ஹப்பாப் (ரலி)


ஹப்பாப் பின் அல் அரத்து(ரலி) அடிமைச் சந்தையில் விற்கப்பட்டவர். ஏலச்சந்தையில் பலத்தப் போட்டிக்கிடையில் உம்மு அன்மார் என்ற பெண் ஹப்பாப்(ரலி) அவர்களை வாங்குவதில் வெற்றி பெற்றாள். அடிமையாய் இருந்த காலத்திலேயே ஏகத்துவக் கருத்துக்கள் ஹப்பாப்(ரலி) அவர்களைக் கவர்ந்து இஸ்லாத்தில் இணையத் தூண்டியது. கருமானாக இரும்பை உருக்கி வாள் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இவர் ஒய்வு கிடைக்கும் நேரங்களிலெல்லாம் உத்தமத் திருநபிகளின் உபதேசங்களைச் செவி சாய்க்கும் வழக்கம் உடையவராய் இருந்தார். ஹப்பாப்(ரலி) அவர்களுக்கு இஸ்லாத்தின் இனிய கொள்கைகள் ஏகத்துவத்தின் இனிமையும் தூதுத்துவத்தின் மகிமையையும் உணர்ந்த ஹப்பாப்(ரலி) யின் ஈமானிய உறுதி மென் மேலும் மெருகேறியது.

ஹப்பாப்(ரலி) அவர்களிடம் வாள் செய்து வாங்குவதை அன்றைய அரபியர்கள் பெருமையாய்க் கருதினர். ஹப்பாப்(ரலி) அவர்கள் உருவாக்கும் வாட்கள் அந்நாட்களில் மிகப்பிரசித்தி பெற்றதாகத் திகழ்ந்தது. வாட்களை செய்யப் பணித்திருந்த சில அராபியர்கள் அதனை ஹப்பாப்(ரலி) அவர்களிடமிருந்து பெற்றுச் செல்வதற்காக வந்த பொழுது அவரது தொழிற் கூடத்தின் கதவுகள் மூடப் பட்டிருந்தது கண்டு அவரின் வரவுக்கு காத்திருந்தனர். நபி(ஸல்)அவர்களைக் கண்டுவிட்டு காலம் தாழ்த்தி வந்த ஹப்பாப்(ரலி) அவர்களிடம் தாங்களின் வாட்களைப் பற்றிய விபரங்களை சினந்து கேட்கின்றனர். அவரோ அண்ணலாரைக் கண்ட அக மகிழ்வுடன் ஏதேதோ பதில்களைக் கூறுகிறார். குறைஷியரில் ஒருவனின் கேள்விக்கு பதிலளிக்கும் போது சத்தியத்தை மறைக்காமல் அண்ணல் நபி(ஸல்)அவர்களைப் புகழ்ந்துரைக்கிறார். ஈமானை வெளிப்படுத்துகிறார். ஏகத்துவம் எனது கொள்கை. முகம்மது(ஸல்) அவர்கள் இறைத்தூதர் என் வாழ்க்கையின் வழிகாட்டி எனக்கூறுகிறார் ஹப்பாப்(ரலி).

அதன் விளைவு-குறைஷியர்களின் பலத்த தாக்குதல் அவர் மீது நிகழ்கிறது. தங்களின் கால்களாலும், கல்லினாலும் அவரின் தொழிற் கூடத்தில் கிடந்த வாட்களாலும் அண்ணாரின் உடல் துவம்சம் செய்யப்படுகிறது. இரத்த வெள்ளத்தில் ஆடைகள் நனைந்து உணர்வற்று கீழே சரிந்த ஹப்பாப்(ரலி)அவர்கள் உணர்வு திரும்பி எழுந்ததும் காயமுற்ற இடங்களில் மருந்திடுகிறார் சிறிதும் கலக்கமின்றி ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டதால் இனி வரப்போகும் இன்னல்களைச் சந்திப்பதற்கு முனைகிறார் சற்றும் தயக்கமின்றி.

குரைஷியர்கள் ஹப்பாப்(ரலி) அவர்களின் எஜமானியிடம் அவர் இஸ்லாத்தில் இணைந்துவிட்டதை எடுத்துக் கூறி அவரைத் துன்புறுத்த தூண்டுகின்றனர். அவ்வாறே அவளும் பழுக்க காய்ச்சிய இரும்பால் ஹப்பாப்(ரலி)அவர்களின் தலையிலும் உதடுகளிலும் சூடு போடுகிறாள். உலைக்களத்து நெருப்பில் ஹப்பாப்(ரலி)அவர்களை முதுகின் சதைகள் கரிந்து விடுமளவுக்கு சித்தரவதை செய்கிறாள். தமக்கு இழைக்கப்படும் இக்கொடுமைகளுக்கு தீர்வை நாடி முஹம்மது (ஸல்)அவர்களிடம் முறையிடுகிறார் ஹப்பாப்(ரலி) எனக்காக வேண்டி இறைவனிடம் நீங்கள் பிராத்திக்கக் கூடாதா? என வேண்டுகிறார். இதனைச் செவியுற்ற அண்ணலார் ஹப்பாப்(ரலி)அவர்களை நோக்கி முகம் சிவந்தவர்களாக உங்களுக்கு முன்பு வாழ்ந்த சமுதாயத்தவர்கள் ஓரிரைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதன் விளைவாக உடல் முழுவதும் மணலில் புதைக்கப்பட்டு பின்னர் அவர்களின் சிரங்கள் வாளால் வெட்டப்பட்டன அவர்களின் உடலில் சதையும் நரம்பும் இரும்பு சீப்புகளால் தனித்தனியாக்கப் பட்டுத் துன்புறுத்தப்பட்டனர். இனி ஒரு காலம் வரும் அந்நாளில் யமன் நாட்டு ஸன்ஆ விலிருந்து ஹள்ரமூத் வரை ஒரு மனிதர் அல்லாஹ்வின் அச்சம் தவிர வேறு எவ்வித பயமுமின்றி பிரயாணிக்கும் காலம் வரும் அதுவரை பொறுமையை மேற்கொள்வீராக எனக் கூறினார்கள். (ஆதாரம் புகாரி). அண்ணலாரின் இந்த முன்னறிவிப்பு ஹப்பாப்(ரலி)அவர்களின் ஈமானிய வளர்ச்சிக்கு மேலும் வலுஊட்டியது.

ஒருமுறை ஹப்பாப்(ரலி)அவர்களின் எஜமானி அவரது தலையிலும் உதட்டிலும் பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போடுவதைக் கண்ணுற்ற நபி(ஸல்)அவர்கள் இறைவனிடம் துஆச் செய்தார்கள். சிறிது காலத்தில் ஹப்பாப்(ரலி)யின் எஜமானி நோய் வாய்ப்படுகிறாள். அந்நோயின் காரணத்தால் நாய் போன்று குரைத்துக் கொண்டிருப்பாள். பழுக்க காய்ச்சிய இரும்பைக் கொண்டு அப்பெண்ணின் தலையில் சூடு வைத்தாலதான் நிவாரணமாய் இருந்தது..

இத்துணை இன்னல்களுக்கு இடையிலும் ஹப்பாப்(ரலி)அவர்களின் ஈமானில் எள்முனையும் மாற்றம் நிகழவில்லை. அல்லாஹ்வின் திருத்தூதர் வழங்கிய வளமான போதனைகள் முன்பைக் காட்டிலும் முனைப்பாக அவர் செயல்பட வழிவகுத்தது. திருமறையின் விரிவுரையில் அதனைப் பிறருக்கு எடுத்துக் கூறி பயிற்றுவிப்போரில் சிறந்தவர்களில் ஒருவராக ஹப்பாப்(ரலி)அவர்கள் திகழ்ந்தார். உத்தம சஹாபாக்களில் ஒருவரும் நான்கு கலீஃபாக்களில் ஒருவருமாகிய உமர்(ரலி)அவர்கள் இஸ்லாத்தை தழுவ ஹப்பாப்(ரலி)அவர்கள் ஆற்றிய பங்கு இங்கு நினைவு கூறத்தக்கது. உமர்(ரலி)அவர்களின் தங்கைக்கும் அவர் தங்கையின் கணவருக்கும் ஹப்பாப்(ரலி)அவர்கள் ஸுரத்துல் தாஹா என்ற அத்தியாயத்தை ஓதப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தான் உமர்(ரலி)அவர்கள் நபி(ஸல்)அவர்களைக் கொல்லும் எண்ணத்தில் அங்கு வந்தார். வான்மறையின் வசனங்களால் ஈர்க்கப்பட்டு ஹப்பாப்(ரலி) அவர்களுடன் சென்று நபிகளாரைக் கண்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்.

குறைஷியர்கள் நபிகளாரை நோக்கி முஹம்மதே இவ்வடிமைகளோடு உமக்கு என்ன கூட்டு? எங்களைப்போல் உயர் குலத்தாரோடு நீர் கூட்டு வைத்துக் கொள்ளும் எனக்கூறினர் அப்பபொழுதுதான் அருள் மறையின், காலையிலும் மாலையிலும் தம் இரட்சகனின் சங்கை பொருந்திய முகத்தை நாடியோராக அழைத்துப் பிரார்த்திப் போரை நீர் விரட்டி விடவேண்டாம். என்ற வசனம் 6:52 இறங்கியது. இதன் பின்னர் நபிகளாரின் அன்பு அவரின் தோழர்கள் மீது பன்மடங்கு அதிகரித்தது. அண்ணலாரின் மறைவுக்கு பின் உமர்(ரலி)அவர்களின் ஆட்சியில் ஹப்பாப்(ரலி)அவர்கள் உமர்(ரலி)அவர்களைச் சந்தித்தபோது தமக்கருகில் இடப்பட்ட ஆசனத்தில் அமர இருவருக்கே தகுதியுள்ளது. ஒருவர் பிலால்(ரலி)அவர்கள் மற்றொருவர் ஹப்பாப்(ரலி)அவர்கள் என உமர்(ரலி)அவர்கள் கூறினார்கள்.

உஸ்மான்(ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஹப்பாப்(ரலி)அவர்களின் தியாகத்தையும் இஸ்லாத்துக்கு அவர் ஆற்றும் சேவைகளையும் போற்றி அரசு மானியம் வழங்கப்படுகிறது. அதனை தாம் வசிக்கும் வீட்டின் ஒரு மூலையில் குவித்து வைத்து விட்டு பணம், பொருட்கள் அடங்கிய அக்குவியலில் யாருக்கு தேவைப் படுகிறதோ அவர்கள் வந்து எடுத்துச் செல்லுங்கள் கதவு திறந்தேயுள்ளது எனக் கூறினார்கள். தமக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கஃபன் துணியை கண்ணுற்ற ஹப்பாப்(ரலி) அவர்களின் மனதில் உஹதுப்போரில் ஷஹீதான ஹம்ஸா(ரலி) அவர்களை கஃபனிட்ட துணியானது தலையை மூடினால், காலும், காலைமூடினால் தலையும் வெளியில் தெரியும் படி பற்றாக்கறையாக இருந்தது நிழலாடியது. ஆனால் தனக்கு தயாரித்து வைத்துள்ள கஃபன் துணியோ மிகதாராளமானதாக தோன்றியதால் அல்லாஹ்வின் அச்சத்தால்தான் கொஞ்சம் (அதிகப்படியாக) ஆடம்பரமாக்கிக் கொண்டோமோ என்ற எண்ணமும் அவர் மனதில் தோன்றுகிறது.

அவர் கருமானாக இருந்தபோது அவருக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிய அநேகரில் ஆஸ் இப்னு வாயில் என்பவனும் ஒருவன். அவனிடம் தம் கடனை அவர் கேட்டதற்கு நீ முஹம்மதை(ஸல்) நிராகரிக்காத வரை நான் தரமாட்டேன் என்று கூறுகிறான். அதற்கு ஹப்பாப்;(ரலி) அவர்கள் நீ மரணித்து மறுமையில் எழுப்படும் வரை நான் நிராகரிக்க மாட்டேன் என்கிறார். அதற்கு அவன் என்னை மறுமையில் எழுப்பபடும் வரை விட்டுவிடு அப்பொழுது எனக்கு செல்வமும், பிள்ளைகளும் கொடுக்கப்படும் அப்பொழுது கடனை திருப்பித் தருகிறேன் என்கிறான். அப்போது அல்லாஹ் 19:77, 78 திருமறை வசனம் இறக்கியருளினான்.

19:77 ''நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, (மறுமையிலும்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன்"" என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?

19:78 (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டானா அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?

படிப்பினை :

3:31 (நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

என்ற வசனப்படியும் அண்ணலார்(ஸல்)அவர்களின் பொன்மொழியான உங்களில் எவருக்கும் அவருடைய தந்தை, மகன் மற்றும் உலக மாந்தர் அனைவரையும் விட நான் நேசமானவனாக ஆகும் வரை அவர் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது என்ற நபிமொழிக்கேற்பவும் இஸ்லாத்தை ஏற்றது முதல் வந்த சோதனைகளையும். துன்பங்களையும் சாதனைகளாகவும், இன்பங்களாகவும் ஏற்று அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களையும் முழுமையாக நேசித்து தமது இறுதி மூச்சு வரை ஆடம்பரம், பகட்டு படாடோபம் அனைத்தையும் விட்டு விலகி மறுமை பேற்றிர்காகவே வாழ்ந்த உத்தமர் ஹப்பாப்(ரலி) அவர்களுக்கு வழங்கியது போன்று நமக்கும் உறுதியான ஈமானையும், இம்மையைவிட மறுமையையே அதிகமதிகம் நேசிக்கும் உள்ளத்தையும் அல்லாஹ் தனது திருமறையில் கூறும் வெற்றியாளர்களாக நம்மை ஆக்கியருள அல்லாஹ் அருள் செய்வானாக.
أحدث أقدم