குர்ஆன் தஃப்ஸீர்

மார்க்க அறிவின் அடிப்படை அதன் தோற்றுவாய் சங்கை மிகு திருக் குர்ஆன் ஆகும். அதை கட்டாயம் ஓத வேண்டும். அதை கட்டாயம் மனனம் செய்ய வேண்டும். முடிந்தால்  அதை முழுவதுமாக மனப்பாடம்  செய்யுங்கள். அல்லது உங்களால் முடிந்த அளவு மனப்பாடம் செய்யுங்கள், உங்கள் நினைவிலிருந்தோ குர் ஆன் பிரதியிலிருந்தோ அதிகமதிகம் ஓதுங்கள். நினைவிலிருந்து மனப்பாடம் செய்ததை மட்டும்தான் ஓதவேண்டும் என்றில்லை. குர்ஆன் பிரதியிலிருந்தும் ஓதலாம் பிரச்னை இல்லை. ஆனால் அதிகமதிகம் ஓதுவது மட்டுமே போதாது. அதன் அர்த்தங்களை  கட்டாயம் சிந்தனைக்கு கொண்டு வரவேண்டும். நம்பிக்கைக்குரிய குர் ஆன் விரிவுரையாளர்களின் ஆதாரபூர்வமான நூல்களில் உள்ள ஆதாரபூர்வமான தஃப்ஸீரின் பக்கம் திரும்ப வேண்டும். தப்ஸீரின் அடிப்படை ஆதாரங்கள் நாம் அறிந்து வைத்துள்ளோம் மொத்தம் ஐந்து 
 
1. அவைகளுள் முதலாவது குர்ஆன்தான் ஏனெனில் குர்ஆனின் வசனங்கள் ஒன்றை மற்றொன்று விளக்கக்கூடியதாக இருக்கின்றது. அதில் முஹ்கம் (விளக்கமான) வசனங்களும் முதஷாபிஹ் (பல உள்ளர்த்தங்கள் ) கொண்ட ஆயத்துக்களும் உள்ளது. பொதுப்படையான (ஆம்) ஆயத்துகளும் குறிப்பான (ஃகாஸ் ) ஆயத்துகளும்  உள்ளன.முத்லக் (நிபந்தனையற்ற) ஆயத்துகளும் உள்ளது. முகைய்யத் (வரையறுக்குட்பட்ட ) ஆயத்துகளும் உள்ளது. இவைகள் ஒன்றை மற்றொன்று விளக்க கூடியதாக உள்ளது. இவைகளை மார்க்கத்தை கற்றறிந்த அறிஞர்கள் (உலமாக்கள் ) தவிர வேறு யாரும் அறிவதில்லை. 

2. குர் ஆனுக்கு விளக்கம் தரக்கூடிய இரண்டாவது அடிப்படை ஆதாரம் இறைத்தூதர் அவர்களின் சுன்னத் (சொல், செயல், அங்கீகாரம்) ஸஹீஹான ஹதீஸ்கள். ஏனெனில் அல்லாஹ் இறைத்தூதர் (ஸல் ) அவர்களை மக்களுக்கு  தெளிவுபடுத்தும் படி கட்டளையிட்டுள்ளான். மக்களுக்கு விளக்கவேண்டு என்பதற்காகவே அவர்கள் மீது குர்ஆனை இறக்கி வைத்தான் நிச்சயமாக அவர்கள் அதை மக்களுக்கு தெளிவு படுத்தினார்கள். விளக்கமளித்தார்கள் ஸஹீஹான ஹதீஸ்கள் குர் ஆனுக்கு விளக்கமளிக்கின . 

3. மூன்றாவது அடிப்படை ஆதாரம் ஸஹாபாக்களின் விளக்க உரை (தப்ஸீர் ) சுன்னாவை அடுத்து ஸஹாபாக்களின் தப்ஸீர்தான் ஏனெனில் அவர்கள்தான் அல்லாஹ்வின் தூதரிடம் நேரடியாக குர்ஆனை கற்றுக் கொண்டவர்கள். அதன் அர்த்தங்களையும் விளக்கங்களையும் அல்லாஹ்வின் தூதரிடம் பேரருட் கொண்டவர்கள். ஆகையால் ஸஹாபாக்களின் தப்ஸீரை எடுத்துக்கொள்வோம். 

4. நான்காவது அடிப்படை ஆதாரம் தாபியீன்களின் (ஸஹாபாக்களுக்கு அடுத்து வந்த தலைமுறையினரின்) தப்ஸீர் விளக்கவுரை ஏனெனில் அவர்கள் ஸஹாபாக்களின் மாணவர்கள் அவர்கள் சஹாபாக்களிடமிருந்து பயின்றனர். ஸஹாபாக்களோ இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பயின்றவர்கள். 

5. ஐந்தாவது அடிப்படை ஆதாரம் ஒரு வேலை குறிப்பிட்ட குர் ஆன் வசனங்களுக்கான விளக்கவுரை குர் ஆனிலோ அல்லது சுன்னாவிலோ, அல்லது ஸஹாபாக்கள், தாபியீன்களின்  வழியாகவோ கிடைக்காத பட்சத்தில் தப்சீருக்கு நாம் நாடவேண்டிய அடுத்த அடிப்படை ஆதாரம் அரபு மொழி, அரபு மொழியை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவும் மார்க்கத்தின் ஒரு அங்கம்தான் அதன் சொல் இலக்கணம், சொல் நயம், மொழி நடை , அணி இலக்கணம், (கவி ) நடை முதலியவற்றை கற்பது, சொற்களின் அகராதி பொருள்கள், அர்த்தங்களை கற்பது ஏனெனில் குர்ஆன் தெளிவான அரபு மொழியில்தான் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆக குர் ஆனிலோ, சுன்னாவிலோ, சஹாபாக்கள், தாபியீன்களின் வார்த்தைகளிலோ கிடைக்காத பட்சத்தில் நாம் அரபு மொழியில் அதன் அர்த்தங்களின் பக்கம் திரும்ப வேண்டும். அரபு மொழியைக் கொண்டு விளக்கம் பெறவேண்டும். 

குர் ஆனுக்கு சொந்த கருத்துக்கள் சுய சிந்தனைகளை கொண்டு விளக்கமளிப்பது திருக்குர்ஆன் விரிவுரையுடன் தற்போது கூறப்பட்டுவரும் அறிவியல் அற்புதங்களை இணைப்பது  நவீன கண்டுபிடிப்புகளைக் கொண்டு சித்தாந்தங்களை கொண்டு விளக்கமளிப்பது இவை கூடாது. இவை அனைத்தும் முற்றிலும் தவறானவை. இவைகளெல்லாம் தஃப்சீரின் வகைகளில் அடங்காது. சித்தாந்தங்கள் மாறுபடும், சில நேரங்களில் மக்களின் பார்வையில் ஒரு கருத்து சரியென கருதப்படும்.  வேறொரு கருத்து உருவாகும் போதுமுன்னுள்ள கருத்தை சித்தாந்தத்தை இது பொய்ப்பிக்கும் . ஏனெனில் இவைகள் அனைத்தும் மனிதர்கள் உருவாக்கியவை. மனிதர்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளபடவும் கூடும். மறுக்கப்படவும் கூடும். எனவே குர் ஆனுக்கு மருத்துவ, விஞ்ஞான சித்தாந்தங்களையோ தத்துவவாதிகளின் சித்தாந்தங்கள் போன்றவற்றைக் கொண்டு விளக்கமளிக்க கூடாது. இது தவறான போக்கு. தற்போது சொல்லப்பட்டுவரும் அறிவியல் அற்புதங்களின் விளக்கங்களைக்   கொண்டு  வழிதவற வேண்டாம். இவைகள் மார்க்க ஞானம் ஆகாது . குர்ஆனும் சுன்னாவும் எதனை எடுத்தியம்புகிறதோ அதுதான்  கல்வியாகும். மனிதர்களின் சொந்தக்கருத்துக்கள் கல்வி ஆகாது. எனவே இந்த  அடிப்படைகளின் பக்கம் திரும்புங்கள் முன் சென்ற (முஃபஸ்ஸிரீன்கள்) குர் ஆன் விரிவுரையாளர்கள் இந்த ஐந்து அடிப்படிகளைக் கொண்டு தான் குர் ஆனுக்கு தஃப்ஸீர் விரிவுரை செய்தனர். இப்னு ஜரீர் அத்தபரி, இப்னு கஸீர், அல் பகவி, .. ஆகியோர் இந்த ஐந்து அடிப்படைகளில் மீதுதான் பயணித்திருக்கின்றனர். இதன் பின்னர் குர் ஆனை ஓதுவதும் அதன் விரிவுரையை விளங்குவது மட்டும் போதாது அதன் அடிப்படையில் நமது அமல்கள் அமைய வேண்டும். ஏனெனில்  சொல்லப்பட்ட அனைத்து அடிப்படைகளும் குர் ஆனை புரிந்து கொள்வதற்கான வழிகள்தான். அந்த வழிகளின் இறுதி இலக்கு அமல் செய்வதே ! அதுவே அவைகளின் குறிக்கோள் !! குர் ஆனின் அர்த்தங்களையும் விரிவுரைகளையும் சரியான முறையில் விளங்காத வரை, உங்களால் குர் ஆனை சரிவர அமல்படுத்த முடியாது. சரியான முறையில் விளங்கிய பின்பே சரியான முறையில் அமல்படுத்த முடியும். எனவே இதில் நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அல்லாஹ்வின் வேதத்தைப்பொறுத்தவரை நாம் விரைந்து கவனம் காட்ட வேண்டும். இதுவே (மார்க்கத்தின்) முதல் ஆதாரம் அதை ஓதுவதில் யோசித்து விளங்குவதில் அதை செயல்படுத்துவதில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். 

- ஷேக் ஸாலிஹ் அல் ஃபவ் ஸான் (حفظه الله) அவர்களின் உரையிலிருந்து


அல் இமாம் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன்(رحمه الله)  கூறுகிறார்கள்:

என்னுடைய மார்க்க சகோதரனே அல் குர்ஆனை படிக்க ஆர்வம்கொள். அதனுடைய அர்த்தங்களை புரிந்துகொள்! அல் குர்ஆனை அதனுடைய (தஃப்ஸீர்)நம்பத்தகுந்த விளக்கவுரையின் மூலம் படித்து புரிந்துகொள்!

நம்பத்தகுந்த தஃப்ஸீர் ஆசிரியர்களின் நூல்கள் சில:

1. நூல்-தஃப்ஸீர் அல் குர்ஆன் அல் அதீம்/தஃப்ஸீர் இப்னு கதீர்-ஆசிரியர் அல் இமாம் இஸ்மாயில்  இப்னு கதீர்(رحمه الله)

2. நூல்-அல் ஜாமிஃ லி அஹ்காம் அல் குர்ஆன்/ தஃப்ஸீர் அல் குர்த்துபி-ஆசிரியர் அல் இமாம் அபு அப்துல்லாஹ் அல் குர்த்துபி(رحمه الله)

3. நூல்-தய்ஸீர் உல் கரீம் அர்ரஹ்மான் பிஈ தஃப்ஸீர் கலம் அல் மன்னான்/தஃப்ஸீர் அஸ் ஸஃதி-ஆசிரியர் அல் இமாம் அப்துர்ரஹ்மான் இப்னு நஸீர் அஸ் ஸஃதி(رحمه الله)

4. நூல்-அய்சர் அத் தஃப்ஸீர் லி கலம் அல் அலி அல்கபீர்/தஃப்ஸீர் அல் ஜசய்ரி-ஆசிரியர் அல் இமாம் அபூபக்ர் அல் ஜசய்ரி(رحمه الله)

5. நூல்-பஃத்ஹ் அல் கதீர்/தஃப்ஸீர் அல் ஷவ்கானி-ஆசிரியர் அல் இமாம் முஹம்மத் அஷ் ஷவ்கானி(رحمه الله)

6. நூல்-ம அலீம் அல் தன்ஜில்/தஃப்ஸீர் அல் பகாவி-ஆசிரியர் அல் இமாம் அபு முஹம்மத் அல் ஹுசைன் இப்னு அல் பகாவி(رحمه الله)

7. நூல்-ஜாமிஃ அல் பயான் அன் தவீல் அல் குர்ஆன்/தஃப்ஸீர் அத் தபரி-ஆசிரியர் அல் இமாம் முஹம்மத் இப்னு ஜரீர் அத் தபரி(رحمه الله)

இந்நூல்களை தெரிந்துகொள்! இவற்றின் மூலமாக நீ பயனடைந்துகொள்!

இதில் ஏதும் உமக்கு புரியவில்லை என்றால் இதற்காக இதனை கற்ற உலமாக்கள் இருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.! அவர்களிடம் சென்று கேள்!முன்பைவிட விட இப்பொழுது உலமாக்களை தொடர்பு கொள்வது சுலபமாக இருக்கின்றது.!

(நூல்-அல் லிக்க அல் ஷஹ்ரி/31-3 | ஆசிரியர்-அஷ்ஷைக் அல் அல்லாமாஹ் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன்(رحمه الله)
أحدث أقدم