ஸலபுகளின் புரிதலில் (அல் ஜமாஆ) கூட்டமைப்பு.

வஹியில் பிரயோகிக்கப்பட்டுள்ள "அல்ஜமாஆ" அல்லது "ஜமாஅத்" என்ற சொற்பதத்திற்கு பல்வேறு விளக்கங்கள் பலரால் வழங்கப்பட்டாலும் நாம் அதனை ஸலபுகளின் விளக்கத்தின் அடிப்படையிலே புரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும். 
அந்த வகையில் அல்ஜமாஆ பற்றிய ஸலபுகளின் சில கருத்துக்களை 
ஆதார நூற்களோடு தருகிறோம். 

ஜமாஅத் என்பது சத்தியத்திற்கு உடன்பட்டதாகும், அதில் நீ மாத்திரம் இருந்தாலும் சரியே! 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு. 
நூல் - அல்பகீஹ் வல் முதபக்கிஹ் 2/404 ஹதீப் அல்பக்தாதி ரஹிமஹுல்லாஹ்.

நேர் வழியில் செல்வோர் சொற்பமானவர்களாயினும் நீ நேர்வழியையே பின் பற்று, வழிகேட்டில் சென்று அழிந்து போனவர்கள் அதிகமானவர்களாயினும் அதன் பால் சென்று விடாதே! 

புழைல் பின் இயாழ் ரஹிமஹுல்லாஹ். 
நூற்கள் - அல் இஃதிஸாம் 1/83, 
அல் மஜ்மூஃ 8/275.

இமாம் அவ்ஸாஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: அனைத்து மக்களும் உன்னை புறக்கணித்தாலும் சரி முன்சென்ற ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழி முறையை பற்றிப்பிடித்துக்கொள், மனிதர்கள் புதிதுபுதிதாக அழகு படுத்திக் காட்டும் போலிப் பகட்டுக்கருத்துக்களை விட்டும் எச்சரிக்கையாக இருந்து கொள்! 

நூற்கள் - ஷரபு அஸ்ஹாபில் ஹதீஸ் - பக் 26, அஷ்ஷரீஆ - பக் 58. 

ஏகோபித்த கருத்து, பெரும்பான்மை கூட்டமைப்பு என்பதெல்லாம் உலக மக்கள் அனைவரும் முரண்பட்டபோதிலும் சத்தியக் கொள்கையில் யாரவது ஒருவர் இருந்தாலும் அவர் ஒருவரையே அது குறித்து நிற்கும். 

இப்னு கையிம் அல்ஜௌஸிய்யா ரஹிமஹுல்லாஹ்.
நூல் - இஃலாமுல் முவக்கியீன் - 3/398. 

கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து செல்பவன் யாரெனில் சத்தியத்தை விட்டும் பிரிந்து செல்பவனே அசத்தியத்தில் பெரும் கூட்டமே இருந்தாலும் அவர்கள் (ஜமாத்) கூட்டமைப்பாக முடியாது நிச்சயமாக அவர்கள்தான் (ஜமாத்) கூட்டமைப்பை விட்டும் பிரிந்து சென்றவர்கள். 

இப்னு கையிம் அல் ஜௌஸிய்யா ரஹிமஹுல்லாஹ்.
நூல் - இஃலாமுல் முவக்கியீன் - 3/398. 

(ஜமாத்) கூட்டமைப்பைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் என்பதன் அர்த்தம், சத்தியத்தை ஏற்றுக்கொள்வதனையும் சத்தியக்கொள்கையில் இருப்பவர்களுடன் சேர்ந்து கொள்வதனையுமே குறிக்கும் அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்களாக இருந்தாலும் சரியே 

அபூ ஷாமா ரஹிமஹுல்லாஹ்.
நூல் - கிதாபுல் ஹவாதிஸ் வல் பிதஃ. 

மேற்சொல்லப்பட்ட ஸலபுகளின் புரிதலின் அடிப்படையில் அல்ஜமாஆ என்பதன் பொருள் எண்ணிக்கையில் பெரும்பான்மையையோ ஸலபிய்யா வழிமுறையிலிருந்து தடம்புரண்டு சென்ற வழிகெட்ட சிந்தனைப்போக்கில் ஒன்றிணைந்தவர்களையோ முஸ்லிம்களின் குறித்த ஒரு அமைப்பையோ இயக்கத்தையோ குறிக்கக்கூடியதல்ல என்பதனையே நம்மால் அவதானிக்க முடிகிறது. 

எண்ணிக்கையில் குறைவானவர்களாயினும் சத்தியக் கொள்கையில் யாராவது ஒருவர் இருந்தாலும் அவர் ஒருவரையே அது குறித்து நிற்கும், இதற்கு சிறந்த உதாரணமாக இமாமுஸ் ஸுன்னா அஹ்மத் பின் ஹன்பலின் காலத்தை எம்மால் அடையாளப்படுத்த முடியும். 

அல்லாஹு அஃலம். 
- அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.
Previous Post Next Post