முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹி) அவர்களும் அவர்களின் முக்கிய நூல்களும்

ஷரீஆ படிப்போர், இஸ்லாமிய அழைப்பாளர்கள் அறிந்திருக்க வேண்டிய மாமேதை முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹி) அவர்களும் அவர்களின் முக்கிய நூல்களும்.
محمد بن صالح العثيمين رحمه الله
(1347-1421هـ) 
-
இமாம் உஸைமீன் (ரஹி) அவர்கள் சவூதி அரேபியாவில் இன்றுவரை அறிஞர்களின் மாநிலமாக அறியப்படுகின்ற கஸீம் மாகணம் அல்- உனைஸா நகரில்  ஹி: 1347 - கி.பி.  1929 பிறந்தார்கள். 

கல்வி ஈடுபாடு:

புனிதமிகு குர்ஆனை தனது சிறுபராயத்திலேயே தனது தாயின் தந்தை- பாட்டனாரிடம் ஓதி மனனம் செய்தும் கொண்டார்கள்.

அரபி எழுத்தறிவு, கணிதம், வரலாறு போன்ற பாடநெறிகளை முதலில் கற்கத் தொடங்கி, பின் நாட்களில் அல்-கஸீமின் பிரசித்திபெற்று விளங்கிய அறிஞர்களில் ஒருவரான அஷ்ஷேக் அப்துர் ரஹ்மான் நாஸிர் அஸ்ஸஃதி ரஹி அவர்களின் ஷரீஆ பாடநெறியில் சேர்ந்து கற்றார்கள்.

அங்கு தஃப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹ், அகீதா, வரலாறு, இலக்கண இலக்கியம், வாரிசுமை சட்டங்கள் எனப் பல துறைப் பாடங்களைக் கற்றுத் தேறினார்கள். 

ஷேக் உஸைமீன் ரஹி அவர்களை தனது பெரிய மாணவர்களோடு இணைத்து ஷேக் ஸஃதி ரஹி அவர்கள் கல்வி போதித்தார்கள் என்பது ஷேக் உஸைமீன் சிறிய வயதிலேயே திறமையான ஒரு மாணவராக அடையாளம் காணப்பட்டார் என்பதற்கான சான்றாகும்.

ஷேக் உஸைமீன் அவர்களின் பிரதம ஆசியர்களாகப் பல அறிஞர் பெருமக்கள் இருந்துள்ளனர்.

அவர்களில் நீதிபதி, அரபி இலக்கண இலக்கிய சட்டவல்லுனர்கள், தஃப்ஸீர், ஹதீஸ்துறை எனப் பலர் உள்ளடங்குகின்றனர்.
 
الشيخ عبد العزيز بن ناصر بن رشيد الشيخ عبد الرحمن الأفريقي
الشيخ عبد الرحمن بن علي بن عودان ، 
الشيخ عبد الرزاق عفيفي 
والشيخ عبد العزيز بن باز
العلامة الشيخ محمد الأمين الشنقيطي  (رحمهم الله) 
போன்ற பல பெரிய அறிஞர்களிடம் தனது துறை சார்ந்த கல்வியைத் தேடி இருப்பது தெரிகிறது.

ஷேக் உஸைமீன் ரஹி அவர்கள் கற்றலில் அலாதியான ஈடுபாடுடையவராக அறியப்படுவது போலவே கற்பித்தல் துறையிலும்  
புதியதோர் சகாப்தத்தையும் கவர்ச்சியான வழிமுறையையும்
கடைப்பிடித்த மாமேதை
என்றே கூறலாம்.

மக்கா, மதீனா, ரியாத் என சவூதியின் பிரதான நகரங்களில்  தனது கல்வியைப் பரப்பி பல நூறு மாணவர்களை உருவாக்கிய மாமேதை அவர்கள் ஹி: 1422- கி.பி 2001 மரணமானார்கள்.
رحمه الله رحمة واسعة وأسكنه الفردوس الأعلى 
தன்னை ஷேக், பெரிய மாமேதை, அறிஞர் என ஒரு மேடையில் புகழ்ந்துரைத்ததை உடனே கண்டித்த ஷேக் தன்னை முஹம்மத் ஸாலிஸ் உஸைமீன் என அழைக்குமாறு அறிவுறித்தியதைக் காண்கின்ற போது நினைவுச் சோலைகளால் துவண்டு பேர் புகழ் விரும்பும் நமது மௌலவிகள் பற்றி கவலைப்பட வேண்டி இருக்கிறது.
 
73 ஆண்டுகள் உலகில் வாழ்ந்து 50 ஆண்டுகள் கல்விக்காக தன்னை முழுமையாக அர்பணித்த இந்த மாமேதை 180 மேற்பட்ட நூல்களை முஸ்லிம் உலகில் விட்டுச் சென்றுள்ளார்கள்.

அவை தவிர்ந்த உரைகள், பயிற்சி வகுப்பு பாடங்கள், கேள்வி, பதில்கள் என அவர்களின் அறிவின் பரப்பு விரிந்து செல்கின்றது.

ஷேக் அவர்களின் நூல்கள் தொடர்பாக பின்வரும் இணைப்பிலும் காணலாம்.


ஷேக் அவர்களின் நூல்கள்:

180 மேற்பட்ட நூல்களில் ஃபிக்ஹ், ஹதீஸ் விளக்கவுரை, தஃப்ஸீர் நூல்கள் தேன் சொட்டுக்கள் என்றே கூற வேண்டும்.
எவ்வளவு  மிகக் கஷ்டமான மார்க்க பிரச்சினையையும் மிக இலகுவான எளிய நடையில் தெளிவுபடுத்தி இருப்பது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப் பெரிய அருளாகும்.

உதாரணமாக ஹன்பலி மத்ஹபில் ஃபிக்ஹ் பாட நூலாக அறியப்படுகின்ற இமாம் இப்னு குதாமாவின்
متن كتاب المقنع لابن قدامة
என்ற நூலுக்கான இமாம் 
شرف الدين أحمد الحجاوي 
 என்ற அறிஞரின் சுருக்க நூலான 
زاد المستقنع في اختصار المقنع
என்ற நூலுக்கான விரிவுரையாக 
 الشرح الممتع على زاد المستقنع 
என்ற தலைப்பில் அவரது இரு மாணவர்களால் தொகுக்கப்பட்ட 15 பாகங்களைக் கொண்ட அதி விசேடமான நூலாகும். 

இது அடிப்படையில் ஷேக் அவர்கள் உனைஸா பெரிய பள்ளியில் நடத்திய ஃபிக்ஹ் வகுப்புக்களாகும்.

அதனை அவர்களின் இரண்டு கலாநிதி மாணவர்கள் நூல் வடிவில் தொகுத்ததோடு, ஹதீஸ்களையும் தரம் பிரித்து அடிக்குறிப்புக்களோடு தொகுத்தளித்தளித்து பாரிய சேவை செய்துள்ளனர். 

அவர்களில்  ஒருவர் 
الدكتور سليمان بن عبد الله أبا الخيل 
மற்றவர்,
الدكتور خالد بن علي المشيقح 
جزاهما الله خيرا ومتعهما الله بالصحة والعافية
அவ்வாறே அரபு மத்ரஸாக்களில் கற்பிக்கப்படுகின்ற 
بلوغ المرام 
என்ற ஹதீஸ் சட்ட நூலுக்கான சிறந்த விரிவுரையாக 
فتح ذي الجلال والإكرام بشرح بلوغ المرام
என்ற பெய‌ரில் ஆறுபாகங்களாக தந்துள்ளார்கள்.  

அவ்வாறே ரியாழுஸ் ஸாலிஹீன் நூலுக்கான அழகிய விரிவுரையும் தந்துள்ளார்கள். இப்படி பல அறிவுப் புதையல்கள் தேடத் தேட வெளிவருகின்றன. 

குறிப்பு: ஃபிக்ஹ் அத்தியாய அமைப்பில் பாடங்கள் தலைப்பிடப்பட்டு முறைப்படுத்தப்பட்ட மத்ஹபு நூல்களை, மத்ஹபு இமாம்கள் எழுதிய நூல்கள் என தமிழ் பேசும் குர்ஆன் ஹதீஸ் பேசுகின்ற அரப்படிதத்த வட்டங்களில் தரம் தாழ்த்தி அழைப்பாளர்கள் பேசி தமக்கும் தமது ரசிகர்களுக்கும் மார்க்க சட்டங்கள் பற்றிய அறிவு இல்லாதிருப்பதை இவ்வாறான உதாசீனங்கள் நமக்கு கூற வரும் பாடமாகும்.

குறித்த மத்ஹப் சார்ந்த ஃபிக்ஹ் நூல்களில் பலவிதமான செய்திகள் இடம் பெற்றிருப்பினும் அவற்றில் குர்ஆன் சுன்னாவுக்கு உடன்பட்ட ஊர்ஜிதமான கருத்தை தேர்வு செய்கின்ற முறையை தாயிகளாக களத்தில் இருப்போரே கற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த வழிமுறையை சரியாக அணுகிய நூல்களாக ஷேக் உஸைமீன் ரஹி அவர்களின் நூல்கள் தனியான சிறப்பு வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. 

اللهم فقهنا في الدين وعلمنا التأويل 

- எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

Previous Post Next Post