சுன்னாவின் காவலர்: இமாம் அஹ்மத் பின் ஹன்பல் வாழ்விலிருந்து ஓர் உன்னதப் படிப்பினை

"குர்ஆன் படைக்கப்பட்டது" என்ற தவறான கொள்கை ஆட்சிக்கட்டிலின் அதிகாரத்தால் திணிக்கப்பட்ட அந்தப் பெருங்குழப்பமான (மிஹ்னா - Miḥnah) காலத்தில், அஹ்லுஸ் சுன்னாவின் தூய கொள்கையைக் காக்க இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சந்தித்த சித்திரவதைகளும், அனுபவித்த சிறைவாசமும் இஸ்லாமிய வரலாற்றின் அழியாப் பக்கங்களாகும்.

அக்காலத்தில் பல அறிஞர்கள் சிறைபிடிக்கப்பட்டனர், சிலர் கொல்லப்பட்டனர். முஃதஸிலாக்களின் இந்தத் தவறான கொள்கையை ஏற்குமாறு மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால், அல்லாஹ்வின் பேச்சை (கலாமுல்லாஹ்) கண்ணியப்படுத்த வேண்டும் என்பதில் இமாம்கள் உறுதியாக நின்றனர். அத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும், இமாம் அஹ்மத் அவர்கள் நபிவழியை (சுன்னாவை) எவ்வாறு உயிர்ப்பித்தார்கள் என்பதற்கு ஷேக் ஹஸன் புகாரி அவர்கள் ஒரு உன்னதமான வரலாற்றுச் சான்றை விவரிக்கிறார்கள்:

அரபு மொழியில் கேட்க:


உயிர்ப் பயத்திலும் உதித்த சுன்னா சிந்தனை!

அதிகார வர்க்கத்தின் தேடுதல் வேட்டைக்கு அஞ்சி, இமாம் அஹ்மத் அவர்கள் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு, தன் மாணவரான அபூபக்கர் இப்னுல் ஹானி என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் நிறைவடைந்ததும், இமாம் அவர்கள், "என்னை வேறு ஒரு இடத்திற்கு மாற்று, அதற்கான இடத்தை தேடு" என்று தன் மாணவரிடம் கூறினார்கள். அதற்கு அந்த மாணவர், "உஸ்தாத் அவர்களே! உங்களைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், கடுமையான கண்காணிப்பு நிலவுகிறது. நீங்கள் இங்கு இருப்பதுதான் உங்களுக்குப் பாதுகாப்பானது" என்று கவலையுடன் தடுத்தார் . ஆனால், இமாம் அவர்களோ, "நீ என் கோரிக்கையை நிறைவேற்றினால், உனக்கு நான் ஒரு மார்க்கக் கல்வியைக் கற்றுத் தருகிறேன்" என்று வற்புறுத்தினார்கள் . 

ஆசிரியரின் கட்டளைக்கு இணங்கி, மாணவரும் வேறு வழியின்றி அவர்களைப் பாதுகாப்பாக மற்றொரு இடத்திற்கு மாற்றி வைத்தார்.
அதன் பிறகு இமாம் அவர்கள் தன் மாணவரிடம் அந்த ரகசியத்தைக் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்தபோது, தவ்ர் குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு, பிறகு வேறு இடத்திற்கு மாறினார்கள். எனவே, என் வாழ்நாளில் இத்தகைய ஒரு இக்கட்டான, துன்பமான சூழ்நிலை (கற்ப் - كرب) ஏற்படும் போதாவது, அல்லாஹ்வின் தூதரைப் போன்று நானும் அந்தச் சுன்னாவைப் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன்!" 

மேற் கூறப்பட்ட சம்பவத்தின் வழி நமக்குக் கிடைக்கும் கூடுதல் ஆழமான சிந்தனைகள்:

இது கட்டாய சுன்னா அல்ல, தூய அன்பின் வெளிப்பாடு: 

ஹரமுடைய கண்ணியத்திற்குரிய ஆசிரியர் அஷ்ஷைஹ் ஹஸன் புகாரி அவர்கள் குறிப்பிடும்போது, "நபி ﷺ அவர்கள் குகையில் மூன்று நாட்கள் தங்கியது என்பது ஒரு மார்க்க இபாதத்தாகச் செய்யப்பட்ட சுன்னா அல்ல, அது பயணப் பாதுகாப்பிற்காக எதேச்சையாக (اتفاقًا) நிகழ்ந்த ஒன்றுதான்" என்கிறார் . அப்படி இருந்தும், இமாம் அஹ்மத் அவர்கள் அதை ஏன் பின்பற்றினார்கள்? ஏனெனில், அவர்களது உள்ளம் அல்லாஹ்வின் தூதரின் மீதான அளப்பரிய அன்பினாலும், சுன்னாவைக் கண்ணியப்படுத்தும் எண்ணத்தினாலும் நிரப்பப்பட்டிருந்தது. அந்த உன்னத அன்பே அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியது .

துன்ப நேரத்தில் சாதாரண மனிதனின் சிந்தனையும், இமாமின் சிந்தனையும்: 

ஒரு மனிதன் உயிருக்கு ஆபத்தான, கடுமையான நெருக்கடியில் இருக்கும்போது தன் உயிரைக் எப்படிக் காப்பாற்றுவது, எப்படி தப்பிப்பது என்றுதான் சிந்திப்பான். ஆனால், இமாம் அஹ்மத் அவர்களின் உள்ளமோ அந்த இக்கட்டான நிலையிலும், "நபிவழியை எப்படி நடைமுறைப்படுத்துவது?" என்று சிந்தித்தது. இதனால்தான் அவர்கள் வெறும் இமாமாக இல்லாமல், "இமாமு அஹ்லிஸ் சுன்னா" (நபிவழியைப் பின்பற்றுவோரின் தலைவர்) என்ற உன்னத தகுதியை அடைந்தார்கள்.

இன்றைய சமுதாயமும் சுன்னாவின் அலட்சியமும்:

முன்னோர்களான ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் (ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்கள்) சுன்னாவிற்கு அளித்த முக்கியத்துவத்தை நம்மால் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. ஆனால், இன்றைய கால யதார்த்தம் முற்றிலும் கவலைக்குரியதாக உள்ளது.
வீடியோவில் ஷேக் அவர்கள் இன்றைய நிலையை மிக அழகாகக் கூறுகிறார்:
"அன்று நம் முன்னோர்கள் சுன்னாவை அது 'சுன்னா' (நபியின் வழிமுறை) என்பதற்காகவே கண்ணியப்படுத்திச் செய்தார்கள். ஆனால் இன்றோ, நாம் சுன்னாவை அது 'வெறும் சுன்னாதானே' என்று உதாசீனப்படுத்துகிறோம்!"

யாரிடமாவது "இதைச் செய்யுங்கள், இது நபிவழி" என்று அறிவுறுத்தினால், "பரவாயில்லை, இது கடமை (ஃபர்ளு) இல்லையே, சுன்னாதானே!" என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் . 

இந்த அலட்சியமே இன்று நம் சமுதாயத்தில் ஏற்படும் பல குழப்பங்களுக்கும், நன்மைகள் மற்றும் பரக்கத் குறைவதற்கும் முதன்மைக் காரணமாக மாறிவிடுகிறது.

மூல நூல்கள் (Primary Sources):
நூல்: ஸியரு அஃலாமின் நுபலா 
(سير أعلام النبلاء)
ஆசிரியர்: இமாம் அத்-தஹபி
 (الإمام الذهبي)
பாகம்: 11, பக்கம்: 231

துஆ:

எல்லாம் வல்ல அல்லாஹ், நம் அனைவரையும் இமாம்களைப் போல சுன்னாவின் மீது தீவிர பற்றுள்ளவர்களாகவும், நபியவர்களின் ஒவ்வொரு வழிமுறையையும் பேணிப் பாதுகாத்து வாழக்கூடிய சிறந்த மக்களாகவும் ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்.

- உஸ்தாத் SM .இஸ்மாயீல் நத்வி 


Previous Post Next Post