உம்முல் ஃபஜ்ல் (ரலி)

உம்முல் ஃபஜ்ல் (ரலி)

ஹிஜ்ரி 2 ஆவது ஆண்டு ரமலான் மாதம், நீதிக்கும் அநீதிக்கும் இடையே நடைபெற்ற பத்றுப் போரில் குறைஷிகள் கொல்லப்பட்டும் - சிறைபிடிக்கப்பட்டும் மிகவும் கேவலமான முறையில் தோல்வியைத் தழுவியிருந்த நேரம், தோல்விச் செய்தி மக்காவுக்குக் கிடைத்தபோது மக்கா நகரமே கடும் துக்கத்தில் மூழ்கியது.

முஸ்லிம்களின் கடும் பகைவனாகிய அபூலஹபின் நிலை பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது. அவன் போரில் கலந்து கொள்ளாமல் தனக்குப் பதிலாக ஆஸ் இப்னு ஹிஷாம் என்பவனைப் போருக்கு அனுப்பி விட்டு வெற்றிச் செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அன்று  போரில் கலந்து கொள்ள விரும்பாதவர் அனைவரும் தமக்குப் பதிலாக ஒருவரை அனுப்பி விட்டு மக்காவில் தங்கியிருந்தனர்.
     
அபூலஹப் குறைஷிகளின் தோல்விச் செய்தி கேட்டு வேதனைப்பட்டான். நடக்கவே முடியாமல் அவனுடைய கால்கள் தடுமாறின. ஆயினும் சமாளித்துக் கொண்டு போரின் நிலைகளைத் தீர விசாரித்துத் தெரிந்து கொள்வதற்காக தன் சகோதரர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் வீடு நோக்கி மெல்ல மெல்ல நடந்து வந்தான்.
     
அப்பாஸ் (ரலி)யின் வீடு ஜம்ஜம் கிணற்றுக்கு அருகில் இருந்தது. அங்கே அப்பாஸின் அடிமை அபூராஃபிஃ (ரலி) என்பவர் அம்புகள் செதுக்கிக் கொண்டிருந்தார். அப்பாஸ் வீட்டில் இல்லை, அவரும் குறைஷிகளுடன் சேர்ந்து முஸ்லிம்களை எதிர்த்துப் பேரிடுவதற்காகச் சென்றிருந்தார். அங்கு வந்த அபூலஹப் வீட்டின் ஓரத்தில் அபூராஃபிஃ அவர்களுக்கு அருகில் அமர்ந்தான்.
     
இதற்குள்ளாக யாரோ ஒருவர் கூறினார்: ‘அதோ, அபூசுஃப்யான் இப்னு ஹாரிஸ் (அப்துல் முத்தலிபின் பேரர், அபூலஹபின் சகோதரர் மகன் ) பத்றிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கின்றார். போரின் நிலைமைகளை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
     
உடனே அபூலஹப், ‘சகோதரர் மகனே, இங்கே என்னிடம் கொஞ்சம் வாருங்கள்” என்று அழைத்தான். அவர் வந்ததும் ‘மகனே பத்றில் என்ன நடந்தது?” என்று வினவினான்.
     
அதற்கு அபூசுஃப்யான், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக, முஸ்லிம்களுக்கு முன்னிலையில் நாம் மிகவும் பலமிழந்து போயுள்ளோம். எந்த அளவுக்கெனில், குளிப்பாட்டுபவரின் கையில் உள்ள பிரேதத்தின் நிலை எப்படியோ அப்படித்தான் முஸ்லிம்களுக்கு முன்னிலையில் நமது நிலை. அவர்கள் நாடியவர்களைக் கொன்றார்கள்: நாடியவர்களைக் கைது செய்தார்கள். நாங்கள் ஓர் ஆச்சர்யமான காட்சியைப் பார்த்தோம். வெள்ளைக் கோடுகளைக் கொண்ட நிறமுடைய குதிரைகள் மீது வெள்ளை வெளேறென்றிருந்த மனிதர்கள் சிலரைக் கண்டோம். அவர்கள் நம் அணிகளினூடே புகுந்து வெட்டி வீழ்த்தினார்க்ள். ஆனால் அவர்கள் யார் என்றுதான் தெரியவில்லை” என்றார்.
     
உடனே அபூராஃபிஃ (ரலி) கூறினார்: ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்கள்தாம் மலக்குகள் (வானவர்கள்)”
     
அபூராஃபிஃ இவ்வாறு கூறியதைக் கேட்டதும் அபூலஹப் கொதித்தெழுந்தான். அவருடைய முகத்தில் ஓங்கிக் குத்தினான். இதனைச் சற்றும் எதிர்பாராக அபூராஃபிஃ அவனுடைய தாக்குதலைத் தாங்கிக் கொண்டு அவனுடன் சண்டையிடலானார். ஆயினும் அவர் பலவீனமாய் இருந்ததால் அபூலஹப் அவரைக் கீழே வீழ்த்தி மிக இலாவகமாக அவர் மேலே ஏறி உட்கார்ந்து தாக்கினான்.
     
அங்கே ஒரு பெண்மணி இருந்தார். அபூலஹபின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டு அவரால் பொறுமையாய் இருக்க முடியவில்லை. உடனே எழுந்து வீட்டிலிருந்த ஒரு முரட்டுப் பிரம்மை எடுத்து அபூலஹபின் தலையில் ஓங்கி அடித்தார். அவனது தலையிலிருந்து இரத்தம் பீரிட்டு வந்தது. அவனை அதட்டியவாறு கூறினார்:
     
இவருடைய எஜமானர் இங்கு இல்லையே என்று உனக்குக் கொஞ்சமும் வெட்கம் இல்லையா? இவர் பலவீனமானவர் என்று கருதிக் கொண்டு தானே இப்படி அடிக்கின்றீர்?
     
அபூலஹப் அப்பெண்மணியை எதிர்க்கத் திராணியில்லாமல் அவருடைய அதட்டலைக் கேட்க விரும்பாதது போல் காதைப் பொத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
     
இவ்வாறு அபூலஹப் போன்ற இஸ்லாத்தின் கொடிய பகைவனை இழிவுக்கும்  கேவலத்துக்கும் ஆளாக்கிய ரோஷமிக்க பெண்மணிதான் அன்னை உம்முல் ஃபஜ்ல் (ரலி) ஆவார். இவர் அண்ணல் நபி ( ஸல் ) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் மனைவி ஆவார்.

இஸ்லாத்தைத் தழுவுதல்:
   
உம்முல் ஃபஜ்ல் எனப்படும் இவர்களின் இயற்பெயர் லுபாபா பின்த் ஹாரிஸ் என்பதாகும். ஷலுபா பதுல் குப்றா என்றும் இவர்கள் அழைக்கப்படுவதுண்டு. இவர்கள் மக்காவின் பனூஹிலால் கோத்திரத்தைச் சேர்ந்த சிறப்பு மிக்க பெண்மணி.
     
பெண்களில் முதன் முதலில் அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் மீது ஈமான் கொண்டவர்  அன்னை கதீஜா நாயகி (ரலி) அவர்கள். அதற்கு அடுத்து அந்தப் பெரும் பேற்றைப் பெரும் பாக்கியம் - நம்பகமான அறிவிப்புகளின் படி- அன்னை உம்முல் ஃபஜ்ல் (ரலி) அவர்களுக்குத் தான் கிடைத்தது. அவ்வளவு ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்று ஷஅஸ்ஸாபிகூனல் அவ்வலூன்| எனும் சத்திய அழைப்பை முதன் முதலில் ஏற்றோரின் குழுவில் உம்முல் ஃபஜ்ல் அவர்களும் தனியோர் இடத்தைப் பெற்றார்கள்.
     
ஆயினும் அவர்களின் கணவர் அப்பாஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக பகிரங்கமாக அறிவித்த பிறகு தான் உம்முல் ஃபஜ்ல்  (ரலி) ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தார்கள். இது மக்கா வெற்றிக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நடந்தது.

அண்ணலாரின் மீது அன்பு:
   
அன்னை உம்முல் ஃபஜ்ல் (ரலி) அவர்களின் சகோதரிகள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் - ரஸுலின் மீது அதிக அன்பு கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள் என்பது மட்டுமல்ல, அண்ணலாரின் குடும்பத்தினருடன் சம்பந்தம் செய்து கொண்டதால் இவர்கள் அனைவரும் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு நெருக்கமானவர்களாய் இருந்தார்கள்.
     
அன்னை உம்முல் ஃபஜ்ல் அவர்களின் உடன் பிறந்த சகோதரிகளுள் ஒருவரான மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைத் துணைவி ஆவார். மற்றொரு சகோதரி ஸல்மா (ரலி) அண்ணலாரின் மற்றொரு பெரிய தந்தை ஹம்ஸா (ரலி) யின் மனைவியாவார். அவர்களின் மாற்றான்தாய் சகோதரியாகிய அஸ்மா பின்த் உமைஸ் (ரலி), அண்ணலாரின் பெரிய தந்தை மகன் ஜஅஃபர் (ரலி) அவர்களுக்கு மணம் முடிக்கப்பட்டார்கள்.
     
இந்த வகையில், உம்முல் ஃபஜ்ல் (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் பின்த் அவ்ஃப் பற்றி - அண்ணலாரின் குடும்பத்தினருடன் - சம்பந்தம் செய்து கொள்வதில் இவருக்கு நிகராக பாக்கியம் பெற்ற வேறு எந்தப் பெண்ணும் இல்லை” என்று  மக்கள்  பெருமிதத்துடன் கூறுவதுண்டு.
     
ஒருபோது நபி (ஸல்) அவர்கள் இந்நான்கு சகோதரிகளையும் குறித்து ‘உம்முல் ஃபஜ்ல், மைமூனா, ஸல்மா, அஸ்மா ஆகிய நால்வரும் வாய்யையுடன் இறைநம்பிக்கை கொண்ட பெண்களாவர்” என்று சிறப்பித்துக் கூறியதாக அல்லாமா இப்னு அப்துல் பர்(ரஹ்) அவர்கள் தமது ஷஇஸ்தீஆப்| எனும் நூலில் அறிவித்துள்ளார்கள்.
     
அன்னை உம்முல் ஃபஜ்ல் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) மீது அதிக அன்பும், அவர்கள் காட்டிய சத்திய நெறியின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள். அண்ணலாரும் அன்னை அவர்கள் மீது அளவிலா நேசம் வைத்திருந்தார்கள். அடிக்கடி அவர்களின் இல்லத்திற்குச் செல்வார்கள். இடையிடையே நண்பகல் நேரத்தில் நபியவர்கள் அன்னையின் வீட்டில் ஓய்வெடுப்பது வழக்கம். அப்போது அன்னையவர்கள் அண்ணலாரின் தலையைத் தம் மடியில் வைத்து தலையில் புழுதி, தூசி ஏதேனும் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி தலைமுடியை சீவி விடுவார்கள்.

ஒரு கனவின் விளக்கம்:
   
ஒரு முறை உம்முல் ஃபஜ்ல் (ரலி) அவர்கள், நபியவர்களின் புனித உடம்பின் ஒரு பகுதி தம்முடைய மடியில் இருப்பதாகக் கனவு கண்டார்கள். அதனை நபியவர்களிடம் சென்று கூறிய போது, என் அருமந்தப் புதல்வி ஃபாத்திமாவுக்கு அல்லாஹ் ஒரு ஆண் குழந்தையை வழங்குவான்: அதனை உங்கள் மடியில் அமர்த்திப் பாலூட்டுவீர்கள், இது தான் இந்தக் கனவின் விளக்கமாகும் எனத் தெரிகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
     
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு கண்மணி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு ஹுஸைன் (ரலி) பிறந்தார்கள். குழைந்தைக்குப் பாலூட்டி வளர்க்கும் பொறுப்பை உம்முல் ஃபஜ்ல் அவர்கள் ஏற்றார்கள். இதனால் நபியவர்களின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் அன்னை அவர்களுக்கு அதிக அளவு கண்ணியமும் மரியாதையும் அளித்து வந்தார்கள்.
     
ஒரு நாள் உம்முல் ஃபஜ்ல் (ரலி) அவர்கள் குழந்தை ஹுஸைனைத் தூக்கிக் கொண்டு நபியவர்களிடம் வந்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் பாசத்திற்குரிய பேரக் குழந்தையை உம்முல்  ஃபஜ்லிடமிருந்து வாங்கி அன்பு முத்தம் பொழிந்தார்கள்... செல்லக் குழந்தை அப்போது அண்ணலாரின் மீது சிறுநீர் பெய்து விட்டது. உம்முல் ஃபஜ்ல் அவர்கள் அண்ணலாரிடமிருந்து குழந்தையைப் பெற்றுக் கொண்டு ‘அட சுட்டிப்பயலே என்ன வேலை செய்து விட்டாய் நீ! இறைத் தூதரின் மீது  சிறு நீர் பெய்து விட்டாயே!” என்று குழந்தையைக் கொஞ்சம் கடுமையாக அதட்டினார்கள். அப்படி அதட்டியதைக் கூட நபியவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘அன்னையே, நீங்கள் என் அன்புச் செல்வத்தை அதட்டி என் மனத்தை நேகச் செய்து விட்டீர்கள்” என்று கூறினார்கள். பிறகு ஆடையில் சிறுநீர் பட்ட இடத்தை தண்ணீரால் கழுவினார்கள்.

அரஃபாவில் நோன்பு?
     
ஷஹஜ்ஜத்துல் விதாவில் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்கான பாக்கியம் அன்னை உம்முல் ஃபஜ்ல் (ரலி) அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சி புகாரியில் இடம் பெற்றுள்ளது.
     
ஹஜ்ஜில் அரஃபா மைதானத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த போது மக்களில் சிலர் அரஃபா தினத்தில் நபியவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்கள் என்று கருதிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு சிலர் எண்ணிக் கொண்டிருப்பது உம்முல் ஃபஜ்ல் (ரலி) அவர்களுக்குத் தெரிய வந்த போது ஒரு குவளைப் பாலை நபியவர்களுக்கு அனுப்பினார்கள். அதனை நபி (ஸல்) அருந்தினார்கள். அதன் மூலம் மக்களின் சந்தேகம் அகன்றது!
     
அன்னை உம்முல் ஃபஜ்ல் (ரலி) அவர்கள் நற்குணங்களின் உறைவிடமாய்த் திகழ்ந்தார்கள். வீரமும் ஈமானிய ரோஷமும் மார்க்கப் பற்றும் அவர்களின் விஷேசப் பண்புகளாய் விளங்கின. இறை வணக்கத்தில் அதிகம் அதிகம் ஈடுபடுவது அவர்களுக்கு ஆனந்தம் அளித்தது. அதற்கேற்ப அவர்களின் வாழ்க்கையில்  வாய்மையும் பேணுதலும் நிறைந்திருந்தது. சில அறிவிப்புகளின்படி திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்பது அவர்களின் வழமையாய் இருந்தது!
     
அன்னை உம்முல் ஃபஜ்ல் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மரணம் அடைந்தார்கள். அப்பொழுது அவருடைய கணவர் அப்பாஸ் (ரலி) அவர்களும் அருகில் இருந்தார். அவர்களின் ஜனாஸாவுக்கு கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
குழந்தைச் செல்வங்கள்
   
உம்முல் ஃபஜ்ல் - அப்பாஸ் இருவருக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தன. அவர்களில் அப்துல்லாஹ், உபைதுல்லாஹ் (ரலி அன்ஹும்) ஆகிய இருவரும் மார்க்கக் கலையில் மிகவும் சிறப்புற்று விளங்கினார்கள். இந்தச் சமுதாயத்தின் தூண்களாய்த் திகழ்ந்த மார்க்க வல்லுனர்களின் குழுவில் இவ்விருவரும் இடம் பெற்றுள்ளார்கள்.
     
உம்முல் ஃபஜ்ல் (ரலி) அவர்கள் மூலமாக 30 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அவற்றின் அறிவிப்பாளர்களில்-அவர்களின் மகனார் அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) போன்றோரும் மற்றும் அனஸ் இப்னு மாலிக் (ரலி) போன்ற கண்ணியத்திற்குரிய நபித் தோழர்களும் உள்ளனர்.
أحدث أقدم