بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
ஒரு மனிதன் இமாம் அல்லது ஆலிம் என்று சொல்லப்படுவதற்கு, அவனிடம் எவ்வாறான தகுதிகள், அடையாளங்கள் இருக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சாதாரண பொது மனிதன், ஒருவரைப் பார்த்து "இவர் ஒரு ஆலிம்" என்று முடிவு எடுக்க முடியும் என்றால், அந்த மனிதர் இந்த ஆலிமை விடவும் கல்வியைப் சிறப்பான முறையில் பெற்றவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆலிம் கற்றுக் கொண்ட நூல்கள், அவர் கையாள்கின்ற அடிப்படைகள், அவர் கொண்டுள்ள கொள்கைகள் சரியானது என்று இந்த மனிதனால் முடிவு செய்ய முடியும். இவ்வாறு என்றால் ஒருவரை ஆலிம் என்று முடிவு செய்கின்ற பொது மக்கள் அந்த ஆலிமை விடவும் சிறந்த உலமாக்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
உலகிலுள்ள அனைத்துக் கல்விகளிலும், அதற்கென்று ஒரு வழிமுறையை நாம் பின்பற்றுகிறோம். அதன் அடிப்படையில், ஒருவரை மருத்துவர் என்று ஒரு சாதாரண பொது மனிதன் முடிவு செய்வதில்லை. மாறாக மருத்துவத் துறையிலும், அதன் கல்வியிலும் தரமாக இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் மருத்துவக் கல்வியைப் பயின்ற ஒருவருக்கு டாக்டர் என்ற பட்டத்தைக் கொடுப்பதற்கு முன்னால், அவருடைய கல்வியையும், அதில் அவரது தரத்தையும், மருத்துவத்தில் அவருக்கு இருக்கின்ற திறமைகளையும், தகைமைகளையும் ஆராய்ந்த பின்னால், அவரை ஒரு தகுதியான மருத்துவராகக் கண்டு, அவருக்கு டாக்டர் என்ற பட்டத்தைக் கொடுக்கின்றனர். இதன் மூலமே ஏனைய மக்கள் அவரை ஒரு மருத்துவராக ஏற்றுக் கொள்கின்றனர்.
வெறுமனே ஒருவர் ஒரு நோய்க்கு மருந்தைக் கொடுப்பதனால், அவரை எவரும் மருத்துவர் என்று ஏற்றுக் கொள்வதில்லை. நாம் வாழும் சமூகத்தில், ஒரு நோய்க்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மருந்தைக் கூறுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அவ்வாறு எனில், அவர்கள் அனைவரும் மருத்துவர்கள்தான் என யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா? நிச்சயமாக இவர்களிடம் சென்று எவரும் நம்பிக்கையுடனும், திருப்தியுடனும் மருத்துவம் செய்வதற்கு விரும்பமாட்டார்கள். உலகியல் விடயங்களில் இதனை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம்.
உலகியல் விடயங்களுக்கு, மக்கள் அனைவரும் அதற்குரிய அந்தஸ்தை சரியாகக் கொடுத்து, அதற்கான வழிமுறையை தவறாமல் பின்பற்றுகின்றனர். ஆனால் மார்க்க விடயங்களில், இதனைக் பின்பற்றுவதற்கு விட்டு விட்டனர். இதன் காரணமாகவே அன்னாரும், இன்னாரும் உலமாக்களாக மாறிவிடுகின்றனர்.
உலகில் வாழுகின்ற உண்மையான உலமாக்களிடத்தில், இந்த அபூர்வமான உலமாக்கள் அறியப்படாதவர்களாகவே உள்ளனர். அது மட்டுமின்றி, தான்தோன்றித் தனமாக முளைக்கும் இவர்கள் உலகிலுள்ள ஏனைய உலமாக்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்வதுமில்லை. அதனை அவசியமானது என கருதுவதுமில்லை.
தாங்களும் உலமாக்கள்தான் என்று கூறுபவர்கள், இஸ்லாத்தின் கல்வியை மதிக்கின்றவர்கள் என்றால் நிச்சயமாக அக்கல்வியைச் சிறப்பாகச் சுமந்த உலமாக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பார்கள். அதே போன்று, ஏனைய உலமாக்களிடத்தில் அறிமுகமானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் தங்களுக்குத் தாங்களே பட்டம் வைத்துக் கொண்ட உலமாக்களை, உண்மையான உலமாக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுதான் இன்று மார்க்கம் அடைந்திருக்கும் நிலையாகும்.
உலக விசயத்தில், யார் எதற்குத் தகுதியானவராக இருக்கிறார் என்பதை அறிந்து, தகுதியுடையவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். ஆனால், இக்கவனிப்பு மார்க்கத்திற்கு வழங்கப்படாதது ஏன்? அல்லாஹ் இறக்கி வைத்த அவனது மார்க்கத்திற்கு ஒரு மதிப்பு இருக்க வேண்டாமா? யார் வந்து எதனைச் சொன்னாலும் அது மார்க்கமாகிவிடுமா?
இவ்வாறு மார்க்கத்தினைச் சொல்ல வருபவர்கள்,
அல்குர்ஆனையும் சுன்னாவையும் சரியாக விளங்கியவர்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் அளிப்பது?
ஒருவர் அல்குர்ஆனை வாசித்து, அதற்கொரு விளக்கத்தைக் கொடுத்தவுடன் அவர் ஒரு முபஸ்ஸிராகி விடுவாரா?
அவர் கொடுக்கின்ற விளக்கங்கள் சரியானதா? அல்லது தவறானதா? என்பதை யார் முடிவு செய்வது?
இன்று பலர் அல்குர்ஆனுக்கு கொடுக்கின்ற விளக்கங்களைக் கவனிக்கும் பொழுது,
அவ்விளக்கங்களை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பது தெரியவில்லை.
அவர்கள் கொடுக்கின்ற விளக்கங்களை, வரலாற்றில் எந்தவொரு முபஸ்ஸிரீன்களும் கொடுத்ததில்லை.
அதே போன்று அவர்கள் யாரிடத்தில் அல்குர்ஆனின் கல்வியைக் கற்றார்கள் என்பதும் அறியப்படவில்லை.
இத்தகைய தன்மை உள்ளவர்களை, அல்குர்ஆனுக்கு விளக்கம் கூறத் தகுதியானவர்கள் என நாம் கூற முடியுமா?
இஸ்லாமிய வரலாற்றில், யாரெல்லாம் அல்குர்ஆனுக்கு தங்களின் தனி விளக்கங்களைக் கொடுக்க முன்வந்தார்களோ, அத்தகையவர்களின் விளக்கங்களைக் கவனித்த கல்வியைச் சுமந்த உண்மையான உலாமாக்கள் எவரும், அவ்விளக்கங்களை கல்வியுடன் தொடர்புள்ள விளக்கமாகக் கருதியதில்லை. மாறாக அவைகளை கண்டபோதெல்லாம் அதற்கு மறுப்பும், விமர்சனமும் செய்யவதற்கு உலமாக்கள் தவறவில்லை.
இன்னொரு விதமாகச் சொன்னால், அத்தகைய விளக்கங்களை பொது மக்கள்தான் சிறப்பான விளக்கமாகக் கருதினார்கள். இதனால் முழுக்க முழுக்க குப்ரையும், ஷிர்க்கையும், வழிகேடுகளையும் கொண்ட நூல்கள் முஸ்லிம் சமூகத்தில் சிறப்பான நூல்களாகவும், சிறப்பான தப்ஸீர்களாகவும் மதிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே, இஸ்லாமிய உம்மத்தினுள் நூல்கள் மூலம் வழிகேடுகளைப் பரப்பிவிட்ட வழிகேடர்களுக்கு உலமாக்கள் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இதில் குறிப்பிட தகுந்தவர்களான செய்யித் குத்ப், மௌதூதி, அஷ்ரப் அலி தானவி, ஸகரிய்யா காந்தலவி, முஹம்மது ஷபீஃ அல் முப்தி, பி.ஜெய்னுல் ஆபிதீன் போன்றவர்கள் அல்குர்ஆனுக்கு விளக்கம் கொடுத்தவர் ஆவார்கள். இவர்கள் தப்ஸீரின் பெயரில் தங்களின் கெட்டித்தனத்தைக் காட்டினார்கள்.
ஆனால் இவர்களின் விளக்கங்களைக் கண்ட அனைத்து சுன்னாவின் உலமாக்களும் இவர்களை விமர்சிக்காது விடவில்லை. இவர்களைப் பார்த்து சுன்னாவின் உலமாக்கள்
பித்அத்வாதிகள் என்றும்
உம்மத்தினுள் வழிகேடுகளைப் புகுத்தியவர்கள் என்றும்
கல்வியை முறையை தவறிக் கையாண்டவர்கள் என்றும்
இஸ்லாத்தின் எதிரிகள் என்றும்
இந்த உம்மத்துக்கு அவர்களைப் பற்றியும் அவர்களின் நூல்களைப் பற்றியும் எச்சரித்தார்கள்.
இருந்தாலும், அவ்வழிகெட்ட தலைவர்களின் அடிவருடிகளாக இருந்தவர்கள், எந்த நூல்கள் வழிகேட்டை வளர்க்கும் என்று உலமாக்கள் எச்சரித்தார்களோ, அந்த நூல்களை எல்லாம் சிறப்பான நூல்களாக முஸ்லிம் உம்மத்திற்கு முன்னால் எடுத்துக் காட்டினர்.
இதன் விளைவாகவே இந்த உம்மத்தில் ஒவ்வொரு கூட்டத்தினரும்,
மௌதூதியின் விளக்கம் சிறப்பான விளக்கமென்றும்
செய்யித் குத்பின் பாதை சிறப்பான பாதையென்றும்
பி.ஜெய்னுல் ஆபிதீனுடைய கருத்து சிறந்த கருத்தென்றும் கூற ஆரம்பித்து விட்டனர்.
இதனால், பொது மக்களிடத்தில் இவர்கள் சிறப்பைப் பெற்றுக் கொண்டனர். அவ்வாறு சிறப்பைப் பெற்றுக் கொண்ட போதும், கல்வியைச் சுமந்த உலமாக்களிடத்தில் இவர்கள் எத்தகைய மதிப்பையும் பெறவில்லை. கல்வியைச் சுமந்த உலமாக்களில் குறிப்பாக, அறபி உலமாக்களின் கைகளில் அந்நூல்கள் கிடைத்தபோது அந்நூல்களிலுள்ள நச்சுக் கருத்துகளையும், வழிகெட்ட கொள்கைகளையும் அவதானித்த உலமாக்கள், அவற்றை வாசிப்பது முஸ்லிம்களை வழிகேட்டின் பால் இட்டுச் செல்லும் எனத் தீர்ப்பளித்து விட்டனர்.
அவ்வாறிருக்க,
உலமாக்கள் வழிகேடு என்று சொன்னவற்றை நாம் எப்படி சிறப்பென்று சொல்வது?
அல்லது உலமாக்கள் வழிகேடர்கள் என்று தீர்ப்பளித்தவர்களை நாம் எப்படி சிறந்த தாஈகள் என்று சொல்வது?
இஸ்லாமிய உம்மத்தில் இவ்வாறான வழிகேடர்களும், வழிகேடுகளும் வளர்வதன் அடிப்படைக் காரணங்களில் ஒன்றுதான் முஸ்லிம் சமூகம் இனிப்பையும், கசப்பையும் பிரித்துக் காணத் தெரியாத நிலையில் இருப்பதாகும். அதனைத் தெரிந்திருந்தால், நிச்சயமாக முஸ்லிம் சமூகம் வழிகேடானதொரு விடயத்தைப் பார்த்து சிறப்பென்று ஒருபோதும் சொல்லியிருக்காது.
வழிகேட்டைப் பார்த்து சிறப்பென்று சொல்பவன் ஒரு மடையனாகத்தான் இருக்க வேண்டும். அவனிடத்தில் கல்வி இருப்பதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு மடையனாக இருக்கும் ஒருவன் ஆலிம் என்ற பெயரில் நடமாடியதனால், அவனை நாம் கல்வியைச் சுமந்தவா் என்றும், பிரச்சாரம் செய்யத் தகுதியானவா் என்றும் கூற முடியுமா?
வைத்தியர்கள் விஷம் என்று கூறுவதை பொது மக்கள் மருந்து என்று சொன்னால் நாம் யாரின் கூற்றைச் சரிகாண்பது?
பொது மக்கள் கூறுவதை ஏற்றுக் கொண்டால், எமது நிலை என்னவாகும். இந்நிலைதான் இன்று இஸ்லாத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. அதாவது எந்த கொள்கைகளை உலமாக்கள் குப்ர் என்றும், ஷிர்க் என்றும், விஷம் என்றும் கூறினார்களோ, அவ்வழிகெட்ட கொள்கைகளை பொது மக்கள் சிறப்பெனக் கருதினர். இதனால் அந்த கொள்கைகளை தாங்களும் பின்பற்றி, ஏனையவர்களுக்கும் வழிகாட்ட முன்வந்து விட்டனர்.
இதன் மூலம் தாங்கள் வாழ்கின்ற நாடுகளிலும் வீடுகளிலும் வழிகெட்ட நூல்களை அறிமுகப்படுத்தி, இந்த வழிகெட்ட கொள்கைகளை பூமியெங்கும் பரப்பி விட்டனர். இது போன்ற ஆபத்துக்களை நாம் அடையாளம் காண்பதற்கு, உலமாக்கள் பற்றிய உண்மைகளை நாம் அறிந்திருப்பது அவசியமாகும்.
இந்த உம்மத்தின் உண்மையான உலமாக்கள்,
ஸஹாபாக்களின் பாதையை விட்டும் ஒருபோதும் வேறொரு பாதையைத் தெரிவு செய்ய மாட்டார்கள்.
மார்க்கத்தின் எந்த ஒரு விடயத்திலும் ஸஹாபாக்களின் வழிமுறையைத் தவிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
நிச்சயமாக ஸஹாபாக்களின் பாதையைத் தவிர்ந்து கொண்டவர்கள், உலமாக்களாக இருப்பதற்குத் தகுதியானவர்களல்ல.
இத்தகையவர்கள் மார்க்கம் என்ற பெயரிலும், கல்வி என்ற பெயரிலும் விஷத்தைக் குடித்திருக்கினறனர். இந்த விஷத்தின் தாக்கம் காரணமாக, அவர்கள் உலமாக்களின் அந்தஸ்தை அடைவதற்கு வாய்ப்பில்லை. மேலும் இவா்கள் அல்லாஹ்வின் வேதத்தைத் திறந்து, அதன் வசனங்களைத் தங்கள் சுய புத்தியினால் விளக்கம் கொடுக்கின்றனா். இன்னும் தாங்கள் வாழும் சமூகத்தின் நிலைப்பாட்டுக்கு ஏற்றவாறும், தங்களின் தேவைக்கேற்றது போன்றும் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும், பிக்ஹின் சட்டங்களையும் அமைத்துக் கொள்கின்றனர்.
மக்கள் அதிருப்தியடையாதவாறு, அதன் விளக்கங்களைக் கூறுகின்றனர். எனவேதான் அவர்கள், ஸஹாபாக்களின் விளக்கத்தைக் கையாளத் தெரியாத அறிவிலிகளாக இருக்கின்றனர்.
எனவேதான் இப்பண்புகளைக் கொண்டவர்கள் இந்த உம்மத்தின் தகுதியான உலமாக்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
-அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹபிழஹுல்லாஹ்