அர்ரபீ பின்த் மாஊத் (ரலி)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
''யார் யாரெல்லாம் பைஅத் ரிழ்வானில் கலந்து கொண்டார்களோ, அவர்களுக்கு சுவனம் சித்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது."
''அர்ரபீ பின்த் மாஊத் (ரலி) அவர்கள் பைஅத் ரிழ்வானில் கலந்து கொண்ட காரணத்தால், சுவனத்தைப் பெற்றுக் கொண்ட பெண்மணிகளில் ஒருவராக ஆனார்."
அர்ரபீ பின்த் மாஊத் (ரலி) அவர்கள் மாஊத் பின் அஃப்ரா என்பவரது மகளாவார், இன்னும் அவரது சிறிய தந்தையார்களான முஆத் பின் அஃப்ரா மற்றும் அவ்ஃப் பின் அஃப்ரா (ரலி) ஆகியோர்களாவார்கள். மேற்ண்ட அஃப்ராவின் மகன்கள் யாவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களாவார்கள். அல்லாஹ் இவர்களைப் பற்றித் தான் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான் :
''பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் இறைவனின் மன்னிப்பைப் பெற்றுக் கொண்டார்கள்.""
பத்ருப் போர்.., உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ மற்றும் வலீத் பின் உத்பா ஆகியோர் முன்னணிக்கு வந்து, இறைநிராகரிப்பாளர்கள் சார்பில் முஸ்லிம்களை எதிர்த்துச் சவால் விட்டனர்.
இந்த சவாலை ஏற்றுக் கொண்டு, அஃப்ரா அவர்களின் புதல்வர்களான மேலே நாம் பார்த்த மூன்று நபித்தோழர்களும் முன் வந்தனர். ஆனால், இவர்களைப் பார்த்த அந்த மக்காவின் இறைநிராகரிப்பாளர்கள் கூறினார்கள், ''எங்களுக்கு இணையாக உள்ள கோத்திரத்தார் மற்றும் தலைவர்களை அனுப்பி வையுங்கள்"" என்று கூறினார்கள். அதன்பின், அந்த மூவரையும் திரும்ப அழைத்துக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது சிறிய தந்தையாரான ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களையும், அலி பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும், உபைதா பின் ஹாரிதா (ரலி) அவர்களையும் நேருக்கு நேரான மோதலுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த மூன்று முஸ்லிம் மாவீரர்களின் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல், மக்காவின் மூன்று இணைவைப்பாளர்களும் மண்ணில் மடிந்தார்கள். மண்ணோடு மண்ணானார்கள். தங்களது காயங்களை நக்கிக் கொண்டே, நரகத்தின் அடித்தட்டில் தங்களது இருப்பிடத்தை ஆக்கிக் கொண்டார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அறிவிக்கின்றார்கள், பத்ரு யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது, அப்பொழுது அஃப்ராவின் சகோதரர்கள் என்னிடம் வந்து, காதுக்கு மிக அருகில் வந்து மெல்லிய குரலில், யார் அந்த அபூ ஜஹல், அவன் எங்கே இருக்கின்றான் என்று கேட்டார்கள். தயக்கத்துடன் பதில் கூறினேன், பின்னர் அவரது சகோதரர் ஓடி வந்து, மீண்டும் என்னிடமே முன்னவர் கேட்ட அதே கேள்வியையே கேட்டார்.
அப்பொழுது, ''நீங்கள் இருவரும் அபூஜஹலைப் பற்றிக் கேட்கின்றீர்களே, எதற்காக? என்றேன். அவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அதிகமாகத் திட்டுவதாக நாங்கள் அறிய வருகின்றோம். இன்று ஒன்று அவனது தலையை வெட்டுவது, அல்லது அந்த முயற்சியில் எங்களை நாங்கள் அழித்துக் கொள்வது என்ற முடிவோடு இருக்கின்றோம் என்று பதில் கூறினார்கள். இதனைக் கேட்ட நான் மிகவும் மகிழ்ந்து போனேன். அவர்களும்,நானும் பேசிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அபூ ஜஹ்ல் பெருமையும், பகட்டுமாக அந்த வழியாகப் போனான். அவனை நோக்கிக் கையைக் காட்டி, நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் இரை அதே போகின்றது என்று தான் கூறினேன். பாய்ந்து சென்ற இருவரும் அபூ ஜஹலைக் கடுமையாகத் தாக்கினார்கள், விளைவு ஒடிந்த மரக்கிளை போல குதிரையிலிருந்து விழுந்தான். அதன் பின் அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. இந்தக் காட்சியைக் கண்ட அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் விரைந்து சென்று அவனது தலையைக் கொய்தார்கள். அப்பொழுதும் கூட தனது தற்பெருமையின் காரணமாக, நான் ஒரு கோத்திரத்தின் தலைவனல்லவா, எனவே எனது கழுத்துக்குக் கீழ் பகுதியில் வெட்டும்படிக் கேட்டுக் கொண்டான் அபூஜஹ்ல். தன்னை ஒரு பலம் பொருந்திய வீரனொருவன் வெட்டியதாக சரித்திரம் இருக்க வேண்டுமே ஒழிய, அந்தஸ்தில் குறைந்த ஒருவன் வெட்டினான் என்று இருக்கக் கூடாது என்றே அவன் கருதினான். இறைத்தூதர் (ஸல்) அந்த இரண்டு சகோதரர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தார்கள். மேலும், இந்த மூன்று சகோதரர்களும் இரண்டாவது அகபா உடன்படிக்கையின் பொழுது வந்திருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஃப்ராவின் மகளான அர்ரபீ (ரலி) அவர்கள் மிகவும் பிரசித்தி பெற்ற வியாபாரியான அயாஸ் பின் பகீர் அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள். இவர்களுக்கு முஹம்மது பின் அயாஸ் என்ற மகனும் பிறந்தான்.
அர்ரபீ (ரலி) அவர்கள் மிகவும் பிரசித்தி பெற்றதொரு குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதாவது இவர்களது வீட்டிற்கு வந்து விட்டுப் போவதும் உண்டு, இன்னும் இவர்கள் கொடுத்தனுப்புகின்ற பரிசுப் பொருட்களை அன்னாரவர்கள் பிரியமுடன் ஏற்றுக் கொள்வதுமுண்டு. இதன் காரணமாக, அர்ரபீ (ரலி) அவர்கள் தான் ஒரு பாக்கியம் பெற்றதொரு பெண்மணி என்று தன்னைக் கருதினார்கள்.
தனக்குத் திருமணமான அன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களது வீட்டிற்கு வந்தார்கள். அப்பொழுது சிறுமிகள் அங்கே தஃப் என்ற சிறு கொட்டை அடித்து பாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, வருங்காலத்தைப் பற்றி அறிந்திருக்கின்றவராக எங்களது தூதர் எங்களுக்கு மத்தியில் இருக்கின்றார் என்று அந்த சிறுமிகள் பாடியதைக் கேட்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'அந்தப் பாட்டை நிறுத்துங்கள்", அல்லாஹ்வைத்தவிர, வேறு யாருக்கும் தெரியாத ஒன்றைப் பற்றிய அறிவு இல்லை என்று சாந்தமாகக் கூறினார்கள். அந்த வரியை விட்டு விட்டு மற்ற அடிகளைத் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்க அனுமதி அளித்தார்கள்.
இதன் மூலம் குடும்ப சந்திப்புகள் மற்றும் சந்தோஷமான நேரங்களில் உற்சாகத்தை வெளிப்படுத்துவதற்காக சிறுமிகள் பாடிக் கொள்ளலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
தன்னுடைய வீட்டிற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வருகை தரும் பொழுதெல்லாம், அன்னாருக்குப் பிடித்தமான உணவுகளைச் செய்து கொடுக்கக் கூடியவர்களாக அர்ரபீஆ (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவர்களது வீட்டிற்கு வந்த பொழுது, பழுத்த பேரித்தம் பழங்களை உண்ணக் கொடுத்தார்கள். அதேநாளில், தனக்குக் கிடைத்த தங்கம், மற்றும் வெள்ளியிலான ஆபரணங்களை அர்ரபீஆ (ரலி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பரிசாகக் கொடுத்தார்கள். பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்வதும், அன்பளிப்புச் செய்வதும் பிரியத்திற்கு அடையாளங்களாகும், இன்னும் அவை மனிதர்களுக்குள் உறவை வலுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என்பதால், இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஊக்குவித்திருக்கின்றார்கள்.
இன்னும் தொழுகைக்கான உளுச் செய்வதற்கும், தொழுவதற்கும், சில நேரங்களில் ஓய்வெடுப்பதற்காகவும் அர்ரபீ (ரலி) அவர்களது இல்லத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருவதுண்டு. அப்பொழுது, மார்க்க விஷயங்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அவர்கள் கற்றக் கொண்டார்கள். எனவே, ஏனைய தோழர்கள் இவரிடம் வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகளை தங்களுக்கு அறிவித்துத் தருமாறு கேட்கக் கூடிய அளவுக்கு இவர்களை மதிப்பிட்டு வைத்திருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள்தனது வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம், சிறிது தண்ணீர் கேட்பார்கள். நானும் அவர்கள் உளுச் செய்வதற்கு ஏற்றவாறு தண்ணீரைக் கொண்டு வந்து தந்து, அவர்கள் உளுச் செய்வதற்கு உதவியாக இருப்பேன். அதன்மூலம் உளுச் செய்வது எப்படி என்பதை அவர்களிடமிருந்து நான் மிகச் சரியாகக் கற்றுக் கொண்டேன். அவர்கள் தனதுகரங்களை மூன்று முறை கழுவக் கூடியவர்களாக இருந்தார்கள், பின்னர் முகத்தை மூன்று முறை கழுவக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். வாயை ஒரு முறை கொப்பளித்தார்கள், மூக்கினுள் தண்ணீரைச் செலுத்தி அதனைச் சிந்தினார்கள். பின்னர் மணிக்கட்டு வரை தனது கரங்களைக் கழுவினார்கள். பின்னர், தனது கைகளின் உள்ளங்கையைக் கொண்டு தலையின் முன்பிருந்து பின்னுக்காக தலையைத் தடவி, பின்னர் அப்படியே கையே முன்னந்தலைக்குக் கொண்டு வந்து மஸஹு செய்தார்கள். பின்னர் தனது விரல்களை காதுக்கு உள்ளேயும், வெளியேயும் நுழைத்துத் தடவினார்கள். பின்னர்தனது பாதங்கள் ஒவ்வொன்றையும் மூன்று முறை கழுவினார்கள்.
அபூ உபைதா பின் ஹமத் பின் அம்மார் பின் யாஸர் (ரலி) அவர்கள் ஒருமுறை இவர்களைச் சந்தித்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்று கேட்டார்கள்.
அதற்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சூரியனின் பிரகாசத்தை ஒத்தவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள். அவர்கள் சூரியனோடு ஏன் இறைத்தூதர் (ஸல்) அவர்களை ஒப்பிட்டுக் கூறினார்கள் என்றால், சூரியனின் கதிர்கள் எல்லா இடங்களிலும் வியாபித்துப் பரவுவதைப் போல, அவர்கள் கொண்டு வந்த தூதும் பரவியதைக் குறிக்கவே அவ்வாறு உவமையாகக் கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், ஆண்களைப் போலவே பெண்களும் போரில் கலந்த கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். போர்க்களத்தில் தண்ணீர் தாகத்தால் தவிப்பவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காகவும், இன்னும் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகவுமே பெண்கள் போர்க்களத்திற்குச் சென்றார்கள்.
ரபீஇ (ரலி) அவர்களிடமிருந்து தான் கேள்விப்பட்டதாக காலித் பின் தக்வான் என்பவர் ஸஹீஹ் புகாரியில் கூறுகின்றார்கள், ரபீஇ (ரலி) அவர்கள் போரில் கலந்திருக்கின்றார்கள், இன்னும் காயங்களுக்கு மருந்து கட்டி, தாதிப் பெண்ணாகவும், இன்னும் தண்ணீர் ஊற்றிக் கொடுப்பவளாகவும் பணியாற்றி இருக்கின்றார்கள். இன்னும் காயமடைந்தவர்களையும், இறந்தவர்களையும் தூக்கிச் செல்வது, இன்னும் அவர்களை மதினாவுக்கு அனுப்பி வைப்பது போன்ற பணிகளையும் செய்திருக்கின்றார்கள். இன்னும் ஹிஜ்ரி 6 ம் ஆண்டு, இஸ்லாமிய வரலாற்றில் பைஅத்துர் ரிழ்வான் என்றழைக்கக் கூடிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரும் பெற்றிருக்கின்றார்கள். அதன்மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களின் மூலமாக, சுவனத்திற்கான நன்மாராயத்தையும் பெற்றுக் கொண்டார்கள். இந்த உலகத்தில் இதை விடக் கண்ணியம் வேறு என்னவாக இருக்க முடியும்..!
அர்ரபீ (ரலி) அவர்கள் சிறந்த புரிந்துணர்வு மற்றும் தொலை நோக்குச் சிந்தனை கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ஒருமுறை அபூ ரபீஆ (ரலி) அவர்களின் மனைவி உம்மு அயாஸ் (ரலி) அவர்கள் இவரது வீட்டிற்கு வாசனைத் திரவியத்தை வைத்துக் கொண்டு அதனை விற்பதற்காக வந்தார். அப்பொழுது, எங்களது கோத்திரத்து தலைவரைக் கொன்றவரது மகளாக நீங்கள் இருக்கின்ற காரணத்தினால், உனக்கு நான் எந்த வாசனைப் பொருளையும் விற்க மாட்டேன் என்று கூறினார். கோபத்தால் முகம் சிவந்த அவர்கள், அப்படியென்றால் எனது வீட்டை விட்டும் இப்பொழுதே வெளியே சென்று விடுங்கள் என்று கூறி விட்டார்கள். உங்களது வாசனைத் திரவியம் மிகவும் கெட்டது என்று கூறி விட்டு, எனது கண்களை விட்டும் இப்பொழுது ஓடிப் போய் விடுங்கள் என்று கூறி விட்டார்.
உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் பொழுது இவருக்கும் இவரது கணவருக்கும் சிறு மன வருத்தம் ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாக, தனது கணவனைப் பார்த்து.., என்னிடம் உள்ள அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள், நான் உங்களிடம் இனி எனது வாழ்க்கையைத் தொடர முடியாது, உங்களை நான் 'குலா" ச் சொல்லி, உங்களிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக் கொள்கின்றேன் என்று கூறி விட்டார்கள். அவ்வாறே அவரது கணவர், இவரிடமிருந்த அனைத்தையும், ஏன் போர்வையை முதற்கொண்டு விட்டு வைக்காமல் அனைத்தையும் எடுத்துச் சென்று விட்டார். இந்தச் செய்தி உதுமான் (ரலி) அவர்களின் காதுகளுக்கு எட்டியது. இஸ்லாமியச் சட்டப்படி, அவரிடமிருந்து அவர் கணவர் எடுத்துக் கொண்ட எதனையும் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது. சமூகத்தில் உயர்மட்டத்தில் இருக்கின்றவர்களுக்கு இது போன்ற நிலைமைகள் தோன்றுவது சகஜம் தான் என்று கூறினார்கள்.
இன்றைய நவீன காலத்தில் பெண்ணுரிமை என்றும், பெண்களின் விடுதலை என்றும் பேசிக் கொண்டு கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவர்கள், இஸ்லாமியச் சட்டங்கள் பெண்களுக்கு எந்தளவு உரிமைகளை வழங்கியுள்ளது என்பதையும், அவர்கள் தங்களது உரிமைகளைச் சுதந்திரமான முறையில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முன்வர வேண்டும்.
தம்பதியினருக்கிடையே இனி இணைந்து வாழ முடியாது என்ற நிலைமை உருவாகி விட்டபின், அனைத்து சமாதான நடவடிக்கைகளும் பயனற்றுப் போன பின்பும், 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" என்ற புளித்துப் போன கொள்கையின் கீழ் வாழ வேண்டியதில்லை. மாறாக, சுதந்திரமான முறையில் கணவனிடமிருந்து மணவிலக்குப் பெற்றுக் கொண்டு விட முடியும். அதனை இருவரும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையிலோ அல்லது அதற்கென அமைக்கப்பட்டுள்ள நீதி மன்றத்தின் மூலமாகவோ அவர்கள் தங்களுக்கிடையே மணவிலக்குப்பெற்றுக் கொள்ள முடியும். இன்னும், பெண்களாக முன் வந்து மணவிலக்குக் கோருவதற்கு 'குலா" என்று பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. தம்பதிகளுக்கிடையே பிரச்னை அதிகரித்து விட்டால், அமைதியாகவும், சந்தோஷமாகவும் கழிய வேண்டிய இல்லற வாழ்வு போர்க்களமாகக் காட்சி அளிக்க ஆரம்பித்து விடும். இஸ்லாம்.., மணவிலக்கை வேண்டா வெறுப்பாகவே அங்கீகரித்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய எளிய நடைமுறை இல்லாததன் காரணமாகவே, இன்றைய உலகில் விரிசல்கள் விழுந்த பின், கணவன் மனைவியைக் கொல்வதும், மனைவி கணவனைக் கொல்வதும் வாடிக்கையாகி விட்டது. இன்னும் கற்புள்ள மனைவி மீது களங்கம் சுமத்துவதும் கணவர்களுக்கு எளிதாகி விட்டது.
அர்ரபீஆ பின்த் மாஊத் (ரலி) அவர்களின் மூலமாக 21 ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களின் ஹதீஸ்களை இஸ்லாத்தின் தலைசிறந்த நல்லறிஞர்களான ஆயிஷா பின்த் அனஸ் பின் மாலிக், சுலைமான் பின் யாஸர், காலித் பின் தக்வான், அப்துல்லா பின் முஹம்மது பின் அகீல், அபூ உபைதா முஹம்மது பின் அம்மார் பின் யாஸர் போன்ற நபித்தோழர்கள் அறிவிப்புச் செய்துள்ளார்கள்.
ஹிஜ்ரி 45 ம் வருடம், முஆவியா பின் சுஃப்யான் (ரலி) அவர்களது காலத்தில் மிக நீண்ட நெடிய நாட்கள் வாழ்ந்து மறைந்தார்கள்.
அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள், அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான்.