உஸ்மான் ரழி அவர்களை தரக்குறைவாக எண்ணியவருக்கு இப்னு உமர் ரழி அவர்கள் சொன்ன பதில்.

உஸ்மான் ரழி அவர்களை 
தரக்குறைவாக எண்ணியவருக்கு 
இப்னு உமர் ரழி அவர்கள் சொன்ன பதில்.
இந்த பதில் பீஜே போன்ற வழிகெட்ட 
சிந்தனைவாதிகளுக்கு போதுமானது. 

நபித்தோழர்களின் சில சம்பவங்களை மேலோட்டமாக படிக்கும் போது அவர்களின் சில காரியங்கள் / அல்லது முடிவுகள் எமக்குப் பிழை போல் தோன்றலாம் அப்படியான கட்டங்களில் நபித்தோழர்களை ஒரே அடியா எடுத்த எடுப்பில் விமர்சனம் செய்துவிடவோ, தப்பபிப்பிராயம் கொண்டுவிடவோ கூடாது.  குறித்த நிகழ்வைப் பற்றி நாம் அறியாத அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்த மற்றத் தோழர்கள் அறிந்த பல விடயங்கள் இருக்கலாம் என்பதற்கு பின்வரும் செய்தி சிறந்த எடுத்துக்காட்டு.

உஸ்மான் இப்னு மவ்ஹப்(ரலி) அறிவித்தார்.

எகிப்து வாசியான ஒருவர் வந்து, (கஅபா எனும்) இறையில்லத்தை ஹஜ் செய்தார் அப்போது ஒரு கூட்டம் அமர்ந்திருப்பதைக் கண்டு, 'இந்தக் கூட்டத்தார் யார்?' என்று கேட்டதற்கு மக்கள், 'இவர்கள் குறைஷிகள் என்று பதில் கூறினார்கள். அப்போது, 'இவர்களின்ல முதிர்ந்த அறிஞர் யார்' என்று அவர் கேட்டதற்கு மக்கள், ' அப்துல்லாஹ் இப்னு உமர்' என்று பதில் அளித்தார்கள். உடனே அவர் அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களை நோக்கி, 'இப்னு உமர் அவர்களே நான் உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு அதைப்பற்றிச் சொல்லுங்கள். உஸ்மான்(ரலி) உஹுதுப் போர்க்களத்திலிருந்து வெருண்டோடியதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) 'ஆம் அறிவேன்' என்று பதில் அளித்தார்கள். 

அப்போது அவர் 'உஸ்மான்(ரலி) பத்ர் போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார். அற்கு இப்னு உமர்(ரலி) 'ஆம் தெரியும்' என்று பதில் அளித்தார்கள். 

அதற்கு அந்த மனிதர் அவர், 'ஹுதைபியாவில் நடந்த பைஅத்துர் ரிள்வான் சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது தங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க ஆம் தெரியும் என்று பதில் அளித்தார்கள்.

 (இவற்றைக் கேட்டுவிட்டு உஸ்மான்(ரலி) தாம் நினைத்தது போன்றே இவ்வளவு குறைகளுள்ளவர்தாம் என்று தொனிக்கும் படி) அந்த மனிதர், அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப்பெரியவன் என்று என்று கூறினார். அப்போது இப்னு உமர்(ரலி), 'வாரும்! (இவற்றிலெல்லாம் உஸ்மான்(ரலி) ஏன் பங்கு பெறவில்லை என்பதை உனக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹத் போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரின் பிழையைப் பொறுத்து மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியாக இருக்கிறேன். 

பத்ர் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், நபி(ஸல்) அவர்களின் மகள் (ருகய்யா(ரலி)) உஸ்மான்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) அப்போது நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் பத்ர் போரில் பங்கெடுத்த ஒருவருக்குரிய (மறுமைப்) பலனும், (போர்ப் பொருளில்) உங்களுக்கான பங்கும் கிடைக்கும் (நீங்கள் உங்களுடைய மனைவியைக் கவனியுங்கள்) என்றார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை.)

 பைஅத்துர் ரிள்வான் சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம் உஸ்மான்(ரலி) அவர்களையும் விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை.) அப்படி இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்கள், குறைஷிகளிடம் பேசுவதற்கு தம் தூதராக அவரை) அனுப்பி இருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை.) எனவேதான், நபி(ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும் இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான்(ரலி) மக்காவிற்குள் போனபின்னர்தான் நடந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலக்கரத்தைச் சுட்டிக் காண்பித்து இது உஸ்மானுடைய கை என்று கூறி அதை தம் இடக்கரத்தின் மீது தட்டினார்கள். பிறகு, இப்போது நான் செய்யும் சத்தியப்பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்றார்கள். என இப்னு உமர்(ரலி) கூறிவிட்டு, (உஸ்மான்(ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த) அந்த மனிதரிடம், 'நான் இப்போது சொன்ன பதில்களை நீ எடுத்துச் செல்லலாம்' என்று கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 3699. 
அத்தியாயம் : 62. நபித் தோழர்களின் சிறப்புகள்

ஷீஆக்களின் பின்னனியைக் கொண்ட சில அறிஞர்களால்  எழுதப்பட்ட நூல்களை படித்து  விட்டு நபித்தோழர்களை விமர்சனம் செய்ய முனையும் தோழர்களே.! நபித்தோழர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் நாம் அறியாத பல காரணிகள் இருக்கும்.  அவற்றை அறியாமல் ஆங்காங்கே காணும் விமர்சனங்களை மாத்திரம் நுனிப்புள் மேய்ந்து விட்டு ஸஹாபாக்களை விமர்சனம் செய்வதென்பது எம்மை அழிவுக்கு இட்டுச்செல்லும் பாவமான காரியமாகும். நபித் தோழர்கள் உண்மையில் தவறு விட்டிருந்தால் கூட அதைப்பற்றிப் பேச எமக்கு எந்த  அனுமதியுமில்லை என்றிருக்க நாம் அறியாதவற்றைக் கொண்டு நபித் தோழர்கள் மீது யூகத்தின் அடிப்படையில் இட்டுக்கடுவது மாபெரும்  அநீதியாகும். 

நட்புடன் :
இன்திகாப் உமரீ
இலங்கை

Previous Post Next Post