முப்தி பின் பாஸ் (ரஹி) அவர்களின் சிந்தனையில் உருவான தஃவா நிலையங்கள்

இமாம் அப்துல்லா பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மார்க்க பணி செய்து மரணித்த ஒரு மேதையாவார்கள். இவர்கள் மரணிக்கும் வரை சவுதி அரேபியாவின் முஃப்திகள் அமைப்பின் பிரதம முஃப்தியாக இருந்து வந்தார்கள். 

இவர்களது காலப்பகுதியில் இவர்களின் முயற்சியினால் சவுதி அரேபியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வேலை வாய்ப்பு நிமிர்த்தம் வரும் முஸ்லிமல்லாதவருக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்காகவும், முஸ்லிம்களுக்கு மார்க்க கல்வியை குர்ஆன் சுன்னாவிலிருந்து போதிப்பதற்காகவும் வெளிநாட்டவர்களுக்கான மார்க்க வழிகாட்டல்  மையம் "தாஃவா சென்றர்" எனும் பெயரில் நாட்டின் பல்வேறு ஊர்களிலும் ஆயிரக்கணக்கான தக்வா நிலையங்கள் நிறுவப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள். இந்த தாஃவா நிலையங்களினூடாக சவுதி சென்ற லட்சக்கணக்கானவர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளார்கள். 

பல லட்சம் மார்க்கத்தை விட்டு தூரமாக வாழ்ந்த முஸ்லிம்கள் இஸ்லாத்தை முறையாக கற்று மார்க்க விழுமியங்களுடன் வாழும் பக்குவத்தை பெற்று நாடு திரும்பியுள்ளார்கள்.

நானும் 2004 முதல் 2008 வரை அல் ஜுபைல் மாநகரிலுள்ள தஃவா நிலையத்தில் மார்க்க பிரச்சாரகராக மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியுள்ளேன். பொதுவாக தாஃவாநிலையங்களில் ஒருவர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றால் பள்ளிவாயலில் ஜும்மா தொழுகையின் பின் அனைத்து மக்கள் முன்னிலையிலும் அவருக்கு புனித கலிமாவைச் சொல்லிக் கொடுக்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்க வைக்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வு இடம்பெறும்.
பின்னர் அவருக்கு அப்பகுதி மக்கள் ஏராளமான நிதியுதவிகளை செய்வார்கள். பின்னர் தஃவா நிலையத்தில் அவருக்காக மூன்று மாத கால மார்க்க விளக்க வகுப்பு இடம் பெறும். இதில் தரம் ஒன்று  2 ,3 கட்டங்களையும் பூர்த்தி செய்த ஒருவர் ஒரு வருடத்துக்குள் வாழையடி வாழையாக வந்த ஒரு சராசரி முஸ்லிம் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் அனைத்து விடயங்களையும் கற்று முடித்திருப்பார்.

இக்காலப் பகுதியில் அரச செலவில் ஒரு தடவை உம்ராவுக்கும் மற்றொரு தடவை ஹஜ்ஜுக்கும் இலவசமாக சென்று வருவதற்குரிய வாய்ப்பு இவருக்கு அளிக்கப்படும். அரச விருந்தினராக இவர் ஹஜ்ஜை முடித்துவிட்டு திரும்ப முடியும்.

உண்மையில் இலங்கையிலிருந்து வேலை வாய்ப்புக்காக சென்ற ஆயிரக்கணக்கானோரும் இவ்வாறு இஸ்லாத்தை தழுவியுள்ளனர். இருப்பினும் அவர்கள் நாட்டை வந்தடைந்ததற்குப்பின் இங்குள்ள மத அழுத்தங்கள் சமூக புறக்கணிப்புகள் குடும்ப அச்சுறுத்தல்களுக்கு பயந்து தான் இஸ்லாத்தை ஏற்றதை ரகசியமாகவே வைத்துக் கொண்டு வாழ்கின்றனர்.

சலுகைகளுக்காக போலியாக இஸ்லாத்தை ஏற்றதாக பாசாங்கு பண்ணிய சிலரும் இல்லாமலில்லை உள்ளங்களில் உள்ளதை இறைவனே மிக அறிந்தவன். எனினும் நான் அறிந்த வகையில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மாத்திரம் தாம் ஏற்றுக் கொண்ட புனித தீனுல் இஸ்லாத்தை  உயிராக மதித்து இன்று வரை முஸ்லிம்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக அவர்கள் தான் பிறந்த மண் ஊர் தனது வீடு வாசல்கள் சொத்துக்களை கூட இழக்க வேண்டிய நிலையை சந்தித்துள்ளார்கள் இலங்கையில் ஜனநாயகம் மனித உரிமை என்பது பேச்சளவில் தான் உள்ளது.

உலக மாந்தர்கள் அனைவருக்கும் ஆக அவர்களின் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி மார்க்கம் தீனுல் இஸ்லாத்தை ஏற்று அதன் வழி நடக்கும் பாக்கியத்தை வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நல் குவானாக ஆமீன்.

- ஏ.ஜி.எம். ஜெலீல் மதனி
أحدث أقدم