- அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஹபிதஹுல்லாஹ்
நிச்சயமாக புதுமையான, பித்அத்தான மற்றும் (அல்லாஹ்வின்) அருட்கொடையை நிராகரிக்கக்கூடியவற்றிலிருந்து உள்ளதாவது, நபி ﷺ அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்நாட்களில் செய்யப்படுபவைகளும், மேலும் அதில் நிகழக்கூடிய தீமையான மற்றும் பாவமான காரியங்களுமாகும். இவற்றைவிட்டு அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களும், அவரது ஸுன்னத்தும் (மிக) தூரமானதாகும்.
இது ஒரு நூதனமான கொண்டாட்டமாகும். ஷீீ'ஆ பிரிவைச் சேர்ந்த ஃபாதிமிய்யாக்களே எகிப்து நாட்டில் முதன்முதலாக இதனை தோற்றுவித்தனர். அவர்களுக்கு பின்னர் (மற்ற) நாடுகளில் இது பரவிற்று. வழிதவறியவர்கள் மற்றும் அறிவிலிகள் இதனை (அவர்களிடமிருந்து) விரைவாக பெற்றுக்கொண்டு, ஒவ்வொரு வருடமும் அதனை உயிர்ப்பித்து (கொண்டாடுபவர்களாக) மாறிவிட்டனர். அதில் (நிறைய அனாச்சாரங்களும்) அரங்கேறுகின்றன.
முதலாவதாக, இது ஒரு பித்'அஹ் ஆகும். மேலும் ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஏனெனில், நிச்சயமாக நபி ﷺ அவர்களோ, அவர்களது தோழர்களோ, மேலும் அவர்களை பின்பற்றியவர்களோ (இதனைக் கொண்டாடியதாக) அறியப்படவில்லை. சிறப்பிற்குரிய தலைமுறைகள் வாழ்ந்த நானூறு நூற்றாண்டுகள் நெடுகிலும் இந்த மவ்லிதானது அறியப்படவில்லை.
நான்காம் நூற்றாண்டிற்குப் பின்பே இது அறியப்பட்டது. ஷீீ'ஆ பிரிவைச் சேர்ந்த ஃபாதிமிய்யாக்களே எகிப்தைக் கைப்பற்றிய போது இதனை தோற்றுவித்தார்கள். (பின்னர்) இந்த உம்மத்தைச் சேர்ந்த அறிவிலிகள் மற்றும் வழிகேடர்களிலிருந்து உள்ளவர்கள் அதனை விரைவாக எடுத்துக் கொண்டார்கள்.
முதலாவது: இது ஒரு பித்'அஹ் ஆகும். மேலும் ஒவ்வொரு பித்'அத்தும் வழிகேடாகும்.
இரண்டாவது: இதில் பல பாவமான காரியங்கள் அரங்கேறுகின்றன. அவற்றில் மிகவும் மோசமானது, கஷ்டத்தை அகற்ற நபி ﷺ அவர்களிடம் உதவி தேடுவது, (கஷ்ட) நிலையை அவர்களிடம் முறையிடுவது, மேலும் அவர்களிடம் பாதுகாப்புக் கோறுவது முதலியவற்றைக் கொண்டு அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதாகும்.
இது அல்லாஹ்விற்கு இணை வைப்பதாகும். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களது இறப்பிற்கு பின்னர் அன்னாரிடம் எதுவும் கேட்கப்படக்கூடாது.
இந்த பித்'அத்தை தோற்றுவித்து அதனைத் மீண்டும் மீண்டும் கொண்டாடக்கூடிய இவர்கள், "நிச்சயமாக இதிலே நபி ﷺ அவர்களின் நினைவிற்கு புத்துயிர் இருக்கின்றது" என்று கூறுவார்களென்றால், (பதிலுக்கு) இவர்களுக்கு கூறப்படுவதாவது: அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களை இந்த நாட்களில் தவிர (மற்றவற்றில்) நீங்கள் நினைவு கூறமாட்டீர்களா?! முஸ்லிம்கள் எப்பொழுதும், என்றென்றும் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களை நினைவு கூறுபவர்களாக இருக்கின்றனர். பாங்கு, இகாமத், தஷஹ்ஹுத் மற்றும் மார்க்கச் சொற்பொழிவுகளில் அல்லாஹ் அவர்களின் நினைவை உயர்த்திவிட்டான்.
وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ
உமது நினைவை (புகழை) உமக்காக நாமே உயர்த்தினோம். (அல்குர்ஆன் : 94:4) என்ற வசனத்தின் யதார்த்த நிகழ்விற்கேற்ப, அல்லாஹ் நினைவு கூறப்படுவதில்லை, அவனுடன் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களும் நினைவு கூறப்பட்டே தவிர.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் (மார்க்கமாக) கொண்டு வந்தவற்றிலிருந்து ஒரு முஸ்லிம் செய்யக்கூடிய ஒவ்வொரு இபாதத்தும், நிச்சயமாக அதனை (செய்வதைக்) கொண்டு அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களை அவர் நினைவு கூறுகின்றார், அவரது ஸுன்னத்தையும் பின்பற்றுகின்றார்.
மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களுக்கு (நன்மையின் பக்கம் வழிகாட்டியதால்), நன்மை செய்பவருடைய கூலி போன்றதொரு கூலி உண்டு. ஏனெனில், எவரொருவர் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு நன்மையான காரியத்தை (மறைந்த ஸுன்னாஹ்வை) ஆரம்பித்து வைப்பாரோ, அவருக்கு அதனுடைய கூலியும், மறுமை நாள் வரை அதனைக் கொண்டு அமல் செய்வோரின் கூலியும் உண்டு. எனவே, அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களுக்கு இந்த நூதனமான முறையில் நினைவு கூறப்படுவதன் பக்கம் எவ்வித தேவையுமில்லை.
"நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களை நேசிக்கின்றோம், மேலும் அவர்களின் மீதுள்ள நேசத்தின் காரணமாகவே இதனைச் செய்கின்றோம்" என்று அவர்கள் கூறுவார்களென்றால், நாம் கூறுவோம்: "அபூபக்கர், உமர், ஏனைய ஸஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் சிறப்பிற்குரிய நூற்றாண்டைச் சேர்ந்தவர்களை விட அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் கடுமையாக நேசிப்பவர்களா?!" அவர்கள் இந்த மவ்லிதை செய்ய (கொண்டாட)வில்லை. இது அவர்கள் அன்னாரை நேசிக்கவில்லை என்பதற்காகவா?! ஒருபோதும் இல்லை.
மாறாக அது ஒரு பித்'அத் என்பதற்காகத்தான். மேலும் அவர்கள் மக்களிலேயே பித்'அத்தை விட்டும் வெகுதூரமானவர்கள் ஆவர். ஆகவே, இவர்கள் மீது கடமையாக இருப்பது, அல்லாஹ்வை இவர்கள் அஞ்சிக் கொள்வதும், இந்த பித்'அத்தை விட்டு விடுவதும் ஆகும்.
- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.