இஹ்வான்களின் வழிமுறை எவ்வாறு மன்ஹஜுஸ் ஸலஃபிலிருந்து வேறுபடுகிறது

மன்ஹஜ் ஸலஃப் என்றால் நபித்தோழர்களும் அவர்களைப் பின்பற்றி நல்லோர்களும் இந்த மார்க்கத்தின் இதன் அகீதா, ஃபிக்ஹ், தஅவா போன்ற ஒவ்வொன்றையும் எந்த வழிமுறையில் அணுகிப் புரிந்து நடந்தார்களோ அதையே இந்த வார்த்தைக் குறிப்பிடும். இதற்கு மாற்றமான முறையில் - அதாவது, முரண்படக்கூடிய முறையில் - அகீதா, ஃபிக்ஹ், தஅவா விசயங்களை ஒருவர் புதிய சிந்தனைகளுடன் விளக்குவார் எனில், அது மன்ஹஜுக்கு முரணானது எனப்படும். எடுத்துக்காட்டாக, அகீதாவை ஸூஃபி வழிமுறையின்படி அணுகி, ஒருவர் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் நமது ஸலஃப் நம்பிக்கை கொள்ளாத எதிர்திசையில் விளக்குவார் எனில், அது ஸூஃபி மன்ஹஜ்தானே தவிர ஸலஃபுடையது அல்ல. அப்படியானால் என்ன பொருள்? நபியும் நபித்தோழர்களும் நம்பிக்கை கொண்ட அந்த உண்மையான இஸ்லாம் அல்ல. அதைத்தான் வழிகேடு என்கிறோம். இதுதான் மார்க்கத்தில் பிரிவினையை ஏற்படுத்தி மக்களைக் கூறுபோடுகிறோம் என்கிறோம்.

ஃபிக்ஹ் விசயங்களில் ஸலஃபின் மன்ஹஜ், அதாவது நபித்தோழர்களின் வழிமுறை என்பது மூல ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. இதில் மத்ஹபுகளின் கருத்துவேறுபாடுகளை நாம் நெகிழ்வுத்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவை ஆதாரங்களை அடைவதிலும், அறிவதிலும், புரிவதிலும் வந்துள்ளவை. இவற்றில் நபித்தோழர்கள்கூட கருத்துவேறுபாடு கொண்டுள்ளார்கள். எனவே, இவற்றை அளவுகோலாகக் கொண்டு ஒருவரின் வழிகேட்டைத் தீர்மானிக்கக் கூடாது. அகீதா விசயங்களுக்கும் செயல் சார்ந்த ஃபிக்ஹ் விசயங்களுக்கும் வேறுபாடு உள்ளன. எனினும், ஸலஃபிய்யா வழிமுறை என்பது ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாகும். மற்றவர்களின் புரிதலை மதிப்பதாகும். இதன் அடிப்படையில் யாரையும் இந்த மன்ஹஜைவிட்டு வெளியேறிவிட்டார் என்று சொல்லக் கூடாது. ஒவ்வொரு முஸ்லிமும் இந்த விசயத்தில் ஸலஃபி மன்ஹஜில்தான் இருப்பார். ஆனால், கல்விக்கு ஏற்ப அதில் வேறுபாடுகள் இருக்கும். ஒருவர் ஆலிம். இன்னொருவர் முத்தபிஃ. இன்னாருவர் முகல்லித். இப்படிச் சொல்லலாம்.   

தஅவாவில் ஸலஃபின் மன்ஹஜ் என்பது தவ்ஹீதுல் உலூஹிய்யாவை முன்வைத்து மக்களை அழைப்பதாகும். அதாவது, அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி, எல்லா வணக்கங்களையும் அவனுக்கே செய்து, எல்லா வகையான ஷிர்க்குகளையும் விட்டு மக்களைத் தடுப்பதாகும். இதையே நபிமார்கள் அனைவரும் செய்தார்கள். முதலில் அவர்களின் சீர்திருத்த இலக்கெல்லாம்  உள்ளங்களை நோக்கியே இருந்தன. அதன் அடிப்படையில் செயல்களைச் சீர்திருத்தினார்கள். ஆம், அல்லாஹ்வின் மீதான சரியான ஈமானையும் தவ்ஹீதையும் எடுத்துச் சொல்லி, அவனையே வணங்கச் சொல்வதே இந்த தஅவாவின் மையம். நபியவர்கள் மக்காவிலும் மதீனாவிலும் கடைசி மூச்சு வரை இப்படித்தான் அமைத்துக்கொண்டார்கள். இதற்காகத்தான் ஸப்ரின் காலத்தையும் ஹிஜ்றத்தின் காலத்தையும் ஜிஹாதின் காலத்தையும் கடந்து வந்தார்கள். இதன் கனிதான் அல்லாஹ் அவர்களுக்கு அளித்த ஃபத்ஹ் மக்கா. குறைஷிகளை மட்டுமல்ல, முழு அறபு உலகையும் அவர்கள் வெற்றி கொண்டது இந்த அடிப்படை தஅவா வழிமுறையை, அதாவது தஅவா மன்ஹஜை செயல்படுத்தித்தான். அல்லாஹ் இதன் மூலம் அவர்களின் கையில் ஆட்சியதிகாரத்தையும் தனது கொடையாக அளித்தான். இப்போது ஒன்றைச் சொல்கிறேன். 

இந்த தஅவா வழிமுறைக்கு மாறான அரசியல் செயல்பாடுகளைத்தான் இக்வானிய்யத் என்கிறோம். இது தற்கால சூழ்நிலைக்குச் சொல்கிற ஓர் அடையாளப் பெயர். அரசியல் அதிகாரத்தை மையமாக வைத்து, அதன் மூலம் தஅவா முன்னெடுப்பது நபிமார்களின் வழிமுறை அல்ல. தவ்ஹீதுல் உலூஹிய்யாவை முன்வைத்து, முதலில் பொதுமக்கள் எனும் கீழ்மட்டத்தில் சீர்திருத்தப் பணியைத் தொடங்க வேண்டும். அதிகார மட்டம் என்றால் அவர்களுக்கு நேரிலோ கடிதம் மூலமோ அழைப்புத் தர வேண்டும். இதுவும் அறிஞர்களுக்கு, அவர்களில் சக்தி உள்ளவர்களுக்கே கடமை. ஃபிர்அவ்னிடம் நபி மூஸா (அலை) சென்றார்கள். தான் அதிகாரத்தில் இருக்கும்போது நபியவர்கள் மற்ற மன்னர்களுக்குக் கடிதம் அனுப்பினார்கள். தவ்ஹீதுதான் ஏக அழைப்பின் குரலாக மேலோங்கி நின்றது. இதைவிட்டு முதலில் கீழ்மட்டத்தில் பொதுமக்களிடம் அரசியல் அதிகாரம் பற்றி தஅவாவை முன்னெடுப்பதும், அதைச் சுற்றியே ஒவ்வொரு நகர்வையும் அமைத்துக்கொள்வதுமே இக்வானிய்யத். அதையே ஸலஃபி பெயரில் செய்தால் குத்பிய்யத் அல்லது ஸுரூரிய்யத். இந்த திசை மாறிய தலைகீழ் மன்ஹஜ் இருக்கிறதே, இது அடிப்படையில் சரியான திசையைவிட்டு உம்மத்தை முற்றிலும் திருப்பக்கூடியது மட்டுமல்ல, மொத்தமாக நிர்மூலம் ஆக்கக்கூடியதும்கூட. ஏனெனில், இதன் இலக்கு ஆட்சியாளர்களின் பதவிதான் என்பதால், அவர்கள் இவர்களையும் இவர்களின் நகர்வுகளையும் குறிவைப்பார்கள். உம்மத்திற்குப் பெரிய பாதிப்புகளை இந்த இக்வானிய்யத் கொண்டு வந்துவிடும். வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன.

- உஸ்தாத் அபூ நசீபா MF அலீ
أحدث أقدم