததாலும், ஆயிரக்கணக்கான மக்களின் உள்ளங்களில் பதிந்திருந்தாலும் ஆரம்பகாலத்தில் ஹதீஸ்கள் நூல்வடிவில் தொகுக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

பின்னர் தொகுக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?

நபிகள் நாயகத்தின் மறைவிற்க்குப் பிறகு இலட்சக்கணக்கான ஹதீஸ்களை மனனம் செய்த நாயகத்தோழர்கள் மார்க்கப் பிரச்சாரத் திற்காக பல்வேறு நாடுகளுக்குப் பயணமாகிக் கெண்டிருந்தார்கள். பலர் இஸ்லாமியப் போர்களில் கலந்து கொண்டு இறப்பெய்திக் கொண்டுமிருந்தார்கள். மேலும் எழுத்துருவில் காணப்பட்ட சில தொகுப்புக்களும் கூட முறைப்படியான தொகுப்பாக இல்லாமல் அங்குமிங்கும் சிதறிக் கிடந்ததனாலும் நபிமொழிகள் தொகுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

“நான் சொல்லாதவற்றை சொன்னதாக யார் சொல்கிறார்களோ அவர்கள் தங்கள் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.”

என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையால் அபூபக்கரு (ரலி), உமர் (ரலி) போன்ற ஸஹாபாக்கள் ஹதீஸ்களை தொகுக்கும் முயற்சியில் முனையவில்லை. பின்னர் இதன் தேவை உணரப்பட்டதும் பல நல்லோர் இதனை தொகுப்பதில் முயற்ச்சிகளை மேற்கொண்டனர்.

இத்துறையில் முதன் முதலில் கவனம் செலுத்தி ஆவனை செய்தவர் இரண்டாவது உமர் என அழைக்கப்படும் கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) ஆவார்.


ஹிஜ்ரி 100 முதல் 200 வரை ஹதீஸ் நூல்கள்:

கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் ஆணைப்படி அன்று மதீனாவின் கவர்னராக இருந்த ஆபூபக்கர் இப்னு ஹஸம் (ரஹ்) அப்பணியை மேற்கொண்டனர். இமாம்களான இப்னு இஸ்ஹாக், இப்னு ஜூரைஜ், ஸூஃப்யானுத் தவ்ரீ, அப்துல்லாஹ் இப்னு முபாரக், இப்னு ஜரீர் அத்தபரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, போன்றோர் அப்பணியில் ஈடுபட்டு ஹிஜ்ரி 100 முதல் 200 வரை சிறிதும் பெரிதுமாக சுமார் 20 ஹதீஸ் நூல்களைத் தொகுத்தனர்.

அதன் பிறகு இமாம் மாலிக், இமாம் ஷாபியீ, இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்,ஆகியோர் முறையே முவத்தா, முஸ்னத் ஷாஃபியீ, முஸ்னத் அஹ்மத் போன்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் நூல்களைத் தொகுத்தனர்.


பொற்காலமும் ஆறு திரட்டுகளும்:

அதன் பிறகு ஸிஹாஹ் ஸித்தா என்னும் ஆறு திரட்டுகளை உருவாக்கிய இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் அபூ தாவூது, இமாம் திர்மிதீ, இமாம் நஸயீ, இமாம் இப்னு மாஜா ஆகியோர் இப் பெரும் பணியில் ஈடுபட்டனர். இவர்களின் காலமே ஹதீஸ் கலையின் பொற்காலமாகும்.

அரசியல் காரணங்களுக்காகவும், இஸ்லாத்திற்கு ஊறுவிளைவிக்க வேண்டுமென்ற குரோத நோக்கத்துடனும் பல்லாயிரக்கணக்கான பொய்யான ஹதீஸ்களை புனைந்து உண்மையான ஹதீஸ்களுடன் கலந்துவிடப்பட்டிருந்ததால் பொய்யான ஹதீஸ்களில் இருந்து உண்மையான ஹதீஸூகளை தரம் பிரிப்பது இவர்களுக்கு மிகவும் கடினமான வேலையாக இருந்தது.

நம் முன்னோர்கள் ஹதீஸ்களை ஒருவரிடம் கேட்டார்கள், உடனே எழுதிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள் என்ற அளவில் ஹதீஸ்கள் தொகுக்கப்படவில்லை.

உதாரணமாக நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாக கேட்டவர் யார்? அவரிடம் கேட்டவர் யார்? என்று கடைசிவரை அறிவித்தவர் யார்? அவர்களின் நினைவாற்றல், நல்லொழுக்கம், பிறப்பு, இறப்பு, வரலாறு ஆகியவற்றை ஐயமறத் தெரிந்து தெளிந்து தேர்ந்த பின்னரே ஒரு ஹதீஸை தேர்ந்தெடுக்கப்படும்.

இவ்வாறு பல்லாண்டுகள் ஆயிரக்கணக்கான மைல்கள் கால்நடை யாகப் பயணம் செய்து பல இலட்சம் ஹதீஸ்களை சேகரித்து தங்களின் கடினமான விதிகளால் அவற்றிலிருந்து சில ஆயிரம் ஹதீஸ்களை தேர்வு செய்தனர்.


இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரம்:

இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரமாக ‘ஹதீஸ்’ காணப்படுகிறது. ஹதீஸ்கள் திரட்டப்பட்ட நூல்கள் மிக அண்மைக் காலம் வரை, அவற்றின் மூல மொழியான அரபு மொழியிலேயே இருந்து வந்தன. தற்போது சில நிறுவனங்களாலும், அறிஞர்களின் பெரும் முயற்சியா லும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டி ருக்கின்றன.

அதிலும் குறிப்பாக புகாரி, முஸ்லிம் போன்ற நூல்கள் முழுமையாக வெளிவந்துவிட்டன. இது தமிழ் உலகிற்கும், குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய அருளாகும். ஆகவே, அனைவரும் அவற்றைப் படித்து தம் வாழ்வில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

அவற்றைப் படிக்கும் போது ஹதீஸ் கலையுடன் தொடர்பான சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். அப்போதுதான் அவற்றின் மூலம் பயன் பெற முடியும். எனவே, ஹதீஸ் நூற்களிலும், ஏனைய இஸ்லாமிய நூற்களிலும் காணப்படும் சில சொல் வழக்குகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஹதீஸ், ஸுன்னத், கபர், அதர், ஹதீஸுல் குத்ஸி ஆகிய 5 சொல் வழக்குகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை முதலில் பார்ப்போம்.


1. ஹதீஸ்:
الحديث

ஹதீஸ் என்னும் சொல்லிற்கு அகராதியில் புதியது, செய்தி என்பது பொருளாகும். மார்க்க வழக்கில் நபி (ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம், பண்பாடுகள், அங்க அடையாளங்கள் தொடர்பான செயதிகளுக்கு சொல்லப்படும், அவை நபித்துவத்திற்கு முன்னரோ, பின்னரோ இடம் பெற்றவையாக இருக்கலாம்.

மேற்படி வரைவிலக்கணத்தின் அடிப்படையில் ‘ஸுன்னத்’ என்ற வார்த்தையை விட விரிவான, ஆழமான விளக்கம் கொண்டதாகவே ‘ஹதீஸ்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.

அதேவேளை ‘ஸுன்னத்’ என்பது நபித்துவத்திற்குப் பின்னர் நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திய சட்டங்கள், மேற்கொண்டு வந்த இபாதத்துக்கள் போன்றவற்றை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஹதீஸ் – ஸுன்னா இரண்டுக்குமிடையே உள்ள வேறுபாடாகும்.


2.ஸுன்னத்
السـنـة

“ஸுன்னா” என்ற சொல் அரபு மொழியில் வழிமுறை, நடைமுறை என்ற கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். இச்சொல் இதே கருத்துக்களில் அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். அல்லாஹ் கூறுகின்றான்
سُنَّةَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ مِن قَبْلُ وَلَن تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلًا

இவ்வாறு செய்வதே அல்லாஹ்வுடைய ஸுன்னத் (நடைமுறை) ஆகும். இதற்கு முன்னும் இவ்வாறே நடந்திருக்கின்றது. ஆகவே, அல்லாஹ்வுடைய நடைமுறையில் (ஸுன்னத்தில்) எவ்வித மாறுதலையும் காணமாட்டீர். (அல்-பத்ஹ் 23) இவ்வசனத்தில் ஸுன்னா என்ற சொல் நடைமுறை என்ற கருத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண்சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கெனில், அவர்கள் ஒரு உடும்புப் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள். என்று நபி (ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறிஸ்தவர் களையுமா நீங்கள் நாடுகிறீர்கள்? என்று நாம் கேட்டோம். அதற்கவர் ‘வேறு யாரை என்று (திருப்பிக்) கேட்டார்கள். (நூல்: புஹாரி 7320) இந்த நபிமொழியில் ஸுன்னா என்ற சொல் வழிமுறை என்ற கருத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

[நபி (ஸல்) அவர்களுடைய] ஸுன்னா என்ற வார்த்தை இஸ்லாமிய ஷரீஅத்தில் பின்வரும் கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை வருமாறு:

1. ஸுன்னா (السـنـة) - இஸ்லாமிய ஷரீஅத்தின் பார்வையில்..
2. ஸுன்னா (السـنـة) - ஷரீஅத்தின் சட்டக் கலையில்..
3. ஸுன்னா (السـنـة) - இபாதத்துக்களில்..

ஸுன்னா இஸ்லாமிய ஷரீஅத்தின் பொதுக் கண்ணோட்டம்:

நபி (ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றும் ஷரீஅத்தைச் சார்ந்ததாகும். அவை நம்பகரமான அறிவிப்பாளர் தொடர் வரிசையின் மூலம் கிடைக்கப் பெற்றால் மாத்திரமே, அவை ஷரீஅத்தில் ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றன. ஆய்வு செய்து மனிதர்களுடைய செயற்பாடுகளுடன் தொடர்பான விதிகளைப் பெறும் ஆற்றல் பெற்ற (முஜ்தஹித்கள்) அறிஞர்கள் அவற்றிலிருந்து சட்டங்களைப் பெறுவர். ஆகவே, ஸுன்னா இஸ்லாமிய ஷரீஅத்தின் இரண்டாவது மூலாதாரமாகும். இது அல்குர்ஆனுக்கு அடுத்த இடத்தை வகிக்கின்றது. ஆகவே, அல்குர்ஆனைப் பின்பற்றுவது போலவே ஸுன்னாவையும் பின்பற்றுவது கடமையாகும்.

ஷரீஅத்தின் பார்வையில் ‘ஸுன்னா’ என்பது ஷரீஅத்தின் அனைத்துச் சட்டங்களையும் உள்ளடக்கிக் கொள்ளக் கூடியதாகும். அதன் உட்பிரிவுகளை அல்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் அவற்றுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிரித்து நோக்கலாம்.


‘ஸுன்னா’ ஷரீஅத்தின் மூலாதாரம் என்பதற்கு கீழ்வரும் விடயங்கள் சான்றுகளாகும்.

1. அல்குர்ஆன் : ரஸூல் (ஸல்) அவர்களைப் பின்பற்றி, அவருக்கு வழிப்பட்டு நடக்குமாறு அல்குர்ஆன் கட்டளையிடுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا

மேலும் நம் தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் எதனை விட்டும் உங்களைத் தடை செய்கின்றாரோ அதனைத் தவிர்ந்து நடந்து கொள்ளுங்கள். (அல்ஹஷ்ர்: 7)

அதே போன்று அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முடிவு செய்து விட்ட ஒரு விவகாரத்தில், ஒரு மனிதனுக்கு தன்னிஷ்டப்படி நடந்து கொள்வதற்கு அனுமதியில்லை. அல்லாஹ் கூறுகின்றான்:

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ

மேலும் அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தில் முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. (அல் – அஹ்ஸாப்: 36)

மேற்படி வசனங்கள், அல்லாஹ் தனது தூதரை பின்பற்றுவதைக் கடமையாக்கி விட்டான் என்பதையும் ஸுன்னாவும் மனிதனுடைய செயற்பாடுகளுடன் தொடர்பான விதிகளைத் தருகின்ற மூலாதாரமாகும் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.

2. நபித் தோழர்களின் நடைமுறை : நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கின்ற போதே, அவரது ஏவல் விலக்கல்களை ஸஹாபாக்கள் ஏற்று நடந்துள்ளனர். அல்குர்ஆன் கூறும் சட்டங்களுக்கும், நபி (ஸல்) அவர்கள் (ஸுன்னா) கூறும் சட்டங்களுக்குமிடையில் வேறுபாடு இருப்பதாக அவர்கள் ஒருபோதும் கருதியதில்லை. அவ்வாறே நபி (ஸல்) அவர்களுடைய வபாத்துக்குப் பின்னரும் அல்குர்ஆனிலிருந்து சட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தனர். அதில் கிடைக்காத போது ஸுன்னாவிலிருந்து சட்டங்களைப் பெற்று நடைமுறைப்படுத்தி வந்தனர்.

3. அல்குர்ஆன் சுருக்கமாகக் கூறுகின்ற கடமைகள் ஸுன்னாவின் விளக்கமின்றி நடைமுறைப்படுத்த முடியாமலே இடம்பெற்றுள்ளன. அவற்றில் அல்லாஹ் மனிதன் மீது விதியாக்கிய நிறையக் கடமைகள் இடம் பெற்றுள்ளன. அவை தொடர்பான மேலதிக விபரங்களோ, செயல்முறை விளக்கங்களோ குர்ஆனில் இடம்பெறவில்லை. இதற்கு தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளை உதாரண மாகக் கொள்ள முடியும். இவை சார்ந்த செயல்முறை விளக்கங்களை ஸுன்னாவிலிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதன் அடிப்படையில், நபி (ஸல்) அவர்கள் மூலம் வந்த செய்திகளில் ஆதார பூர்வமானவைகள் ஷரீஅத்தின் ஆதாரங்களாகும். அவைகளைப் பின்பற்றுவது கடமையும் கூட. ஆகவே அல்லாஹ்வின் தூதர் என்ற வகையில் அவர்களைப் பின்பற்றுவது கடமை என்பது போலவே, அவர் வழியாக வந்த சட்டங்களைப் பின்பற்றுவதும் கடமையாகும். அவர் மூலம் வந்த செய்திகள் அல்குர்ஆனில் கூறப்பட்ட விதிகளை விபரமாகத் தெளிவாக எடுத்துக் கூறுவதாகவோ, அல்குர்ஆன் கூறாத விதிகளைத் தனியாக எடுத்துச் சொல்லும் ஹதீஸ்களாகவோ இருக்கலாம். (ஏனெனில், ஸுன்னா, அல்குர்ஆனைப் போலவே – சட்டமியற்றும் அதிகாரம் பெற்ற சுதந்திரமான மூலாதாரமும், தெளிவுபடுத்தும் அதிகாரம் பெற்ற மூலாதாரமும் ஆகும்).


சட்டக் கலையின் பார்வையில் ‘ஸுன்னா’:

பர்ளான கடமையான வணக்கங்கள் தவிர்ந்த ளுஹாத் தொழுகை, துல்ஹஜ் மாதம் ஆரம்பப் 10 நாட்கள் நோன்பு வைத்தல், ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக் செய்தல், திங்கள், வியாழன் நோன்பு வைத்தல் போன்ற உபரியான வணக்க வழிபாடுகளையே குறிக்கும்.

‘ஸுன்னத்’ என்ற அனைத்தும் நன்மை வழங்கப்படுகின்ற இபாதத்துக்களாகமாட்டா. அவைகளிற் சில, கடமையான வணக்க வழிபாடுகளாகவும், இன்னும் சில உபரியான வணக்கங்களாகவும், வேறு சில நபி (ஸல்) அவர்களுடைய பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டக் கூடியனவாகவும் உள்ளது. இது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். ஆகவே, நபிகள் நாயகத்தின் எல்லா வழிமுறைகளும் இபாதத்தாகும் என்று ஒரு பிழையான நம்பிக்கை சிலரிடம் காணப்படுகின்றது. அதனைத் திருத்திக் கொள்வது மிகப் பிரதானமானதாகும்.


இபாதத்துக்கள் கண்ணோட்டத்தில் ‘ஸுன்னத்’:

பித்அத் – நூதன அனுஷ்டானங்கள் – என்ற வார்த்தைக்கு எதிர்ச் சொல்லாக ஸுன்னத் என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகின்றது. குர்ஆன் அல்லது ஸுன்னா அடிப்படையில் செய்யப்படுகின்ற இபாதத்துக்கள் ஸுன்னத்தானவை என்றும், அவற்றின் அடிப்படைகளைத் தழுவாது இபாதத் என்ற பெயரில் செய்யப்படுகின்ற செயல்கள் பித்அத்தானவை – ஸுன்னாவுக்கு எதிரானவை – என்றே அழைக்கப்படுகின்றன. ஆகவே, ஸுன்னத் – பித்அத் ஆகிய இரு சொற்களும், எதிர்க்கருத்துள்ள சொற்களாகும்.


3. ‘கபர்’
الخبر

இவ்வார்த்தை அரபு மொழியில் ‘செய்தி’, உளவு பார்த்தல்’ என்ற கருத்துக்களில் பயன்படுத்தப்படுகின்றது. வழக்கில் ‘ஹதீஸ்’ என்ற வார்த்தை தருகின்ற அதே கருத்திலேயே ‘கபர்’ எனும் இவ்வார்த்தையும் பயன் படுத்தப்படுகின்றது. அதே போன்று ‘ஸஹாபாக்கள், தாபிஈன்கள்’ போன்றோரின் கூற்றுக்களைக் குறிக்கவும் இவ்வார்த்தை சாதாரண அளவில் பயன்படுத்தப்படுகின்றது.


4.‘அதர்’
الأُثـر

‘அதர்’ என்ற வார்த்தை அரபு மொழியில் ‘அறிவித்தல், அடிச்சுவடு’ எனும் கருத்துக்களைத் தருகின்றது. பரிபாஷையில்: ஹதீஸ், ஸுன்னத், கபர் ஆகிய மூன்று சொற்களும் ஒத்த கருத்துள்ள பதங்களாகும். ஆனால், அதிக அளவில் ‘அஸர்’ எனும் இவ்வார்த்தை ‘ஸஹாபாக்கள், தாபிஈன்கள்’ ஆகியோரின் கூற்றுக்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


மேற்கூறப்பட்ட 4 வார்த்தைகளுக்கும் பரிபாஷையில் கூறப்பட்ட வரைவிலக்கணங்களின் அடிப்படையில், அவற்றுக்கிடையே சிறு வேறுபாடுகள் தென்பட்டாலும், அவை ஒத்த கருத்தில் பயன்படுத்தப் பட்டு வருகின்ற வார்த்தைகள் என்பது பெரும்பான்மையான இஸ்லாமிய அறிஞர்களுடைய கருத்தாகும்.


5. ‘ஹதீஸுல் குத்ஸீ’

அல்லாஹ் சொன்னதாக நபி (ஸல்) சொன்ன வார்த்தைகளே ஹதீஸுல் குத்ஸீ என்று அழைக்கப்படுகின்றது. ஆனால், இது அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட அல்குர்ஆன் போன்ற வஹீயல்ல. ஆகவே, அல்குர்ஆனைப் போன்று மாத்திரம் அதனை ஓதுவதன் மூலம் நன்மையடைய முடியாது. அவ்வாறே, நபி (ஸல்) அவர்களுடைய வார்த்தைகளான ஹதீஸ்களுமல்ல. ஆகவே, ‘ஹதீஸுல் குத்ஸீ’ என்பது அல்குர்ஆனின் நடைமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும், அறிவிப்பு முறையில், ஏனைய ஹதீஸ்களிலிருந்து வேறுபட்டதாகவும் காணப்படுகின்ற அதே வேளை, அது அல்குர்ஆனைப் போன்று அற்புதமும் அன்று. இவைகளே, அல்குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் – ஹதீஸுல் குத்ஸீ ஆகியவற்றுக்குமிடையிலான வேறுபாடுகள் ஆகும்.

மேலதிக விளக்கங்களுக்கு இதை படிக்கவும்


ஹதீஸ்களை அறிவித்தவர்கள்/தொகுத்தவர்கள்:

ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள்.

ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள்.

இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களையே சாரும்.

 (1) 1000 ஹதீஸ்களுக்கு மேல் அறிவித்தவர்கள் ஏழு பேர்

வரிசை எண் - நபித் தோழர்களில் அறிவிப்பாளர்கள் - அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை - இறந்த ஆண்டு

01 அபூ ஹுரைரா (ரலி) 5374  ஹதீஸ்கள் 57 ஹிஜ்ரி

02 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) 2630 ஹதீஸ்கள் 73 ஹிஜ்ரி

03 அனஸ் இப்னு மாலிக் (ரலி) 2286 ஹதீஸ்கள் 93 ஹிஜ்ரி

04 ஆயி்ஷா ஸித்தீக்கா (ரலி) 2210 ஹதீஸ்கள் 57 ஹிஜ்ரி

05 அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) 1660 ஹதீஸ்கள் 68 ஹிஜ்ரி

06 ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) 1540 ஹதீஸ்கள் 74 ஹிஜ்ரி

07 அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) 1170 ஹதீஸ்கள் 74 ஹிஜ்ரி



2) 1000 ஹதீஸ்களுக்கும் குறைவாக அறிவித்தவர்கள்

08 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) 848 ஹதீஸ்கள் 32 ஹிஜ்ரி

09 அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல்ஆஸ் (ரலி) 700ஹதீஸ்கள் 43 ஹிஜ்ரி

10 உமர் இப்னுல் கத்தாப் (ரலி) 537 ஹதீஸ்கள் 21 ஹிஜ்ரி

11 அலீ இப்னு அபீதாலிப் (ரலி),  536 ஹதீஸ்கள் 40 ஹிஜ்ரி

12 அபூதர்ருல் கிஃபாரி (ரலி) 281ஹதீஸ்கள் 32 ஹிஜ்ரி

13 இப்னு அபீ வக்காஸ் (ரலி) 270 ஹதீஸ்கள் 55 ஹிஜ்ரி

14 முஆது இப்னு ஜபல் (ரலி) 200 ஹதீஸ்கள் 18 ஹிஜ்ரி

15 அபூதர்தாஃ (ரலி)  179 ஹதீஸ்கள் 32 ஹிஜ்ரி

16 உத்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி) 147 ஹதீஸ்கள் 35 ஹிஜ்ரி

17 அபூபக்கர் (ரலி) 142 ஹதீஸ்கள் 13 ஹிஜ்ரி



(3.) தாபியீன்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்

18 ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்) 094 ஹிஜ்ரி

19 நாஃபிஃ மௌலா இப்னு உமர் (ரஹ்) 117 ஹிஜ்ரி

20 முஹம்மது இப்னு ஸீரீன்(ரஹ்) 110 ஹிஜ்ரி

21 இப்னு ஷிஹாபுஸ் ஸூஹ்ரி (ரஹ்) 123 ஹிஜ்ரி

22 ஸயீது இப்னு ஜூபைர் (ரஹ்) 095 ஹிஜ்ரி

23 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) 80-150 ஹிஜ்ரி



(4) தாபிஉத் தாபியீன்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்

24 இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) 93-179 ஹிஜ்ரி

25 இமாம் ஷாபியீ (ரஹ்) 150-204 ஹிஜ்ரி

26 இமாம் ஸூஃப்யானுத்தவ்ரீ (ரஹ்) 161 ஹிஜ்ரி

27 இமாம் ஸூஃப்யானுப்னு உயைனா (ரஹ்) 198 ஹிஜ்ரி

28 இமாம் அல்லைத் இப்னு ஸஃது (ரஹ்) 94-175 ஹிஜ்ரி



(5) பெண்களில்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்

29 அன்னை ஆயிஷா ( ரலி) 2210 ஹதீஸ்கள்

30 அன்னை உம்மு ஸலமா (ரலி) 387 ஹதீஸ்கள்

31 அன்னை உம்மு ஹபீபா (ரலி) 65 ஹதீஸ்கள்

32 அன்னை ஹஃப்ஸா (ரலி) 60 ஹதீஸ்கள்

33 அன்னை மைமூனா (ரலி) 46 ஹதீஸ்கள்

34 அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) 11 ஹதீஸ்கள்

35 அன்னை ஸஃபிய்யா (ரலி) 10 ஹதீஸ்கள்

36 அன்னை ஸவ்தா (ரலி) 05 ஹதீஸ்கள்



(6) ஏனையத் தோழியர்

37 அஸ்மா பின்த் யஸீத் (ரலி) 81  ஹதீஸ்கள்

38 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) 58 ஹதீஸ்கள்

39 ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) 46 ஹதீஸ்கள்

40 உம்மு ஹானி (ரலி) 46 ஹதீஸ்கள்

41 உம்மு ஃபள்லு (ரலி) 30 ஹதீஸ்கள்

42 அர்ருபை பின்த் முஅவ்வத் (ரலி) 21 ஹதீஸ்கள்

43 கவ்லா பின்த் ஹகீம் (ரலி) 15 ஹதீஸ்கள்

44 உம்மு சலைம் (ரலி) 14 ஹதீஸ்கள்

45 புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி) 11 ஹதீஸ்கள்

46 ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரலி) 07 ஹதீஸ்கள்

47 உம்முல் அஃலா அல்- அன்சாரிய்யா (ரலி) 06 ஹதீஸ்கள்

பின்வருபவர்கள் அறிவித்த நபிமொழிகள் எத்தனை என்பதற்குத் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.

48 உம்முல் ஹகம் பின்த் அபீ சுஃப்யான் (ரலி)

49 அஷ்ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் (ரலி)

50 உம்மு குல்தூம் பின்த் அபீபக்ர் (ரலி)

51 உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் (ரலி)

52 ஹிந்த் பினத் உக்பா இன்னு ரபீஆ (ரலி)

53 உமைமா பினத் ரக்கீகா (ரலி)

54 ஃபாத்திமா பின்த் ஹு ஸைன் (ரஹ்)

இன்னும் ஏராளமானோர் நபிமொழிகளை அறிவித்துள்ளனர்.

பின்வரும் நபிமணியின் எச்சரிக்கையின் விளைவால் எழுந்த அச்சத்தினாலும் பேணுதலினாலும் பலர் ஹதீஸ்களை தொகுப்பதையும் அறிவிப்பதையும் தவிர்த்தனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

‘என்னைபற்றி நான் கூறியதாக யார் பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும். (அவன் போய் சேரும் இடம் நரகமாகும்).


இமாம்கள் தேர்வு செய்த ஹதீஸ்கள்:

இமாம்கள் - ஹதீஸ் நூல்கள் - வாழ்ந்த ஆண்டு - திரட்டியவை - தேர்ந்தவை - நாடு

01 முஹம்மது இஸ்மாயீல் புகாரி (ரஹ்) - ஸஹீஹூல் புகாரி - 194-256 (ஹி), - சுமார் 600,000 (திரட்டியவை) - 7,563 (தேர்ந்தவை), புகாரா, (ரஷ்யா)

02 முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் (ரஹ்) - ஸஹீஹ் முஸ்லிம் - 204 - 261 (ஹி), - சுமார் 300,000 (திரட்டியவை) - 5,571 (தேர்ந்தவை), நைஷாபூர் ஈரான் (பாரசீகம்)

03 அபூதாவூது சுலைமான் அஸ்ஸஜஸ்தானி(ரஹ்) - ஸூனனு அபூதாவூது, - 202 - 275(ஹி), - சுமார் 500,000 (திரட்டியவை) - 5,274 (தேர்ந்தவை), சிஜிஸ்தான் (இராக்)

04 அபூஈஸா முஹம்மது இப்னுஈஸா திர்மிதீ (ரஹ்) - ஜாமிவுத்திர்மிதீ - 200-279 (ஹிஜ்ரி) - 3,956 (தேர்ந்தவை), திர்மிதி (குராஸான்)

05 அபூஅப்துர்ரஹ்மான் அந்நஸாயீ (ரஹ்) - ஸூனனுந் நஸாயீ, - 215-303 (ஹி), - 5,761 (தேர்ந்தவை), நஸா (ஈரான்)

06 முஹம்மது இப்னு யாசி இப்னு மாஜா (ரஹ்) - இப்னு மாஜா, 209 - 273, - 4,341 (தேர்ந்தவை), ஆதர்பைஜான் (ஈரான்)

07 ஸிஹாஹ் ஸித்தாவின் மொத்த ஹதீஸ்கள் 34,458

08 அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) - முஸ்னது அஹ்மது 164 - 241(ஹி), - சுமார் 1,000,000 (திரட்டியவை) - 27,999 (தேர்ந்தவை)

அதிகமான ஹதிஸ்கள் இடம் பெற்ற ஹதீஸ் நூல் என்ற பெருமையைப் பெறுவது முஸ்னது அஹ்மது என்ற நூல் தான்.

இவர்களை அடுத்து இமாம்கள் தஹாவீ, தாரகுத்னீ, தப்ரானி, பைஹகி , ஹாக்கிம், இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா, இப்னு அவானா, இப்னு ஜக்கன் ஆகியோரும் ஹதீஸ்களைத் திரட்டுவதில் பெரும் பாடுபட்டனர்.

முஸ்னத் நூல்களும், தொகுத்த இமாம்களும் (ஹி93-191) அவற்றுள் முக்கிய நூல்கள் சில:- 

(ஹிஜ்ரி 93 லிருந்து ஹிஜ்ரி 191 வரை தொகுக்கப்பட்ட முஸ்னதுகள்)

1. இமாம் மாலிக் (ரஹ்)- முஸ்னத் முவத்தா
2. இமாம் ஷாஃபியீ (ரஹ்)-முஸ்னத் ஷாஃபியீ
3. இமாம் அஹ்மத் (ரஹ்)-முஸ்னத் அஹ்மத்
4. இமாம் சுஃப்யானுத்தவ்ரீ(ரஹ்)-முஸ்னத் தவ்ரி
5. இமாம் முஹம்மத் பின் ஸலாமா(ரஹ்)-முஸ்னத் முஹம்மத் பின் ஸலாமா
6. இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்)-முஸ்னத் இப்னு முபாரக்
7. இமாம் சுஃப்யான் இப்னு உஅய்னா(ரஹ்)-முஸ்னத் இப்னு உஅய்னா
8. இமாம் இப்னு முஅம்மர் (ரஹ்)-முஸ்னத் இப்னு முஅம்மர்
9. இமாம் இஸ்ஹாக் இப்னுரராஹ்வைஹ் (ரஹ்)-முஸ்னத் இஸ்ஹாக் இப்னுரராஹ்வைஹ்
10.இமாம் அவ்ஸாயி(ரஹ்)- (முஸ்னத் அவ்ஸாயி
11.இமாம் பகீ (ரஹ்)-முஸ்னத் பகீ 

போன்றவற்றை குறிப்பிடலாம். ஹதீஸ் கலையின் ஆறு பெரும் நூல்கள் தொகுக்கப்படுவதற்கு, இந்த முஸ்னத் நூல்கள் பெரிதும் உதவின.

ஹதீஸின் இதர ஆதார நூல்கள்:

(அவற்றுள் முக்கிய ஹதீஸ் நூல்களும் அதன் தொகுப்பாளர்களும்)

01 தப்ரானி (அபுல் காஸிம் சுலைமான் இப்னு அஹ்மது 209-273 தபரிய்யா-ஜோர்டான்)

02 அபூ யஃலா (அஹ்மது இப்னு அலி இப்னுல் முதன்னா 210-307 முதன்னா)

03 ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (அபூ ஹாத்தம் முஹம்மது இப்னு ஹிப்பான் — 354 ஸமர்கந்த்- (இமாம் ஹாகிமின் ஆசிரியர்)

04 ஸஹீஹ் இப்னு குஸைமா (அபூபக்ர் முஹம்மது இப்னு இஸ்ஹாக் இப்னு குஸைமா 223-311 நைஸாபூர்)

05 ஸுனனு பைஹகீ (அபூபக்ர் அஹ்மது இப்னு ஹுஸைன் அல்பைஹகீ 384-458 குராஸான் (இமாம் ஹாகிமின் மாணவர்)

06 ஹாகிம் (அபூ அலீ அந்நைஸாபூரீ)

07 ஸஹீஹ் அபீ அவானா (யஃகூப் இப்னு இஸ்ஹாக் இப்னு இப்றாஹீம்)

08 தார குத்னீ (இமாம் தார குத்னீ)

09 தாரமீ (இமாம் தாரமீ)

10 அல் பஸ்ஸார் (அஹ்மது இப்னு அம்ருப்னு அப்துல் காலிக் -292 பஸரா- ஈராக்)

11 இப்னு அபீ ஷைபா (இப்னு அபீ ஷைபா)

12 இப்னு அபீ கைஸமா (இப்னு அபீ கைஸமா)

13 அப்துர் ரஸ்ஸாக் (இமாம் அப்துர் ரஸ்ஸாக்)

14 இப்னுல் ஜாரூத் (இமாம் இப்னுல் ஜாரூத்)

15 நைஸாபூரீ (அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் 321-405 நைஸாபூர்)

16 இப்னு அபித்துன்யா (அபூபகர் அப்துல்லாஹ் இப்னு முஹம்மது அபித்துன்யா அல்குறஷீ 208-282
Previous Post Next Post