ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டு தொகுக்கப்பட்ட வரலாறு, ஹதீஸ்களின் முக்கியத்துவம்


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றும் ஹதீஸ் அல்லது சுன்னத் என்று அழைக்கப்படும். 

ஷரீஅத்தின் சட்டங்கள், கோட்பாடுகள்(அகீதா), முறையியல் (உஸூல்), வணக்க வழிபாடுகள் அனைத்திற்கும் அடிப்படை மூலாதாரமாக விளங்குவது குர்ஆனும் ஹதீஸுமாகும்.

குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ,கியாஸ் ஆகிய நான்கும் இஸ்லாத்தின் மூலாதாரங்கள். இருப்பினும், இஜ்மாஃ,கியாஸ் ஆகிய இரு மூலாதாரங்களுக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது குர்ஆனும் ஹதீஸுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குர்ஆனுக்கு அடுத்த நிலையில் ஹதீஸ் அமைந்திருக்கிறது. குர்ஆனுக்கு விளக்கமாக ஹதீஸ் அமைந்திருப்பதால் ஒன்றைவிட்டு மற்றதைப் பிரிக்க முடியாது. இரண்டையும் சம நிலையிலேயே மதிக்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் கட்டளையாகும். 

இதனைப் பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

01.  “எவர் ரஸூலுக்கு வழிப்பட்டாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டார்“. 
அல்குர்ஆன் – 04:80

02.  ”அல்லாஹ்வின் கட்டளைக்கு வழிப்படுவதற்காகவே அன்றி எந்த ஒரு தூதரையும் நாம் அனுப்பவில்லை“. 
அல்குர்ஆன் – 04 : 64

03. “அல்லாஹ்வும் ரஸூலும் முஃமீன்களை அவர்களுக்கு மத்தியில் தீர்ப்புச் செய்ய அழைத்தால் முஃமீன்கள் செவிமடுத்தோம், வழிப்பட்டோம் என்பர். இவர்கள்தாம் சித்தியடைந்தவர்கள்“. 
அல்குர்ஆன் – 24 : 51

04. “உமது இரட்சகன் மீது ஆணையாக! அவர்கள் தமக்குள் ஏற்படும் பிரச்சினைகளில் தங்களை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்பதியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாத வரையில் அவர்கள் உண்மையான விசுவாசிகளாக முடியாது“.
அல்குர்ஆன் – 04:65

அல்லாஹ், அவன் திருத்தூதர் ஆகிய இருவரும் வழங்கும் தீர்ப்பை மனம் சுளிக்காமல் ஏற்க வேண்டியது கடமை. மீறுவது கொடிய தண்டனைக்குரிய குற்றமாகும் என அல்-குர்ஆன் பின்வருமாறு எச்சரிக்கின்றது..

01. “அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றி கட்டளையிட்ட பின்னர், அவ்விடயத்தில் (அதற்கு மாறான) அபிப்பிராயங் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமை இல்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், நிச்சயமாக அவர்கள் பகிரங்க வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள். 
அல்குர்ஆன் – 33 – 36

02. “நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும், எவன் (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டும் பிரிந்து, விசுவாசிகளின் வழியல்லாததில் செல்கின்றானோ அவனை நாம் அவன் செல்லும்(தவறான) வழியிலேயே செல்ல விட்டு (பின்னர்) அவனை நரகில் சேர்த்து விடுவோம். அது செல்லுமிடங்களில் மிகக் கெட்டது“. 
அல்குர்ஆன் – 04 : 11

03. “அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டி நெருப்பில் பொசுக்கும் நாளில், எங்களுடைய கேடே!நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவார்கள்“. 
அல்குர்ஆன் – 33:66

அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் இடும் கட்டளைகள் முழுமையாகப் பின்பற்றப்படல் வேண்டும். சிலதை ஏற்பதும் மற்றும் சிலதை மறுப்பதும் தகாது. பூரண திருப்தியுடன் ஏற்று நடக்காதவர்கள் கடும் தண்டனைக்குரியவர்கள். இம்மையில் இழந்த வாழ்வையும் கொண்டிருப்பர். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றது.

“நீங்கள் வேதத்தில் (உள்ள) சில கட்டளைகளை விசுவாசித்து, சில கட்டளைகளை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கின்றீர்களோ அவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர(வேறொன்னும்) பிரதிபலனாக கிடையாது“. 
அல்குர்ஆன் – 02:85

குர்ஆனைப் போன்று ஹதீஸும் கட்டளைகளைப் பிறப்பிக்கும் தகுதியைக் கொண்டிருக்கின்றது. குர்ஆனின் கட்டளைக்குரிய முக்கியத்துவம் ஹதீஸின் கட்டளைக்கும் சமநிலையில் இருக்கின்றது. ஹதீஸின் மூலம் மாத்திரம் சட்டமாக்கப்பட்டவை வருமாறு..

01. தினமும் ஐவேளைக்குரிய தொழுகைக்கான அதான்.

02. ஜனாஸா தொழுகை.

03. பைத்துல் முகத்தஸ் தொழுகைக்கான கிப்லாவாக ஆக்கப்பட்டமை.

04. வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தினத்திலும், இரு பெருநாட்களிலும் ஓதப்படும் குத்பா பிரசங்கம் நிகழ்த்தல்.

போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அல்குர்ஆனின் எண்ணக்கருக்களை விளக்குவது ஹதீஸ், ஹதீஸின் வழிகாட்டுதலின்றி அல்குர்ஆனை முழுமையாக விளங்க முடியாது. குர்ஆனின் கருவூலங்களை வெளிப்படுத்தும் தீபம் ஹதீஸ். 

ஹதீஸைப் புறக்கணித்து குர்ஆனை அணுகுவது குர்ஆனின் நோக்கத்தைப் புறக்கணிப்பதாகவே அமையும்.

தொழுகை, நோன்பு, ஹஜ் ஆகிய கடமைகள் பற்றிய கட்டளைகள் குர்ஆனில் உண்டு. செயல்முறை கூறப்படவில்லை. செயல்முறை ஹதீஸில் விளக்கப்பட்டுள்ளது. குர்ஆனில் கூறப்படுகின்ற அநேகமான திருவசனங்களின் விளக்கம் ஹதீஸின் மூலமே பெறப்படுகின்றது என்பதை பின்வரும் சில எடுத்துக் காட்டிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

01. “அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால் அவருக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடாது. நிராகரிப்போர் அவரை வெளியேற்றியசமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான். குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த சமயத்தில் தன்னுடைய தோழரை நோக்கி நீர் கவலைப்படாதீர். நிச்சயமாக அல்லாஹ் எம்முடன் இருக்கின்றான் எனக் கூறியபோதும்.. 
அல்குர்ஆன் – 03 :40

02. “அநேக இடங்களில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றான்“.
அல்குர்ஆன் – 09 : 40

03. “அல்லாஹ்வின் கட்டளைகளை எதிர்பார்த்து தீர்ப்புக் கூறாது விட்டுவைக்ப்பட்டிருக்கும் மூவரையும் அல்லாஹ் மன்னித்து விட்டான்“ . 
அல்குர்ஆன் – 09  :158

ஆகிய திருவசனங்களில் முறையே,

01. நிராகரிப்போர் சதி என்ன?

02. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எதை நோக்கி பயணம் மேற்கொண்டார்கள்?

03. கூடவே குகையில் இருந்த தோழர் யார்?

04. இவர்கள் தங்கியிருந்த குகை எது?

05. அல்லாஹுத்தஆலா அதிகம் உதவி செய்த இடங்கள் எவை?

06. அல்லாஹ்வின் கட்டளைகளை எதிர்பார்த்திருந்த அம்மூவரும் யார்?

07. அவர்கள் செய்தது என்ன?

08. இவர்களின் காரியங்கள் ஏன் ஒத்திப் போடப்பட்டன?

போன்ற வினாக்களுக்குரிய விடைகளை ஹதீஸில்தான் காண முடியும். 

எனவே, குர்ஆனை விட்டும் ஹதீஸையோ அல்லது ஹதீஸை விட்டும் குர்ஆனையோ மாத்திரம் பின்பற்ற முயலுபவர் உண்மையில் ஒன்றையும் பின்பற்றாதவராகுவார் என்பது தெளிவு.


ஐயமும் தெளிவும்:

“குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸ்கள் தேவையில்லை என்று கூறுவோரும் இருக்கின்றனர். இவர்களை முஸ்லிம்கள் என்று கூற முடியாது. 

“லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதூர் ரஸுலுல்லாஹ்“ என்ற திருக்கலிமாவை மொழிந்தவர்கள் அதில் உளமாற நம்பிக்கை வைத்தவர்கள் குர்ஆனை ஏற்பது போன்று நபிமொழிகளையும் ஏற்க வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் ஆரம்பம் முதல் இதுநாள் வரையிலுமான அனைத்து முஸ்லிம்களும் குர்ஆனையும், ஹதீஸையும் ஒன்றுபோல் ஏற்பதும் அதன்படி செயல்படுவதும் கடமை என்று நம்புகின்றனர்.

குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவையற்றவை என்ற தவறான வாதத்தை எடுத்துரைப்போர் பின்வரும் பொருத்தமற்ற சில காரணங்களை முன்வைக்கின்றனர்.

01. நபி மொழித் தொகுப்புகளான ஹதீஸ்கள் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்பே தொகுக்கப்பட்டவையாகும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுக்கும் நபி மொழித் தொகுப்பாளர்களுக்குமிடையில் கணிசமான ஹாபிழ்கள் (ஹதீஸை மனனமிட்டோர்) மறைந்து விட்டனர்.

02. ஹதீஸ் தொகுப்பாளர்களுள் கணிசமானோர் அரபியல்லாலாதவர்கள்.

03.  பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் காலத்திலும் ஸஹாபாக்கள் காலத்திலும் ஹதீஸ்கள் ஏட்டில் எழுத்துருப் பெறவுமில்லை. அது தொகுக்கப்படவுமில்லை. வெறுமனே உள்ளங்களில் மாத்திரமே பாதுகாக்கப்பட்டிருந்தது.

இவர்களின் தவறான இவ்வாதம் பின்வரும் காரணங்களால் பொருளற்று விடுகின்றது.

01.  பிரதான ஹதீஸ் தொகுப்பாளர்களான இமாம்களான புகாரி, முஸ்லிம், திர்மிதி அபூதாவூத் நஸஈ ஆகிய இமாம்களான றஹிமகுமுல்லாஹ் போன்றோர் முறையே புகாரா, நைஷாபூர், திர்மிதி, ஸஜிஸ்தான், கஸ்வீன் ஆகிய ஊர்களைச் சார்ந்தோராகும். இவர்கள் அனைவரும் அரபியல்லாதவர்களாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாகும்.

02.  பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் காலத்திலே ஹதீஸ்கள் எழுத்துருப் பெற்றுள்ளது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன. எடுத்துக்காட்டுக்குரிய….


நபியவர்கள் காலத்தில் நபி மொழித் தொகுப்புகள்:

நபித் தோழர்கள் காலத்தில் பல்வேறு ஹதீஸ் தொகுப்புக்கள் இருந்தன. என்பதை பின்வரும் ஆதாரங்கள் தொளிவுபடுத்துகின்றன. 

01.  அப்துல்லாஹ் இப்னு அம்றுப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு விடத்தில் “ஸாதிகா“ என்ற பெயரில் ஒரு ஹதீஸ் தொகுப்பு நூல் இருந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் பதிவாகியிருந்தன.
ஆதாரம் : புகாரி, இஸாபத், தபகாத் (இப்னு ஸஃது)

02. அனஸ் ரழியல்லாஹு அன்ஹுவிடத்தில் ஒரு ஹதீஸ் தொகுப்பு காணப்பட்டது.
ஆதாரம் : புகாரி, தத்ரீபு ராவி

03. அனஸ் ரழியல்லாஹு அன்ஹுவிடத்தில் ஹதீஸ்களை எழுதும் பழக்கம் இருந்தது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூற நான் காதால் கேட்டு எழுதினேன். அவ்வாறு எழுதப்பட்ட சுவடிகள் இவைகள் என்று மக்கள் முன் கூறிவிட்டு அதனை வாசித்தும் காட்டுவார்கள் என கதாதா ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகின்றார்கள்.
ஆதாரம் : தப்ஸீருள் இல்மூ, பக்கம் – 95

04. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அடுத்தவர்களிடமிருந்து ஹதீஸ்களை கேட்டு எழுத்துருவில் கொண்டு வந்தார்கள். அதன் பிரதிகள் அன்னாரின் மகனிடம் பாதுகாப்பாக இருந்தது.
ஆதாரம் : ஜாமிஉபயானுல் இல்மு

05. ஸஃதுப்னு உபாதா ரழியல்லாஹு அன்ஹுவிடத்தில் “கிதாபு ஸஃதுப்னு உபாதா“ என்ற பெயரில் ஒரு ஹதீஸ் தொகுப்பு காணப்பட்டது. இத்தொகுப்பு அவர்களின் பெறுமதிமிக்க புனித குடும்பச் சொத்தாக நீண்ட நாட்களாக பாதுகாத்து வைக்கப்பட்டு வந்தது.
ஆதாரம் : முஸ்னத் இமாம் அஹ்மத்

06. ஸஃதுப்னு றபீஃ அவர்களிடமும், அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியவர்களிடத்தில் முறைப்படுத்தப்பட்ட தொகுப்புக்கள் காணப்பட்டன.
ஆதாரம் : பத்ஹுல் பாரி

“நாங்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அவையில் அமர்ந்திருந்து அன்னாரின் அமுத திருமொழிகளைக் கேட்டு எழுதுவோம்”. ஸுனன் தாரமியில் காணப்படுகின்ற இந்த ஹதீஸின் “நாங்கள் எழுதுவோம்” என்ற வார்த்தையில் இருந்து ஹதீஸ்களை ஒரு குழுவினரே எழுதுகின்ற பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பது புலனாகின்றது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருச்சமூகத்தில் நாயகத் தோழர்கள் சிலர் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் வயதில் சிறுவனான நானுமிருந்தேன். அப்போது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ‘என்மீது வேண்டுமென யாராவது பொய்  கூறினால் அவன் தனது இருப்பிடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்‘ எனச் சொன்னார்கள். அண்ணலாரின் அவையிலிருந்து நாயகத் தோழர்கள் வெளியே வந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியவற்றை செவியேற்றீர்களா மேலும் அன்னாரிடமிருந்து அனேக விஷயங்களைக் கேட்கின்றீர்கள். ஆகவே, அன்னார் கூறியவற்றை கூறியபடியே எவ்வாறு அறிவிப்பது சாத்தியம்? என நான் அவர்களைக் கேட்டேன். நபித்தோழர்கள் முறுவலித்தனர் “எங்கள் சகோதரர் புதல்வனே! நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து செவியேற்ற அனைத்தும் எழுத்துருவில் எம்மிடமிருக்கிறது” என்று கூறினர்.
அறிவிப்பவர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு
ஆதாரம் : மஜ்மவுஸ் ஸவாயிது, பாகம் – 01, பக்கம் – 151,152

இதுவும் அண்ணலார் தம் அருள் மொழிகள் தோழர்களால் எழுதிப் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதை உறுதி செய்கின்றன. அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களால்கூட சில சட்டங்கள், விதிமுறைகள் எழுதச் செய்யப்பட்டன என்பதற்கும் ஸஹாபாக்களும் இப்பணியினை மேற்கொண்டிருந்தனர் என்பதற்கும் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. அவற்றுள் சில இதோ!

01.  புனித மக்கா வெற்றியின்போது மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனித உரிமைகள், மக்காவின் மாண்பு குறித்து உரையாற்றினார்கள். அப்பேருரையை செவியேற்ற யமன் நாட்டவர் ஒருவர் “அண்ணலே! இதனை எமக்கு எழுதித் தந்தால் பேருதவியாக இருக்கும்“ என்ற தனது ஆவலை வெளிப்படுத்த அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டு “அதனை அபூஸாஹ் அவர்களுக்கு எழுதிக் கொடுங்கள்“ என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நூல் : ஸுனன் அபூதாவூத், பாகம் – 02, பக்கம் – 481

02.  ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஜஹீனா கோத்திரத்தாருக்கு செத்த பிராணிகள் தொடர்பான விதிகளை எழுதியனுப்பி அவர்களை அவற்றிலிருந்து பாதுகாத்தனர்.
நூல் : மிஷ்காத், அபூதாவூத்

அப்துல்லாஹ் இப்னு ஹிகம் ரழியல்லாஹு அன்ஹு எனும் ஸஹாபியிடம்  அண்ணலாரால் எழுதுவிக்கப்பட்ட கையேட்டுப் பிரதி ஒன்று இருந்தது. அதில் செத்த பிராணிகள் குறித்த விதிகள் அடங்கியிருந்தன.
நூல் : தப்ரானி, முஹ்ஜமுஸ் ஸகீர்

03. ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸகாத் பற்றிய விதிகளை எழுதச்செய்து வைத்திருந்தனர். ‘கிதாபுஸ் ஸதகா‘ என்று அதற்குப் பெயர். அண்ணலாருக்குப் பின்னர் அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு, உமர் ரழியல்லாஹு அன்ஹு ஆகியோர் அதன்படியே செயல்பட்டனர்.
நூல் : திர்மிதி, தன்வீருல் ஹவாலிக் ஷரஹ் அலா முஅத்தா மாலிக் பாகம் – 01, பக்கம் – 250

ஸகாத் பற்றிய சட்டதி்ட்டங்கள் அடங்கிய ஒரு ஏடு எழுதி பஹ்ரைனின் ஆளுனரான அப்று இப்னு ஹஸ்மு ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதப்பட்டது. இதன் நகல்கள் ஏனைய ஆளுனர்களுக்கும் அனுப்பப்பட்டன. அம்று இப்னு ஹஸ்மு அவர்களிடமிருந்து அதனை பின்னர் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
நூல் : தாரகுத்னீ, முஸ்னது அஹ்மது

அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அம்று இப்னு ஹஸ்னு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக பர்ளு, சுன்னத், தியத் பற்றிய சட்டங்கள் அடங்கிய ஒரு தொகுப்பினை எழுதி யமனுக்கு அனுப்பி வைத்தனர்.
நூல் : தன்வீருள் ஹவாலிக் ஸரஹ் அலா முஅத்தா மாலிக், பாகம் – 03, பக்கம் – 58

04. கலீபா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பஹ்ரைனுக்கு கவ்னராக அனுப்பியபோது கிதாபுஸ் ஸதகாவில் ஸகாத் பற்றி என்ன கூறப்பட்டதோ அதனையே ஸக்காத் குறித்துக் கூறி அனுப்பினர். ஒட்டகம், தங்கம், வெள்ளி, ஆடு போன்றவற்றுக்கான ஸக்காத் விகிதங்கள் அந்நூலில் தெளிவாக்கப்பட்டிருந்தன.
நூல் : புஹாரி, பாகம் – 01, பக்கம் – 194

05. பர்ளு, ஸதகா, தியத், குற்றப்பரிகாரம், தலாக், அடிமை விடுதலை, தொழுகை, திருக்குர்ஆன் பற்றிய சட்ட திட்டங்கள், ஒழுங்கு முறைகள் குறித்து எழுதப்பட்ட பிரதிகள் அம்று இப்னு ஹஸ்மு ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்கப்பட்டன.
நூல் : முஸ்னத் அஹ்மத், முஸ்தத்ரக், கன்சுல் உம்மால்

06. காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றுக்கு ஸக்காத் கிடையாது என்பது பற்றி எழுதப்பட்ட சட்டப்பிரதி முஆது இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் யமனுக்கு அனுப்பப்பட்டது.
நூல் : தாரகுத்னி

07. தொழுகை, நோன்பு, வட்டி, மது மற்றும் பிரச்சினைகள் குறித்து வாயிழ் இப்னு ஹுஜ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எழுதி அனுப்பினார்கள்.

08. அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எழுதிக் கொடுத்தனர். அது அவர்களிடமிருந்தது.
நூல் : புஹாரி, பாகம் – 01, பக்கம் – 21 (இந்தியப் பதிப்பு)

09. உடன்படிக்கைகளும் அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் எழுதப்பட்டன. உதாரணமாக ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்தத்தைக் கூறலாம். 

நபி மொழிகள் ஸஹாபாக்களின் காலத்தில் எழுதப்படவில்லை என்று வாதம் புரிவோரின் கூற்று மேற்கூறப்பட்ட ஆதாரங்களினால் அர்த்தமற்றதாகி விடுகிறது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்திலும் அன்னாரின் அன்புத் தோழர்களின் காலத்திலும் நபி மொழிகள் எழுதப்பட்டன. பாதுகாக்கப்பட்டன என்பதற்கு இத்தனை ஆதாரங்கள் போதுமானதல்லவா?

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்திலேயே ஹதீஸ்கலை ஏட்டில் எழுதும் வழக்கம் இருந்ததற்கான பல்வேறு சான்றுகளை மேலே விளக்கினோம். இருப்பினும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹதீஸ்களை எழுதக்கூடாது என்றும் அவ்வாறு எழுதியிருப்பவர்கள் அதனை அழித்து விடுமாறும் கட்டளையிட்டதாக ஒரு குறிப்பு ஸஹீஹ் முஸ்லிம் பாகம் – 02, பக்கம் – 414 (இந்திய பதிப்பி)ல் காணக் கிடைக்கிறது.

இக்குறிப்பின்படி திருமறையை மட்டுமே எழுத வேண்டும். நபி மொழிகள் எழுதப்படக்கூடாது என்பதிலிருந்து நபிகள் நாயகத்தின் ஜீவிய காலத்தில் நபிமொழிகள் ஏட்டில் பதியப்படவில்லை என்று சிலர் வாதம் புரிகின்றனர். இத்தொடரில் இவ்வாதத்திற்கான விளக்கத்தையும் ஸஹாபாக்கள் காலத்தில் ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டதற்கான வரலாற்றுக் குறிப்புக்களையும் தருகின்றோம்.

ஐயம் : திருக்குர்ஆனைத் தவிர்த்து எனது மணிமொழிகளை எழுதாதீர்கள்! யாராவது எழுதியிருந்தால் அழித்து விடுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹ் முஸ்லிம் பாகம் – 02, பக்கம் – 414 (இந்திய பதிப்பு)

இதற்கு ஹதீஸ்கலை மேதைகள் பின்வருமாறு விளக்கம் பகர்கின்றனர்.

01. மேற்கண்ட மணிமொழியின் அறிவிப்பாளர் தொடர் அபூ ஸயீதுல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களோடு நின்றுவிடுவதால் இதன் ஸஹீஹான நிலையில் சிலர் ஐயம் கொள்கின்றனர். இமாம் புஹாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி போன்றோர் இக்குறிப்பு அபூ ஸயீதுக்குரியதே என்கின்றனர்.

02. மேற்கண்ட ஹதீஸை ஸஹீஹாகவே ஏற்று பின்வரும் விளக்கங்களை அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரழியல்லாஹு அன்ஹு போன்றோர் விளக்கம் பகர்கின்றனர்.

(அ). வஹி இறங்கிக் கொண்டிருக்கும் வேளை வஹியைத் தவிர்த்து வேறு எதுவும் எழுதக் கூடாது. வஹியும் வஹி அல்லாததும் கலந்து கருத்துக் குழப்பம் ஏற்படும் என்பதற்காக இத்தடை வந்தது.

(ஆ). திருக்குர்ஆனையும் நபி மொழிகளையும் ஒரே ஏட்டில் பதியக் கூடாது. இதனால் இரண்டையும் பிரித்தறிவது கனமாகி விடும்.

(இ). இத்தடை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திற்குரியது. திருக்குர்ஆனுடன் நபிமொழிகளும் எழுதப்படுவதால் எதுவித சிக்கலும் இல்லை என்பது தெளிவானதன் பின் இத்தடை நீக்கப்பட்டது.

(ஈ). நினைவாற்றல் குறைந்தவர்கள் ஏட்டை மட்டுமே நம்பி இருப்வர்கள் போன்றோருக்கு ஹதீஸ்கள் எழுதுவது தடுக்கப்பட்ருந்தது. அபார நினைவாற்றல் உள்ளோருக்கு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆதாரம் : பத்ஹுல்பாரி, பாகம் – 01, பக்கம் – 183


ஸஹாபாக்கள் காலத்தில் ஹதீஸ்கள் தொகுக்கும் வழக்கம்:

01. ஞான (ஹிக்ம)த்தை எழுதி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என கலீபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
நூல் : தாரமீ, பக்கம் – 68, முஸ்தத்ரக் – பாகம் – 01, பக்கம் – 106

02. உத்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் நீண்ட நபி மொழியொன்றை மஃமூது இப்னு றபீஃ ரழியல்லாஹு அன்ஹு மூலமாக செவியேற்றதை அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அந்நபிமொழியை பதிவுசெய்து வைத்துக் கொள்ளும்படி தனது அருமை மகனாரைப் பணித்தார்கள்.
ஆதாரம் : ஸலஹுல் முஸ்லிம், பாகம் – 01, பக்கம் – 46, தஹாவி, பாகம் – 02. பக்கம் – 384

அபூ ஹுரைறா ரழியல்லாஹு அன்ஹு தான் மனனம் செய்து வைத்திருந்த நபி மொழிகளை தானும் பிறர் மூலமும் எழுதி வைத்திருந்தார்கள். நாயகத் தோழர் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு ஹஸன் இப்னு அம்று என்பாரை கரம் பற்றி தன் இல்லம் அழைத்துச் சென்று, தான் எழுதிப் பாதுகாத்து வைத்திருக்கும் நபி மொழித் தொகுப்பு ஏடுகளை எடுத்துக் காட்டியதாக ஹஸன் இப்னு அம்று ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகின்றார்கள்.
ஆதாரம் : பத்ஹுல் பாரி, பாகம் – 01, பக்கம் – 184

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு எழுதி வைத்திருந்த நபி மொழித் தொகுப்புப் பிரதியை பிஷ்று இப்னு நுஹைக் ரழியல்லாஹு அன்ஹு இரவலாகப் பெற்று பிரதி எடுத்தபின் அபூ  ஹுரைறா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நேரில் படித்துக் காட்டியபி்ன் இவைகள் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவில, தாங்கள் செவியேற்றவைகளா? என்று கேட்டதற்கு ஆம் என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம் : தஹாவி, பாகம் – 02, பக்கம் – 28

பிரசித்தி பெற்ற அபான் என்ற தாபிஈ அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவையில் அமர்ந்திருந்து பலகையில் ஹதீஸ்களை எழுதிக் கொண்டிருப்பார்.
ஆதாரம் : தாறமீ, பக்கம்  -68

ஜாபீர் ரழியல்லாஹு அன்ஹு சமூகத்தில் நபி மொழிகளை அன்னாரிடமிருந்து செவியேற்று எழுதுவோம் என அபி்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு உகைல் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்.
சஈது இப்னு ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் வேறு சிலரும் இவ்வாறு இயம்புகின்றனர்.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவைக்குச் சென்று அன்னார் கூறும் நபிமொழிகளை காகிதத்தில் பதிப்போம். காகிதம் முடிந்த பின் வேறு ஏதாவது ஒன்றில் எழுதுவோம்.
ஆதாரம் : தாறமீ, பக்கம் – 169, தஹாவி, பாகம் – 02, பக்கம் – 384

நாபிஃ ரழியல்லாஹு அன்ஹு அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு மூலம் அறிவிக்கப்பட்ட நபி மொழிகளை தொகுப்பவராக இருந்தார் தபகாத் இப்னு ஸஃது.
உர்வா இப்னு தஙாமா ஸறூஸி ரழியல்லாஹு அன்ஹு ஜாபீர் ரழியல்லாஹு அன்ஹு மூலம் அறிவிப்புச் செய்யப்பட்ட நபி மொழிகளை தொகுத்து எழுதலானார்கள்.
ஆதாரம் : தபகாத் இப்னு ஸஃது, பாகம் – 07, பக்கம் – 72

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு மூலம் அறிவிப்புச் செய்யப்பட்ட நபி மொழிகளை அன்னாரின் மாணவரான குரைப் ரழியல்லாஹு அன்ஹு எழுதிப் பாதுகாத்து வந்தார்கள்.
ஆதாரம் : தபகாத் இப்னு ஸஃது, பாகம் – 05, பக்கம் – 216

நபிமணித் தோழர்கள் ஹதீஸ்களை ஏட்டில் எழுதிப் பாதுகாப்பதற்கான வரலாற்றுக் குறிப்புகள் ஏராளம் காணக்கிடைக்கின்றன. முக்கியமான சில தடயங்களையே மேலே தந்துள்ளோம்.


இரண்டாம் நூற்றாண்டில் ஹதீஸ் தொகுப்பின் முக்கியத்துவம்:

முதலாம் நூற்றாண்டில் ஒரு சில ஸஹாபாக்களிடம் மாத்திரம் சில ஹதீஸ் தொகுப்புக்கள் காணப்பட்டன. குறிப்பிட்ட சிலரே இத்துறையில் அதிக அக்கறையுடன் செயல்பட்டதற்கு எழுத்தறிவு ஸஹாபாக்களிடம் குறைவாகக் காணப்பட்டமை முக்கிய ஒரு காரணியாகும்.

எழுத்துருவில் காணப்பட்ட சில தொகுப்புக்களும் கூட முறைப்படியான தொகுப்பாக இல்லாமல் அங்குமிங்கும் சிதறிக் கிடந்ததை அமீறுல் முஃமினீன் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஹதீஸ்கள் முறையாகத் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை காலத்தின் கட்டாயத் தேவையாக உணர்ந்தார்கள்.
எனவே, ஹதீஸ்களைத் தொகுத்து முறைப்படுத்துவதற்கு இத்துறையில் மிகச் சிறந்தவர்கள் என அக்காலத்தில் பிரசித்தி மிக்கவர்களாக இருந்த பின்வரும் மூவர்  கொண்ட ஒரு குழுவை நியமித்து அவர்களிடம் இப்பொறுப்பினை ஒப்படைத்தார்கள் கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.

01. அபூபக்கர் இப்னு அம்றுப்னு அஸ்ம் ரழியல்லாஹு அன்ஹு (இவர் மதீனாவின் காழியாக கடமை செய்தவர்).
02. காஸிம் இப்னு முஹம்மத் இப்னு அபீபக்கர் ரழியல்லாஹு அன்ஹு
03. அபூபக்கர் முஹம்மத் இப்னு முஸ்லிம் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு

இவர்கள் தவிர வேறு சிலரும் இத்துறையில் இக்காலப் பிரிவில் ஈடுபடலானார்கள். அவர்கள் வருமாறு,

01. றபீஃ இப்னு ஸபீஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
02. ஸஃது இப்னு அறூபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி
03. ஷுர்வயி ரஹ்மத்துல்லாஹி அலைஹி

அமீறுல் முஃமினீன் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி மதீனாவின் காழியான அபூபக்கர் இப்னு அஸ்ம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு பின்வருமாறு ஒரு கடிதம் எழுதினார்கள்.

“ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களினதும், கலீபா உமர் ரழியல்லாஹு அவர்களினதும் பொன்மொழிகள் எவ்வாறு முஅத்தா என்னும் நூலில் விரவிக் கிடக்கின்றனவோ,அவ்வாறே ஏனைய நபிமணித் தோழர்களினதும் பொன்மொழிகளையும் தொகுத்து எழுதுங்கள். ஏனெனில், அறிஞர்களின் மறைவால் ஞானங்கள் அழிந்துவிடுமோ என நான் அஞ்சுகின்றேன்“
நூல் : தாரமீ

ஸஹீஹ் புகாரியில் இதைவிடச் சற்று விரிவாக இக்கடிதம் இடம் பெற்றிருக்கின்றது. அது வருமாறு,
“றஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது ஹதீஸ்களைத் தவிர வேறு எதனையும் ஏற்றுக் கொள்ளாத நிலை ஏற்பட்டு விடுமோ என நான் அஞ்சுகின்றேன். எனவே,அறிவைப் பரப்புங்கள். ஓரிடத்தில் அமர்ந்து கற்றுக் கொடுங்கள். அதனால் அறியாதோர் அறியக் கூடும். ஞானத்தை இரகசியமாக்காதவரை ஞானம் அழிந்து விடுவதில்லை.
ஆதாரம் : ஸஹீஹ் புகாரி, பாகம் -01, பக்கம் – 20

அமீறுல் முஃமினீன் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கடிதம் கண்ட காழி அபூபக்கர் இப்னு அஸ்ம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அங்குமிங்கும் சிதறிக் கிடந்த ஹதீஸ்களை திரட்டி பல தொகுதிகளாக முறைப்படுத்தி அமீறுல் முஃமினீன் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பார்வைக்குச் சமர்ப்பித்தார்கள். அமீறுல் முஃமினீன் இத்தொகுப்பைப் பார்வையிட முன் காலம் முடிந்து இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

பிக்ஹ் – சட்டம், அகீதா – கோட்பாடு தொடர்பான அநேக ஹதீஸ்களை அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவித்திருக்கின்றார்கள். ஆதலால் அன்னையவர்களின் அறிவிப்புக்களை ஒன்று திரட்டுவதில் அமீறுல் முஃமினீன் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அதிக அக்கறை காட்டினார்கள்.

அப்துர் ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகனான அம்றா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அன்புடன் வளர்த்து வந்தார்கள். அபார நினைவாற்றல் மிக்கவரான இவர்கள் அன்னையவர்களின் அறிவிப்புக்களை அக்கறையோடு மனனம் செய்திருந்தவர்களுள் முதன்மையானவர்களாக மதிக்கப்படுகின்றார்கள். பிரசித்தி பெற்ற சி்றந்த அறிஞராக விளங்கிய அம்றா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சமூகம் சென்று நபிமொழிகளைத் தொகுக்கும்படி அமீறுல் முஃமினீன் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி காழி அபூபக்கர் இப்னு அஸ்ம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைப் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்காலப் பிரிவில் ஹதீஸ் தொகுப்பாளர்களுள் இமாம் ஸுஹ்ரி ரஹ்மத்துல்லாஹ்வும் குறிப்பிடத்தக்க ஒருவராக விளங்கினார்கள். இவர்களின் முழுப் பெயர் அபூபக்கர் முஹம்மத் இப்னு முஸ்லிம் இப்னு உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஷிஹாபுஷ் ஸுஹ்ரி (வபாத் ஹிஜ்ரி 124) என்பதாகும். இமாம் என்ற பெயரில் பிரபல்யமாக இருந்த இவர்கள் இப்னு ஷிஹாப் என்ற பெயரிலும் அறிமுகமாகி இருந்தார்கள். முஹத்திஸீன்களான ஹதீஸ் கலை மேதைகளைத் தேடிச் சென்று பலகைகளிலும் காகிதங்களிலும் ஹதீஸ் கலை மேதைகளை எழுதும் பழக்கத்தை இவர்கள் கொண்டிருந்தார்கள்.
ஆதாரம் : தத்கிறத்துல் ஹுப்பாஹ், பாகம் – 01, பக்கம் – 106

இமாம் ஸுஹ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி:

அமீறுல் முஃமினீன் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இமாம் ஸுஹ்ரி ரஹ்மத்துல்லாஹி அவர்ளிடமும் பல்வேறு இடங்களிலிருக்கும் ஹதீஸ் பிரதிகளை ஒன்று திரட்டும் பணியை ஒப்படைத்ததாக தத்ரீபுர் ராவி என்ற நூலில் ஒரு குறிப்புக் காணப்படுகின்றது.

ஸாலிஹ் இப்னு கைஸான் ரழியல்லாஹு அன்ஹு பின்வருமாறு கூறுகின்றார்: “நானும் ஸுஹ்ரியும் சமகாலத்தில் அறிவைத் தேடுபவர்களாக இருந்தோம். இருவரும் இணைந்து ஹதீஸ்களைத் திரட்டுவோம் என இவர் என்னை அழைப்பார்“.
ஆதாரம் : கன்ஸுல் உம்மால், பாகம் – 05, பக்கம்- 238

முஅம்மர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: “இமாம் ஸுஹ்ரி ரஹ்மத்துல்லாஹியின் ஹதீஸ் தொகுப்புக்களைத் திரட்டினால் பல ஒட்டகைகளில் ஏற்றிவிடலாம்“.

ஹதீஸ் கலையிலும் சட்டக் கலையிலும் தன்னிகரற்று விளங்கிய இமாம் ஸுஹ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஸஹீஹ் புகாரியின் ஆசிரியரான முஹம்மத் இஸ்மாயில் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆசிரியரின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதீனாவின் ஒவ்வொரு வீடும் சென்று சிறியவர், பெரியவர் அனைவரிடத்திலுமிருந்து ஹதீஸ்களைத் திரட்டி எழுதுவதில் இவர்கள் காட்டிய அக்கறை குறிப்பிடத்தக்கது.

வலீத் இப்னு யஸீத் படுகொலை செய்யப்பட்ட பின் இவரின் நூலகத்திலிருந்த ஹதீஸ் சுவடிகள் இடம் மாற்றப்பட்டன. அதுவேளை இமாம் ஸுஹ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தனியாகத் திரட்டிய சுவடிகள் மாத்திரம் பல குதிரைகள், கோவேறு கழுதைகளில் ஏற்றிச் செல்லப்பட்டன.

இமாம் ஸுஹ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்களின் பெயர்ப் பட்டியலையும் தொகுப்பதில் முன்னோடியாக விளங்கினார்கள். இக்கலையின் மூலகர்த்தாவாகவும் இவர்கள் மதிக்கப்படுகி்ன்றனர்.

இமாம் ஸுஹ்ரி ரஹ்மத்துல்லாஹ்வைத் தொடர்ந்து இவர்களின் சீடர்கள் இத்துறையை வளர்ப்பதில் அக்கறை காட்டினர். இவர்களுள் இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடத்தக்கவர்கள். இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி பிக்ஹின் சட்டங்களை விளக்கும் ஹதீஸ்களை முறைப்படுத்தி முஅத்தா என்ற பெயரில் முதன்முதலாக வெளியிட்டார்கள்.

சஹ்ல் இப்னு இப்றாஹீம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
மதீனா பெருநகரில் காழியாக இருந்தவர்களுள் சஹ்ல் இப்னு இப்றாஹீம் ரஹ்மத்துல்லாஹ்வும் ஒருவர். இக்காலத்தில் ஹதீஸ் துறையில் சிறந்த அறிஞராகவும் இவர்கள் விளங்கினர். அன்னாரை ஹதீஸ்களைத் திரட்டுவதற்கு தூர இஸ்லாமிய நாடுகளுக்கு அமீறுல் முஃமினீன் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அனுப்பி வைத்தார்கள்.

அதாஃ இப்னு ரபாஹ் (மறைவு – ஹிஜ்ரி 114) பிரபலமான தாயி ஆவார். மக்கள் இவர்களிடம் ஹதீஸ்களை கற்று அவர் முன்னாலேயே  பதிவு செய்பவர்களாக இருந்தனர் என ஹிஷாம் இப்னு பார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்.
ஆதாரம் : தாரமி, பக்கம் – 69

இமாம் நாபிஃ ரஹ்மத்துல்லாஹி அலைஹி (மறைவு – ஹிஜ்ரி 117) அவர்கள் ஹதீஸ்கள் கூறுவதைக் கேட்டு அவர்கள் முன்னாலேயே அவர்களின் சிஷ்யர்கள் எழுதுவார்கள்.
ஆதாரம் : தாரமி

இமாம் ஹஸனுல் பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி (மறைவு – ஹிஜ்ரி 110)விடம் ஒருவர் வந்து,“நீங்கள் அறிவிப்புச் செய்த நபிமொழிகளை நான் எழுதி வைத்துள்ளேன். அதனை நீங்கள் அறிவிப்புச் செய்ததாக நான் பிறருக்கு அறிவிக்கலாமா? என்று கேட்டபோது“, “செய்யுங்கள்“ என ஹஸனுல் பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பதிலளித்தார்கள்.
ஆதாரம் : திர்மிதி, பாகம் – 02, பக்கம் – 239

ஹமீதுத் தவீல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பவர் இமாம் ஹஸனுல் பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஹதீதுப் பெருநூலை பிரதி செய்திருப்பதாக தஃதீபுத் தஹ்தீபு, பாகம் – 03, பக்கம் – 39இல் காணக் கிடைக்கின்றது.

ஹிஜ்ரி 104இல் மறைந்த அபூ கிலாபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி தனது மரணத் தறுவாயில் தனது ஹதீஸ் பெருநூலை அய்யூப் ஸக்தியானி ரஹ்மத்துல்லாஹியிடம் சேர்ப்பிக்குமாறு வஸிய்யத் செய்ய, ஸீரியாவிலிருந்து ஒட்டகத்தின் மூலமாக கொண்டு வரப்பட்டு ஸக்தியானி ரஹ்மத்துல்லாஹி இடம் அந்நூல் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு 12 அல்லது 14 திர்ஹங்கள் வழங்கப்பட்டதாக ஸக்தியானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்.
ஆதாரம் : தத்தகிறத்துல் ஸுப்பாழ், பாகம் – 01, பக்கம் – 88

ஸாலிம் இப்னு அபில் ஸஃது ரஹ்மத்துல்லாஹி அலைஹி (மறைவு – ஹிஜ்ரி 101) நபித் தோழர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டு எழுதுபவர்களாக இருந்தார்கள் என இப்றாஹீம் நக்ஙீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்.
ஆதாரம் : திர்மிதி,பாகம் – 02, பக்கம் 239, தாரமி, பக்கம் – 66

தபஉத் தாபியீன்கள் காலத்தில் ஹதீஸ்களை எழுதும் வழக்கம் ஸஹாபாப் பெருமக்களும் தாபிஈன்களும் ஹதீஸ்களை எழுதிப் பாதுகாத்தது போன்றே தபஉத் தாபியீன்களும் ஹதீஸ்களை எழுதிப் பாதுகாத்தனர். இவர்களின் காலத்தில் பட்டியலிடுவது கடினமான  பணியாகும். அவற்றுள் முக்கியமான சில தொகுப்புக்களின் பெயர்ப் பட்டியல்களை கீழே தருகின்றோம்.

முஸ்ஙிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஆயிரம் ஹதீஸ்கள் அடங்கிய தொகுப்பொன்று இருந்தது. அவற்றுள் பத்து ஹதீஸ்களைத் தவிர்த்து மீதி அனைத்தையும் நானே எழுதினேன் என முஹம்மத் இப்னு பிஷ்று ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்.
ஆதாரம் : தத்கிறத்துல் ஹுப்பாழ், பாகம் – 01, பக்கம் – 177

முஅம்மர் ரழியல்லாஹு அன்ஹு (மறைவு – ஹிஜ்ரி 153) அவர்களிடமிருந்து பத்தாயிரம் நபி மொழிகளை நானே எழுதி வைத்துள்ளேன் என அப்துர் ரஸ்ஸாக் என்பவர் கூறுகின்றார்.
ஆதாரம் : தத்கிறத்துல் ஹுப்பாழ், பாகம் – 01, பக்கம் – 175

ஹம்மாது இப்னு ஸல்மா அவர்களிடம் கைஸ் இப்னு ஸஃது அவர்களின் ஹதீஸ் தொகுப்பு ஒன்று இருந்தது.
ஆதாரம் :  தத்கிறத்துல் ஹுப்பாழ், பாகம் – 01, பக்கம் – 198

ஸுப்பான் இப்னு தௌரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் துணையுடன் ஹதீஸ்களை எழுதித் தொகுத்தார்கள்.
ஆதாரம் : தத்கிறா, பாகம் – 01, பக்கம் – 316

எண்ணூறு ஷெய்குமார்களிடம் ஹதீஸ்களைக் கேட்டு எழுதியதாக அபூநயீம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

இமாம் ஸுஹ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்டு ஷுஐப் இபனு ஹம்ஸா ரஹ்மத்துல்லாஹி (மறைவு – ஹிஜ்ரி 163) பல்லாயிரக் கணக்கான ஹதீஸ்களை எழுதித் தொகுத்திருந்தார். இத்தொகுப்பினைப் பார்வையிட்ட இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அனைத்துமே ஸஹீஹானவைதாம் என சான்று பகர்ந்தார்கள்.
ஆதாரம் :தத்கிறா, பாகம் – 01, பக்கம் – 210

அபூ அவானா ரஹ்மத்துல்லாஹி அலைஹி (மறைவு – ஹிஜ்ரி 163) எழுதத் தெரியாதவராக இருந்தார். தான் செவியேற்கும் ஹதீஸ்களை பிறர் உதவியுடன் உடனுக்குடன் பதிவு செய்து கொள்வார்கள்.
ஆதாரம் : த்த்கிறா, பாகம் – 01, பக்கம் – 254

இமாம் ஙன்தர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி (மறைவு – ஹிஜ்ரி 163) அவர்களிடம் தான் கேட்டு எழுதி வைத்திருந்த நூற்களே தன்னிடமுள்ள ஏனைய நூற்களைவிட ஸஹீஹானவையாகும் என ஹதீஸ்கலை மேதை யஹ்யா இப்னு முயீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்.
ஹதீஸ் கலை மேதையான ஷுஃபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஜீவிய காலத்திலேயே ஙன்தர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் பெரிதும் பயன்பெற்றோர் என இப்னு மஹ்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்.
ஆதாரம் : தத்கிறா, பாகம் – 01, பக்கம் – 177

மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களின் மூலம் ஹதீஸ் அறிவிப்பாளர்கள் தாம் செவியேற்ற ஹதீஸ்களைப் பதிவு செய்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகின்றது. 

இக்காலப் பிரிவில்தான் ஹதீஸ் தொகுப்புக்களை ஒழுங்கு முறைப்படுத்தி எழுதும் வழக்கமும் ஏற்பட்டது.
இப்பணியில் பலர் தங்களை ஈடுபடுத்தியிருப்பினும் பின்வருவோர் குறிப்பிடத் தக்கவர்களாவர்.

01. மக்காவில் – இப்னு ஜுரைஜ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹிஜ்ரி – 150

02. பஸறாவில் – ஸஈது இப்ன் அபீ அறூபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹிஜ்ரி – 141

இக்காலப் பிரிவில் மூஸா இப்னு அகபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஹிஜ்ரி – 141, முஹம்மத் இப்னு இஸ்ஹாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஹிஜ்ரி – 151 ஆகியோர் போர், பயணங்கள் பற்றிய விரிவான நூற்கள் எழுதலானார்கள்.

இவர்களுக்குப் பின் ஹதீஸ் தொகுப்பாளர்கள் வரிசையில் பின்வருவோர் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

* இமாம் அவ்ஸாயி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹிஜ்ரி – 154, ஸிரியா

* இமாம் இப்னு முபாறக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹிஜ்ரி – 181, குறாஸான்

* இமாம் ஹம்மாத் இப்னு ஸலாமத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹிஜ்ரி – 167, பஸறா

* இப்னு ஸுப்யானுத் தௌரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹிஜ்ரி – 161, கூபா

* ஜரீர் இப்னு அப்துல் ஹமீத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹிஜ்ரி – 188, றை

* ஹுஷைம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹிஜ்ரி – 183, வாஸித்

மேற்கண்டோர் ஹதீஸ் தொகுப்புக்கள் பல எழுதிப் புகழ்பெற்றனர். இவர்களுக்குப் பின் இத்துறையில் இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி முஅத்தா என்ற நூலை எழுதிப் பெரும் புகழ் பெற்றார்கள்.

இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி தம் கைப்பட ஓர் இலட்சம் ஹதீஸ்களை எழுதியதாகவும், அன்னாரின் மறைவுக்குப் பின் அன்னாரின் இல்லத்திலிருந்து பல பெட்டகங்கள் வெளியில் எடுத்து சோதிக்கப்பட்டபோது அவற்றுள் எழு பெட்டகங்களில் இப்னு ஹிஷாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களது ஹதீஸ் தொகுப்புக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக ஸர்கானி ரஹ்மத்துல்லாஹி கூறுகின்றார்கள்.

இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஞான குருவான இப்றாஹீம் இப்னு முஹம்மத் அஸ்லமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் “முஅத்தா“ என்ற பெயரில் ஒரு ஹதீஸ் தொகுப்பு நூலை எழுதியுள்ளார்கள். இந்நூல் இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் முஅத்தாவை விட சற்று சிறியதாகும். இவ்வாறு இப்னு அதி ரஹ்மத்துல்லாஹி குறிப்பிடுகின்றார்.
ஆதாரம் : தத்கிறா

இமாமுல் அஃழம் இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சிரேஷ்ட மாணவர்களான அபூ யூசுப் ரஹ்மத்துல்லாஹ்விடம் கிதாபுல் ஆதார். கிதாபுல் கராஜ் தொகுப்புகளும், இமாம் முஹம்மத் ரஹ்மத்துல்லாஹ்விடம் முஅத்தா, கிதாபுல் ஆதார். கிதாபுல் ஹஜ் தொகுப்புகளும் காணப்பட்டன.

இமாமுல் அஃழம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மற்றொரு மாணவரான யஹ்யா இப்னு ஸாயிதா கூபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் (ஹிஜ்ரி – 182) அவர்களும் பல ஹதீஸ் தொகுப்புக்களை வைத்திருந்தார்கள்.
ஆதாரம் : தத்கிறா, பாகம் – 01, பக்கம் – 246

இப்னு வஹ்பு ரஹ்மத்துல்லாஹி அலைஹி (ஹிஜ்ரி – 197) அவர்கள் கியாமத் நாளின் பயங்கரங்கள் குறித்து ஒரு ஜாமிஉம், ஒரு முஅத்தாவும் எழுதி வைத்திருந்தார்கள்.

இவ்வாறு தபஉத் தாபிஈன்கள் காலத்தில் முறைப்படுத்தப்பட்ட பல தொகுப்புக்கள் இருந்தமைக்கு பல நூறு ஆதாரங்களை காண முடிகின்றது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காலத்தில் ஹதீஸ்களை மனனம் செய்தல்
றஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருவாய் மலரும் பொன்மொழிகளைக் கவனத்துடன் கேட்பதிலும் தெளிவாக விளங்கிக் கொள்வதிலும் ஸஹாபாக்கள் அக்கறை காட்டினர். நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் இதற்கு முக்கியத்துவம் வழங்கினார்கள். 
அதனால், அண்ணலாரின் அறிவுரைகளும் அறவுரைகளும் மிகுந்து நிதானத்துடன் அமையும். 

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தாங்கள் கூறுவதை மற்றவர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் மும்மூன்று முறை கூறும் வழக்கத்தினையும் கொண்டிருந்தார்கள். இது பற்றி அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமான ஒரு குறிப்பு ஸஹீஹுல் புகாரியில் காணக் கிடைக்கின்றது.

“பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒன்றைக் கூறினால் அதனைப் பிறர் தெளிவாக விளங்குவதற்காக மூன்று முறை மடக்கி மொழிவார்கள்“.
ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி, பாகம் – 01, பக்கம் – 20 (இந்தியப் பதிப்பு)

றஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவையில் மிகுந்த ஒழுக்கத்துடன் ஸஹாபாக்கள் இருப்பார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பொன்னுரைகளைக் குறைத்தல் கூட்டுதல் இன்றி கேட்ட ஒழுங்கிலேயே மனனம் செய்யும் ஆற்றலையும் முறையையும் ஸஹாபாக்கள் கடைப்பிடித்தனர்.

ஸஹாபாக்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் செவிமடுத்த ஒழுங்கிலேயே அடுத்தவர்களுக்கும் அறிவிப்பார்கள். யாராவது இவ்வொழுங்கை மீறுவது தெரிந்தால் உடனே அக்கணமே அதனை திருத்திடுவர்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. “இஸ்லாம் ஐந்து தூண்களால் நிறுவப்பட்டுள்ளது“ என்ற ஹதீஸை ஒருவர் அதன் அசல் ஒழுங்கு முறையில் மாற்றம் செய்து ஹஜ்ஜுக்கு அடுத்து நோன்பினைக் கூறியபோது உடனே இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவரைத் தடுத்து நோன்புக்கு அடுத்து ஹஜ்ஜைக் குறிப்பிட்டுத் திருத்தினார்கள்.
ஆதாரம் : முஸ்லிம், பக்கம் – 01, பக்கம் – 32

ஒழுங்கு முறையில் சிறு மாற்றம் நிகழ்வதால் கருத்துப் பிழையோ பாரதூரமான குற்றமோ ஏற்படுவதில்லை. ஆயினும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கூற்றில் எதுவித மாற்றமும் நிகழக்கூடாது. அது உள்ளபடி என்றும் இருக்க வேண்டும் என்பதில் ஸஹாபாக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருந்துள்ளார்கள் என்பதற்கு மேற்கண்ட குறிப்பு ஆதாரமாக அமைகின்றது.


அபார நினைவாற்றல்:

இயற்கையாகவே அறபிகள் அபார நினைவாற்றலைப் பெற்றிருந்தார்கள். அறபு இலக்கண இலக்கிய விதிகள், அறபுச் சொற்களஞ்சியங்கள், கவிதைகள், கலைகள் அனைத்தும் அறபிகளின்  நினைவுக் களஞ்சியத்திலேதான் உறைந்து கிடந்தன. அறபிகளுக்கு அல்லாஹுத்தஆலா வழங்கிய பேரருள் இது!

அறபிமொழி தொன்மையானது. வளம் மிக்கது. இறுதித் தூதரினதும் இறுதி வேதத்தினதும் புனித மொழி,சொர்க்கத்தில் உள்ளோர் உரைக்கும் உன்னத மொழி. முஸ்லிம்கள் அனைவரும் கண்டிப்பாய் படிக்கவேண்டிய கட்டாய மொழி. இம்மை, மறுமை இரண்டிற்குமான விமோசனத்தை ஈட்டித் தரும் ஊடக மொழி.

சிறப்பு வாய்ந்த அறபு மொழி, எந்த மொழிக்கும் இல்லாத சொல் வளத்தைக் கொண்டிருக்கின்றது. அறபியில் தேனீயைப் பற்றி 80 சொற்களும், ஷர்பத் பற்றி 200, சிங்கத்தைக் குறிக்க 500, வாளுக்கு 1000, குதிரைக்கு 1000 சொற்களும் உண்டு.

இவ்வாறு ஒரு சொல் அது தரும் வழக்கமான கருத்தையும் நேர் எதிரான கருத்தையும் தரும் அதிசயமும் அறபியில் உண்டு. உதாரணமாக, ஐனுன் என்ற சொல்லுக்கு 48 பொருட்கள் சொற்களஞ்சியத்தில் பதிவாகியுள்ளன. பதிவாகாத பல பொருட்களும் உள என்ற குறிப்பும் அதில் பதிவாகி இருக்கிறது. 

அஜீஸுன் என்ற சொல்லுக்கு எழுபதிற்குமதிகமான பொருட்கள் உள.

அறபிலக்கியத்தை துறைபோக அறிந்து அதன் அனைத்து அம்சங்களையும் அறிந்து தெளிந்து நினைவுப் பட்டறையில் தேக்கி வைத்துப் பாதுகாத்துப் பழகிப்போன ஒரு சமுதாயத்திற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பல இலட்ச பொன்னுரைகளை அதே ஒழுங்கில் நினைவில் பதித்து வைப்பது அப்படி ஒன்றும் அதிசயமல்ல.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொன்னுரைகளை மனனம் செய்வதற்கு என்றே ஒரு குழு ஸஹாபாக்கள் மத்தியில் காணப்பட்டது. இவர்களுள் பின்வருவோர் முக்கியத்துவம் பெறுகின்றார்கள்.

01. அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு 5376 ஹதீஸ்கள்

02. அனஸ் ரழியல்லாஹு அன்ஹு 2286 ஹதீஸ்கள்

03. அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா 2210 ஹதீஸ்கள்


கற்றல்: 

நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவிலும் நல்லுரைகள் நினைவில் பதித்த ஸஹாபாக்கள் அடிக்கடி மீட்டிப் பார்க்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். இது பற்றி அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு இயம்புகின்றார்கள்.

“அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அமுத மொழிகளை அன்னார் அவைகளிலிருந்து செவிமடுப்போம். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அகன்ற பின் எங்களுக்குள் சரிபார்த்து  கொள்வோம். அவையிலிருந்து நாங்கள் அகலும்போது அனைவர் உள்ளத்திலும் ஒன்றுபோல் பதிந்திருக்கும்“.
ஆதாரம் : மஜ்மஉல் ஸவாயித், பாகம் – 01, பக்கம் – 161

“கடமையான தொழுகை முடிந்ததும் மஸ்ஜிதுந் நபவியில் ஸஹாபாக்கள் கூடி குர்ஆன், ஹதீஸ் பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வார்கள்“ என முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
ஆதாரம் : முஸ்தத்றக், பாகம் – 01, பக்கம் – 94
Previous Post Next Post