ஜுமுஅஹ் நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால்

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌  ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ 
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஅஹ் நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவுகூர்வதின் பக்கம் விரையுங்கள்; வியாபாரத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக நல்லதாகும்.
(அல்குர்ஆன்  62:9)
(ஸூறதுல் ஜுமுஅஹ்:9)

விளக்கக் குறிப்புகள்:

ஜுமுஅஹ் நாளில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் என்பது வெள்ளிக்கிழமையின் விஷேட தொழுகையான ஜுமுஅஹ் தொழுகைக்காக அதான் கூறப்படுவதைக் குறிக்கும்.

அல்லாஹ்வை நினைவுகூர்வதின் பக்கம் *விரையுங்கள்* என்பது அனைத்துப் பணிகளையும் விட்டுவிட்டு, அந்த நேரத்தில் மிக முக்கியமான பணியாக இருக்கும் அல்லாஹ் கடமையாக்கியுள்ள கடமையை நிறைவேற்றச் செல்லவேண்டும்; வேறு பணிகளில் ஈடுபடக்கூடாது. மேற்படி ஆயத்தில் விரைந்து சொல்லுங்கள் என்பது தொழுகைக்காக ஓடிச் செல்லுங்கள் என்பது அர்த்தம் இல்லை. பொதுவாக தொழுகைக்குச் செல்லும் பொழுது ஓடிச் செல்லாமல், வழமையான நடைக்கு மாற்றமாக அவசரமாக விரைந்து செல்லாமல், அமைதியாக, பணிவாகச் செல்ல வேண்டும் என்று நபி ﷺ அவர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள்.

*அல்லாஹ்வை நினைவுகூர்வதின் பக்கம்* என்பது குத்பஹ் பிரசங்கம் மற்றும் தொழுகை ஆகிய இரண்டையும் குறிக்கின்றது. தொழுகைக்காக அழைக்கப்பட்டால் தொழுகைக்கு விரைந்து செல்லுங்கள் என்று சொல்லாமல் அல்லாஹ்வை நினைவுகூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்தப்பட்டதன் மூலம் அந்த வார்த்தை குத்பஹ்வையும் உள்ளடக்குகின்றது. மேலும், அதிலிருந்து குத்பஹ் கட்டாயமானது என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள முடிகின்றது.

*அல்லாஹ்வை நினைவுகூர்தல்* என்ற வார்த்தை அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள், கூலிகள், தண்டனைகள் போன்றவை ஞாபகப்படுத்தப்படுகின்ற குத்பஹ் பிரசங்கத்தை நல்ல முறையில் செவியுற்று, ஜுமுஅஹ்வுடைய தொழுகையை உயிரோட்டமுள்ள தொழுகையாக நிறைவேற்றி உள்ளத்தில் அல்லாஹ்வின் ஞாபகத்தை அதிகப்படுத்திக் கொள்வதின் அவசியத்தை உணர்த்துகின்றது.

*வியாபாரத்தை விட்டுவிடுங்கள்* என்பது இமாம் மிம்பரில் ஏறி, முஅத்தின் அதான் கூறிய பிறகு, தன்மீது ஜுமுஅஹ் கடமையாக்கப்பட்ட ஒரு முஸ்லிம் வியாபாரம் செய்வது ஹறாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. இது அனைத்து வகையான வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களையும் உள்ளடக்கும்.

- மேலும் பல இமாம்கள், இவ்வாறு ஜுமுஅஹ்வை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்களால் அதானுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட வியாபாரம் செல்லுபடியற்றது என்றும் கூறியுள்ளனர். அதன் அர்த்தம்: வாங்கியவர் பொருளுக்கும் விற்றவர் பணத்திற்கும் உரிமையாளர்களாகமாட்டார்கள்.

*இதுவே உங்களுக்கு மிக நல்லதாகும்:* அதாவது ஜுமுஅஹ்வுக்காக அதான் - அழைப்பு விடுக்கப்பட்டதற்குப் பிறகு, வியாபாரத்தினாலும் ஏனைய விடயங்களினால் கிடைக்கும் பயனை விட குத்பஹ்வுக்காகவும் தொழுகைக்காகவும் சென்றால் கிடைக்கும் பயன் மிகச் சிறந்ததாகும். 

*நீங்கள் அறிபவர்களாக இருப்பின்:* அதாவது உங்களிடத்தில் அறிவு இருக்குமானால் இதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

உசாத்துணைகள்:
- تفسير ابن كثير
- فتح القدير للشوكاني
- تفسير السعدي
- التحرير والتنوير لابن عاشور

-ஸுன்னஹ் அகாடமி

أحدث أقدم