இசை தடுக்கப்பட்ட அசத்தியமான விடயங்களைச் சார்ந்ததாகும் என்று அல்காசிம் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
வலீமா வைபவத்தில் (இசை போன்ற) வீணான செயல்கள் இடம்பெறுமானால், அவர்களின் அழைப்புக்கு பதிலளிக்கப்படமாட்டாது என்று அல் ஹஸன் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(அல் ஜாமிஃ லில் கௌரவானி. பக்கம் 262-263 )
“அனைத்து விதமான இசைக்கருவிகளும் ஹராமாகும்” என்று நான்கு மத்ஹப்களின் இமாம்களும் கூறியுள்ள னர்.
“விபச்சாரம், பட்டு, மது, இசை போன்றவற்றை ஹலாலெனக்கருதும் ஒரு கூட்டத்தினர் எனது சமூகத்தில் தோன்றுவார்கள் அவர்கள் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருமாற்றம் பெறுவார்கள்” என்று நபியவர்கள் கூறிய செய்தி புகாரியிலும் வேறு பல நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
“அனைத்து விதமான இசைக்கருவிகளும் ஹராம் என்பதில் நான்கு மத்ஹப்களின் கீழுள்ள எந்த இமாம்களும் முரண்பாடான எந்தக் கருத்துகளையும் தெரிவிக்கவில்லை” என்று ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(அல் மஜ்மூஃ 11/576 )
“அனைத்து விதமான இசைக்கருவிகளும் ஹராம்” என்று நான்கு மத்ஹப்களின் இமாம்களும் ஏகமனதாக தெரிவித்துள்ளனர் என்று இமாம் அல்பானி (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
( ஸில்ஸிலதுஸ் ஸஹீஹஹ் 1/145 )
இசை ஹராம் என்று கூறுபவர்களில் மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்களாவர்.
புல்லாங்குழல், ரபான் போன்ற அனைத்துவிதமான இசைக்கருவிகளும் ஹராம் என்று மிகத் தெளிவாகவே தெரிவிக்கின்றனர்.
ஒரு தடியினால் அடிப்பதன் மூலம் எழுப்பப்படும் ஓசையும் இசையாகவே கருதப்பட வேண்டும் என்று கூறுமளவிற்கு அவர்கள் இதில் மிகத் தீவிரமாக உள்ளனர்.
இசை கேட்பவரின் சாட்சியங்கள் கூட நிராகரிக்கப்படல் வேண்டுமென கூறுகின்றனர்.
அந்த அளவுக்கு அது மிகப் பெரிய பாவம் என்று வெளிப்படையாகவே கூறுகின்றனர்.
ஏன் இதை விடவும் ஒரு படி மேலே சென்று சாதரணமாக இசையை செவியேற்பது பாவம் அதை ரசித்து ருசித்து கேட்பது குப்ர் என்றும் கூறுவர்.
இது தொடர்பாக நபியவர்களுடன் சம்பந்தப்படுத்த முடியாத ஒரு ஹதீஸையும் முன்வைக்கின்றனர்.
இதோ! இசை தொடர்பான அவர்களின் நிலைப்பாட்டை அவர்களின் சொற்பிரயோகங்களுக்கூடாகவே பார்ப்போம்.
இசைக்கப்படும் ஓர் இடத்தை ஒருவர் தாண்டிச் செல்ல நேர்ந்தால் அல்லது தனக்கு அருகில் இசை ஒலித்துக் கொண்டிருந்தால் அது அவரது காதில் விழாமலிருப்பதற்கு அவர் அவசியம் பாரிய முயற்சி செய்தாக வேண்டும் என்று கூறுகின்றனர்.
“ஒரு வீட்டில் இருந்து இசை சப்தம் வருவதை நீங்கள் கேட்டால், பாவத்தை தடுப்பது “பர்ழ்” என்ற அடிப்படையில் வீட்டாரின் அனுமதி இல்லாமலேயே அதிரடியாக நீங்கள் அவ்வீட்டிற்குள் நுழையுங்கள்.
அவ்வாறு நுழைய அனுமதிக்காவிட்டால் பர்ழான ஒரு கடமை நிறைவேற்றுவதிலிருந்து மக்களை தடுத்ததாக அமைந்து விடும் என்று கூறுகிறார் இமாம் அபூ யூசுப் (றஹ்) அவர்கள்.
( இகாததுல் லஹ்பான் 1/425 )
ஒருவர் ஒரு சபையில் அல்லது பாதையில் இருக்கும் போது, மேளம் மற்றும் புல்லாங்குழல் ஒலிக்கும் சப்தத்தை கேட்டு அதில் அவருக்கு ரசனை ஏற்படும் பட்சத்தில் அவர் என்ன செய்வது என்பது பற்றி இமாம் மாலிக் (றஹ்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “அவர் ஏதுமொரு தேவை நிமித்தம் அங்கு இருந்தால் அல்லது அச்சபையிலிருந்து எழுந்து செல்ல முடியாத நிலையில் இருந்தால் மட்டுமே அங்கு அவர் இருக்கலாம்.
இல்லையேல், அவர் அங்கிருந்து எழுந்து சென்று விட வேண்டும். பாதையை பொறுத்தவகையில், அவர் அங்கிருந்து திரும்பி விட வேண்டும் அல்லது (சப்தம் காதில் விழாமல் இருக்க) சற்று முன்னோக்கிச் சென்று விட வேண்டும்” என்று பதிலளித்தார்கள்
(அல் ஜாமிஃ லில் கௌரவானி 262 )
“எங்களது பார்வையில் இசையோடு சம்பந்தப்பட்டவர்கள் பாவிகளாகவே கருதப்பட்டனர்” என்றும் இமாமவர்கள் கூறினார்கள்.
(தப்ஸீருல் குர்துபி 14/55 )
ஏகமனதாக தடைசெய்யப்பட்ட பொருளீட்டல் முறைகளில் வட்டி, விபச்சாரம், இலஞ்சம், கூலிக்கு மாறடித்தல்,இசை,குறி சாஸ்திரம் சொல்லல்,வீணான விளையாட்டுகள், புல்லாங்குழல் இசைத்தல் போன்ற அனைத்தும் உள்ளடக்கப்படும் என்று இப்னு அப்தில் பிர் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்
(அல் காபி )
இசை பற்றிய இமாம் ஷாபியி (றஹ்) அவர்களது மத்ஹபினரின் நிலைப்பாடு குறித்து இப்னுல் கய்யிம் (றஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள் :
இசை ஹராம் என்று ஷாபியி மத்ஹப் அறிஞர்கள் மிகவும் வெளிப்படையாகவே கூறும் அதேவேளை இது ஹலாலென வாதிடுவோருக்கெதிராக மறுப்பும் தெரிவித்துள்ளனர்.
(இகாததுல் லஹ்பான் 1/425 )
ஷாபியி மத்ஹப் அறிஞர்களில் ஒருவரான “கிபாயதுல் அக்யார்” எனும் நூலின் ஆசிரியர் புல்லாங்குழல் இசைத்தல் மற்றும் பிற கேளிக்கைகள் கண்டிக்கத்தக்கவை எனக் கருதினார்கள்.
மேலும், இவற்றில் கலந்துகொள்பவர்கள் அவற்றை மறுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
மோசமான மார்க்க சட்ட வல்லுநர்கள் மற்றும் புகராக்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் ஸூபிகள் முன்னிலையிலும் இதற்காக மறுப்புத்தெரிக்க வேண்டும் என்ற பொறுப்பு இல்லாமலாக்கப்படுவதில்லை, ஏனென்றால் அவர்கள் இஸ்லாத்தைக் கெடுப்பவர்கள், அறிவொளியின் அடிப்படையில் நடக்காமல் மனம் போன போக்கில் நடக்கின்ற அனைவரையும் பின்பற்றும் அறிவீனர்கள் என்று மேலும் அவர் கூறுகிறார்.
(கிபாயதுல் அஹ்யார் 2/128)
இசை பற்றி இமாம் அஹ்மத் (றஹ்) அவர்களின் நிலைப்பாடு குறித்து இப்னுல் கய்யிம் (றஹ்) அவர்கள் விளக்கும் போது, இமாம் அஹ்மத் (றஹ்) அவர்களின் மகன் அப்துல்லா கூறியதாக பின்வரும் செய்தியை குறிப்பிடுகிறார்கள்:
அதாவது, நான் எனது தந்தையிடம் இசையைப் பற்றி கேட்டேன், அப்போது அவர் இசை இதயத்தில் நயவஞ்சகத்தனத்தை வளர்க்கிறது என்று கூறினார்.
அவரது பதில் எனக்கு திருப்தி அளிக்கவில்லை, அதனை புரிந்து கொண்ட அவர் மாலிக் (றஹ்) அவர்கள் கூறியதை எனக்கு குறிப்பிட்டார்:
ஒழுக்கமற்ற பாவிகள் மட்டுமே அதைச் செய்வார்கள்.
(இகாததுல் லஹ்பான் )
இசைக்கருவிகள் மூன்று வகையானவை; அவை அனைத்தும் தடைசெய்யப்பட்டவையாகும்.
புல்லாங்குழல், வீணை மற்றும் டம்பூரின்.
இவற்றை எவர் இடைவிடாமல் கேட்பாரோ அவருடைய சாட்சி நிராகரிக்கப்படல் வேண்டும் என்று இப்னு குதாமா (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(அல் முங்னீ 10/173 )
மது, இசை போன்ற கண்டிக்கத்தக்க ஒன்று இருக்கும் விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டு, அவர் அதை தடுக்க முடிந்தால், ( இரண்டு கடமைகளையும் ஒன்றிணைத்து) அவர் அதில் கலந்து கொள்வதோடு அதை தடுக்கவும் வேண்டும்.
அதைச் செய்ய முடியாவிட்டால், அவர் அவ்விருந்தில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் அவர் மேலும் கூறுகிறார்கள்.
(அல் காபி 3/118 )
இசை வெறுக்கப்பட்டதாகவும் தடைசெய்யப்பட்டதாகவும் உள்ளது என்று இஸ்லாமிய பிராந்தியங்களின் அறிஞர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.
ஆனால், ” சத்தியத்தில் நிலைத்திருக்கும் ஜமாத்தினருடன் சேர்ந்திருங்கள். யார் இந்த ஜமாத்தினரை விட்டு பிரிந்து விடுகிறாரோ அவர் ஜாஹிலிய்ய மரணத்தையே சந்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் நிலையில் இப்ராஹீம் இப்னு ஸஃத் மற்றும் உபைதுல்லாஹ் அல் அன்பரி ஆகிய இருவரும் மேற்படி அறிஞர்கள் குழுவினரை விட்டு விலகி வேறு கருத்தினை தெரிவித்தனர் என்று அத்தபரி (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(தப்ஸீருத் தபரி 14/56)
“மக்ரூஹ்” என்ற சொல் முன்னய நூற்றாண்டுகளில் ஹராம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.
பின்னர், அது “மறுத்தல்” என்ற பொருளில் அதிகம் பயணபடுத்தப்பட்டது.
இங்கு, ஹதீஸில் ” منع” – தடுத்தான்- என்ற சொல் இடம்பெற்றிருப்பது ஹராம் என்பதையே குறிக்கும்.
ஹராமான ஒரு விடயமே மார்க்கத்தில் தடைசெய்யப்படும்.
இல்லையெனில்,”منع” என்று சொல் பயன்படுத்தப்பட்டிருக்காது.
இங்கு கூறப்பட்டிருக்கும் இரண்டு ஹதீஸ்களிலும் இசை குறித்து மிகக் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.
இந்த செய்தியை குர்துபி (றஹ்) அவர்கள் கூறிய பிறகு பின்வரும் விடயத்தினை பதிவுசெய்கிறார்கள்:
“பாடகர்கள் மற்றும் நடனக்காரர்களின் சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இந்த விடயங்கள் கூடாதென்பது உறுதி செய்யப்பட்டால் இவைகளுக்காக கூலி எடுப்பதும் கூடாது”என்று அபுல் பரஜ் மற்றும் கப்பால் ஆகியோர் கூறுகின்றனர்.
இப்ராஹீம் இப்னு ஸஃத் மற்றும் உபைதுல்லாஹ் அல் அன்பரி ஆகிய இருவரும் ஆகுமெனக்கூறிய இசையானது இன்றுள்ள இசை போன்றதல்ல.
இன்றிருப்பது போன்ற கீழ்த்தரமான அருவருப்பான இசையை அவர்கள் அனுமதித்திருக்கவே மாட்டார்கள் என்று அஷ்ஷெய்க் அல் பௌசான் அவர்கள் கூறுகிறார்கள்.
(அல் இஃலாம் )
இசைக் கருவிகளை தயாரிப்பது கூடாது என்று இப்னு தைமிய்யஹ் (றஹ்)அவர்கள் கூறுகிறார்கள்.
(அல் மஜ்மூஃ 22/140)
பெரும்பாலான சட்ட வல்லுநர்களின் கூற்றுப்படி Tambourine போன்ற இசைக்கருவிகள் அழிக்க அனுமதிக்கப்படுகின்றன என்றும் இமாமவர்கள் கூறுகிறார்கள்.
இதுவே மாலிகி மத்ஹப் மற்றும் ஹன்பலி மத்ஹப் அறிஞர்களிடையே உள்ள பிரபலமான கூற்றாகும்.
(அல்மஜ்மூஃ 28/113)
இசை மற்றும் மாறடித்தல் போன்றவற்றுக்காக கூலிக்கமர்த்துவது கூடாது என்று அறிஞர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட கருத்தினை இப்னுல் முன்திர் (றஹ்) அவர்கள் குறிப்பிடுகையில் கூறியதாவது :
இசை மற்றும் கூலிக்கு மாறடிப்பது ஹராமான விடயங்கள் என்று அறிஞர்கள் அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இமாம்களான ஷஃபி, நஹயி, மாலிக், ஆபூ தௌர், அபூ ஹனீபா இவரின் மாணவர்களான யஃகூப் மற்றும் முஹம்மத் ஆகியோர் இதனை வெறுப்பிற்குரிய காரியமாகக் கருதுகின்ற அதேவேளை இசை மற்றும் மாறடித்தல் போன்றவற்றுக்காக கூலிக்கமர்த்துவது கூடாது என்றும் கூறுகின்றனர்.
இசைக் கருவிகள் உள்ளத்திற்கு மது போன்றவை சூடான கிண்ணங்களால் இதற்கு ஏற்படும் பாதிப்புகளை விட அதிக பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.
(மஜ்மூஉல் பத்வா :10/417)
ஒருவர் ஒரு மனிதனுக்கு சொந்தமான Tambourine என்ற இசைக் கருவியை உடைத்து விட்டார்.
இது பற்றி ஷுரைஹிடம் முறையிட்ட வேளை இதற்கு நஷ்யீடு வழங்க வேண்டும் என்று அவர் தீர்ப்பளிக்கவில்லை. ஏனெனில் இது பெறுமதியற்ற ஹராமான ஒரு பொருளாகும் என்று இப்னு அபீ ஷைபா (றஹ்)அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
( அல் முஸன்னபிப் 5/395 )
Tambourine மற்றும் புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை விற்பது ஹராம் என்று பகவி (றஹ்) அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.
இசைக்கருவிகளின் வடிவம் சிதைக்கப்பட்ட பின்னர் அவற்றிலுள்ள பொருட்களை விற்க முடியும்.
அவை தங்கம், பலகை, இரும்பு போன்ற எதுவானாலும் சரி.
(ஷர்ஹுஸ் ஸுன்னா 8/28)