عن عائشة رضي الله عنها قالت: إن رسول الله ﷺ، قال: "ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة، وإنه ليدنو، ثم يباهي بهم الملائكة، فيقول: ما أراد هؤلاء". صحيح مسلم 1348
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: அறஃபஹ் நாளை விட அல்லாஹ் அடியார்களை நரகத்தில் இருந்து அதிகமாக விடுதலை செய்யும் வேறு எந்த ஒரு நாளும் இல்லை. நிச்சயமாக அவன் (அறஃபஹ்வில் உள்ளவர்களுக்கு) நெருங்குகிறான். பின்னர், அவர்கள் குறித்து மலக்குகளிடம் புகழ்பாராட்டி, இவர்கள் எதை விரும்புகிறார்கள்? என்று கூறுவான்.
அறிவிப்பவர்: ஆஇஷஹ் (றளியல்லாஹு அன்ஹா)
முஸ்லிம் 1348
عن عبد الله بن عمرو: أنّ النَّبيَّ ﷺ كان يقولُ: إنّ اللهَ عز وجل يُباهي مَلائكتَه عَشيَّةَ عَرفةَ بأهلِ عَرفةِ، فيقولُ: انظُروا إلى عِبادي، أتَوْني شُعثًا غُبرًا.
أحمد 7089
صححه الألباني، وحسنه الوادعي، وش الأرناؤوط.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்: நிச்சயமாக கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் அறஃபஹ்வின் மாலைப் பொழுதில் அறஃபஹ்வில் இருக்கும் மக்களைக் குறித்து தனது மலக்குமார்களிடம் புகழ் பாராட்டுகின்றான்; என்னுடைய அடியார்களைப் பாருங்கள்; அவர்கள் பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக என்னிடம் வந்திருக்கிறார்கள் என்று கூறுவான்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு அமர் (றளியல்லாஹு அன்ஹுமா) அஹ்மத் 7089
விளக்கக் குறிப்புகள்:
அல்லாஹ் சில காலங்களை விடச் சில காலங்களைச் சிறப்பித்திருக்கிறான். அவ்வாறு சிறப்பிக்கப்பட்ட நாட்களில் ஒன்றுதான் அறஃபஹ் தினமாகும்.
அறஃபஹ் நாளில் தான் அதிகமானவர்கள் நரகிலிருந்து விடுதலை செய்யப்படுகின்றனர்.
துல்ஹிஜ்ஜஹ் மாதத்தில் ஒன்பதாவது நாளில் மக்கஹ்வுக்கு 22 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அறபஹ் மைதானத்தில் ஹாஜிகள் ஒன்று கூடுகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடத்தில் தங்கள் இம்மை, மறுமைத் தேவைகளை முறையிடுகின்றனர். அவனிடத்தில் பாவமன்னிப்பு வேண்டுகின்றனர். அல்லாஹ் அந்த நாளில் அவர்களிடம் மிகவும் நெருங்குகின்றான்.
அல்லாஹ் அவனுக்குத் தகுதியான முறையில் அடியார்களை நெருங்குகின்றான். அதே நேரத்திலே அவன் அர்ஷ் எனும் சிம்மாசனத்திற்கு மேலால் உயர்ந்தும் இருக்கின்றான். அவன் எவருக்கும் எதற்கும் ஒப்பற்றவன். அவனை அவனது படைப்புக்களைப் போன்று கற்பனை செய்வது மிகப் பெரும் தவறாகும்.
அல்லாஹ் அறஃபஹ்வில் கூடியிருக்கும் ஹாஜிகள் குறித்து தனது வானவர்களிடம் புகழ்ந்துரைகின்றான். அவர்களின் சிறப்பையும், அழகான செயலையும் எடுத்துரைத்து, அவர்களைப் பாராட்டுகின்றான்.
அல்லாஹ் தனது இவ்வடியார்களைப் பற்றி "இவர்கள் என்ன விரும்புகிறார்கள்?" என்று மலக்குகளிடம் இவர்களின் மகிமையைப் பறைசாற்றுவதில் இருந்து, இவர்கள் தங்கள் குடும்பங்களையும் நாடுகளையும் பிரிந்து, செல்வங்களையும் செலவு செய்து, உடல்களாலும் சிரமப்பட்டு இங்கே கூடியிருப்பது எதற்காக? பாவமன்னிப்பைப் பெற வேண்டும் என்பதற்காக அல்லவா? அவனது பொருத்தத்தையும் நெருக்கத்தையும் பெற வேண்டும் என்பதற்காக அல்லவா? எனவே இவர்கள் விரும்புவது இவர்களுக்குக் கிடைக்கும்; இவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது தெளிவாகிறது.
அல்லாஹ் அவனது மகத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் ஏற்ற விதத்தில் அடியார்களை நெருங்குதல், வானவர்களிடம் புகழ் பாராட்டுதல், கதைத்தல் ஆகிய அவனது சில பண்புகள் இந்த ஹதீஸில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதான உசாத்துணைகள்:
- مشروع موسوعة الأحايث النبوية
- الموسوعة الحديثية، الدرر السنية
Sunnah Academy