இத்ரீஸ் (அலை) நபி வரலாறு

குர்ஆனில் இரண்டு இடத்தில் இத்ரீஸ் (அலை) அவர்களைப் பற்றி குறிப்பிடப்படுள்ளது.

இத்ரீஸ்(அலை) அவர்கள் வாய்மையுள்ள நபியாகத் திகழ்ந்தார்கள். மேலும் அல்லாஹ், அவர்களின் அந்தஸ்தை உயர்த்தினான் என்பதை திருமறையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றான்:

(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்கான (மிக்க சத்தியவானான) நபியாக இருந்தார். மேலும், நாம் அவரை (இத்ரீஸ்) ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம். (19:56-57)

இத்ரீஸ்(அலை) அவர்கள் பொறுமையாளராய் திகழ்ந்தார்கள் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

இன்னும் இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே! (21:85)

மிஃராஜ் பயணத்தில் 4-வது வானத்தில் இத்ரீஸ்(அலை)

ஹதிஸ் பின்வருமாறு:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் இறை இல்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்த போது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஜம்ஜம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு (என் இதயம்) நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும் கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான புராக் என்னம் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். யார் அது என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் (வந்திருப்பவர்) யார் என்று கேட்கப்பட்டது. அவர் முஹம்மது என்று பதிலளித்தார். அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா? என்று கேட்கப்பட்டது. அவர் ஆம் என்றார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள் (என்) மகனும் இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக! எனச் சொன்னார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். யார் அது? என்று வினவப்பட்டது. அவர் ஜிப்ரீல் என்று பதில் அளிக்க, உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் முஹம்மது என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரும்படி அவரிடம் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவு ஆகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஈஸா (அலை) அவர்களிடமும் யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும் சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும் என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளித்தார். அவரை அழைத்து வரச் சொல்லி அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. முஹம்மத் என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரச் சொல்லி) ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை நல்ல வருகை என்று வாழ்த்துச் சொல்லப்பட்டது. பிறகு நான் யூஸுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்ற பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.

நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்குச் ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மத் என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று பதிலளிக்கப்பட்டது. அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் இறiவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள் என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று வினவப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார் என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் உரைத்தேன். அவர்கள் மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று சொன்னார்கள்.

பிறகு அல் பைத்துல் மஃமூர் எனும் வளமான இறை இல்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர் இது தான் அல் பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும் என்று சொன்னார்கள். பிறகு (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) ஹஜ்ர் எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. இதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ்,நைல் ஆகிய இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள் உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும் என்ற பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன.

நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள் என்ன செய்தாய் என்று கேட்டார்கள். நான் என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள் எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிமாகத் தெரியும். நான் பனு இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். ஆகவே உங்கள் இறைவனிடம் திரும்பச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள் என்று சொன்னார்கள். நான் திரும்ப சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகு முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்து கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்ன செய்தாய் என்று கேட்க அதை இறைவன் ஐந்தாக ஆக்கி விட்டான் என்றேன். அதற்கு அவர்கள் முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டு விட்டேன் என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக) நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமுல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்கு பத்து நன்மைகளை நான் வழங்குவேன் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பாளர் : மாலிக் இப்னு சஃசஆ, நூல் : புகாரி (3207)

படிப்பினை

பொறுமையாளர்களாயகவும் உண்மையாளர்களாகவும் இருப்பவர்களுக்கு நிச்சயமாக உயர்வே.
அல்லாஹ்வுக்கு கட்டுபட்டவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்துகிறான்.

Translated & Compiled from ‘Stories Of the Prophets (peace be upon them)’ by Imam Imaduddun Abdul-Fida Ismail Ibn Kathir Ad-Damishqi (700-774H), Rendered into English by – Rashad Ahmad Azami, Published by DARUSSALAM, Riyadh, Saudi Arabia.

நெல்லை இப்னு கலாம் ரசூல்
أحدث أقدم