அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அவனே தன் தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் அனுப்பினான். அல்லாஹ்வின் அன்பும் அருளும் அவன் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் அவர்களை இறுதி வரை பின் பற்றும் அடியார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக.
இக்கட்டுரையின் நோக்கம் இஸ்லாமியப் பேரறிஞர் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு பாஸ் அவர்களின் பெயரால் பரப்பப்பட்டு வரும் பொய்ச் செய்திக்கு மறுப்பளிப்பதாகும்.
இமாம் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் மரணிக்கும் வரை மார்க்கத்திற்காக தனது முழுநேர உழைப்பை அர்ப்பணித்த சிறந்த அறிஞராவார்கள். இஸ்லாத்தின் பெயரால் புகுத்தப்பட்ட மூடப்பழக்கவழக்கங்கள், இணைவைக்கும் செயல்கள், பித்அத்கள் முதலானவற்றுக்கு எதிராக அவர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. அவர்கள் ஆற்றிய உரைகளும் நடத்திய வகுப்புகளும், எழுதிய நூல்களும் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள் மகத்தானவை. உலகின் நாலா பாகங்களிலும் அவை அறிவுச் சுடராகப் பிரகாசிக்கின்றன. அவர்களின் உரைகளும் எழுத்துக்களும் உலகெங்கிலும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு எண்ணிலடங்கா மக்களுக்கு இன்றளவும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் வழங்கிய மார்க்கத் தீர்ப்புகள் இன்று ஒவ்வொரு பாகமும் சுமார் 300 பக்கங்கள் கொண்ட 20 பாகங்களாக “ஃபதாவா இப்னுபாஸ்” என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் ஐந்து கடமைகள், நம்பிக்கையின் அடிப்படைகள், ஒழுக்கம் மற்றும் நற்குணம் சார்ந்த பாடங்கள், மற்றும் பல்வேறு துறைகளில் அவர்கள் அளித்த கல்வி இன்றளவும் பயன் மிக்கதாக உள்ளன. இத்தகைய பேரறிஞரைப் பற்றி பி.ஜைனுல் ஆபிதீன் என்பவர் மிகச் சாதாரணமாக ஒரு இட்டுக் கட்டுதலைக் கூறியுள்ளார் (Download). இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் பூமி தட்டை என்று கூறினார் என்பதே அந்த இட்டுக் கட்டுதல்.
இது அறிஞர் அவர்கள் மீது சுமத்தப்படும் பெரும் பொய் செய்தியாகும். இது விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். ஆதாரமின்றி கேள்விப்பட்ட வாய்வழிச் செய்திகளை ஆராயாமல் அவற்றைப் பரப்புவது கண்டிக்கத்தக்க குற்றமாகும். அதுவும் ஓர் இஸ்லாமிய அறிஞரைப் பற்றி வதந்திகளையும் பொய்களையும் பரப்புவது பெரும் அநீதியாகும்.
உண்மையில் இப்னு பாஸ் அவர்களிடம் பூமி உருண்டையா? தட்டையா? என்று கேட்கப்பட்ட போது அவர்கள் அளித்த பதில் இது விஷயத்தில் அவர்களின் நுட்பமான அறிவை எடுத்தியம்புவதாக உள்ளது. கீழே அறிஞர் அவர்களின் கூற்றையும் அதன் தமிழாக்கத்தையும் தருகின்றோம். அல்லாஹ்வின் மீது அச்சமுள்ளவர்கள் பொய்களை விட்டு விலகிக் கொள்ளட்டும்.
இப்னு பாஸ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி
பூமி உருண்டையானதா அல்லது தட்டையானதா?
அவர்கள் அளித்த பதில்:
அறிஞர்களிடத்தில் பூமி உருண்டையானதே. அது உருண்டையானது என்பதுதான் ஏகோபித்த கருத்து என்பதை இப்னு ஹஸ்ம் மற்றும் பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதாவது பந்தைப் போன்ற ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. எனினும் நாம் வாழ்வதற்காக அதன் மேற்பரப்பை அல்லாஹ் விரித்து வைத்துள்ளான். அதில் நமக்குத் தேவையான மலைகள், கடல்கள் மேலும் பல உயிரினங்களையும் படைத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்.
பூமி அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன்: 88:20)
மக்கள் நிம்மதியாக வாழ்வதற்காக அதன் மேற்பரப்பு விரிக்கப்பட்டுள்ளது. அது உருண்டை வடிவில் இருப்பதும் அதன் மேற்பரப்பு விரிக்கப்பட்டுள்ளதும் முரண்பட்டதல்ல. ஏனெனில் உருண்டையாக உள்ள ஒரு மாபெரும் பொருளின் மேற்பரப்பு விரிக்கப்பட்டால் அதன் மேற்பரப்பு விசாலமானதாகவே இருக்கும்.
மேற்கண்ட பதில் எவ்வளவு நுணுக்கமானது என்பது அறிவுடையவர்களுக்குப் புலப்படும். பூமி விரிக்கப்பட்டுள்ளது என்ற அல்லாஹ்வின் கூற்றிற்கு இணங்கவே அவர்கள் பதிலளித்துள்ளனர். இந்த உண்மையை மறைத்து விட்டு ‘விரிக்கப்பட்டுள்ளது’ என்ற அவர்களின் கூற்றை பி.ஜைனுல் ஆபிதீன் ‘தட்டை’ என்று திரித்துக் கூறியுள்ளார் என்பதே உண்மை. அவ்வாறாயின் திருக்குர்ஆனில் பூமி விரிக்கப்பட்டுள்ளது என்று கூறும் வசனங்களைக் குறித்து இவர் என்ன கூறப்போகின்றார்?
இப்னு பாஸ் (ரஹ்) அவர்களின் காலத்திலும் சிலர் அவர்கள் கூறாத இந்தக் கூற்றை அவர்கள் கூறியதாகப் பரப்பினர். அதற்கு இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் மறுப்பு தெரிவித்து எழுதியது பல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டது. அது www.ibnbaz.org.sa என்ற இணைய தளத்திலும் இடம்பெற்றுள்ளது. அவர்கள் பேசிய ஆடியோவையும் www.ibnbaz.org.sa/mat/18030 இந்த இணைய தளத்தில் கேட்க முடியும்.
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
அன்புடன்
தேங்கை முனீப்
பஹ்ரைன்