உம்மு ஹகீம் (ரலி)

உம்மு ஹகீம் (ரலி)

ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமளான் மாதத்தில் அல்லாஹ், மக்கத்து குறைஷிகளை ஒடுக்கிச் செயலிழக்கச் செய்து சத்தியவான்களான முஸ்லிம்களை மக்கா நகரினுள் பிரவேசிக்கச் செய்தான்!

முஸ்லிம்களின் வெற்றிப் பிரவேசம் உலகின் ஏனைய வெற்றியாளர்களுடையது போன்று இரத்தக்களறியை ஏற்படுத்தக் கூடியதாய் இருக்கவில்லை. விஷமத்தனத்தை மேற்கொண்ட தீயவர்கள் ஒருசிலரைத் தவிர – அல்லது அன்று காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் படையுடன் மோதியவர்கள் சிலரைத் தவிர வேறு எவருக்கும் ஒரு சிறு தொல்லைகூட நேரவில்லை. எவர் உடலிலிருந்தும் ஒரு சொட்டு இரத்தம்கூட சிந்தச் செய்யப்படவில்லை!

ஆம்! புனித மக்காவினுள் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய தலைமையில் சுமார் 10,000 தோழர்கள், அதிகாலைத் தென்றல் காற்று பூந்தோட்டத்தினுள் நுழைவது போன்று நுழைந்தார்கள். அண்ணலாரின் மன்னிப்பும் கருணையும் மக்காவாசிகளின் மீது ஆனந்தமாய்ப் பொழிந்து கொண்டிருந்தது!

அம்மக்கள் அன்று வரையிலும் முஸ்லிம்களின் உயிரைக் குடிக்கத் துடித்துக் கொண்டிருந்தவர்கள்தாம். சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர்களின் மீது அநீதிகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்துக் கொண்டிருந்தவர்கள்தாம். ஆயினும் கருணைக் கடலான காருண்ய நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் அனைவரையும் மன்னித்தார்கள். எவ்விதக் குற்றச்சாட்டுக்கும் தண்டனைக்கும் எவரையும் உட்படுத்தவில்லை!

அன்று மக்காவாசிகளில் சிலர் இருந்தனர். அவர்களின் உள்மனம் அவர்களை உறுத்திக் கொண்டிருந்தது. அமைதி இழந்து காணப்பட்டார்கள். தங்களின் சென்ற கால நடவடிக்கைகளைத் திரும்பப் பார்த்த அவர்களுக்கு மாநபி (ஸல்) அவர்களின் மன்னிப்பின் மீது துளியும் நம்பிக்கை பிறக்கவில்லை. நபியவர்கள் தங்களின் மீது அதிகாரம் பெற்றுவிட்டால் - தங்களை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள் என்று கருதி அஞ்சி நடுங்கினார்கள். மக்காவை விட்டு வெளியேறுவதுதான் நல்லது என்ற முடிவுக்கும் சிலர் வந்தனர்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு நாள் ஒரு பெண்மணி நபியவர்களின் சமூகம் வந்து மனமகிழ்வுடனும் திருப்தியுடனும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் பணிவோடு இப்படி வேண்டி நின்றார்:

      “அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய கணவர் உயிருக்கு அஞ்சி யமன் தேசம் நோக்கி ஓடுகின்றார். நீங்கள் அவருக்கு மன்னிப்பும் பாதுகாப்பும் வழங்கினால் நான் அவரைத் திரும்ப அழைத்துக் கொண்டு வருகின்றேன்.

      நபியவர்களின் கருணை உள்ளம் மிகவும் கனிந்திருந்தது. எவ்விதத் தாமதமுமின்றி கூறினார்கள்: “செல்லுங்கள்! நான் அவருக்கு பாதுகாப்பு அளித்து விட்டேன்!”

இதனைக் கேட்டதும் அப்பெண்மணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனெனில் அவருடைய கணவர் அப்படித்தான் இருந்தார், அதை எல்லோரும் அறிவர். இஸ்லாத்தின் மீதும் இறைத் தூதரின் மீதும் கடும்பகை கொண்டிருந்தார். முஸ்லிம்களைத் துன்புறுத்துவதற்குக் கிடைத்த எந்தச் சந்தர்ப்பத்தையும் அன்று வரையில் அவர் கைநழுவ விட்டதில்லை. இப்போது அவருக்கு மக்காவில் ஒரு நாளைக் கழிப்பதுகூட சிரமம் எனும் நிலை! அப்படிப்பட்டவருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மன்னிப்பும் பாதுகாப்பும் அளித்து விட்டார்களென்றால்...!

அப்பெண்மணி அக்கணமே தம் பணியாளை உடன் அழைத்துக் கொண்டு தம்முடைய கணவரைத் தேடிப் புறப்பட்டார்!

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடத்தில் இந்த அளவுக்கு நன்மதிப்பும், கணவரை மன்னிக்க வேண்டும் எனும் கோரிக்கை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொள்ளப்படும் அளவு சிறப்பும் பெற்றிருந்த இந்தப் பெண்மணிதான் உம்மு ஹகீம் பின்த் ஹாரீஸ் (ரலி) அவர்கள், அவர்களின் கணவர்தான் இக்ரிமா இப்னு அபூஜஹ்ல்!


குடும்பச் சூழ்நிலை:

மரியாதைக்குரிய உம்மு ஹகீம் (ரலி) அவர்கள் பிரபலமான நபித்தோழியருள் ஒருவராகத் திகழ்ந்தார்கள். வரலாற்றாசிரியர்கள் இவரை ‘உம்மு ஹகீம்’ எனும் பெயரில்தான் எழுதுகின்றார்கள். எங்கும் இவரின் இயற்பெயர் குறிப்பிடப்படவில்லை. இவர்களின் கோத்திரம் குறைஷிக் குலத்தின் ஒரு கிளையாகிய பனூமக்ஸும் ஆகும்.

இவர் பிறந்து வளர்ந்த குடும்பம் இறைமறுப்பிலும் இறைவனுடன் இணைவைப்பதிலும் ஊறித் திளைத்திருந்தது. உம்மு ஹகீமின் தந்தை ஹாரிஸ் இப்னு ஹிஷாம், அபூ ஜஹ்லின் (அம்ரிப்னு ஹிஷாமின்) உடன்பிறந்த சகோதரார் ஆவார். இருவரும் இஸ்லாத்தின் கடும் விரோதிகள்! இவருடைய தாயார் ஃபாத்திமா பின்த் வலீதும் தாய்மாமன் காலித் இப்னு வலீதும் இதேபோன்றுதான் இஸ்லாத்துடன் பகைமை பாராட்டி வந்தார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் உம்மு ஹகீம் அவர்கள் இஸ்லாத்தின் வழிகாட்டலை ஏற்பது குறித்து கற்பனைகூட செய்து பார்க்க முடியாதிருந்தது! அவர்கள் திருமணம் முடித்ததும் கூட அபூ ஜஹ்லின் மகன் இக்ரிமாவைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அவர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பதில் தன்னுடைய தந்தை அபூ ஜஹ்லுக்கு வலது கரம் போன்று இருந்தார்!
      
ஹிஜ்ரி 2ஆம் ஆண்டில் பத்ருப் போரில் அபூ ஜஹ்ல் மிகவும் கேவலமான முறையில் கொல்லப்பட்டபோது இக்ரிமா, தன்னுடைய தன்னுடைய தந்தையார் விட்டுச் சென்ற ‘மக்கட்சேவையை’ நிறைவு செய்யும் பொறுப்பை ஏற்றார். மேலும் மக்கா நகர் வெற்றி கொள்ளப்படும் வரையில் அனைத்து வழிகளிலும் முஸ்லிம்களுக்கு துன்பம் இழைத்திட விரைந்து செயல்பட்டார்!
      
உஹதுப் போரில் தன்னுடைய மனைவி உம்மு ஹகீமையும் உடன் அழைத்துக் கொண்டு காலித் இப்னு வலீதின் படையுடன் சேர்ந்து முஸ்லிம்களுக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தினார்.
      
அகழ்ப்போரின்போது பனூ கினானா கோத்திரத்தாருடன் சேர்ந்து கொண்டு மதீனாவின் மீது தாக்குதல் தொடுத்தார்.
      
ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்திருந்த ‘பனூகுஸாஆ’ கூட்டத்தாரைக் கொலை செய்வதிலும் கொள்ளையடிப்பதிலும் ஈடுபட்டார்.
      
இதுமட்டுமல்ல, முஸ்லிம்களுடனும் அவர்களோடு நேசம் கொண்ட கூட்டத்தாருடனும், பகைமைப் போக்கை மேற்கொள்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்ட ‘ஹுதைபிய்யா’ உடன்படிக்கையை பகிரங்கமாக மீறியதும் அதை உடைத்தெறிந்ததும் இந்த இக்ரிமாதான்!
      
மேலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பதில் இக்ரிமா எந்த அளவுக்கு பிடிவாதமாக இருந்தாரெனில், அவருடைய நெருங்கிய உறவினரான – உம்மு ஹகீம் (ரலி) அவர்களின் சொந்த மாமனாரும் அபூ ஜஹ்ரின் பெரிய தந்தையின் மகனாருமாகிய காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் மக்கா வெற்றிக்குச் சிறிது காலம் முன்பே இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள், அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பிறகும்கூட இக்ரிமாவிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை! மாறாக முன்பை விடவும் கடுமையாகத்தான் இஸ்லாத்தின் மீது வெறுப்புக் கொண்டார், அதை அழித்து விடுவதெனப் புறப்பட்டார்!
      
மக்கா வெற்றியின்போது – நபித்தோழர்கள் அணிஅணியாக புனித மக்காவினுள் பிரவேசித்த நேரத்தில் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் சென்ற அணியினருடன் இக்ரிமா துணிந்து தாக்குதல் தொடுக்கலானார். இணை வைப்பாளர்கள் சிலருடன் சேர்ந்துகொண்டு!
      
இக்ரிமா தொடர்ந்து மேற்கொண்டு வந்த இப்படிப்பட்ட பகைமைப் போக்குகள், இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கைகள்தாம் - இப்போது அவருக்கு மக்கா நகரின் வெற்றியாளராகத் திகழும் மாநபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் நிற்பதற்கு துணிவு வரமுடியாமல் செய்தன. தனது உயிருக்கு அஞ்சி யமன் தேசம் நோக்கி தப்பியோடத் தொடங்கினார்.....


இஸ்லாத்தை ஏற்றல்:
      
இங்கே.... உம்மு ஹகீம் (ரலி) அவர்கள் தம்முடைய தந்தை ஹாரிஸ் இப்னு ஹிஷாம், தாயார் ஃபாத்திமா பின்த் வலீத் இருவருடன் அண்ணலாரின் சமூகம் வந்து எல்லோரும் உளப்பூர்வமாக இஸ்லாத்தைத் தழுவுகின்றார்கள். உம்மு ஹகீமுக்குத் தம் கணவரின் பேரில் அதிகப்படியான அன்பு! அவர், இறைநிராகரிப்பு, இறைவனுக்கு இணைவைத்தல் எனும் தீய கொள்கைகளின் சேற்றில் சிக்கிக் கொண்டிருப்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாததால் ஞாலத்தின் அருட்பிழம்பு அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களிடம், தம் கணவருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு மிகவும் பரிவுடன் கோரிக்கை சமர்ப்பிக்க நபியவர்களும் அதனை ஏற்றுக் கொள்ள உம்மு ஹகீம் (ரலி) அவர்கள் தம் கணவரைத் தேடியவாறு கடற்கரை நோக்கிப் புறப்பட்டார்கள்!

இது அல்லாஹ்வை அழைக்கும் நேரமல்லவா?
      
அங்கே.... இக்ரிமா மக்காவிலிருந்து புறப்பட்டு ‘குல்ஸும்’ கடற்கரைக்கு வந்ததார். அங்கு யமனுக்குச் செல்லும் கப்பல் தயாராய் நின்று கொண்டிருந்தது. அதில் ஏறி அமர்ந்தார். கப்பல் சிறிது தூரம் சென்றதும் புயற்காற்றின் சுழலில் சிக்கிக் கொண்டது. கப்பலில் இருந்த அனைவரும் அஞ்சி நடுங்கினார்கள். அந்த இக்கட்டான நிலையில் இக்ரிமாவுக்கு தன்னுடைய கடவுளரின் மீது பக்தி ஏற்பட்டது. ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வை அழைத்து உதவி கேட்கலானார்.
      
இதனைக் கண்ணுற்ற கப்பலின் மாலுமிகள் சொன்னார்கள்: இது அல்லாஹ்வை அழைக்கும் நேரமாயிற்றே! புயல் ஆபத்திலிருந்து கப்பலைக் காப்பாற்ற லாத், உஸ்ஸாவினால் இயலாதே!
      
அவர்கள் இவ்வாறு கூறியது இக்ரிமாவின் உள்ளத்தில் பதிந்தது. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார், தெளிவு பெற்றார்! உடனே அல்லாஹ்வை அழைத்து இவ்வாறு பிரார்த்தனை செய்தார்:
     
 “இறைவனே நான் உறுதியாகக் கூறுகின்றேன். இந்தக் கடல் கொந்தளிப்பிலிருந்து நீ என்னைக் காப்பாற்றினால், நானே முஹம்மத் (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஆஜராகிறேன். அவர் கருணையும் கிருபையும் உடையவர், என்னைத் தண்டிக்காமல் விட்டுவிடலாம்.
      
இறைவனின் ஆற்றல் அக்கப்பல் காப்பாற்றப்பட்டது. புறப்பட்ட இடத்திற்கே பத்திரமாக வந்து சேர்ந்தது!
      
இதற்குள்ளாக உம்மு ஹகீம் (ரலி) அவர்களும் தம கணவரைத் தேடியவாறு அங்கு வந்தார்கள். அங்கு இக்ரிமா இருப்பதைக் கண்டதும் அவர்களுக்கு அளவிலா ஆனந்தம்! முதலில் இறைவனுக்கு நன்றியறிதலைச் சமர்ப்பித்துக் கொண்டு தம் கணவரிடம் நிலைமையை விளக்கிச் கூறினார்கள்:
     
 “நான் ஒரு மனிதப் புனிதரிடமிருந்து வந்துள்ளேன். அவர் மிகவும் நல்லவர். மக்கள் அனைவரிலும் அதிகக் கருணையும் பரிவும் கொண்டவர். உறவினருடன் இணைந்து வாழ்பவர்! நான் அவர்களிடமிருந்து உமக்காகப் பாதுகாப்பு பெற்று வந்துள்ளேன். இப்போது என்னுடன் அவர்களின் சமூகத்திற்கு வாரும்!
      
இக்ரிமாவும் உடனே தம் மனைவியின் விருப்பத்தை ஏற்று அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஆஜரானார். அவரைக் கண்டதும் அண்ணலார் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக “நாட்டை வெறுத்து ஓடியவரே, வாரும்! வாரும்!” என்று மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார்கள்!
      
இக்ரிமா தம் மனைவி உம்மு ஹகீம் (ரலி) அவர்களைச் சுட்டிக்காட்டி “தாங்கள் எனக்கு உயிர்ப்பிச்சை அளித்திருப்பதாக என் மனைவி என்னிடம் கூறினார்” என்றார்.
     
 “ம்...ம்.... உம்மு ஹகீம் உரைத்தது உண்மைதான். நீர் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளீர்!” என்று மாநபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
      
காருண்ய நபியவர்களின் கருணை உள்ளத்தைக் கண்டு இக்ரிமா பெரிதும் மாற்றம் அடைந்தார். அந்த இடத்திலேயே ஏகத்துவக் கொள்கையை ஏற்று இஸ்லாத்தில் இணைந்தார். மேலும் இஸ்லாத்திற்காக உழைக்கப் போவதாகவும் தன் உயிரையும் உடமையையும் இறைவழியில் போராடுவதற்காக அர்ப்பணிக்கப் போவதாகவும் உறுதிமொழி எடுத்தார்!
      
அதன் பிறகு இக்ரிமா (ரலி) அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது! அன்று வரையில் எவ்வளவு கடுமையாக இஸ்லாத்தை எதிர்த்து வந்தாரோ அதைவிடவும் பன்மடங்கு ஆர்வத்துடன் இப்போது இஸ்லாத்தின் உயர்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பணியாற்றினார்! இருள் சூழ்ந்த வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருந்த இக்ரிமா அவர்களின் இந்த மனமாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அவர்களின் மனைவி உம்மு ஹகீம் (ரலி) அவர்கள் மேற்கொண்ட முனைமழுங்காத முயற்சிதான் முக்கிய காரணம் ஆகும்!

அந்நிய பூமியில் விதவையானார்:
      
ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்ததை அடுத்து அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்தபோது சில அரபுக் கோத்திரத்தினர் அறியாமையினால் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் குழப்பம் தலைதூக்கியது. அதனை முளையிலேயே கிள்ளி எறிவதற்காக தொடர்ந்து பல போர்கள் (ஹுரூபுர் ரித்தத்) நடைபெற்றன. அப்புனிதப் போர்களில் இக்ரிமா (ரலி) அவர்களும் கலந்து கொண்டார்கள். ஒருவாறாக அக்குழப்பம் அடக்கப்பட்டது.
      
மேலும் முஸ்லிம்கள் ஷாம் தேசத்தை நோக்கிப் புனிதப் போர்ப் பயணம் மேற்கொண்டபோது இக்ரிமா (ரலி) அவர்கள் தம் மனைவி உம்மு ஹகீம் (ரலி) அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு இஸ்லாமியப் படையுடன் சேர்ந்து தொடர்ந்து பயணமானார்கள். பல யுத்தங்களில் ரோமானியர்களை எதிர்த்து மிகுந்த தியாக உணர்வுடனும் வீரத்துடனும் போராடினார்கள்.
      
இறுதியில் பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டிய நகரத்து ரோமானியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெற்ற ‘அஜ்னாதைன்’ போரில் இக்ரிமா (ரலி) அவர்கள் வீரமரணம் அடைந்தர்கள். உம்மு ஹகீம் (ரலி) அவர்கள் தம் கணவரின் இறைவழி உயிர்த்தியாகத்தை பொறுமையுடன் ஏற்று அந்நிய பூமியில் விதவையானார்கள்!

எளிமையான மறுமணம்:
      
கணவரின் மரணத்தை முன்னிட்டு கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டிய ‘இத்தா’ எனும் காலம் கழிந்த பிறகு உம்மு ஹகீம் (ரலி) அவர்களை மறுமணம் புரிந்துகொள்ள பல இடங்களிலிருந்தும் தூது வந்தது. இவ்விதம் தூது விடுத்தவர்களில் பிரபல நபித்தோழர் காலித் இப்னு ஸயீத் (ரலி) அவர்களும் ஒருவர்!
     
மரியாதைக்குரிய உம்மு ஹகீம் (ரலி) அவர்கள் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, இஸ்லாத்தின் மீதும் இறைத்தூதரின் மீதுமான அன்பிலும் இறைவழிப் போராட்டத்தின் ஈடுபாட்டிலும் யார் முன்னிலையில் உள்ளாரோ அவரையே கணவராக ஏற்றுக் கொள்வதென்று தீர்மானித்தார்கள். அதன்படி காலித் இப்னு ஸயீத் (ரலி) அவர்களுக்கு சம்மதம் தெரிவித்தார்கள்!
      
காலித் இப்னு ஸயீத் (ரலி) அவர்கள் எதிர்பார்த்த உயர் தகுதிகளும் சிறப்புகளும் நிறைந்திருந்தன. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலேயே இறைநம்பிக்கை கொண்ட நபித்தோழர்களுள் அவர்களும் முக்கியமானவராவார். அபிசீனிய ஹிஜ்ரத், மதீனா ஹிஜ்ரத் இரண்டையும் மேற்கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள். மேலும் புனித மக்காவை வெற்றிகொண்டபோதும் ஹுனைன், தாயிஃப் மற்றும் தபூக் போன்ற போர்களிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் கலந்து கொண்டவர்கள்.
     
முறைப்படி நானூறு தீனார் - தங்க நாணயங்கள் மஹ்ராக நிர்ணயிக்கப்பட்டு உம்மு ஹகீம் (ரலி) அவர்களுக்கும் காலித் இப்னு ஸயீத் (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்தேறியது!
    
பல யுத்தங்களைச் சந்தித்தவாறு தொடர்ந்து பயணமாகிக் கொண்டிருந்த வீரர்களுடன்தான் புதுத்தம்பதிகள் இருவரும் சென்று கொண்டிருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். இடையே மர்ஜூஸ் ஸஃபர் என்ற ஊரில்தான் மணவிழாவும் நடைபெற்றது முடிந்துள்ளது. இந்த ஊர் திமஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ளது. அப்போது இஸ்லாமியப்படை திமஸ்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது!
      
உம்மு ஹகீம் (ரலி) அவர்களுடைய எளிமையான இந்த மறுமண நிகழ்ச்சி இஸ்லாமியத் திருமணத்துக்கு சிறந்ததோர் இலக்கணமாகத் திகழ்கின்றது! தொடர் பயணத்தை மேற்கொண்டு நடைபெற்றப் புனிதப் போர்களில் ஒரு வீரர் தம் மனைவியுடன் கலந்து கொள்வது எத்துணை சிறப்புக்குரியது! அப்படி நடைபெற்ற ஒரு போரில் அவர் ‘ஷஹீதா’வதும் பின்னர் இத்தா தவணை கழிந்த பிறகு உம்மு ஹகீம் (ரலி) அவர்களிடம் பல பேர் திருமணத்திற்காக தூது அனுப்பியதும் உயர்ந்த இலட்சியத்தை அளவுகோலாகக் கொண்டு அவர்கள் சுயமாகக் ‘கணவரை’த் தேர்வு செய்ததும் - முறையாகத் திருமணம் நடைபெற்றதும் - இவை அனைத்தும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிச் சென்ற இஸ்லாமிய சமூக அமைப்பு எத்துணை உன்னதமானது, அந்தச் சமுதாய மக்கள் கடைபிடித்த வாழ்க்கை நடைமுறைகள் எத்துணை நேர்மையானவை, எளிமையானவை என்பதை தெளிவாய்க் காட்டுகின்றன!

முதலிரவோடு....!
      
திருமணம் முடிந்ததும் காலித் இப்னு ஸயீத் (ரலி) அவர்கள் ‘முதலிரவு’ விருப்பத்தை மனைவியிடம் வெளிப்படுத்தினார்கள். அதற்கு உம்மு ஹகீம் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
      
“எதிரிகள் நம்மைக் குறி வைத்திருக்கின்றார்கள். அவர்கள் எந்நேரத்திலும் தாக்குதல் தொடுக்கலாம் எனும் அபாயம் உள்ளது. ஆகையால் சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்!”
      
“இந்தப் போரில் நான் மரணமடைவது உறுதி!” என்று காலித் இப்னு ஸயீத் (ரலி) அவர்கள் கூறியதும் அதைக் கேட்ட உம்மு ஹகீம் (ரலி) அவர்கள் மௌனமானார்கள்!
      
பிறகு அன்றிரவே ஓர் பாலத்தின் அருகே அத்தம்பதிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பாலம் இன்று வரைக்கும் கன்தறா உம்மு ஹகீம் என்றே விழங்குகிறது.
      
மறுநாள் அதிகாலையில் ‘வலீமா’ விருந்து நடைபெற்றது. அனைவரும் விருந்துண்டு முடிப்பதற்குள்ளாகவே முஸ்லிம்களின் மீது ரோமானியர்கள் தாக்குதல் தொடுக்க வந்துவிட்டார்கள்.
      
வலிமை கொண்ட ஒரு ரோமானியப் படைவீரன் அனைவர்க்கும் முன்னால் வந்து நின்று கொண்டு முஸ்லிம்களை நோக்கிச் சவால் விட்டு அழைத்தான். காலித் இப்னு ஸயீத் (ரலி) அவர்கள் பாய்ந்து வந்து அவனது சவாலை ஏற்று அவனோடு போரிட்டார்கள். மிகவும் கடுமையாக நடந்த அந்தச் சண்டையில் காலித் இப்னு ஸயீத் (ரலி) அவர்கள் ‘ஷஹீதா’னார்கள்!
      
இக்காட்சியைக் கண்ட உம்மு ஹகீம் (ரலி) அவர்கள் ஆவேசத்துடன் எழுந்து தம் ஆடைகளை வரிந்து கட்டினார்கள்! பிறகு கூடாரத்தின் முளையைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு போரில் குதித்தார்கள். புயல்போல் பாய்ந்து தாக்குதல் தொடுத்துக் கொண்டே எதிரிகளினூடே முன்னேறிச் சென்றார்கள். அன்று அவர்களின் கரத்தால் ரோமானியப்படையினர் ஏழு பேர் கொல்லப்பட்டார்கள்!
      
உம்மு ஹகீம் (ரலி) அவர்கள் யர்மூக் யுத்தத்திலும் கலந்து கொண்டார்கள். பிற பெண்களுடன் சேர்ந்து ரோமானியர்களை எதிர்த்து பெரும் வீரத்துடன் போரிட்டார்கள்!
      
இஸ்லாமிய வரலாற்றை அலங்கரித்துக் கொண்டிருக்கும் வீரத்திருமகளான உம்மு ஹகீம் (ரலி) அவர்களுடைய வெற்றிக் காவியம் இதுதான். எழுச்சிமிக்க, படிப்பினைகள் நிறைந்த இவ்வரலாற்று நிகழ்ச்சி ஏடுகளில் தெளிவாக இடம் பெற்றுள்ளன. தவிர அவர்களின் மரணம் பற்றியும் குழந்தைப்பேறு பற்றியும் வரலாற்று நூல்கள் எவ்வதக் குறிப்பும் தரவில்லை! அல்லாஹ் அவர்களை முழுமையாகத் திருப்தி கொள்வானாக!
Previous Post Next Post