நேர்வழி ஒன்றே ஒன்று தான்..

وَاَنَّ هٰذَا صِرَاطِىْ مُسْتَقِيْمًا فَاتَّبِعُوْهُ‌  وَلَا تَتَّبِعُوْا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهٖ‌  ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய நேரான வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.

(அல்குர்ஆன் : 6:153)


உண்மையான அஹ்லுஸ்ஸுன்னாவினர்கள் யார் என்பதில் சந்தேகமா?

நேர்வழி எது என்பதில்  தடுமாற்றமா?

வழிகேடுகளை கண்டறிவதில் குழப்பமா? 

அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் வழிகெட்டவர்கள் யார்?

ஜஹ்மியாக்களா?

முஃதஸிலாவினர்களா?

அஷ் அரியாக்களா?

அல்லது வழிகேடர்களால் வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்படுபவர்களா?

இஸ்லாமின் பெயரில் தர்கா, கப்ரு வழிபாடு, சந்தனக்கூடு, உரூஸ், மாந்திரிகம், தகடு, தாயத்து போன்ற வழிகெட்டகொள்கையை பரப்புவோர்கள்   ஷியாக்களின் வழியைப் பின்பற்றக்கூடியவர்களா? 

அல்லது ஸஹாபாக்களின்  வழியைப் பின்பற்றக் கூடியவர்களா?

இன்னும் இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமா? 

சத்தியத்தை அறியவேண்டுமா?

அல்குர்ஆனும், சுன்னாவும் கூறக்கூடிய சத்தியக் கொள்கையை அறிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் நேர்வழியில் இருந்த முன்னோர்களின் அகீதாவை அறிந்து கொள்ள விரும்பினால் பின்வரும் நூல்களை படியுங்கள்...

குறிப்பாக சுன்னத் ஜமாஅத்தின் போர்வாள்கள் என்றும் சமுதாயத்தின் வழிகாட்டிகள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, நாங்கள் தான் உண்மையாக நேர்வழியில் இருக்கிறோம்! நாங்கள் சொல்வது தான் உண்மை - என்றெல்லாம் கூறி சமுதாயத்தை வழிகெடுக்கும் போலி அறிஞர்களே.. நீங்கள் சத்தியத்தை அறிய விரும்பினால் இந்த உம்மத்தின் மிகச்சிறந்த அறிஞர்களாக இருந்தவர்கள் எழுதிய நூல்களை படியுங்கள்.. 

சத்தியத்தை அறிந்து கொள்வீர்கள்!. நாம் குறிப்பிடும் அறிஞர்கள் அனைவரும் நேர்வழியில் இருந்தார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

படியுங்கள்! உண்மையை அறியுங்கள்!! நேர்வழி பெறுங்கள்!!!

1. இமாம் அபூ உபைத் அல் காஸிம் பின் ஸலாம் رحمه الله அவர்களின் “அல் ஈமான்“

இமாம் அவர்கள் பக்தாத் நகரத்தில் உள்ள ஹர்ராத் என்ற ஊரில் ஹிஜ்ரி 154ல் பிறந்தார். ஏராளமான அறிஞர்களிடம் கல்வி கற்றார். குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹு போன்ற துறைகளில் பெரிய அறிஞராக திகழ்ந்தார். (மரணம் ஹிஜ்ரி 224)

2. இமாம் அபூபக்கர் பின் அபிஷைபாرحمه الله அவர்களின் 

“அல் ஈமான்“

இமாம் அவர்கள் இராக்கின் கூஃபா நகர ஊரில் ஹிஜ்ரி 159ல் பிறந்தார். இமாம் அஹ்மத் பின் ஹன்பல்رحمه الله இமாம் இஸ்ஹாக் பின் ராஹவைஹிرحمه الله, இமாம் அலீ இப்னு மதீனிرحمه الله போன்ற அறிஞர்களின் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய ஹதீஸ் துறை அறிஞர் ஆவார். இவரது ஹதீஸ் தொகுப்பு தான் முஸன்னஃப் இப்னி அபீ ஷைபா என்ற நூல். (மரணம் ஹிஜ்ரி 235)

3. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رحمه الله அவர்களின் “உஸூலுஸ் ஸுன்னா“

இமாம் அவர்கள் இராக்கின் பக்தாத் நகரத்தில் ஹிஜ்ரி 164ல் பிறந்தார். இமாமு அஹ்லிஸ்ஸுன்னா என்று போற்றப்படக் கூடியவராகவும் இருந்தவர். இமாம் அவர்களின் முஸ்னத் அஹ்மத் என்ற நூல் உலகப் புகழ் பெற்ற ஹதீஸ் தொகுப்பு நூலாகும். (மரணம் ஹிஜ்ரி 242)

4. இமாம் புஹாரிرحمه الله அவர்களின் “கல்கு அஃப்ஆலில் இபாத்“

இமாம் அவர்களுக்கு அறிமுகமே தேவையில்லை என்ற அளவிற்கு அவரது ஸஹீஹுல் புஹாரி என்ற நூலின் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ஆவார். இமாம் தற்போதைய உஸ்பெகிஸ்தானின் புஹார என்ற ஊரில் ஹிஜ்ரி 194 ல் பிறந்தார். (மரணம் ஹிஜ்ரி 256)

5. இமாம் இஸ்மாயீல் பின் யஹ்யா அல் முஸ்னி رحمه الله அவர்களின் “ஷரஹுஸ் ஸுன்னா“

இமாம் அவர்கள் எகிப்து நகரத்தில் ஹிஜ்ரி 175ல் பிறந்தார். இமாம் ஷாஃபிرحمه الله அவர்களின் பிரதான மாணவராக இருந்தவர் தான் இவர். (மரணம் ஹிஜ்ரி 264)

6. இமாம் உஸ்மான் பின் ஸஈத் அத்தாரமிرحمه الله அவர்களின் “அர்ரத்து அலல் ஜஹ்மியா“ 

இமாம் அவர்கள் குர்ராஸான் நகரத்தில் உள்ள ஹர்ராத் என்ற ஊரில் ஹிஜ்ரி 200ல் பிறந்தார். இமாம் அவர்களின் முஸ்னத் அத்தாரிமி என்ற ஹதீஸ் தொகுப்பை தொகுத்தவர் ஆவார். (மரணம் ஹிஜ்ரி 280)

7.இமாம் அபூபக்கர் பின் அபீ ஆஸிம்رحمه الله அவர்களின் “அஸ்ஸுன்னா“

(மரணம் ஹிஜ்ரி 287)

8. இமாம் அப்துல்லாஹ் பின் அஹ்மத் பின் ஹன்பல்رحمهما الله  அவர்களின் “அஸ்ஸுன்னா“

இமாம் அவர்கள் ஹிஜ்ரி 214 ல் பிறந்தார். இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رحمه الله அவர்களின் மகனார் ஆவார். (மரணம் ஹிஜ்ரி 290)

9. இமாம் அபூ ஜஃபர் இப்னு அபீ ஷைபாرحمه الله அவர்களின் “அல் அர்ஷ்“

இமாம் அவர்கள் இராக்கின் பக்தாத் நகரத்தில் ஹிஜ்ரி 210ல் பிறந்தார். (மரணம் ஹிஜ்ரி 297)

10. இமாம் அபூ ஜஃபர் அத்தபரிرحمه الله  அவர்களின் “ஸரீஹுஸ் ஸுன்னா“

இமாம் அவர்கள் தபரிஸ்தான் மாகாணத்தின் ஆமுல் என்ற நகரத்தில் ஹிஜ்ரி 224ல் பிறந்தார். (மரணம் ஹிஜ்ரி 310)

11.இமாம் அபூபக்கர் அல் ஹல்லால்رحمه الله அவர்களின் அஸ்ஸுன்னா

இமாம் அவர்கள் ஹிஜ்ரி 234 ல் பிறந்தார். (மரணம் ஹிஜ்ரி 311)

12. இமாம் இப்னு குஸைமா رحمه الله அவர்களின் “அத்தவ்ஹீத் வ இஸ்பாத்து ஸிஃபாத்திர் ரப்பி அஸ்ஸ வ வஜல்“

இமாம் அவர்கள் ஹிஜ்ரி 223ல் பிறந்தார். ஸஹீஹ் இப்னு குஸைமா என்ற பிரபலமான ஹதீஸ் நூலை தொகுத்தவர் ஆவார். (மரணம் ஹிஜ்ரி 310)

13. இமாம் பர்பஹாரிرحمه الله அவர்களின் “ஷரஹுஸ் ஸுன்னா“

அபூ  முஹம்மத் அல் ஹஸன் இப்னு அலீ இப்னு கலஃப் அல் பர்பஹாரி رحمه الله

இமாம் பர்பஹாரி அவர்கள் ஹிஜ்ரி 252ல் பிறந்தார். (ஹிஜ்ரி 329ல் மரணித்தார்)

14.இமாம் அபூபக்கர் அல் இஸ்மாயீலிرحمه الله அவர்களின் இஃதிகாது “அயிம்மத்தில் ஹதீஸி“

(மரணம் ஹிஜ்ரி 371) 

15. இமாம் தாரகுத்னி رحمه الله அவர்களின் “அஸ்ஸிஃபாத்“

இமாம் அவர்கள் பக்தாத் நகரத்தில்  தாருல் குத்ன் என்று அழைக்கப்படும் இடத்தில் ஹிஜ்ரி 306ல் பிறந்தார். சுனன் தாரக்குத்னி என்ற ஹதீஸ் நூலை தொகுத்தவர் ஆவார். (மரணம் ஹிஜ்ரி 385)

16.இமாம் இப்னு மன்தாஹ் رحمه الله அவர்களின் “அத்தவ்ஹீத் அல் ஈமான் வர் ரத்து அலல் ஜஹ்மியா“ 

இமாம் முஹம்மத் பின் யஹ்யா பின் மன்தாஹ் அல் அஸ்பஹானிرحمه الله ஹிஜ்ரி 310 பிறந்தார். (மரணம் ஹிஜ்ரி 395)

17. இமாம் இப்னு அபீ ஸமனைன் رحمه الله அவர்களின் “உஸூலுஸ் ஸுன்னா“

இமாம் அவர்களின் இயர்பெயர் முஹம்மத் பின் அப்துல்லாஹ்رحمه الله என்பதாகும். ஸ்பெயின் நாட்டின் இல்பீரா என்ற ஊரில்  ஹிஜ்ரி 324 ல் பிறந்தார். ஃபிக்ஹு மாலிகில் மிகப் பெரிய இடமாகவும் இருந்தார். (மரணம் ஹிஜ்ரி 399)

18. இமாம் ஹிபத்துல்லாஹ் அல் லால்காயிرحمه الله  அவர்களின் 'ஷரஹு உஸூலி இஃதிகாதி அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ“ (மரணம் ஹிஜ்ரி 418)

19. இமாம் அபூ உஸ்மான் அஸ்ஸாபூனிرحمه الله அவர்களின் “அகீதது ஸலஃப் வ அஸ்ஹாபுல் ஹதீஸ்“ (மரணம் ஹிஜ்ரி 489)

20. இமாம் அஸ்பஹானிرحمه الله அவர்களின் “அல் ஹுஜ்ஜா ஃபி பயானில் மஹஜ்ஜா“

இன்னும் இந்தப் பதிவில் கூறப்படாத முன் சென்ற நல்லறிஞர்களின் அகீதா நூற்கள், அதிலும் குறிப்பாக அஷ்அரியா என்ற கொள்கைப் பிரிவை உருவாக்கிய இமாம் அபுல் ஹசன் அஷ்அரிرحمه الله அவர்களின் “அல் இபானா அன் உஸூலி தியானா“ என்ற நூலையும் படியுங்கள்.. இந்நூலில் இமாம் அவர்கள் தாங்கள் உருவாக்கிய அஷ்அரிய்யா - கொள்கை தவறு என்பதை நிறுவி, இமாம் அஹ்மத் பின் ஹன்பல்رحمه الله அவர்கள் போதித்த ஸலஃப் கொள்கையே சரி என்று நிரூபித்துள்ளார்.



- உஸ்தாத் பஷீர் ஃபிர்தவ்ஸி.
أحدث أقدم