கர்பலா - தெளிவு

இமாம் ஹுசைன் உயிரை கொடுத்தது எதற்காக என்று மௌலானா மௌதூதி அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றை மெய்ப்பொருள் வாசிப்பு வட்டம் பரவச் செய்துள்ளது. அநியாயக்கார முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போர் புரிய வேண்டும் என்பதை ஊக்குவிப்பதும், வாரிசு அரசியல் அல்லது மன்னராட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவது குற்றமல்ல என்பதுமே கட்டுரையின் சாரம். உண்மையில் இந்தச் சிந்தனையை தற்சமயம் மெளதூதி அவர்களின் ஜமாஅத் கூட பரப்புரை செய்வதில்லை. இளைஞர்களிடம் இதன் தாக்கம் எப்படி அழிவுக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கும் என்பதை அவர்கள் முதிர்ச்சியுடன் புரிந்து வைத்துள்ளார்கள். எனினும், சீர்மை பதிப்பகமும் மெய்ப்பொருள் வட்டமும் இதை உணரவில்லை. இந்தக் கிளர்ச்சி சிந்தனையை ஷரீஅத்தின் அடிப்படை அழைப்பாக முன்வைக்கும் நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிடுகிறார்கள். ஆனால், இந்தப் போக்கு ஷரீஅத்தின் கட்டளைக்கு மாறானதே.

இந்தச் சூழலில் இது குறித்து ஆரம்பக் காலம் தொட்டு அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் வழங்கியுள்ள தெளிவான வழிகாட்டலையும் ஷரீஅத்தின் ஆதாரங்கள் நமக்கிடும் கட்டளைகளையும் தொடர்ந்து பதிவிட முயற்சி செய்கிறேன். அல்லாஹ்வே நம்மை உண்மையின்பால் வழிநடத்துபவன்.

முதலில் ஒரு தெளிவை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். இமாம் ஹுசைன் உயிரை கொடுத்தது எதற்காக என்ற தலைப்பே பொருத்தமாக இல்லை.

1. தாங்களாக போர் புரிய வேண்டும் என்று ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு கிளம்பிப் போகவில்லை. தொடர்ச்சியாக கூஃபாவாசிகள் (ஷிஆக்கள்) கடிதங்கள் அனுப்பி அழைப்பு கொடுத்து, தாங்கள் பைஅத் செய்வதாக அளித்த வாக்குறுதியை நம்பித்தான் கிளம்பிப் போனார்கள். மூத்த நபித்தோழர்களில் எவரும் அவர்களின் இந்த நடவடிக்கையை ஆதரவளிக்கவில்லை என்றபோதும் கூஃபாவாசிகளை நம்பிவிட்டார்கள்.

2. கூஃபாவாசிகளின் துரோகத்தை அறிந்த உடனே திரும்பிச் செல்லத்தான் நாடினார்கள். கர்பலாவில் யஸீத் இப்னு முஆவியா அவர்களின் தளபதி தடுத்தபோதும் அவர்களை எதிர்த்துப் போர் புரிகின்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை. மக்காவிற்கு திரும்பிச் செல்லுதல் அல்லது யஸீது அவர்களிடமே செல்லுதல் அல்லது எல்லையைப் பாதுகாக்க ஜிஹாதுக்குச் செல்லுதல் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றுக்காவது தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இது அவர்களின் மனமாற்றத்தை காட்டுகிறது. அநியாயக்கார ஆட்சியாளனை எதிர்த்து உயிரையாவது விட்டுவிட வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருந்திருந்தால் இந்த கோரிக்கையை முன் வைத்திருக்க மாட்டார்கள். அவர்களைத் தடுத்த தளபதி உபைதுல்லாஹ்வின் படை அவர்களைச் சரணடைய வேண்டும் என்று சொன்னபோதுதான் அவர்களும் போர் புரிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் ஹுசைன் (ரலி) தான் எடுத்த முடிவில் இறுதி வரை மாறாமல் இருந்ததாக சொல்ல முடியாது.

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கர்பலா விவகாரம் குறித்து மிகத் தெளிவான பல விளக்கங்களை எழுதியுள்ளார்கள். அவை மௌலானா மௌதூதி மற்றும் அவர்களைப் போன்ற பலரின் கருத்துகள் குறித்து நமக்குத் தெளிவை ஏற்படுத்துகின்றன.

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) தமது மின்ஹாஜுஸ் ஸுன்னா அந்நபவிய்யா எனும் நூலின், பாகம் 4, பக்கங்கள் 530,531 இல் எழுதியிருப்பதை முதலில் கீழே அரபு மூலத்துடன் கொடுக்கிறேன். எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு அரபு பத்திக்கும் அடுத்து அதனுடைய தமிழாக்கத்தைக் கொடுக்கின்றேன். இவை அனைத்துமே தொடர்ச்சியாக வருபவைதான். அங்கும் இங்கும் பொறுக்கி எடுக்கப்பட்டவை அல்ல. இவை இடம்பெறும் இரண்டு பக்கங்களையும் தனியாக இமேஜாகவும் கீழே இணைத்துள்ளேன்.

இனி அவர்கள் எழுதுவதை வாசியுங்கள்:

وباب قتال أهل البغي والأمر بالمعروف والنهي عن المنكر يشتبه بالقتال في الفتنة، وليس هذا موضع بسطه . ومن تأمل الأحاديث الصحيحة الثابتة عن النبي صلى الله عليه وسلم في هذا الباب واعتبر أيضا اعتبار أولى الأبصار، علم أن الذي جاءت به النصوص النبوية خير الأمور. ولهذا لما أراد الحسين رضى الله عنه أن يخرج إلى أهل العراق لما كاتبوه كتبا كثيرة أشار عليه أفاضل أهل العلم والدين كابن عمر وابن عباس وأبي بكر بن عبدالرحمن بن الحارث بن هشام أن لا يخرج، وغلب على ظنهم أنه يقتل، حتى إن بعضهم قال : أستودعك الله من قتيل . وقال بعضهم : لولا الشفاعة لأمسكتك ومنعتك من الخروج وهم في ذلك قاصدون نصيحته طالبون لمصلحته ومصلحة المسلمين والله ورسوله إنما يأمر بالصلاح لا بالفساد، لكن الرأي يصيب تارة ويخطيء أخرى.

கலகக்காரர்கள் செய்கின்ற போரும் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதற்காக செய்கின்ற போரும் ஒரே மாதிரியாக அமைவதால் அதுவும் (அதாவது கலகக்காரர்கள் நியாயம் கேட்டு போரிடுவதும்) ஃபித்னாவை ஒழிப்பதற்காகச் செய்கின்ற போர்தானே என்று சந்தேகிக்கத் தோன்றும். (அப்படியல்ல. இரண்டும் வேறு வேறாகும்.) இது குறித்து விரிவாகப் பேச வேண்டிய இடம் இது அல்ல.

எனினும், இவ்விஷயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக வந்துள்ள ஆதாரப்பூர்வமான ஸஹீஹ் ஹதீஸ்களைச் சிந்தித்து நன்றாக ஆய்வு செய்து பார்ப்பவர் ஒன்றை விளங்கிக் கொள்ளலாம். நபிவழியைப் பறைசாற்றும் ஆதார நூல்களில் இவ்விஷயமாக என்னவெல்லாம் அறிவிக்கப்பட்டு வந்துள்ளனவோ அவை அனைத்தும் நல்ல விஷயங்களேயாகும்.

இதன் காரணமாகத்தான், இராக் நாட்டைச் சேர்ந்த மக்கள் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நிறைய கடிதங்கள் எழுதி அழைத்திருந்திருந்தும், அவர்களைப் பார்ப்பதற்காக வேண்டி ஹுசைன் அவர்கள் செல்ல முற்பட்டபோது இப்னு உமர், இப்னு அப்பாஸ், அபூபக்ர் இப்னு அப்திர்ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹும் போன்ற மிகச் சிறப்பு வாய்ந்த அஹ்லுல் இல்மாக (கல்விமான்கள்) இருந்தவர்களும் '(இராக் மக்களின் அழைப்பை ஏற்று) அங்கு செல்ல வேண்டாம்' என்று ஆலோசனை கொடுத்தார்கள்; நல்லுபதேசம் செய்தார்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் 'ஹுசைன் கொல்லப்படுவார்' என்று எண்ணினார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களில் ஒருவர் 'கொலையாளியிடமிருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று கூறினார். இன்னொருவர், (அல்லாஹ்விடம்) ஷஃபாஅத் எனும் பரிந்துரை செய்தல் மட்டும் இல்லாதிருந்தால் குரூஜ் செய்வதை (முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராகப் போரிடக் கிளர்ந்து அவர்களின் மையக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதை) விட்டும் உங்களைத் தடுத்திருப்பேன்' என்று கூறினார்.

இது விஷயத்தில் அந்த நபித்தோழர்கள் அனைவருமே அவருடைய நலன் விரும்பிகளாகவே இருந்தார்கள். அவருடைய நலனை மட்டுமின்றி முஸ்லிம்கள் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுபவர்களாக இருந்தார்கள்.

அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் (தீமையைத் தடுக்க) இஸ்லாஹை (சீர்திருத்தம் செய்வதை)க்கொண்டுதான் கட்டளையிட்டுள்ளார்கள். ஃபசாதை (கலகம் செய்தலை)க் கொண்டு கட்டளையிடவில்லை.

விஷயம் என்னவெனில், ஒருவரின் சுய அபிப்பிராயம் சிலவேளை சரியாக இருக்கலாம்; சிலவேளை தவறாகவும் இருக்கலாம்.

فتبين أن الأمر على ما قاله أولئك ولم يكن في الخروج لا مصلحة دين ولا مصلحة دنيا ) ، بل تمكن أولئك الظلمة الطغاة من سبط رسول الله صلى الله عليه وسلم حتى قتلوه مظلوما شهيدا وكان / في خروجه وقتله من الفساد مالم يكن حصل (۲) لو قعد في بلده، فإن ما قصده من تحصيل الخير ودفع الشر لم يحصل منه شيء، بل زاد الشر بخروجه وقتله . ونقص الخير بذلك، وصار ذلك (۱) سببا لشر عظيم. وكان قتل الحسين مما أوجب الفتن، كما كان قتل عثمان مما أوجب الفتن .

கடைசியில் இந்த விவகாரத்தில் அந்த நபித்தோழர்கள் என்ன சொன்னார்களோ அதுதான் நடந்தது. ஹுஸைன் அவர்கள் (கூஃபாவாசிகளின் வாக்குறுதியை நம்பி) ஆட்சியாளருக்கு எதிராகக் கிளர்ந்து (குரூஜ்) சென்றதில் மார்க்க ரீதியான நலவும் இருக்கவில்லை; உலக ரீதியான நலவும் இருக்கவில்லை. மாறாக, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரப்பிள்ளையை அங்கிருந்த கலகக்காரர்களான அந்த அநியாயக்காரர்கள் அவரைக் கொலை செய்யும் வரை எதிர்த்து நின்றார்கள். அவர் அநீதம் இழைக்கப்பட்டு ஷஹீதாக ஆனார்.

அவர் அங்கு கிளம்பிச் செல்லாமல் தனது ஊரிலேயே தங்கி இருந்திருப்பாரேயானால் இதுபோன்ற ஃபஸாதும் (கலகமும்) கொலையும் நடந்திருக்காது. நன்மை விளைய வேண்டும், தீமை தடுக்கப்பட வேண்டும் என்று நாடி அவர் சென்ற எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. மாறாக, அவர் குரூஜ் செய்து கிளம்பிச் சென்றதாலும் கொலை செய்யப்பட்டதாலும் தீமைகள்தான் அதிகமாயின. நன்மைகள் இழக்கப்பட்டதுதான் மிச்சம். இது மட்டுமின்றி, மிகப் பெரிய தீங்குக்கும் இது காரணமாக ஆகிவிட்டது. (மிகப் பெரிய தீங்கு என்றால் அல்லாஹ்வின் தூதருடைய அருமைப் பேரர் கொல்லப்படுதலும் அதையொட்டி உம்மத்தில் உண்டான குழப்பங்களும் ஆகும்.)

உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்ட விஷயம் எவ்வாறு பல ஃபித்னாக்களுக்கு (சோதனைகள் மற்றும் குழப்பங்களுக்கு) வழிவகுத்ததோ அதேபோன்று ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டதும் ஃபித்னாக்களை ஏற்படுத்தக்கூடியதாக ஆகிவிட்டது.

وهذا كله مما يبين أن ما أمر به النبي صلى الله عليه وسلم من الصبر على جور الأئمة وترك قتالهم والخروج عليهم هو أصلح الأمور للعباد في المعاش والمعاد، وأن من خالف ذلك متعمدا أو مخطئا لم يحصل بفعله صلاح بل فساد. ولهذا أثنى النبي صلى الله عليه وسلم على الحسن بقوله : «إن ابني هذا سيد وسيصلح الله به بين فئتين عظيمتين من المسلمين" ولم يثن على أحد لا بقتال في فتنة ولا بخروج على الأئمة ولا نزع يد من طاعة ولا مفارقة للجماعة . وأحاديث النبي صلى الله عليه وسلم الثابتة في الصحيح كلها تدل على هذا .

இந்த நிகழ்வுகள் அனைத்தும் அல்லாஹ்வின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதையெல்லாம் கட்டளையிட்டுத் தெளிவுபடுத்தினார்களோ அதையே காட்டுகிறது. அதாவது, ஆட்சித் தலைவர்களின் அநியாயத்தைப் பொறுமையோடு சகித்திருப்பதும், அவர்களோடு சண்டையிடாமல் விலகி இருப்பதும், அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போர் செய்ய ஆயத்தமாகாமல் இருப்பதும் இம்மை மறுமை ஆகிய இரண்டு உலகத்திற்கும் அடியார்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் காரியங்களில் உள்ளதாகும். இதையே நபியவர்கள் தெளிவாகக் கட்டளையிட்டிருந்தார்கள். வேண்டுமென்றோ அல்லது (அறியாமையால்) தவறாகவோ இதற்கு மாற்றமாக யார் நடக்கின்றாரோ அவர் தனது செயலின் மூலம் எந்த நலவையும் அடைந்துகொள்ள முடியாது; மாறாக, அது ஃபஸாதில் (கெடுதியில்)தான் போய் முடியும் என்றும் நபியவர்கள் விளக்கிவிட்டார்கள். ஆகவேதான் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறித்து அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் பாராட்டிச் சொல்லும்போது பின்வருமாறு கூறினார்கள்: "என்னுடைய இந்த மகன் ஸய்யித் (தலைவர்) ஆக இருப்பார். இவரைக் கொண்டு முஸ்லிம்களில் இரண்டு பெரும் குழுவினருக்கு மத்தியில் அல்லாஹ் இணக்கத்தை ஏற்படுத்துவான்." யாரையும் நபியவர்கள் இவ்வாறு புகழ்ந்துரைக்கவில்லை. அதாவது, ஃபித்னாவின்போது (அதை எதிர்த்து) போர் புரிவதையோ, ஆட்சித் தலைவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவர்களின் கூட்டமைப்பை விட்டு விலகி போர் செய்வதையோ, அவர்களுக்குக் கட்டுப்பட மறுத்து கையை விலக்கிக் கொள்வதையோ, அந்த ஆட்சியாளரின் கீழ் ஒன்றுபட்டுள்ள முஸ்லிம்களின் ஜமாஅத்தை விட்டுப் பிரிந்திருப்பதையோ நபியவர்கள் புகழ்ந்து கூறவில்லை. அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்களிடமிருந்து உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ஸஹீஹான நபிமொழிகளும் இதையே எடுத்துரைக்கின்றன. (மின்ஹாஜுஸ் ஸுன்னா அந்நபவிய்யா, பாகம் 4, பக்கங்கள் 530,531)

இங்கு இமாமவர்கள் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஷரீஅத்திலிருந்து ஆதாரங்களை நிறுவ முடியும். அடுத்தடுத்த தொடர்களில் அதைக் குறித்தும் இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறேன். நபித்தோழர்களில் யார் யார் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு என்னென்ன உபதேசம் செய்தார்கள் என்பதையும் ஆதாரங்களுடன் அறிவோம். இன்னும் இமாமவர்கள் எழுதியுள்ள வேறு சில கருத்துகளையும் பதிவிட வேண்டியுள்ளது. சுருக்கம் கருதி இந்தப் பதிவில் இது போதும்.

இந்தச் சிந்தனைத் தளத்தில் தங்கள் எழுத்துகளைச் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்தும் அவ்வப்போதும் எழுதி வருகின்ற சகோதரர்களை அன்புடன் அழைக்கின்றேன். குறிப்பாக, மௌலானா மௌதூதி மற்றும் செய்யித் குதுப் ஆகியோரின் நூல்களில் இந்தக் கருத்துகளைச் சரி காணுகின்ற, அவற்றை மிகவும் போற்றி வாசிக்கின்ற அனைவரையும் அழைக்கின்றேன். அல்லாஹ் நமது காரியங்களைச் சீராக்கி, அவனது முகத்திற்காக சத்தியத்தை அறிய உரையாடுகின்ற நன்மக்களாய் நம்மை ஆக்குவானாக.

- உஸ்தாத் MF அலீ


Previous Post Next Post