கணக்கின்றிக் கற்றுக் கொள்வதற்கான வழிகளில் ஒன்றுதான் பொறுமையும் அமைதியும். பொறுமையையும் அமைதியையும் பிறக்கச்செய்யும் ஊற்றானது ஒரே வகையான மூலப்பொருட்களால் உருவானதுதான். விரல்களுக்கிடையில் உள்ள இடைவெளியை விட இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமானது.
மூஸா (அலை) -வை கற்றுக் கொள்வதற்காக ஹிள்ர் (அலை)-விடம் அல்லாஹ் அனுப்பிவைத்தான். மூஸா(அலை) அவரைச் சந்தித்ததுமே அவர் மூஸாவிடம் கூறியது, "நிச்சயமாக நீ என்னுடன் பொறுமையாக இருக்க மாட்டாய்". அதைப்போலவே மூஸாவும் பொறுமையை இழந்தார். கற்றுக் கொடுப்பது ஒருபுறமிருக்க, உடன் இருப்பதற்கான வாய்ப்பு கூட மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார் மூஸா.
அமைதியை இயல்பாக்கிக்கொள். அமைதியின் நிம்மதியில்தான் அறிவின் வாசல்கள் திரை விலக்கப்படுகின்றன. எனவே, பேசுவதைக் குறைத்துக் கொள். உன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளி. அதுதான் ஒழுக்கமும் கூட. உன்னிடம் உள்ள அறிவினை வெளிக்காட்ட வேண்டுமென்று விரும்பாதே; துடிக்காதே. இறைவன் உனக்குக் கற்றுக் கொடுத்த அறிவு பெருமையடிப்பதற்கும் புகழ்தேடித் திரிவதற்கும் அன்று. முன்னால் சென்றவர்களில் சிலர், ஊமையென்று கருதப்படுமளவிற்கு அமைதியை ஒரு தவமாக மேற்கொண்டார்கள். அவர்களிடம் பேச்சுகொடுப்பவரால் மட்டுமே அறிந்துகொள்ள முடிந்தது, அவர்கள் அறிஞர்கள் என்று . அது போதும். அதுதான் உனது மனத்தூய்மைக்குச் சிறந்தது.
ஒருவரது வழிகேடு மற்றவர்களைப் பாதிக்காமல் இருக்கும்வரை விவாதத்தில் நேரத்தை வீணாக்காதே. விவாவதம் அழகிய வடிவத்தைத் தாண்டும்போது பேச்சை நிறுத்திக் கடந்து சென்றுவிடு. ஆனால், மற்றொன்றையும் கவனித்துக்கொள். எங்கு, உனது அறிவு வெளிப்படுத்தப்படவில்லை என்றால் குழப்பமும் வழிகேடும் பிறக்குமோ அங்கு உனது அமைதியைத் தடைசெய்யப்பட்டதாக ஆக்கிக்கொள். உனது பேச்சைக் கடமையாக்கிக்கொள். ஒருவேளை அங்கு நீ அமைதி காப்பாய் எனில், வாளின் கூர்மையையும் அதை எப்படி சுழற்ற வேண்டுமென்பதையும் அறியாதவன் வாளை வைத்திருப்பதைப் போன்றதுதான் உனது உதாரணமும்.
~முஹய்யுத்தீன்.