நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்யமாட்டான்

﴿إِنَّ ٱللَّهَ لَا یَظۡلِمُ مِثۡقَالَ ذَرَّةࣲۖ وَإِن تَكُ حَسَنَةࣰ یُضَـٰعِفۡهَا وَیُؤۡتِ مِن لَّدُنۡهُ أَجۡرًا عَظِیمࣰا﴾ [النساء ٤٠] 

நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்யமாட்டான், இன்னும், அ(ணுவளவுள்ள)து நன்மையாக இருந்தால் அதனைப் பன்மடங்காகப் பெருக்குவான். மேலும், தன்னிடத்திலிருந்து மகத்தான (நற்)கூலியையும் வழங்குவான். [அல்குர்ஆன் 4:40]

விளக்கக் குறிப்புகள்:

சர்வ வல்லமை கொண்ட யாராலும் மிகைக்க முடியாத அல்லாஹ், அநீதி இழைப்பதைத் தன் மீதே ஹறாமாக்கிக் கொண்டுள்ளான்.

அவனிடம் ஒரு குற்றத்துக்கு அதற்குரிய தண்டனையை விட அதிகமான தண்டனை வழங்கப்படமாட்டாது.

மிகச் சிறிய அளவு நன்மை செய்தாலும் அதற்குரிய பலனை விட பன்மடங்கு வழங்கப்படும். நல்ல காரியத்திற்காக ஒன்றுக்குப் பத்தில் இருந்து எழுனூறு மடங்குகள் வரை அதிகரிக்கப்படும். அது அந்த அமலின் நிலை, அதன் பயன், அதை செய்பவரின் நிலை, அதாவது அவரது உள்ளத்திலுள்ள இக்லாஸ், இறைநேசம், பூரணத்துவம் போன்றவற்றின் அளவுக்கேட்ப கூலிகள் அதிகரிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பன்மடங்காக்கப்படும் நற்கூலியையும் தாண்டி அல்லாஹ் *தன்னிடமிருந்து* மேலதிகமாக விசேடமான கூலியும் நன்மை செய்பவர்களுக்கு வழங்குகிறான். 

இந்த ஆயத்தில் அல்லாஹ் *தன்னிடமிருந்து* என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பதால், கொடுக்கின்றவன் சாதாரணமானவனல்ல; எல்லாவற்றுக்கும் சொந்தக்காரனான, கொடைவள்ளலான அல்லாஹ் என்பது உணர்த்தப்படுகிறது. அவனது வள்ளல் தன்மைக்கு ஏற்பவே அவனது கூலியும் சிறப்பானதாக அமைந்திருக்கும்.

*மகத்தான கூலி* என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதால், அதன் பெறுமதியை எவராலும் கணக்கிட்டுச் சொல்ல முடியாது என்பதைப் புரியலாம்.

சிறியதோ பெரியதோ ஒவ்வொரு நல்ல, தீய செயல்களுக்கும் பிரதிபலன்கள் வழங்கப்படும்.

 உசாத்துணைகள்:
- تفسير ابن جزي
- تفسير السعدي
- التحرير والتنوير
- تفسير ابن عثيمين

-ஸுன்னஹ் அகாடமி

أحدث أقدم