சஹாபாக்கள் ஒருசில தவறுகளில் விழுந்திருக்கும் பட்சத்தில், எவ்வாறு அவர்களை நாம் பின்பற்ற இயலும்!?


- அஷ்ஷைஃக் அபுல் அதா' அஹ்மத் பானாஜாஹ் ஹஃபிதஹுல்லாஹ்


கேள்வி: 

ஸஹாபாக்களின் புரிதலை பின்பற்றுமாறு நாம் கூறும்போது, சிலர் ஸஹாபாக்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களின் மார்க்கப் புரிதலை நாம் பின்பற்ற முடியாது என்று வாதிடுகின்றனர். இந்த சந்தேகத்திற்கு எவ்வாறு மறுப்பு கொடுப்பது?


பதில்:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

அதற்கான பதில் மிகவும் இலகுவானதும், லேசானதும், தெளிவானதும் ஆகும். 

அதானது, நாம் நபித்தோழர்களை (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக) அவர்கள் எந்த விடயங்களில் சரியானவற்றில் இருந்தார்களோ, அவற்றில் மட்டுமே பின்பற்ற வேண்டும், அவர்களில் எவரேனும் ஒருவர் செய்த பிழையில் அல்ல. மேலும், நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய மற்றும் நம்பிக்கை கொள்ள வேண்டியதாவது, எந்தவொரு நபித்தோழராயினும் அவருடைய பிழைக்கு காரணம் கூறுவதென்பது அவசியமாகும். ஏனென்றால், அவர்கள் மிகத் தூய உள்ளங்களையும், மிகச் சிறந்த எண்ணங்களையும் கொண்டிருந்தனர்.

மேலும், அவர்கள் சரியாக இருந்த விடயங்கள் மற்றும் அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்த சில தவறுகளுக்கு இடையேயான வேறுபாடு என இதுபோன்ற விடயங்களில் அறிவைத் தேடும் அனைவருக்கும் தெளிவான ஒன்றே என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, யாருடைய தவறையும் பின்பற்றுவது எவருக்கும் ஆகுமானதல்ல என்று நாங்கள் கூறுகிறோம்.

யாராவது “ஸஹாபாக்கள் தவறிழைதார்களா?” என்று கேட்டால், (அதற்கான) பதில் ஆம், தனிநபர்கள் என்ற அடிப்படையில் ஆகும். ஏனென்றால், அவர்களும் மனிதர்கள் தான், இதன் காரணமாகவே அவர்கள் ஒருவரையொருவர் திருத்துபவர்களாகவும், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுபவர்களாகவும் இருந்தனர்.

எனினும், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்குப் பிறகு அவர்கள் தான் இந்த உம்மத்திலேயே மிகவும் அறிந்தவர்கள் ஆவர், மேலும் அவர்களே (நபி ﷺ) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இதனாலேயே அவர்களுக்குப் பிறகு வந்த அனைவரையும் விட (நபி ﷺ) அவர்களுடைய ஸுன்னாஹ்வை அவர்கள் மிகவும் அறிந்திருந்தார்கள். 

இதன் காரணமாகவே அல்லாஹ் கூறுகின்றான்:

({ وَمَن یُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَهُ ٱلۡهُدَىٰ وَیَتَّبِعۡ غَیۡرَ سَبِیلِ ٱلۡمُؤۡمِنِینَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصۡلِهِۦ جَهَنَّمَۖ وَسَاۤءَتۡ مَصِیرًا }

இன்னும், நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர், எவர் (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து விசுவாசிகளின் வழியல்லாத (வேறுவழியான)தைப் பின்பற்றுகிறாரோ, அவரை நாம் அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம். (பின்னர்) அவரை நரகத்தில் புகுத்திவிடுவோம். அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது. (அல்குர்ஆன் : 4:115)

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘முஃமின்கள்’ திட்டமாக சஹாபாக்கள் தான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை, ஏனெனில், அவர்களே அல்குர்ஆன் இறக்கப்பட்ட காலத்தில் முஃமின்களாக இருந்தனர். ஆயினும், இது அவர்களைப் பின்பற்றுபவர்களையும் உள்ளடக்கும்.

நடைமுறையின் கண்ணோட்டத்தில், இரண்டு வகையான விடயங்களில் ஸஹாபாக்களைப் பின்பற்றுவது முஸ்லிம்களின் மீது கடமையாகும். 

(முதலாவது) எந்த விடயங்களில் சஹாபாக்கள் ஏகோபித்த முடிவில் இருந்தார்களோ அவையாகும். அவைதான், ஒருமித்த கருத்துடைய விடயங்கள், அதாவது இஜ்மாஃ ஆகும். 

(இரண்டாவது) எந்த விடயங்களில், ஒரு கூற்று அல்லது ஒரு கருத்து அவர்களுக்கு மத்தியில் பரவலாக இருந்து, எந்த ஒரு ஸஹாபியும் அதற்கு முரண்பட்டதாகவோ அல்லது வேறுபட்டதாகவோ அறியப்படாத விடயங்களாகும்.

ஆனால், சஹாபாக்களுக்கிடையே ஒரு விடயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டால், அது ‘கிலாஃப்’ (கருத்து வேறுபாடுடைய) விடயமாகிவிடும். அந்த மாறுபட்ட கருத்துகளில் எது சரியானது என்பதை அறிந்து கொள்வதற்காக அல்குர்ஆனையும், ஸுன்னாஹ்வையும் பார்ப்பது நம்மீது கடமையாக உள்ளது. மேலும் நாம் (அதில்) சரியான கருத்தை எடுத்துக்கொண்டு மாற்றுக் கருத்தைக் கொண்ட ஏனைய சஹாபாக்களுக்கு காரணங்களை கூறிட வேண்டும். அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

https://thedawahqa.com/articles/62b35c39ceab340629dbe3aa     

மேலும் பல மொழிபெயர்ப்புகளைக் காண:
t.me/salafimaktabahmpm

மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
Previous Post Next Post