உமைர் பின் வஹப் (ரலி)
இணைவைப்பாளராய் இருந்து ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோரை எதிர்த்து போரிட்டுப் பின்னர் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் உமைர் பின் வஹப்(ரலி) அவர்களும் ஒருவர். பத்ருப் போரில் இஸ்லாத்துக்கு எதிராக முனைந்து போரிட்டவர். போரிடும் முன்பு கூடாரங்களில் தங்கி இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை சற்றேக் குறைய 300 பேர்கள் இருக்கும் என்று வேவுபார்த்து தம் குறைஷிப் படையினருக்கு தெரிவித்தவர். முஸ்லீம்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்தோராய் இருந்தாலும் அவர்களில் ஒருவர் கொல்லப் பட்டாலும் அதன் பகரமாக நம்மில் ஒருவர் கொல்லப்படுவோம் என்று முஸ்லீம்களின் போர்த்திறமையினை சிலாகித்துக் கூற குறைஷிகள் பீதியும் கலக்க முற்று போரிடாமல் திரும்பிச் செல்ல எத்தனிக்கின்றனர். இவ்வேளையில் இணைவைப்பாளர்களின் தலைவனான அபூஜஹ்ல் தம் மூதாதையர்களின் நடைமுறைகள் வணக்க வழிபாடுகள், குலச்சிறப்பு கோத்திரப் பெருமை ஆகியவை ஏகத்துவத்தைப் போதிப்போரால் தூசிக்கப்படுகின்றது என முஸ்லீம்களுக்கு எதிரான வாதங்களை வலுப்படுத்தியும் முஸ்லீம்களை கருவறுக்க இதனைவிட அரியதோர் சந்தர்ப்பம் கிடைப்பது எளிதல்ல என்று எடுத்துக் கூறியும், குறைஷிகளைத் திடப்படுத்தி போரிட ஊக்குவித்தான்.
பத்ருப் போரில் நிகழ்ந்தது முஸ்லீம்களுக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கினான். குறைஷியர்களின் தலைவர்களில் அபூஜஹல், உத்பா, ஸைபா, வலீத் போன்றோர் வெட்டி வீழ்த்தப்பட்டு தீண்டுவாரின்றி கிடந்தனர். தோல்வியின் விளைவு இணைவைப்பாளர்களுக்கும் முஸ்லீம்களின் மீது குரோத உணர்வையும் பழிதீர்க்கும் எண்ணத்தையும் வளர்த்தது.
அந்நாட்களில் அபரிதமான இணைவைப்பளர்களுக்கிடையில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோர் மிகச் சிலரே இவர்களைத் துன்புறுத்துவது, அநீதி புரிவது, சமூக பகீஷ்காரம் செய்வது போன்ற கொடுமைகள் இழைக்கப் பட்டு வந்தது. இங்ஙனம் முஸ்லீம்களின் மீது அநீதி இழைப்போரில் முதன்மையாய் திகழ்ந்தவர் உமைர்(ரலி). குறைஷிகள் இவரை இஸ்லாத்தில் இணையும் முன்பு ஷைத்தானுல் குறைஷ் என்று அழைத்தனர். பத்ருப் போரில் படுதோல்வியைத் தழுவிய இணைவைப்பாளர்களில் பொருளாலும், உடலாலும் உயிராலும் இழப்புக்குள்ளானோர் முஸ்லீம்களைப் பழிவாங்குவதில் முனைப்பாய் இருந்தனர். உமைர்(ரலி)யின் மகனும் பத்ருப்போரில் முஸ்லீம்களால் கைது செய்யப்பட்டு சிறைக்கைதியாய் இருந்தார் உமைர்(ரலி)யின் சிறிய தந்தையான உமைய்யா என்பவர் பத்ருப்போரில் முஸ்லீம்களால் கொல்லப்பட்டார்.
சிறைபிடிக்கப்பட்ட மகனை மீட்கவும் முஸ்லீம்களை பழிதீர்க்கவும் எண்ணிய உமைர்(ரலி) அவர்களுக்கு கடன் தொல்லையும் குடும்ப பராமரிப்பு செலவுகளும் தடையாய் இருந்தது. இந்நிலையில் போரில் உமைய்யாவைக் கொன்றதால் குரோதமுடன் இருந்த அவரின் வாரிசாகிய ஸஃப்வானும் உமைர்(ரலி)அவர்களும் கஃபாவில் ஒன்று கூடி பழிதீக்கும் விஷயம் பற்றி ஆலோசித்தனர். ஒருவருக்கொருவர் உறவினராயும் உற்ற நண்பர்களுமாயிருந்தனர். குறைஷிகளாகிய நாம் மிக இழிவுபடுத்தப் பட்டுவிட்டோம் என் மீது மாத்திரம் கடன் தொல்லையும், குடும்ப பராமரிப்பு செலவினங்களும் மட்டும் இல்லாதிருந்தால் முகம்மதுவைக் கொன்று பழிதீர்த்திருப்பேன் என உமைர்(ரலி) கூற உம் கடனையும், குடும்ப பராமரிப்பு செலவுகளையும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நீர் சென்று பழிதீரும் என ஸஃப்வான் கூற உமைர்(ரலி) மதீனா பிரயாணமாகிறார். நபி(ஸல்) அவர்களை ஒழித்துக் கட்டி விட வேண்டும் எனும் பழிதீர்க்கும் எண்ணத்தை மனதில் தேக்கியவராய் மதீனா வந்தடைந்த உமைர்(ரலி) தம் வாகனத்தை நிறுத்தி விட்டு வாளைத் தோளில் தொங்கவிட்டவாறு நடந்து வருவதைக் கண்ட உமர்(ரலி) முஸ்லீம்களை நோக்கி உமைர் இவ்வாறு வருவது தீய நோக்குடன்தான் இருக்கும் எனவே அல்லாஹ்வின் தூதரிடம் சென்று அவர்களுக்கு அருகில் பாதுகாப்பாக நில்லுங்கள் என கூறினார்கள்.
உமைர்(ரலி) அவர்களை அழைத்துவர நபி(ஸல்) அவர்கள் அனுமதி தர உமர்(ரலி)அவர்கள் உமைர்(ரலி)யின் தோளில் தொங்கும் வாளை இருகரங்களாலும் பிடித்துக்கொண்டு நபிகளாரிடம் அழைத்துவருகிறார்கள். நபிகளார் உமர்(ரலி)-யை நோக்கி உமைரை விட்டுவிடுங்கள் எனக் கூற உமைர்(ரலி) நபிகளாரின் சந்திப்பு நிகழ்கிறது. நபிகளார் உமைரை நோக்கி நீர் இங்கு வந்ததன் நோக்கமென்ன? என்று வினவ நான் என் மகனை மீட்டுப் போக வந்தேன் என்று பதிலுரைக்கிறார் உமைர்(ரலி). நபிகள்(ஸல்) உமைரை நோக்கி நிச்சயமாய் நீர் பொய்யுரைக்கின்றீர். காஃபாவில் நீரும் ஸஃப்வானும் ஒன்று கூடிப் பேசியது இவ்வாறுதானே என நபிகளார்(ஸல்) அவ்விருவருக்கும் இடையே நடந்த உரையாடலை உரைக்க திடுக்குற்றவராக ஆச்சரியமடைந்த உமைர்(ரலி) நாங்கள் மக்காவில் பேசியது எவ்வாறு உங்களுக்கு தெரியும் அல்லாஹ்வே உங்களுக்கு இதனை அறிவித்துக் கொடுத்திருக்கிறான் நிச்சயம் நீர் இறைவனின் தூதரே என நான் நம்புகிறேன் என்று கூறி ஈமான் கொள்கிறார்.
உங்கள் புதிய சகோதரருக்கு (உமைர்(ரலி)க்கு) மார்க்கத்தை கற்றுக் கொடுங்கள் என நபிகளார்(ஸல்) கூற நபித்தோழர்களின் நன்மதிப்பையும் அரவணைப்பையும் பெறுகிறார்;. உமைர்(ரலி) நீர் நபியின் எதிரியாக இருந்த போது பன்றியைவிடவும் மோசமாகக் கருதினேன். நீர் ஈமான் கொண்டுவிட்ட பின்னரோ என் மகனைப்போல் உம்மை நேசிக்கிறேன். என்று உமர்(ரலி) கூறுவது புகாரியில் இடம் பெற்றுள்ளது. இஸ்லாத்துக்கு எதிராக எவ்வளவு முனைப்பாக உமைர்(ரலி) அவர்கள் செயல்பட்டாரோ அவ்வாறே இஸ்லாத்தைப் பரப்புவதிலும் மிக உறுதியுடன் செயல்பட்டார். மக்கா சென்று இணைவைப்பாளர்களுக்கிடையில் தம் அழைப்பு பணியை செய்ய நாடிய உமைர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அனுமதிகோர அண்ணலார்(ஸல்) அனுமதி வழங்கினார். இந்நிலையில் மதீனா சென்று பழிதீர்ப்பேன் என்று சூளுரை செய்த உமைர்(ரலி) என்னவானார் என்று ஸஃப்பான் மதினாவிலிருந்து வந்தவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் அவருக்கு சரியான பதிலைக் கூறவில்லை. அறியவில்லை என்றே கூறினர். ஆனால் ஒருவர் மட்டும் அவர் இஸ்லாத்தை தழுவி அழைப்புப் பணியில் முனைப்புடன் செயல்படுவதாக கூறினார். ஆகவே உமைர்(ரலி) அவர்களைப் பழிவாங்க ஸஃபவான் விளைகிறார். இச்சூழ்நிலையில்தான் அழைப்புப் பணி செய்யும் பொருட்டு மக்கா வந்து சேர்கிறார் உமைர்(ரலி).
இரவு பகலாக அயராது அழைப்புப் பணியில் ஈடுபட்டு ஏகத்துவ கருத்துக்களை இணைவைப்பாளர்களுக்கு எடுத்துக் கூறினார். மக்காவில் எங்கெல்லாம் இஸ்லாத்தை எதிர்த்து முகாமிட்டு செயலாற்றினாரோ அங்கெல்லாம் சென்று முழு மூச்சாய் ஏகத்துவக் கருத்துக்களைப் பரப்பும் பணியில் ஈடுபட்டார். விளைவு ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோர் ஏராளமானோர் ஆயினர். இணைவைப்பாளர்களாய் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோரை அழைத்துக் கொண்டு உமைர்(ரலி) மதீனா செல்கிறார். மாநபிகளாரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஆளாகிறார். இஸ்லாத்தில் இணைந்த பின் நிகழ்ந்த அனைத்துப் போர்களிலும் பங்கெடுக்கிறார். மக்கா வெற்றியின் போது அண்ணலாருடன் இருந்த உத்தமத் தோழர்களில் உமைர்(ரலி) அவர்களும் ஒருவர் தம் பழைய நண்பரான ஸஃபவானைச் சந்தித்து ஏகத்துவத்தை எடுத்துக் கூற நாடிய உமைர்(ரலி) அவர்களை, என்னை நீ நெருங்காதே! முஹம்மதுவுடன் சேர்ந்து கொண்டு என்னை நீ கொல்ல வருகிறாயா? என்று மிரள்கிறார் ஸஃப்வான். ஒரு சிறந்த மனிதரிடமிருந்து ஓரிறைக் கொள்கையை உங்களுக்கு எடுத்துக் கூறி நல்வழிப்படுத்தவே நான் வருகிறேன் என்று உமைர்(ரலி) கூற ஸஃப்வானின் மனைவி ஈமான் கொள்ளத் தயாராகிறார். ஆனால் ஸஃப்வான் ஏற்றுக் கொள்ளவில்லை. தாம் அங்கிருந்தால் விபரீத விளைவு ஏற்படும் எனக் கருதிய ஸஃப்வான் ஜித்தா வருகிறார். உமைர்(ரலி) ஸஃப்வானைக் கண்டு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் கூறி இஸ்லாமியர்களால் உங்களுக்கு எந்தத் தீங்கு மேற்படாது என உறுதி கூறினார். தமக்கு அளிக்கும் அபயத்துக்க தகுந்த ஆதாரம் தந்தால் நான் மக்கா திரும்புவதாக ஸஃப்வான் கூற, உமைர்(ரலி) நபிகளாரிடமிருந்து அவர்களின் தலைப்பாகையை எடுத்து வந்து ஸஃப்வானிடம் அபயத்தின் அடையாளமாக காண்பிக்கிறார்.
மக்கா திரும்பிய ஸஃப்வானுடன் நபிகளார் சந்திப்பு நிகழ்கிறது. நபிகளார் இஸ்லாத்தின் இனிய கொள்கைகளை ஸஃப்வானிடம் எடுத்துக் கூற தாம் சிந்தித்து முடிவு செய்ய 2 மாத கால அவகாசம் தேவை என ஸஃப்வான் கூறி விடை பெறுகிறார். இந்நிலையில் ஹவாஸின் எனும் கோத்திரத்தார் மக்காவின் மீது போர் தொடுக்க முனைந்த போது முஸ்லிம்களிடம் போர் தளவாடங்கள் குறைவாக இருந்ததால் 100 கேடயங்களையும் மற்றும் சில போர்க் கருவிகளையும் ஸஃப்வானிடமிருந்து கடனாகவும் திருப்பித் தருவதாகவும் கூறி பெற்றுக் கொண்டு போர் புரிகின்றனர். ஹுனைன் தாயிஃப் யுத்தங்களுக்குப் பின்னர் ஸஃப்வான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். உமைர்(ரலி) மிகவும் ஆனந்தம் அடைகிறார்கள் தம் இறுதி மூச்சவரையிலும் மக்காவில் அழைப்புப் பணியிலேயே ஈடுபட்டு மரணித்தார்கள் உமைர்(ரலி)அவர்கள்.
படிப்பினை :
8:63 மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
ஏகத்துவத்தைக் கொள்கையாகவும் உத்தம திருநபிகளின் வழிமுறைகளை வாழ்வின் நடைமுறையாகவும் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களில் ஒருவர் பிறறை நேசிப்பது எவ்வாறு என்பதை உமர்(ரலி) அவர்களின் கூற்றிலிருந்து உணரலாம் எனக்காகவே நேசிப்பவர்கள் எங்கே? எனது நிழல் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் அவர்களுக்கு நான் நிழல் தருகிறேன் என (மறுமையில்) அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். முஸ்லிம் : அபூஹூரைரா(ரலி)
உமர் (ரலி) அவர்கள் உமைர்(ரலி) அவர்களை நிராகரிப்பாளாராக இருந்த போது பன்றியை விடவும் கேவலமாகக் கருதியதாகவும், அவர் ஈமான் கொண்டவுடன் தன் பிள்ளைகளில் சிலரை விட அதிகம் நேசித்ததாகவும் கூறுகிறார்கள். உமர்(ரலி) அவர்களின் நேசம் நிச்சயமாக அல்லாஹ்வுக்காகவே இருந்தது என்பது உமர்(ரலி) அவர்களுடைய கூற்றிலிருந்து தெளிவாகிறது. மேலும் நபி(ஸல்) கூறுகிறார்கள். மறுமையில் மனிதன் தன் நேசனோடு இருப்பான் (புகாரி) (ஒருவன்) தனக்கு விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை (அவன்) முழுமையான முஃமின் ஆக முடியாது என்பதும் நபிமொழி.
உமைர்(ரலி) அவர்கள் தான் அறிந்து ஏற்றுக்கொண்ட சத்திய மார்க்கத்தை தன் நண்பர் ஸஃப்வானும் ஏற்றுக் கொண்டு மறுமையின் நகர நெருப்பை விட்டும் பாதுகாப்புப்பெறவேண்டும் நம்மைப்போன்றே அவரும் ஈடேற்றம் அடைய வேண்டும் என்ற ஆவல் உமைர்(ரலி)அவர்களின் செயல் மூலம் தெளிவாகிறது. அந்த நபி மொழிகளின் செயல் வடிவமாக திகழ்ந்த நபித்தோழர்களைப் போல் திகழ்ந்த நபித்தோழர்களைப் போல் நாமும் நாம் அறிந்த நபிமொழிகளுக்கு செயல் வடிவம் கொடுத்து வெற்றியாளர்களாக ஆகவேண்டும். குர்ஆன் மற்றும் நபிமொழிகளை அறிந்தும் புரிந்தும் செயல்படக் கூடிய மக்களாக நம்மை ஆக்கியருள வல்ல நாயன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!