ஹ்பைப் பின் அதீய் (ரலி)

ஹ்பைப் பின் அதீய் (ரலி)

உத்தம சஹாபாக்களில் ஒப்பற்ற சீரிய வாழ்வையும் உயரிய நெஞ்சறுதியையும், வீரத்தையும் கொண்டிருந்தவர்களில் ஹ்பைப் (ரலி) அவர்கள் குறிப்பிடத் தக்கவராவார். மற்றைய சஹாபாக்களைக் காட்டிலும் ஹ்பைப்(ரலி)யின் மிகைத்த நெஞ்சுறுதி நினைவு கூறத்தக்கப் பல இன்னல்களை மேற்கொண்டு தாம் ஏற்றுக் கொண்ட இறைக் கோட்பாட்டில் உறுதியாகத் திகழ்ந்து பிறருக்கு எடுத்துக் கூறியும் இஸ்லாம் தழைத்தோங்க வழி கோலியவர். மதீனா நகருக்கு அண்ணல் நபிகள் ஹிஜ்ரத் செய்தவுடன் மதீனாவாசியான ஹ்பைப்(ரலி) நபிகளாரின் போதனைகளை செவியுற்று ஈமான் கொண்டு அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியவர்.

இஸ்லாத்தில் இணைந்த ஹ்பைப்(ரலி)யின் தியாக மனப்பான்மையும், மலர்ந்த முகத்துடன் மற்றோரை உபசரிக்கும் மனோபாவமும், நிறைந்த நெஞ்சறுதியும், கவிபாடும் திறனும் இவரின் சிறப்பு அம்சங்கள். ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டோரும் இணைவைப்பாளர்களும் போரிட்ட முதல் போராகிய பத்ருப் போரில் பங்கேற்ற உத்தமத் தோழர்களில் ஹ்பைப்(ரலி) ஒருவர். போரில் முஸ்லீம்கள் வெற்றிவாகை சூடி திரும்பும் வழியில் இஸ்லாத்தின் எதிரியும் அண்ணல் நபிகளாரைப் பழித்தும் இழித்தும் ஏகடியம் பேசியவனுமான ஹாரிஸ் இப்னு ஆமிர் என்பவனை போரிட்டுக் கொன்றவர் ஹ்பைப்(ரலி). ஹாரிஸின் இழப்பினால் சினந்த அவன் குடும்பத்தார் ஹ்பைப்(ரலி)அவர்களுடன் குரோத எண்ணம் கொண்டு அவர்களைக் கொன்று பழி தீர்க்க தருணத்தை எதிர்பார்த்தனர். அன்சாரிகளில் அவுஸ் கோத்திரத்தைச் சார்ந்த இந் நபித் தோழர் இஸ்லாத்திற்காக அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதிலிருந்து அத்துணை தியாகத்தையும் நிலை நாட்டும் தீரச் செயல்களிலும் தம்மையும் இணைத்துக் கொண்டார்.

பத்ருப்போர் வெற்றிக்குப் பின்னர் மக்கத்து இணைவைப்பாளர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆய்வு செய்ய எண்ணிய அண்ணல் நபி(ஸல்) அவர்கள் 10 பேர் கொண்ட ஒற்றர்கள் குழு ஒன்றை மக்காவுக்கு அனுப்பி வைத்து இணைவைப்பார்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்குமாறு பணித்தார். இவ்வொற்றர் குழுவில் ஹ்பைப்(ரலி) அவர்களும் ஒருவர். மக்காவை நோக்கி முன்னோக்கி முன்னேறிய இக்குழு உஸ்ஃபான் என்னுமிடத்தை சென்றடைந்த போது இதை பனூலிஹ்யான் என்ற கோத்திரத்தினர் அறிந்து அம்பெய்வதில் திறமைவாய்ந்த 100 பேர் அடங்கிய கூட்டமொன்றை நபித் தோழர்களின் ஒற்றர் குழுவை பிடிப்பதற்கு அனுப்பிவைத்தனர். அவர்கள் ஒற்றர் படை எங்கு செல்கின்றன என்பதை அறிய நபித் தோழர்களை விரைவாகப் பின்பற்றவதற்கு முயன்றனர். ஆனால் அவர்களுக்கு எந்த தடயமும கிடைக்க வில்லை. அவர்களில் ஒருவன் வழியில் கிடந்த பேரீத்தம் பழத்தின் விதைகளை முகர்ந்து பார்த்து இவை மதீனாவின் பேரீச்சங் கனிகளின் விதைகளே எனவே இவற்றைப் பின்தொடர்ந்து சென்றால் நபித் தோழர்களின் ஒற்றர் குழுவைப் பிடித்து விடலாம் என ஆலோசனை கூறினான்.

இவ்வாலோசனையை ஏற்ற இணைவைப்பாளர்கள் கூட்டம் வேகமாக முன்னேறிகின்றனர். வெகு தூரத்தில் நபித் தோழர்களின் குழுவை கண்ணுற்ற இக் கூட்டத்தார் ஆனந்தம் கொண்டு களிப்புடன் முன்னேறினர். எதிரியின் கூட்டம் தம்மை விரட்டுவதைக் கண்ட ஒற்றர் குழுவின் தலைவர் ஆஸிம்(ரலி) ஒரு குன்றின் மீதேறி தாவி விட ஆலோசனை கூறுகிறார். அதன் படி நபித்தோழர்கள் அனைவரும் குன்றின் மீதேறிவிட இணைவைப்பாளர்கள் குன்றின் கீழ் நின்றார்கள் இந்நிலையில் இணைவைப்பாளர்கள் நபித் தோழர்களை நோக்கி நீங்கள் கீழே இறங்கி வந்து விடுங்கள் உங்களை ஒன்றும் செய்துவிட மாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் ஆஸிம்(ரலி) இணைவைப்பாளர்கள் சொல்லை நம்பி கீழே இறங்க வேண்டாம் அவர்களின் வார்த்தைகள் நம்பிக்கைக்குறியதல்ல என்று தம் தோழர்களிடம் எடுத்துக் கூறி கீழே இறங்கி வரவும் இனைவைப்பாளர்களின் கட்டளைக்கு அடிபணியவும் மறுக்கின்றனர்.

விளைவு இணைவைப்பாளர்களின் திறமையான அம்பு எய்தலினால் தாக்குதலுக்கு உள்ளாகி ஆஸிம்(ரலி) அவர்களும் அவரது தோழர்கள் ஆறு பேரும் ஷஹீதானார்கள் எஞ்சியுள்ள நபித்தோழர்கள் மூவரையும் இணைவைப்பாளர்கள் குன்றிலிருந்து கீழே இறங்கி வர வேண்டுகின்றனர். மூன்று நபித்தோழர்களும் குன்றிலிருந்து கீழே இறங்கி வந்ததும் அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டனர் இணைவைப்பாளர்கள் மூவரில் அப்துல்லாஹ் இப்னு தாரீக்(ரலி) என்ற நபித் தோழர் இணைவைப்பாளர்களிடம் இருந்து தப்பியோட முயற்சித்து பின்னர் அவர்களிடம் தீரமாய் போரிட்டு ஷஹீதானார். ஹ்பைப்(ரலி) அவர்களும் ஸயீத் இப்னுத் திஸின்னா(ரலி) அவர்களும் இணைவைப்பாளர்களால் பிடிக்கப்பட்டு மக்காவில் உள்ள அடிமைச் சந்தையில் விற்கப்பட்டனர்.

பத்ருப் போரில் கொல்லப்பட்ட இணைவைப்பாளர்களின் வாரிசுகளும் உறவினர்களும் அடிமைச் சந்தையில் பலத்த போட்டியில் இவர்களை வாங்கி பழிதீர்க்க விரும்பினர். ஸயீத்(ரலி) அவர்களை சஃப்வான் என்பவன் வாங்கி அவர்களைத் தனயீம் என்னுமிடத்திற்கு கொண்டு சென்று கொல்வதற்கு தன் அடிமை நிஸ்தானிடம் உத்தவிட்டான் அவ்வாறே ஸயீத்(ரலி) அவர்கள் 9 வது நபராக ஷஹீதானார்கள் எஞ்சியிருந்த ஹ்பைப்(ரலி) அவர்களோ மதீனாவாசி அவருக்கு மக்காவில் யாரையும் தெரியாது திக்கற்ற நிலையில் இணைவைப்பாளர்களால் அடிமைச்சந்தையில் விற்கப்பட்ட ஹ்பைப்(ரலி) அவர்களை ஹாரிஸின் வாரிசுகள், குடும்பத்தினர் வாங்கி சங்கலியால் பிணைத்து வீட்டுக் காவலில் வைத்தனர்.

தம்முடன் உளவறிய வந்த உத்தமத்தோழர்கள் 9 பேர் ஷஹீதாக்கப்பட்டபின் தன்னந்தனியாக இருந்த ஹ்பைப்(ரலி) அவர்களுக்கு ஆறுதல் வழங்கவோ ஆசுவாசப் படுத்தவோ எவருமில்லை. வல்லோன் இறையோனின் மீதே தம் நம்பிக்கையை உறுதியாக்கியவராக தவறாத உள்ளத்துடன் தலை நிமிர்ந்து நின்றார். அது போர் செய்ய தடுக்கப்பட்ட மாதமாக இருந்ததால் ஹ்பைப்(ரலி) கொலை சிறிது காலம் தள்ளி வைக்கப்பட்டது. இவ்வாறு வீட்டுக் காவலில் இருந்த காலத்தில் ஹாரிஸின் மகள் கூறுகிறாள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக மக்காவில் கிட்டாத திராட்சைக் கனியின் கொத்துதொன்றை ஹ்பைப்பின் கரங்களில் நான் கண்டேன். ஹ்பைப்(ரலி) அல்லாஹ்வால் உணவளிக்கப்படுகிறார் என்பதாகச் செய்தி இணைவைப்பாளர்களுக்கு விந்தையாகவும் வியப்பாகவும் தோன்றியது இருப்பினும் ஹ்பைப்(ரலி) அவர்களின் மேல் அவர்கள் கொண்டிருந்த வெறுப்பு சற்றும் குறையவில்லை. விரைவில் அவருக்கு கொலை தண்டனையை நிறைவேற்ற நாடினர். மரணத்தை விரைவில் சந்திக்க இருந்த ஹ்பைப்(ரலி) மனத் தூய்மையுடன் உடல் தூய்மையும் நாடினார். எனவே சவரக் கத்தி ஒன்றை தருமாறு ஹ்பைப்(ரலி) கேட்க அதனை அவ்வீட்டிலுள்ள சிறுவன் ஒருவன் மூலம் கொடுத்தனுப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட ஹ்பைப்(ரலி) சிறுவனிடம் உன் தாய் எப்படி உன்னிடம் கத்தியைத் தந்தனுப்பினார். நான் உன்னை எதுவும் செய்து விடுவேன் என்று பயப்படவில்லையா? எனக் கூறியதாக அவ்வீட்டுச் சிறுவன் கூறினான்.

இந்நிலையில் இணைவைப்பாளர்கள் ஹ்பைப்(ரலி) யின் ஈமானிய வீரியத்தைக் குறைக்கும் இழிமதியில் ஈடுபட்டனர். ஸயீத் இப்னுத் திஸின்னா(ரலி) எவ்வாறு கொடுமைப் படுத்தப்பட்டு இறுதியில் கொல்லப்பட்டார்கள் என்று விரிவாக எடுத்துரைத்து ஹ்பைப்(ரலி) அவர்களை பயமுறுத்தினர். எனினும் அவர் தளராத நெஞ்சுறுதியோடு இருந்தார். முகம்மதுவை கழுவிலேற்றுவதை விரும்புகிறேன் என்று சொல். உன்னை விடுதலை செய்கிறோம் என்று காஃபான் சொன்னதற்கு, ஹ்பைப்(ரலி) கூறிய பதில் இணைவைப்பாளர்கள் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் தைத்தது. என் இறைத் தூதர் முகம்மது(ஸல்) அவர்களின் காலில் ஒரு முள் குத்துவதைக் கூடப் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறி தன் ஈமானிய உறுதியை நிலை நாட்டினார்கள்.

அன்றைய காலத்தில் நிராகரிப்பாளராக இருந்த அபூஸுஃப்யான் அவர்கள் இதைக் கேட்டு முகம்மதை அவருடைய தோழர்கள் நேசிப்பது போல் உலகில் யாரும் யாரையும் நேசிக்கமாட்டார்கள் என்று கூறி வியந்தார். அல்லாஹ்வின் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் விளைவாக தாம் கொண்ட ஏகத்துக் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். இணைவைப்பாளர்களின் ஆசைவார்த்தைகளும் பசப்பு வாதங்களும் ஹ்பைப்(ரலி) முன்பு விழலுக்கு இறைத்த நீராயின. இறுதியில் ஹ்பைப்(ரலி) தன்யீம் எனுமிடத்தில் கழுவிலேற்றிக் கொல்ல திட்டமிட்டனர் இணைவைப்பாளர்களால் கழு மரத்திற்கருகில் கொண்டுவரப்பட்ட ஹ்பைப்(ரலி) இணைவைப்பாளர்களிடம் தமக்கு இரண்டு ரக்கத்துக்கள் தொழுவதற்கு அனுமதி கோரினார். அவ்வாறே அனுமதி கிடைத்ததும் சுருக்கமாக இறைவனைத் தொழுது பிராத்தனையில் இருகரம் ஏந்தி இவ்விணைவைப்பாளகளைத் கணக்கிலெடுத்துக் கொண்டு இவர்களை சின்னாபின்ன மாக்கியருள் எனப் பிராத்தித்து விட்டு இனிய கவிதை ஒன்றை பாடினார்கள்.

மரணம் எனை எதிர் நோக்க
ஏகத்துவத்தில் என்னுள்ளம் நிலைத்து இருக்க
கொல்வோர் எனை கழுவில் ஏற்றினால் என்ன?
கொடும் வழிகளை தேடினால் என்ன?
இன்னுயிரை இறைவழியில் ஈன்றிட என்
உள்ளம் இருக்கிறது உறுதி பட
அம்பு அலைகள் பாய்ந்தால் என்ன
வம்பர்கள் என்னுடளை சிதைத்தால் என்ன?
சிதரல்களாய் போன பின்யும்-என்னுடலை
இணைத்திடும் ஆற்றலுன்டு என் இறைவனுக்கு
பின் அச்சம் ஏன் எனக்கு
என் இறுதி மூச்ச பிரியும்
நாவும் உள்ளமும் ஏகத்துவ சாட்சி சொல்லும்.

இதன் பின்னரும் மனநிலையில் ஈமானிய உறுதியில் மாற்றமின்மையைக் கண்ட இணைவைப்பாளர்கள் ஹ்பைப்(ரலி) அவர்களை கழு மரத்தில் கயிறகளால் பினைத்து சரமாரிய அம்புகளை வீசித் தாக்கினர். உயிர் பிரியும் முன்பு ஹ்பைப்(ரலி)அவர்கள் கிப்லாவின் பக்கம் தலையைத் திருப்பி உன் தூதரின் கட்டளையை நாங்கள் பரிபூரணமாக நிறைவேற்றி விட்டோம். எனவே எங்கள் இரட்சகனே! இச்செய்தியை என் தூதரிடம் சேர்ப்பித்து விடுவாயாக எனக் கூறியவராக ஷஹீதானார்கள். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மக்தாத் இப்னு ஆமிர்(ரலி), ஸ{பைர் இப்னுல் அவாம்(ரலி) ஆகியோரை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் ஹ்பைப்(ரலி) அவர்களின் உடலை நல்லடக்கம் செய்துவிட்டு மதீனா திரும்பினார்கள்.


படிப்பினை:

ஹ்பைப்(ரலி) அவர்கள் 9:24 ல் வல்ல இறைவன் கூறுவதுபோல் உலகில் உள்ள அனைத்து உறவுகளையும், பொன், பொருள், உடல், உயிர் அனைத்தையும் வல்ல இறைவனுக்காகவே தத்தம் செய்ய சித்தமாகிறார்கள். எந்த இழப்பையும் எண்ணி மனம் களங்காமல் மறுமைப் பேற்றையே தம் இறுதி இலட்ச்சியமாகக் கொண்டு அனைத்தையும் அர்பணித்தார்கள்.

மேலும் 3:102 வசனத்தின் ஏவல்படி தனது இறுதி மூச்சம் முஸ்லிமாக இருந்தபடியே வெளியேற வேண்டும. தன் உயிர் இறைவனுக்காவே, இறைமார்க்கத்திற்காகவே போகவேண்டும் என்று உறுதியாக இருந்து உயிர் நீத்து ஷஹீதானார்கள். அண்ணலார்(ஸல்)அவர்களிடம் உமர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள். நான் என்னை நேசிப்பதைத் தவிர உலகில் உள்ள மற்றெல்லோரையும் விட உங்களை நேசிக்கிறேன் என்று. அதற்கு நபி(ஸல்)அவர்கள் நீர் உம்மை நேசிப்பதைவிடவும் அதிகமாக என்னை நேசிக்காத வரை ஒரு உண்மையான விசவாசியாகமுடியாது என்று.

நபியவர்களை ஒரு வார்த்தை இழித்து வெறும் வாயளவில் மட்டும் கூறினாலே போதும் தான் உயிர் பிழைக்கவும், மனைவி மக்களோடு சகபோகமாக வாழவும் வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற நிலையிலும் அந்த வார்த்தையை கூற மறுத்து அண்ணலார்(ஸல்)அவர்களi நாம் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை நமக்குக் கற்றுத் தந்துவிட்டார்கள்.

அல்லாஹ்வுக்கும், அவன் தூதர்(ஸல்)அவர்களுக்கும் கட்டுப்படுவது, நேசிப்பது என்பது அவர்கள் மீது பக்திப் பரவசப்பட்டு பாட்டு பாடுவதோ, அவர்களுக்கு விழா எடுப்பதோ ஒரு குறிப்பிட்ட தினத்தில் சடங்கு, சம்பிரதாயங்களை மேற்கொளவதோ அல்ல. அல்லாஹ்வும், அவன் தூதரும் சொன்ன வழியில் உயிர், உடமை, உறவு எதை இழந்தாலும் தம் ஈமானின் உறுதியில் மாறாமல் இருக்க வேண்டும் என்பதனையே படிப்பினையாக நாம் பெறவேண்டும். அப்படிப் படிப்பினை பெற்று நாம் செயல்பட வல்ல இறைவன் அருள்புரிவானாக.
Previous Post Next Post