அபுல் ஆஸ் இப்னு அர் ராபிஆ (ரலி)


அபுல் ஆஸ் இப்னு அர் ராபிஆ என்பவர் மக்காவில் அன்று இருந்த மிகப் பெரும்; குரைஷியர் குலத்தில் ஒன்றான அஷம்ஸ் கோத்திரத்தில் பிறந்தவர். இளமையில் மிகவும் துடிப்புடனும், மிகவும் அழகு வாய்ந்தவராகவும்,   அன்றைய அரபுக்குலத்திற்கே உரிய பெருமையையும்,  முன்னோர்களின் வழிவந்த உயர்குடிப் பெருமையையும் பெற்றவராகக் காணப்பட்டார்.

திருமறைக் குர்ஆனில் கூறப்பட்டிருப்பது போல கோடை கால சிரியா நாட்டை நோக்கிய வர்த்தகம் மற்றும் குளிர்கால எமன் நாட்டை நோக்கிய வர்த்தகத்தில் மிகவும் திறமை வாய்ந்தவராகவும், மக்களின் நன்மதிப்பைப் பெற்று பிறருக்காக ஒப்பந்த அடிப்படையில் வர்த்தகம் செய்து கொடுப்பவராகவும், மிகவும் நாணயமானவராகவும், நேர்மையாளராகவும், தன்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களிடம் நடந்து கொண்டார்.

முஹம்மது (ஸல்) அவர்களின் முதல் மனைவியும் மூஃமின்களின் தாயாரான கதீஜா பின்த் குவைலித் அவர்கள் அபுல் ஆஸ் அவர்களுக்கு தாய் வழிச் சித்தியாவார். அபுல் ஆஸ் அவர்கள் கதீஜா அவர்களிடம் மிகுந்த அன்பும் நேசமும் கொண்டிருந்தார்கள். தன் சொந்த மகன் போன்று அளவு கடந்த பாசத்தை கதீஜா (ரலி)  அவர்கள் காட்டினார்கள். முஹம்மது (ஸல்) அவர்களும் அபுல் ஆஸ் அவர்கள் மீது மிகுந்த அன்பு காட்டினார்கள்.

காலங்கள் நகர்ந்த வேகத்தில் முஹம்மது (ஸல்) மற்றும் கதீஜா அம்மையாரின் அருந்தவப் புதல்வியர்களில் மூத்தவரான ஜய்னப் அவர்கள் திருமண வயதை எட்டியதும், அன்றைய மக்காவில் இருந்த அத்தனை மிகப் பெரிய குலத்தவர்களும்,   ஜய்னப் அவர்களை மணமுடிக்க போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. தந்தையோ நன்னம்பிக்கையாளர் எனப்போற்றப்பட்டவர் (அல் அமீன்), தாயாரோ பரிசுத்தமானவள் என்ற பொருளுடன் கூடிய அத்தாஹிரா என்றழைக்கப்பட்டவர், இரண்டு பேருடைய குலங்களும் அன்று மிகவும் கண்ணியமாக மதிக்கப்பட்ட உயர்குடியின் வழிவந்தவர்கள். இத்தகைய பெருமையைப் பெற்ற ஜய்னப் அவர்கள் நல்லொழுக்கங்கள் நிறைந்தவராகவும், அழகிய நல்மங்கையாகவும் திகழ்ந்தார்கள். எனவே இத்தகைய நற்பேறு பெற்ற இந்த மங்கையை அடையப் போகும் அதிர்~;டசாலி யார் என மக்கமா நகரமே காத்துக் கொண்டிருந்த வேளையில், இறைவனின் நாட்டம் அபுல் ஆஸ் அவர்களை அத்தகைய நற்பேற்றைப் பெற்றவராக்கியது.

இந்த இளந்தம்பதிகள் இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்த சில ஆண்டுகளிலேயே இஸ்லாம் என்னும்  ஒளியின் கீற்றுகள் மெல்ல மெல்ல மக்காவின் அடிவானத்தில் இருந்து வெளிக்கிளம்ப ஆயத்தமானது. நேற்று வரை ஜய்னப் அவர்களின் தந்தையாக இருந்த முஹம்மது அவர்கள், இன்று இறைத்தூதர் (ஸல்) என்று மாற்றம் கண்டு, உலகிற்கோர் அருட்கொடையாக மனித குலத்தை வாழ்விக்க இறைவனால் அனுப்பப்பட்டவரானார். நபியே! நீர் உம்முடைய இரத்த சொந்தங்களை முதலில் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பீராக! என்ற இறைச்செய்தியின் கட்டளையைச் செவிமடுத்தவர்களாக இறைத்தூதர் அவர்களது குடும்பத்தில் இருந்து, முஹம்மது (ஸல்) அவர்களது துணைவியார் கதீஜா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதனையடுத்து இவர்களின் புதல்வியர்களான ஜய்னப், ருக்கையா, உம்மு குல்தும், பாத்திமா ஆகியோரும் இஸ்லாத்தை ஏற்றனர். இவர்களில் பாத்திமா அவர்கள் தான் மிகவும் இளையவராக இருந்தார்கள்.

ஜய்னப் அவர்கள் இஸ்லாத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, தன்னை முழுமையாக இறை மார்க்கத்தில் அர்ப்பணித்துக் கொண்டிருந்த போதிலும், இவரது கணவரான அபுல் ஆஸ் அவர்கள் தன்னுடைய பழைய மார்க்கத்தில் இருந்து விடுபட விரும்பாமல் அதிலேயே நிலைத்திருந்தார். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மூஃமினான பெண்களை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு திருமணம் செய்யக் கூடாது என்ற இறைக்கட்டளை அப்பொழுது வந்திருக்கவில்லை.

இஸ்லாத்தின் ஒளிக்கதிர்கள் மக்கா முழுமையையும் ஆட்சி புரிய ஆரம்பித்தவுடன் அதன் வெளிச்சப் புள்ளிகள் சிலருக்கு இதமான காலைக் கதிராகவும், சிலருக்கு உச்சி வெயிலின் கொடுமையாகவும் பட்டது. மக்காவின் குரைஷித் தலைவர்களுக்கு உச்சி வெயிலின் கொடுமையாகப்பட்டமையால், இதை எவ்வாறு தடுப்பது என்று கை கொண்டு சூரியனை மறைக்க முயற்சி செய்தனர். முஹம்மது வீட்டின் பெண் பிள்ளைகளை இனியும் நம் வீட்டு மருமகள்களாக வைத்திருக்காமல் பிறந்தகத்திற்கே அனுப்பி விடுவதன் மூலம் முஹம்மதுக்கு நாம் ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானமாயிற்று.

அதன் மூலம் அவர் தன்னுடைய மக்கள் வாழாவெட்டியாக வாழ்வதையும், இந்தக் கொடுமைகளை எல்லாம் அவர் பார்த்தபின்பு தன்னுடைய இறைஅழைப்புப் பணியை விட்டு விட்டு நம் சொல்படி கேட்டு விடுவார் என்ற நம்பிக்கையுடன், முதலில் குறைஷித் தலைவர்கள் அபுல் ஆஸ் அவர்களைச் சந்திக்கச்ள சென்றனர். அபுல் ஆஸே! உன்னுடைய மனைவி ஜய்னப்பை விவாகரத்துச் செய்து, அவரது தகப்பனார் வீட்டுக்கு அனுப்பி விடும்ஷ, என்று குறைஷியர் கூட்டம் அவரை வற்புறுத்தியது மட்டுமல்லாது, இவரை விட அழகான, நல்ல பண்புள்ள மனைவியை உனக்கு நாங்கள் மணமுடித்து வைக்கின்றோம் என்றும் அந்தக் கூட்டம் கூறி நின்றது.

இறைவன் மீது சத்தியமாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன். அவருடைய இடத்தில், இந்த உலகத்தில் இருக்கும் எந்தவொரு பெண்ணையும் என்னால் மணமுடித்து வாழ இயலாது, எனக்கு அதில் விருப்பமில்லை, என்பது தான் அபுல் ஆஸ் அவர்களின் பதிலாக இருந்தது.  ஆனால் பெருமானார் (ஸல்) அவர்களின் ஏனைய பெண்மக்களான ருக்கையா மற்றும் உம்மு குல்தூம் ஆகிய இருவருடைய கணவன்மார்களும், இருவரையும் விவாகரத்துச் செய்து பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களுடைய மக்கள் பிறந்தகம் வந்ததற்கு, வருத்தமடைவதற்குப் பதிலாக மகிழ்ச்சியடைந்தார்கள். மேலும், கூடிய விரைவில் ஜய்னப் அவர்களும் பிறந்தகம் அனுப்பப்பட்டு விடுவார் என்றும் எதிர்பார்த்திருந்தார்கள். தவிர அபுல் ஆஸ் அவர்கள் குரைஷித் தலைவர்கள் சொல்வது போல் கேட்டு நடக்க அப்பொழுது எந்தவித சட்டமோ, அவற்றை இயற்றி நடைமுறைப்படுத்தக் கூடிய அதிகாரம் பெற்றவர்களோ கிடையாது.

இந்த நிகழ்வுகளினூடே முஹம்மது (ஸல்) அவர்கள், மதினாவில் குடியேறி தமது தூதுத்துவத்தை வலுவாக்கிக் கொண்டிருந்தார்கள்.  அதன் பின் முன்னைக் காட்டிலும் குரைஷிகள் மிகவும் பகை கொண்டவர்களாக மாறி, இஸ்லாம் மேலும் பரவ விடாமல் தடுப்பதற்குண்டான வேலைகளில் இறங்கினர். இதன் அடிப்படையில் இஸ்லாமியப் படையும், குரைஷிகளின் நிராகரிப்போர் படையும் பத்ர் என்னும் இடத்தில் போரைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகியது. இந்தப் போரில் கலந்து கொள்வதற்கு அபுல் ஆஸ் அவர்களுக்கு விருப்பம் இல்லை எனினும், அந்தக் குரைஷிக் குலங்களில் இவர் ஒரு மதிப்புமிக்கவராக இருந்தமையால் கண்டிப்பாக போரில் கலந்து கொள்ள வேண்டியது அவசியமாகியது. பத்ருப் போரில் மக்கத்து நிராகரிப்பாளர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டதனால், பலர் கொல்லப்பட்டனர், பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அவ்வாறு சிறை பிடிக்கப்பட்டவர்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகனார் மற்றும் ஜய்னப் அவர்களின் கணவனரான அபுல் ஆஸ் அவர்களும் ஒருவராக இருந்தார்.

ஒவ்வொரு பிணைக்கைதிக்கும் அவரவர் தகுதிக்குத் தக்கவாறு ஆயிரம் முதல் நான்காயிரம் திர்ஹம்கள் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்திருந்தார்கள். இதில் ஒவ்வொரு குடும்பத்தவரும் தத்தமது பிரதிநிதிகளை மக்காவில் இருந்து பணயத் தொகையுடன் அனுப்பி, பணத்தைச் செலுத்தி விட்டு சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். ஜய்னப் அவர்களும் தமது கணவனாரை மீட்க தம் சார்பாக ஒருவரை பணயத் தொகையுடன் அனுப்பி வைத்திருந்தார்கள். அந்தப் பிரதிநிதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல் ஆஸ் அவர்களை மீட்டுச் செல்வதற்கான பணயப் பொருளுடன் வந்தார். அந்தப் பணயப் பொருளைப் பார்த்தவுடன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவராக அவரது முகம் கவலையால் வாடி சோகம் ததும்பி நின்றது. ஆம், ஜய்னப் அவர்கள் தம் கணவரை மீட்க, தமது தாயார் கதீஜா அவர்கள் இறப்பதற்கு முன் தனக்கு அளித்திருந்த நெக்லஸை பணயத் தொகையாக அனுப்பி இருந்ததே, நபிகளாரின் கவலைக்குக் காரணமாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கிக் கூறினார்கள் :

எனதருமைத் தோழர்களே, அபுல் ஆஸை மீட்பதற்காக ஜய்னப் இந்தப் பொருளைப் பணயப் பணமாக அனுப்பி உள்ளார். நீங்கள் விரும்பினால், இவரை விடுதலை செய்து, இந்தப் பொருளையும் அவரிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். இல்லை எனில் நீஙகள் விரும்பியவாறு நடந்து கொள்ளலாம் என்றார்கள்.

நபிகளாரின் மனச்சுமையை கண்ட அண்ணலாரின் தோழர்கள், உங்கள் விருப்பப்படியே நாங்கள் செய்கின்றோம் என்று கூறி, அபுல் ஆஸ் அவர்களி;ன் பணயத் தொகையைத் திருப்பிக் கொடுத்து விட்டனர். அபுல் ஆஸ் அவர்களை விடுதலை செய்வதற்கு முன், தன் மகள் ஜயனப் அவர்களை தன்னிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற நிபந்தனையை, அண்ணலார் (ஸல்) அவர்கள் அவருக்கு  விதித்தார்கள்.

மக்காவை அடைந்தவுடன், அபுல் ஆஸ் அவர்கள் தம் துணைவியார் ஜய்னப் அவர்களை அழைத்து, உங்கள் தகப்பனாருடைய தோழர்கள் உங்களை மதினாவிற்கு அழைத்துச் செல்வதற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே தங்கள் பொருள்களை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராகுங்கள் என்று கூறி, அவரே முன்னின்று ஜய்னப் அவர்களின் பொருள்களை ஒட்டகையில் ஏற்றி, தன் தமயனார் அம்ர் இப்னு அர்ராபிஆ அவர்களை அழைத்து, பத்திரமாக மக்கா எல்லையில் நிற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களிடம் ஒப்படைத்து விட்டு வருமாறு அனுப்பி வைக்கின்றார்கள்.

அம்ர் இப்னு அர்ராபிஆ அவர்களும், தம் தோளின் மீது அம்புகளையும், வில்லையும் எடுத்து வைத்துக் கொண்டு, அந்தப் பகல் வேளை நேரத்தில், மக்காவின் அனைத்து மக்களும் பார்த்துக் கொண்டிருக்க அவர்களின் முன்பாகவே அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றார்.

இந்தக் காட்சியைக் கண்டு கொண்டிருந்த குரைஷியர்கள் கோபமடைந்தவர்களாக, அனைவரும் ஒன்று கூடி, இருவரையும் துரத்திச் சென்று, மக்கா எல்லையில் வைத்து இடை மறிக்க முயன்றனர். அம்ர் அவர்கள் மிகவும் கோபமடைந்தவர்களாக, இறைவன் மீது சத்தியமாக! எவராவது எங்களைத் தடுக்க முயல்வீர்களானால், இந்த அம்பைக் கொண்டே உங்களைக் கொலை செய்து விடுவேன் என்று தன்னைத் தடுக்க வந்தவர்களை எச்சரிக்கை செய்தார்கள்.

அபு சுஃப்யான் இப்னு ஹத் என்பவர் அப்பொழுது மக்கா குரைஷிகளின் அணியில் இருந்தவர், அம்ரை அணுகி, அம்பை முதலில் தாழ்த்தி விட்டு, நாங்கள் சொல்வதைச் சிறிது செவிமடுத்துக் கேட்பீராக என்றார்கள். அம்ர் அவர்களும் பேச்சு வார்த்தைக்கு சம்மதித்தவுடன், நீங்கள் இப்பொழுது செய்து கொண்டிருப்பது, அதாவது இவ்வளவு மக்களின் முன்னிலையிலும் ஜய்னப் அவர்களைக் கூட்டிச் சென்று மதினத்துத் தூதுவர்களிடம் ஒப்படைப்பது என்பது ஒரு அறிவார்ந்த செயலல்ல. சற்று சில நாட்களுக்கு முன் பத்ரில் என்ன நடந்தது என்பதும், இவரது தந்தையால் நாம் எந்தளவு பாதிப்பிற்குள்ளானோம் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த நிலையில் இவரை நீங்கள் முஹம்மது வசம் ஒப்படைக்க அழைத்துச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் நாம் அவருக்குப் பயந்து தான் இவரை அனுப்பி வைக்கின்றோம் என்று நம்மை ஏளனமாத் தூற்றுவார்கள். எனவே இப்பொழுது நீங்கள் இவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். சில நாட்கள் கழித்து யாரும் அறியாத வண்ணம் இரவு நேரத்தில் அழைத்துச் சென்று முஹம்மது அவர்களின் ஆட்களிடம் ஒப்படைப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும், மேலும்  அவரைத் தடுத்து வைப்பதில் நமக்கு எந்த லாபமும் இல்லை என்றும் கூறினார்.

அபு சுஃப்யான் அவர்களின் இந்த அறிவுரையைக் கேட்ட அம்ர், ஜய்னப் அவர்களை திரும்பவும் மக்காவிற்குள் அழைத்துச் சென்று விட்டார். சில நாட்கள் கழித்து, தன்னுடைய சகோதரர் தனக்குக் கட்டளையிட்டவாறு, ஒரு இரவில் யாரும் அறியா வண்ணம் ஜய்னப் அவர்களை அழைத்துச் சென்று, மக்காவின் வெளியில் காத்திருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்தார்.

ஜய்னப் அவர்கள் மதினாவுக்கு அனுப்பப்பட்டு, பல ஆண்டுகளாக அம்ர் இப்னு ஆஸ் அவர்கள் மக்காவிலேயே தங்கி விட்டார்கள். மக்கா வெற்றி கொள்ளப்படுவதற்கு சற்று முன்பாக சிரியாவிற்குச் சென்று, வர்த்தகத்தை முடித்து விட்டு 100 ஒட்டகை நிறைய பொருட்களுடனும், 170 ஆட்களுடனும் அம்ர் இப்னு ஆஸ் அவர்கள் மதினாவை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மதினாவை இந்தப் பயணக் கூட்டம் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்தக் கூட்டத்தை திடீரெனத் தாக்கி, பொருள்களைக் கைப்பற்றிக் கொண்டதோடு, அதில் இருந்த ஆட்களையும் கைதிகளாகப் பிடித்துக் கொண்டார்கள். ஆனால் அபுல் ஆஸ் அவர்களோ எப்படியோ தப்பித்து, அந்தக் காரிருள் நேரத்தில் மிகவும் கவனமாக மதினமா நகருக்குள் நுழைந்து ஒருவழியாக ஜய்னப் அவர்களின் வீட்டை அடைந்து, ஜய்னப் அவர்களிடம் அடைக்கலம் கோரினார்கள். ஜய்னப் அவர்களும் அடைக்கலம் தந்துதவினார்கள்.

அதிகாலை நேரம் மக்கள் சுப்ஹுத் தொழுகைக்காகக் கூடினார்கள். நாயகத் திருமேனி எம்பெருமானார் (ஸல்) அவர்களும், தொழவைக்கத் தயாராகி, அல்லாஹு அக்பர் என்று தக்பீரும் சொல்லி தொழுகையை ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது பெண்கள் பகுதியில் இருந்து, ஜய்னப் அவர்களின் குரல் இவ்வாறு ஒலித்தது. எனது மக்களே! நான் ஜய்னப், முஹம்மது அவர்களின் மகளார் பேசுகின்றேன். நான் அபுல் ஆஸ் என்பவருக்கு என் வீட்டில் அடைக்கலம் தந்திருக்கின்றேன். நீங்களும் அவருக்கு அபயம் அளியுங்கள்ஷ, என்று கூறினார்.

தொழுகையை முடித்து விட்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கித் திரும்பி, எனதருமைத் தோழர்களே, நான் செவியேற்றதை நீங்களும் செவியேற்றீர்களா? என்று கேட்டார்கள். ஆம்! யாரசூலுல்லாஹ், என்று மக்கள் மறுமொழி பகர்ந்தார்கள். என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! நீங்களும் நானும் இப்பொழுது கேட்டவற்றை, அதை செவியேற்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. அவர் முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்புக் கோரியிருக்கின்றார்.

வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் தனதருமை மகள் ஜய்னப் அவர்களைப் பார்த்து, ஜய்னபே அபுல் ஆஸ் அவர்களுக்கு வீட்டின் ஓரிடத்தில் அவருக்காக தனியறை அமைத்துக் கொடுத்து, அவருக்கு நீ சட்டப்படி மனைவியானவரல்ல என்பதையும் அவருக்குத் தெரிவித்து விடு என்று கூறினார்கள். அபுல் ஆஸ் அவர்களது பயணக் கூட்டத்தை முற்றுகையிட்டு, பொருள்களையும், கைதிகளையும் பிடித்து வைத்திருந்த தனது தோழர்களைப் பார்த்து, அவர் மீது இறக்கம் காட்டுபவர்களாக இருந்தால், நீங்கள் கைப்பற்றியிருக்கும் அவரது பொருள்களைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள், நாம் இறைவனால் அருள் செய்யப்படுவோம் என்று கூறிவிட்டு, அதுவல்லாமல் இதனைச் செய்ய சம்மதிக்காதபட்சத்தில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் இறைவனால் நமக்குப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட போர்ப் பொருள்களாக ஆகிவிடும் என்றும் இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்.

நாங்கள் இந்தப் பொருட்களை அவரிடமே ஒப்படைத்து விடுகின்றோம் என்று நபித்தோழர்கள் மறுமொழி பகர்ந்தார்கள். அந்தத் தோழர்கள் அபுல் ஆஸ் அவர்களைப் பார்த்து, குரைஷியர்களில் நீங்கள் நல்ல மனிதராக இருக்கின்றீர். அதிலும் இறைத்தூதரவர்களின் மருமகனாகவும் இருக்கின்றீர். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று கூறிவிட்டு, இந்தப் பொருள்களை எல்லாம் உங்களிடம் ஒப்படைத்து விடுகின்றோம். எவற்றை எல்லாம் மக்கத்துவாசிகள் உங்களிடம் ஒப்படைத்திருக்கின்றார்களோ அவற்றை வைத்துக் கொண்டு, மதினாவிலேயே தங்கி, உங்கள் விருப்பப்படி அவற்றை நீங்கள் அனுபவித்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.

ஒரு புதிய மார்க்கத்தில் என்னை இணைத்துக் கொள்ளும் போதே, பிறரை மோசடி செய்து விட்ட பாவத்துடன் என்னை அதில் நுழைத்துக் கொள்ளச் சொல்கின்றீர்களா? என்று அபுல் ஆஸ் அவர்கள் மிகவும் கோபமாகக் கேட்டார்கள். இந்த நிலையில் அபுல் ஆஸ் அவர்கள், மக்காவிற்கு தன்னுடைய வியாபாரப் பொருள்களுடன் சென்று, அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு, என்னுடைய குரைஷி மக்களே, என்னிடம் உங்களது பணத்தை ஒப்படைத்து விட்டு, இன்னும் யாரும் அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றீர்களா? எனக் கேட்டார்கள். இல்லை, உங்களுக்கு இறைவன் அருள் செய்யட்டும், நீங்கள் நேர்மையாளராகவும், நன்னம்பிக்கைக்குரியராகவும் இருக்கின்றீர்கள் என்று குரைஷிகளிடம் இருந்து ஒருமித்துப் பதில் வந்தது.

உங்களுக்கு உரிமையானவை அனைத்தையும் நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், இப்பொழுது நான், வணங்கத்தக்க இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருக்கின்றார்கள் என்று கூறி, குரைஷியர்களின் முன்பாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள். இறைவன் மீது சத்தியமாக,  உங்களது பொருட்களை நான் அபகரிக்கத் திட்டம் தீட்டடித்தான் நான் மதினா சென்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்று நீங்கள் மட்டும் கருத மாட்டீர்கள் என்று இருந்திருந்தால், நான் முஹம்மது அவர்களுடன் மதினாவில் இருந்த போதே  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருப்பேன் என்றும், இப்பொழுது உங்கள் அனைவரது பொருள்களையும் நான் ஓப்படைத்து விட்டேன், இப்பொழுது முதல் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிமாகி விட்டேன் என்று குரைஷியர்களின் முன்பாகவே தன்னுடைய இறைநம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.

அதன்பின் அபுல்ஆஸ் அவர்கள் மதினாவிற்குத் திரும்பி வந்ததும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபுல்ஆஸ் அவர்களை எதிர்கொண்டு வரவேற்று, ஜய்னப் அவர்களையும் திருப்பி அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அவர் என்னிடம் கூறியதில், உண்மையுடனும், அவர் என்னிடம் சத்தியம் செய்ததில் வாய்மையுடனும் நடந்து கொண்டார் என்று கூறினார்கள்.
أحدث أقدم