உம்மு ஹரம் பின்த் மல்ஹான் (ரலி)

உம்மு ஹரம் பின்த் மல்ஹான் (ரலி)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை கூறினார்கள் :

'எனது உம்மத்தவர்களில் ஒரு இராணுவப் படையானது அரியணையில் அமர்ந்திருக்கும் அரசனைப் போல (கம்பீரமாகக்) கடலில் பயணம் செய்யும்" என்றார்கள்

உம்மு ஹரம் கேட்டார்கள், அவர்களில் ஒருத்தியாக நான் இருப்பேனா..! அதற்கு, 'அவர்களில் முதன்மையானவர்களில் ஒருத்தியாக நீங்கள் இருப்பீர்கள்" என்று கூறினார்கள்.

உம்மு ஹரம் அவர்கள் மிகச் சிறந்த குடும்பத்தில் பிறந்தவர்களாவார்கள். அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் தாயார் இவரது சகோதரியாவார். இவரது இரண்டு சகோதரர்கள், ஹரம் பின் மல்ஹான் (ரலி) மற்றும் ஸலீம் பின் மல்ஹான் (ரலி) ஆகியோர்கள் பத்ர் மற்றும் உஹத் யுத்தத்தில் பங்கேற்றவர்களாவார்கள். அபூ தல்ஹா (ரலி) என்ற மிகச் சிறந்த நபித்தோழருக்கு திருமண உறவுடையவர்களாக இருந்தார்கள். உம்மு ஹரம் பின்த் மல்ஹான் (ரலி) அவர்களின் கணவர் அம்ர் பின் கைஸ் பின் ஸைத் (ரலி) அவர்களாவார்கள், இன்னும் இவர்களது மகனாரான கைஸ் பின் அம்ர் பின் கைஸ் (ரலி) - இந்த இரண்டு மிகப் பெரும் நபித்தோழர்கள் பத்ருப் போரில் வீர மரணமடைந்தவர்களாவார்கள். இவரது கணவர் பத்ருப் போரில் இறந்து போனதன் பின்னர் உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள், இந்தத் திருமண உறவின் மூலமாக முஹம்மது பின் உபாதா பின் ஸாமித் என்ற மகனாரைப் பெற்றெடுத்தார்கள்.

எளியோர்க்கு இரங்குவது, தான தர்மங்கள் செய்வது என்பது அவர்களது பிறப்புடன் பிண்ணிப் பிணைந்த பண்பாக இருந்தது. இவரது முழு நோக்கமும் இஸ்லாத்தின் நன்மைக்காக தன்னையே இழந்து வீர மரணமடைய வேண்டும் என்பதாகவே இருந்தது, இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தனக்குக் கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பத்தையும் அவர்கள் விட்டு விடுவதில்லை. மதீனாவில் புறநகர்ப் பகுதியான கூஃபாவில் தான் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த பொழுது, மதீனாவிற்குள் நுழைவதற்கு முன்பாக கூஃபா சற்று ஓய்வெடுத்து தங்கிக் கொண்டார்கள். அன்றைய தினத்தில், உம்மு ஹரம் அவர்கள் இஸ்லாத்தை மற்றும் ஏற்றிருக்கவில்லை, மதினாவில் உள்ள அன்ஸாரிப் பெண்களில் முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதோடல்லாமல் அதனை அறிவிப்பும் செய்தார்கள், இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மதீனா வருகைக்கு முன்பதாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெருமை மிக்க பெண்மணியாகத் திகழ்ந்தார்கள். உம்மு ஹரம் (ரலி) அவர்கள் மிகவும் நீதமான, நடுநிலையாகச் சிந்திக்கக் கூடிய பெண்மணியாவார், இறையச்சமுடையவராகவும், நல்லடியாராகவும் திகழ்ந்தார்கள். அன்ஸாரிப் பெண்களிலேயே மிகவும் உன்னதமான இடத்தைப் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவர்களது வீட்டிற்கு அடிக்கடி செல்லக் கூடியவர்களாகவும், இன்னும் களைப்பேற்படும் சமயங்களில் அங்கு சென்று ஓய்வெடுக்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹரம் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம், அது தனக்குக் கிடைத்த பெரும் பேறாக, கௌரவமாகக் கருதி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவரது வீட்டிற்கு வருகை தந்த பொழுது அங்கு இருந்திருக்கின்றார். அங்கு இருந்த அவருடைய தாயும், சகோதரியும் இருந்தார்கள். அப்பொழுது அனைவரையும் எழச் சொல்லி, கடமையல்லாத சிறப்புத் தொழுகை ஒன்றை முன்னின்று நடத்தினார்கள். தொழுகை முடிந்ததன் பின்பாக, எங்களது குடும்பத்தாரின் இம்மை மற்றும் மறுமைக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

உம்மு ஹரம் (ரலி) அவர்கள் அம்ர் பின் கைஸ் பின் ஸைத் (ரலி) அவர்களைத் தான் முதலில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு கைஸ் என்ற மகன் இருந்தார். முன்பு நாம் கூறியது போல, இருவரும் பத்ர் யுத்தத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இணைந்து போரிட்டவர்களாவார்கள். உஹத் யுத்தத்தில் களம் புகுந்த இந்த இருவரும் வீரமரணமடைந்தார்கள். முதல் கணவர் உஹத் யுத்தத்தில் மரணமடைந்ததன் பின்னாள், இஸ்லாத்தின் வீரத்திருமகன்கள் வரிசையில் போர்ப்படைத் தளபதியாக வீற்றிருக்கின்ற உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களை மணந்து கொள்கின்றார்கள். இவர்களுக்கு முஹம்மத் பின் உபாதா (ரலி) என்ற திருமகனார் பிறந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்து கொள்வதற்காக மதீனாவிலிருந்து மக்காவிற்கு சென்ற மூன்று குழுக்களிலும் இடம் பெற்ற சிறப்புப் பெருமையைப் பெற்றவர்களாக இருந்தார்கள், அதாவது முதல் குழுவில் சென்ற ஆறு பேர்களில் ஒருவராக, இரண்டாவது குழுவில் சென்ற 12 நபர்களில் ஒருவராக, மூன்றாவது குழுவில் சென்ற 72 நபர்களில் ஒருவராக இருந்தார்.

உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் நல்ல கணவராகவும், நல்ல தந்தையாகவும் திகழ்ந்தார்கள். உம்மு ஹரம் (ரலி) அவர்களின் முதல் கணவருக்குப் பிறந்தவரான அப்துல்லா பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு நல்ல தந்தையாகவும் இவர்கள் திகழ்ந்தார்கள். தனக்குப் பிறந்த குழந்தைகளின் எந்தளவு பாசத்தைப் பொழிந்தாரோ அதேபோன்ற பாசத்தை தனது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளின் மீதும் பொழிந்த அருட்கொடைக்குரியவராகத் திகழ்ந்தார்கள். கிப்லாவின் திசையை மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து மக்காவின் திசையை நோக்கித் திருப்பிய ஆயத் இறங்கிய பொழுது நடந்த கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்ட நபர்களில் ஒருவராக முஹம்மது பின் உபாதா (ரலி) அவர்கள் இருந்தார்கள். இதன் மூலம் இரண்டு கிப்லாக்களையும் முன்னோக்கித் தொழுத சிறப்புத் தகைமை பெற்றவர்களில் ஒருவராக அவர்கள் திகழ்ந்தார்கள்.

உம்மு ஹரம் (ரலி) அவர்கள் வழியாக பல நபிமொழிகளை மிகச் சிறந்த நபித்தோழர்களான உபாதா பின் ஸாமித் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி), உமைர் பின் அஸ்வத் (ரலி), அதா பின் யாஸர் (ரலி) மற்றும் யாலி பின் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) ஆகியோர்கள் அறிவித்திருக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதான அன்பும் மரியாதையும் உம்மு ஹரம் (ரலி) அவர்களின் மனதில் மிகவும் அதிகம் நிலை கொண்டிருந்தது. எப்பொழுதெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹரம் வீட்டிற்கும் அல்லது உம்மு ஹரம் அவர்களின் சகோதரியான உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வருகை தருகின்றார்களோ அப்பொழுது, இவர்களின் சந்தோசத்திற்கு எல்லையே கிடையாது என்ற உணர்வைப் பெற்றவர்களாகி விடுவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காக சிறப்பான உணவுப் பதார்த்தங்களைத் தயார் செய்வதும், அவர்கள் படுத்து ஓய்வெடுத்து கொள்வதற்காக படுக்கை வசதிகளையும் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து தரக் கூடியவர்களாக இருந்தார்கள். இந்தச் சூழ்நிலைகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நல்லதொரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதோடு, மன நிம்மதியையும், சந்தோசத்தையும் கொடுத்தது. நீங்கள் அடிக்கடி உம்மு ஹரம் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வருகை தருவதன் காரணமென்ன என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருமுறை வினவப்பட்ட பொழுது, எப்பொழுது இவரது இரண்டு சகோதரர்களுக்கும் பீர் மாஊனா போரில் இஸ்லாத்திற்காக தங்களுடைய இன்னுயிர்களை ஈந்தார்களோ அப்பொழுதிலிருந்து அவர்கள் மீது நான் இரக்கம் கொண்டேன், அவர்களது குடும்பத்தார்களுக்கு ஆறுதலாக என்னுடைய வருகை அமைவதோடு, அவர்களது தேவைகள் என்னவென்பதை அறிந்து அவற்றைச் செய்து கொடுப்பதற்காகவுமே நான் அவர்களது வீட்டிற்கு வருகை தரக் கூடியவர்களாக இருக்கின்றேன் என்று கூறினார்கள்.

பொதுவாக அன்ஸார்கள் அற்பணிப்பிற்கும், தாராளத்தன்மைக்கும் இன்னும் விருந்தோம்பலுக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்தார்கள் எனினும், அவர்களில் மிகச் சிறந்த எடுத்துக் காட்டானவர்களாக உம்மு ஹரம் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். அவர்கள் இந்த சிறப்புக்கு கீழ்க்கண்ட திருமறைக் குர்ஆனின் வசனங்களே உந்துதலாக இருந்தன.

இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப்பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். (59:9)

மக்காவிலிருந்து தங்களது இல்லங்களைத் துறந்து மதீனாவிற்கு அடைக்கலம் தேடி வந்த மக்களின் மீது அன்ஸார்கள் பொழிந்த கருணைணையும், இரக்கத்தையும், விருந்தோம்பல் பண்மையும் இன்னும் தியாகத்தையும் இறைவனே தனது திருமறைக் குர்ஆனில் மெச்சிப் புகழ்ந்து பாராட்டி இருப்பதோடு, இனி காலம் காலமாக வரும் சமுதாயத்தினருக்கு அதனை இரவாப் பாடமாகவும் நிலைப்படுத்தி விட்டான். இதில் உம்மு ஹரம் (ரலி) அவர்களின் தயாள குணத்தின் மூலமாக அளவிட முடியாத அருட்கொடைகளைப் பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள் என்றால் அதில் மிகையில்லை. மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆசியையும், நல்லெண்ணத்தையும் பெற்றுக் கொண்டவர்களாக அவர்களது குடும்பத்தவர்கள் திகழ்ந்தார்கள். இதனை விட ஒருவருக்கு என்ன தான் இந்த உலகத்தில் தேவை இருக்கின்றது? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தைச் சந்திக்கும் வரையிலும் உம்மு ஹரம் அவர்களுடைய சேவை குறித்து மிகவும் சந்தோசப்பட்டவர்களாக இருந்தார்கள்.

ஹிஜ்ரி 27 ல் உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, சைப்ரஸ் தீவின் மீது படையெடுத்து அந்தப் பூமியை வெற்றி கொள்ளுமாறு முஆவியா பின் அபூ சுஃப்யான் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்தத் தீவைச் சென்று சேர்வதற்கு ஒரு கப்பல் படையும் தயார் செய்யப்பட்டது. இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக கப்பல் படை இந்தப் போருக்காகத் தான் தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பல் படையில் உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் தனது மனைவி உம்மு ஹரம் (ரலி) அவர்களுடன் பயணம் செய்தார்கள். இன்னும் கவர்னர் முஆவியா (ரலி) அவர்களுடன் அவரது மனைவி ஃபக்தாஹ் பின்த் குர்தா (ரலி) அவர்களும் பயணம் செய்தார்கள்.

உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் ஹமஸ் பகுதியின் கடற்கரையில் தங்கியிருந்த பொழுது, தான் அவரைச் சந்தித்தாக உமைர் பின் அஸ்வத் பின் அன்ஸி அவர்கள் எழுதுகின்றார்கள். அப்பொழுது, எனது உம்மத்தவர்கள் இறைவழியில் போர் செய்யும் பொருட்டு கடற்பயணம் செய்வார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை நான் செவிமடுத்தேன் என்று உம்மு ஹரம் (ரலி) அவர்கள் அப்பொழுது உமைர் பின் அஸ்வத் பின் அன்ஸி அவர்களிடம் கூறினார்கள். அப்பொழுது நான் அவர்களில் ஒருவராக நான் இருப்பேனா என்று நான் கேட்டதற்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள். இதன் மூலம் உம்மு ஹரம் (ரலி) அவர்கள் இறைவனது பாதையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக எந்தளவு ஆர்வத்துடன் இருந்திருக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்தப் போரில் அல்லாஹ்வின் பேருதவியால் முஸ்லிம்கள் வெற்றி வாகை சூடினார்கள். சைப்ரஸ் போருக்கான கடற்பயணம் முடிந்ததன் பின்னர், சைப்ரஸ் ல் தங்கியிருந்த பொழுது நில மார்க்கமாக ஒரு குதிரையில் ஏறிப் பயணம் மேற்கொண்டார்கள். அப்பொழுது அந்தக் குதிரை மிரண்டு, துரதிருஷ்டவசமாக அந்தக் குதிரையிலிருந்து உம்மு ஹரம் (ரலி) அவர்கள் தவறி கீழே விழுந்து விட்டார்கள். அப்பொழுது ஏற்பட்ட கழுத்து எலும்பு முறிவு அவர்களது உயிரையே பறிக்கக் காரணமாக அமைந்து விட்டது. இறைவழியில் உயிர் துறக்க வேண்டும் என்ற அவர்களது ஆசை இதன் மூலம் நிறைவேறி விட்டது. அவரது உடல் சைப்ரஸ் ல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின்படி, கடற்போரின் பொழுது இறைவழியில் உயிர் துறந்த நற்பேறுக்கு உரித்தானவராக, வீர உயிர்த்தியாகிகளின் பட்டியிலில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆசியைப் பெற்று சுவனத்தை அனந்தரங் கொள்ளக் கூடியவர்களின் வரிசையில் இணைந்து கொண்டார்கள்.

அவர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த பொழுது மதிப்பு மிக்க வாழ்க்கையையே வாழ்ந்தார்கள், இன்னும் இஸ்லாத்தின் சேவைக்காக நடத்தப்பட்ட முதன்முதல் கடல் போரில் கலந்து கொண்டு, தான் விரும்பிய உயிர்த்தியாகி என்ற அந்தஸ்தையும் அவர்கள் அடைந்து கொண்டார்கள்.

அல்லாஹ் இத்தகைய நல்லடியார்களின் மீது மனநிறைவு கொண்டான், அவர்களும் தன் இறைவன் மீது மன நிறைவு கொண்டார்கள்.
أحدث أقدم