இக்ரிமா பின் அபீ ஹிஷாம் (ரலி)
வளமும், வனப்பும் நிறைந்திருக்க, அத்துடன் வலிமையும் மிகைத்திருக்க பனூ மக்சூம் குலத்தவர்களின் போற்றத்தக்க தலைவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தால், குல வழி வந்த பெருமையுடன் குறிப்பிடத்தகுந்ததொருவராகத் திகழ்ந்தார்கள் இக்ரிமா பின் அபீ ஹிஷாம் (ரலி) அவர்கள். இந்தளவு அதிர்ஷ்டகரமான வாழ்வுக்குச் சொந்தக் காரராக இருந்ததுடன், ஆயுதங்களைக் கையாள்வதில் மிகவும் திறமை மிக்கவராக, வில், அம்பு மற்றும் ஈட்டி எறிதலில் திறமை மிக்கவராகத் திகழ்ந்தார். ஓட்டத்தில் வல்லவரான இவரிடம், குதிரை கூடச் சற்று மலைத்துத் தான் போகும்.
ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) மற்றும் முஸ்அப் பின் உமைர் (ரலி) ஆகியோர்களுக்கு மிகவும் நெருக்கமான தோழராகவும் இருந்தார். இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் இவர்களை அண்மித்த பொழுது, அதனை அணைத்துக் கொண்டு, இஸ்லாமிய வானில் ஒளிர் விடும் நட்சத்திரங்களாகவும் ஆனார்கள். ஆனால் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக பின்பற்றுவோர்களுக்கு, எப்பொழுதுமே இவ்வுலகை நேசிக்கக் கூடியவர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும் துன்பத்தைப் போலவே, இவரும் துன்பத்தை அனுபவித்தார். இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்று நடப்பதில் இவருக்குத் தடைக் கல்லாக இருந்தவர் யார் என்று தெரியுமா? இவரது தந்தை தான். இவரது தந்தை யார் என்று தெரியுமா? குறைஷிக் குலத்தின் மிகப் பெரும் தலைவராகத் திகழ்ந்த, உமைர் பின் ஹிஷாம் - இவர் இஸ்லாத்தின் மீதும், அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் மீதும் அளவில்லாத குரோதத்தை தனது மனதில் வளர்த்து வைத்திருந்த காரணத்தினால், முஸ்லிம்களுக்கு அளவில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, சமூக வாழ்வில் ஒழுக்கமாக வாழ்வதன் மூலம் மறுமை வாழ்வில் பிரகாசிக்க நினைத்தவர்கள், உமைர் பின் ஹிஷாம் போன்றவர்கள் தரும் துன்பங்களையும், துயரங்களையும், இன்னல்களையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டே வாழ வேண்டிய கட்டாயம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து வரும் சரித்திரத் சான்றுகளாகும்.
இன்றைக்கு குவாண்டனாமோ வதை முகாம்களை நிறுவி இருப்பது போல அன்றைக்கு உமைர் பின் ஹிஷாம் போன்ற இஸ்லாத்தின் எதிரிகள், தினம் ஒரு சித்திரவதை முறையைக் கண்டு பிடித்து முஸ்லிம்கள் மீது பிரயோகித்து வந்தார்கள். இந்தக் கொடுமதியாளர்களின் அடக்குமுறைகள், அநீதங்கள் யாவும் ஓரிறைவனை வணங்குவதனின்றும் முஸ்லிம்களை அப்புறப்படுத்தி விடவில்லை. மாறாக, முன்னைக் காட்டிலும் அவர்கள் இறைநம்பிக்கையில் புடம் போடப்பட்ட தங்கங்களாக மிளிர்ந்தார்கள்.
அவர்கள் தங்களது சித்ரவதைகளை நிறைவேற்ற சில முஸ்லிம்களைத் தேர்ந்தெடுத்து, சித்ரவதை செய்தார்கள். அவ்வாறு சித்ரவதைகளைச் செய்வதில் உமைர் பின் ஹிஷாம் தேர்ந்தவராகத் திகழ்ந்தார். பிலால் (ரலி) அவர்களை சுடுமணலில் கிடத்தி, தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். கப்பாப் பின் அரத் (ரலி) அவர்களையும் சுடுமணலில் வெற்றுடம்புடன் கிடத்தினார்கள். அவரது மனைவியான சுமையா (ரலி) அவர்களையும் வார்த்தைகளால் வடிக்க இயலாத கொடுமைகளுக்கு உட்படுத்தினார்கள். இந்தளவு கொடுமையிலும் அவர்கள் படைத்த இறைவனை நேசித்தார்கள். படைப்பினங்களுக்கு சிரம் தாழ்த்த மறுத்தார்கள்.
இந்த சித்ரவதைகளுக்கு மூல காரணமாக இருந்தவன் யார் என்று நினைக்கின்றீர்கள்? இக்ரிமா (ரலி) அவர்களின் தந்தையான உமைர் பின் ஹிஷாம் தான். இவனைத் தான் இஸ்லாமிய வரலாறு அபூ ஜஹ்ல் என்று அழைக்கின்றது.
தனது தோழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், சித்ரவதைகளையும் பார்த்துக் களங்கிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர்களை ஹிஜ்ரத் என்னும் நாடு துறந்து செல்லும்படிப் பணித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்ட அருமைத் தோழர்கள், தலைவரின் கட்டளைப்படி எத்தியோப்பியாவுக்கு நாடு துறந்து சென்றார்கள். இவ்வாறு நாடு துறந்து சென்றவர்களையும் நிம்மதி வாழ அனுமதிக்காத அபூ ஜஹ்ல், எத்தியோப்பிய மன்னர் நஜ்ஜாஸி அவர்களிடம் ஒரு குறைஷித் தூதுக் குழுவை அனுப்பி வைத்து, முஸ்லிம்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த முயற்சி செய்தான். இவ்வாறு நாடு துறந்து சென்ற முஸ்லிம்கள் பின்னாளில், மதீனாவில் நிலையானதொரு இஸ்லாமிய சமூகம் மறுமலர்ச்சி கண்ட பொழுது, எத்தியோப்பியாவை விட்டும் கிளம்பி மதீனாவிற்குத் திரும்பினார்கள். அங்கு முஸ்லிம்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டதோடு, வலுவான இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றைக் கட்டி எழுப்பினார்கள். அதன் மூலம், இஸ்லாத்தையும், அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் துடைத்தெறிந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டவர்களின், கனவைக் களைத்து அவர்களை நிம்மதி இழக்கவும் செய்யப்பட்டார்கள்.
நிம்மதி இழந்த இஸ்லாத்தின் எதிரிகள், இஸ்லாத்தை வேரறுக்கு முகமாக பத்ரில் ஒன்று கூடினார்கள். மதீனாவின் எல்லை அண்மித்து குறைஷிகளின் போர் மேகங்கள் சூழ்வதைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது தோழர்களை அழைத்துக் கொண்டு பத்ர் என்னும் இடத்தை வந்தடைந்தார்கள். இந்த இடத்தில் தான் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான முதல் போர் நடந்தது. முஸ்லிம்களுக்கு இது அக்னிப் பரீட்சையாகத் திகழ்ந்தது, இன்னும் வரலாற்றில் மிகப் பிரபலமாக அறியப்படும் பத்ர் யுத்தம் என்றும் இது அழைக்கப்பட்டது. இந்தப் போருக்குத் தலைமையேற்று வந்திருந்தவர்களில் ஒருவனான அபூ ஜஹல்.., முஸ்லிம்களை வேரறுத்து தடம் தெரியாமல் ஆக்காமல் நான் மக்காவிற்குத் திரும்ப மாட்டேன் என்று தான் வணங்கும் லாத் மற்றும் உஸ்ஸா தெய்வங்களின் மீது சத்தியம் செய்திருந்தான்.
தங்களது வளத்தோடும், ஆயுத பலத்தோடும், எண்ணிக்கையில் அதிகமாகவும் பத்ருக்கு வந்திருந்த குறைஷிகள், நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற மமதையுடன் காணப்பட்டார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு பின்னால், படைத்தவனான அல்லாஹ் இருக்கின்றான் என்பதை மறந்து விட்டார்கள். அற்ப ஆயுதங்களோடும், குறைந்த எண்ணிக்கையோடும் இருந்த முஸ்லிம்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒன்று கூடி, படைத்தவனிடம் மண்டியிட்டுப் பிரார்த்தித்தார்கள். அவர்களது சிரங்கள் படைத்தவனின் உதவியை நாடு நிலத்தில் தாழ்ந்திருந்தன.
யா அல்லாஹ்..! உன்னை வணங்குவதற்காகவே இருக்கின்ற இந்த சிறு கூட்டத்தையும் இந்த மண்ணிலிருந்து நீ துடைத்தெறிந்து விட்டால், உன்னை வணங்குவதற்கென்று யாரும் இந்தப் பூமியில் மீதமிருக்க மாட்டார்கள், இந்தப் பூமியில் உனக்கு சிரம் பணிந்து வணங்கும் அழகான வழிபாடு இல்லாது போய் விடும் யா அல்லாஹ்..! என்று பிரார்த்தித்து, இறைவனது உதவியை நாடி நின்றார்கள்.
இப்பொழுது இரண்டு படைகளும் பத்ருப் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதிக் கொள்ள ஆரம்பித்தன. இஸ்லாமிய படைவீரர்கள், சுவனத்தைக் கண் முன் நிறுத்தி தங்களது போர் யுக்திகளை வீரத்துடன் வெளிக்காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது போர் முனையில் நடந்தவற்றை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் விவரிப்பதைக் காண்போம்.
மிகவும் இள வயதுடைய இரண்டு வீரர்கள், அதாவது முஆத் (ரலி) மற்றும் முவாஸ் (ரலி) ஆகிய இருவரும் என்னிடம் வந்து மிகவும் ரகசியமான குரலில், யார் அந்த அபூ ஜஹ்ல் என்றும், அவனை நாங்கள் எங்கு காணலாம் என்றும் வினவினார்கள். நான் மிகவும் ஆச்சரியம் கொண்டவனாக, 'அவனிடம் உங்களுக்கு என்ன வேலை" என்று கேட்டேன். அவன் தானே இந்த நிராகரிப்பாளர்களின் தலைவன், இன்னும் அவன் முஸ்லிம்கள் மீது கடுமையான துன்பங்களையும், கொடுமைகளையும் இழைத்தவனாயிற்றே, அவன் நம்முடைய எதிரி அல்லவா? என்றார்கள். இன்னும் அவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு கடுமையான துன்பங்களைக் கொடுத்ததாகவும் நாங்கள் அறிய வருகின்றோம், அவனைக் கொன்று நரகத்தில் அடித்தளத்திற்கு நாங்கள் அனுப்பாமல் விட மாட்டோம் அல்லது இந்த முயற்சியில் எங்களது உயிர்களையும் நாங்கள் அற்பணிக்கத் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர்கள் சூளுரைத்தார்கள். இன்னும் அவனைக் கொல்லாமல் வெறுமனே திரும்பி வருவதில்லை என்றும் அவன் சபதம் எடுத்துக் கொண்டு, போர்க்களத்திற்குள் நுழைந்தார்கள். அப்பொழுது சற்று நேரத்திற்கெல்லாம் அபூஜஹ்ல் எங்களுக்கு மிக அருகே வலம் வர ஆரம்பித்தான் என்று கூறி விட்டு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மீண்டும் தொடர்கின்றார்கள் :
''அபூஜஹ்லைக் கண்டவுடன், நான் அந்தச் சிறுவர்களை நோக்கி, நீங்கள் தேடி வந்த இரை அதோ வந்து கொண்டிருக்கின்றது பாருங்கள் என்று அபூஜஹ்லைச் சுட்டிக் காட்டினேன். அந்த மாத்திரத்திலேயே, அந்தச் சிறுவர்கள் அபூஜஹ்லை நோக்கிப் பாய்ந்தார்கள். எதிர்பாராத தாக்குதலைச் சந்தித்த அபூஜஹ்ல் நிலை தடுமாறு, தனது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டான். இப்பொழுது அங்கு அருகே நின்று கொண்டிருந்த அபூஜஹ்லின் மகனும் இன்னும் இஸ்லாத்தைத் தழுவாதவராகவும் இருந்த இக்ரிமா அவர்கள் தனது தந்தையின் ஓலக் குரலைச் செவிமடுத்தார், அபூஜஹ்லிற்கு லாத்தும், உஸ்ஸாவும், மனாத்தும் உதவி செய்யவில்லை, இப்பொழுது போர்க்கலையில் மிகவும் திறமை வாய்ந்த தனது தந்தை இரு சிறுவர்களின் தாக்குதலுக்குச் சமாளிக்க இயலாமல் வீழ்ந்து விட்டதை தனது கண் முன்னால் கண்டு கொண்டிருந்தான். அவன் விழுந்த வேகத்தில் அந்த இரு சிறுவர்களும் தங்களது வாளை அபூஜஹ்லின் மீது செலுத்தி, அவனது உயிரைப் பறித்தார்கள், அருகே நின்று கொண்டிருந்த இக்ரிமா வினால் கூட தனது தந்தைக்கு எந்தவித உதவியையும் செய்ய இயலவில்லை, தனது தந்தை மரணத்தின் மூலம் நரகத்தின் வாசலை அடைந்து கொண்டு விட்டதைத் தடுக்க இயலவில்லை. இதற்குப் பழி வாங்கத் துடித்த இக்ரிமா அவர்கள், முஆஸ் (ரலி) அவர்களின் தோள்பட்டையில் தனது வாளை இறக்கினார். அந்த வாள் முஆஸ் (ரலி) அவர்களின் தோளைப் பதம் பார்த்தது. இக்ரிமா வின் வாள் வீச்சினால் ஏற்பட்ட காயத்தின் காரணமாக தோள் பட்டை புஜத்தை விட்டும் தொங்க ஆரம்பித்து, தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில், முஆஸ் (ரலி) அவர்கள், தனது காலை வைத்து தொங்கிக் கொண்டிருந்த தோள் பட்டையை அழுத்திப் பிடித்து இழுத்து அறுத்தெறிந்தார். எல்லாப் புகழும் இறைவனுக்கே..! இந்தச் சின்னஞ் சிறு வயதில், இறைவன் இந்தளவு மன வலிமையை அல்லாஹ் அவர்களுக்கு அருளி இருந்தான். மீண்டும் எல்லாப் புகழும் இறைவனுக்கே..!
இறந்து கிடந்த தனது தந்தைக்கு எதுவும் செய்யத் திராணியற்றவராக, இக்ரிமா அந்த இடத்தை விட்டும் தப்பித்தால் போதுமென்று விரைந்து அகன்று விட்டார். தங்களது அபரிதமான போர்க்கருவிகள் மற்றும் படைகளின் எண்ணிக்கை குறித்து மிகவும் பெருமையோடு பத்ருப் போர்க்களத்தை நோக்கி வந்தவர்களுக்கு, அவர்களது ஆயுதங்களும், ஆட்களின் எண்ணிக்கையும் எந்தவிதத்திலும் உதவிகரமாக இருக்கவில்லை. மாறாக, முகத்தில் புழுதி படிந்தவர்களாக அவமானத்தோடு இப்பொழுது போர்க்களத்தை விட்டும் தோற்றோடிக் கொண்டிருந்தார்கள். குறைஷிகளின் மிகப் பெரும் தலைகள், இப்பொழுது மண்ணோடு மண்ணாக உருண்டு வீழ்ந்து கிடந்தன. வீழ்ந்து மடிந்து கிடந்த இறைநிராகரிப்பாளர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, ஒரு கிணற்றில் அவர்களது உடல்களை வீசி, அதன் மீது புழுதியையும் வீசினார்கள் முஸ்லிம்கள். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடந்த இந்த முதல் போர், அசத்தியத்தை வீழ்த்தி சத்தியம் வெற்றி கண்டது, அசத்தியம் வேரோடு சாய்க்கப்பட்டது. மூர்க்கத்தனமான ஷைத்தானின் தோழர்களான அபூஜஹ்ல் போன்றவர்கள், பத்ருக் களத்தின் மண்ணை முத்தமிட்டுக் கொண்டார்கள்.
இக்ரிமா அவர்களின் பழி வாங்கும் துடிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. குறைஷிகளிடையே தனது தந்தைக்கு இருந்த மதிப்பு, இன்னும் அதன் காரணமாக எழுந்த இஸ்லாத்தின் மீதான கொடுஞ்சினம் போன்றவையும் இணைந்து கொள்ள, இஸ்லாத்தின் மீது பழிக்கும் பழி எடுக்க வேண்டும் என்ற துடிப்பு, எல்லையின்றி பரந்து கொண்டே சென்றது. இக்ரிமாவும், அவரது தோழர்களும் பத்ருப் போர்க்களத்தில் இறந்து போன தங்களது உறவினர்களின் நிலை குறித்தும், உயிரோடு இருக்கின்ற நாம் நம்முடைய உறவினர்களின் படுகொலைக்குப் பழிக்குப் பழி எடுக்க வேண்டும் என்ற துடிப்பும் அவர்களிடம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
நிராகரிப்பாளர்கள் தங்களது வஞ்சங்களைத் தீர்த்துக் கொள்ளும் தளமாக இப்பொழுது உஹதுக் களம் தயாராகிக் கொண்டிருந்தது. பழக்குப் பழி வாங்கியே தீருவது என்ற முழக்கத்தோடு, இக்ரிமா பின் அபூ ஜஹ்ல் உஹதுக் களம் நோக்கித் தனது பரிவாரங்களை நகர்த்தத் துவங்கினார். அவருடன் அவருடைய மனைவி உம்மு ஹக்கீம் அவர்களையும் அழைத்துக் கொண்டார். குறைஷிகள் போர்க்களத்தில் துவண்டு நிற்கும் பொழுது, போர்படைக்குப் பின்னாள் நிற்கும் பெண்கள் முரசறைந்து, வீரர்களுக்கு உற்சாகத்தை ஊட்டுவார்கள். அதன் மூலம் உத்வேகம் ஊட்டப்பட்ட வீரர்கள் மிகவும் மூர்க்கமாகத் தங்களது தாக்குதல்களை எதிரிகளின் மீது தொடுப்பார்கள், பெண்கள் பின்னாள் அணிவகுத்து நிற்கும் பொழுது ஒவ்வொரு ஆணும் தன்னுடைய புஜபல பராக்கிரமங்களை பெண்களுக்கு அதிகப்படியாக காண்பிக்கவே விரும்புவான். அந்த மனநிலையை ஆடவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவே மக்கத்துக் குறைஷிகள் பெண்களைத் தங்களுடன் அழைத்து வந்திருந்தார்கள்.
காலித் பின் வலீத் அவர்கள் வலது பக்கமுள்ள அணிகளுக்கும், இக்ரிமா பின் அபூஜஹ்ல் இடது பக்கமுள்ள அணிகளுக்கும் தலைமையேற்றிருக்க போர்க்களத்தில் குறைஷிகள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு வீரர்களும், முஸ்லிம்களுக்கு அதிகப்படியான இழப்புகளை ஏற்படுத்தியதோடு, போர்க்களத்தில் குறைஷிகளின் கரம் ஓங்குவதற்கும் வழி வகுத்தார்கள். இன்னும், உஹதுப் போர்க்களத்தில் முஸ்லிம்களுக்கு கடுமையான இழப்புகள் ஏற்பட்டதை அடுத்து, பத்ருப் போர்க்களத்தில் நாம் அடைந்த தோல்விக்கு பழிக்குப் பழி எடுத்தாகி விட்டது என்று குறைஷிகளின் ஒட்டு மொத்தப்படைக்கும் தலைமைத் தளபதியாக வந்திருந்த அபூசுப்யான் அவர்கள் அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அரபுகளின் மனநிலையை நன்கு அறிந்திருந்த காரணத்தினால், மீண்டும் இஸ்லாத்தின் எதிரிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கத் தயாராகி விடுவார்கள், இன்னும் இவர்கள் தங்கள் தங்கள் குலத்தவர்களின் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு அணி திரள்வதில் மிகவும் விரைவானவர்கள் என்பதையும் அறிந்திருந்த காரணத்தினால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். பத்ருக் களத்தில் பெற்ற தோல்விக்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற மனநிலையில் மக்கத்துக் குறைஷிகள் இருந்தனர். மதீனாவில் வாழ்ந்து கொண்டிருந்த பிரபலமான யூதக் குலங்களான பனூ கைனூக்கா மற்றும் பனூ நதீர் ஆகியோர்களை மதீனாவை விட்டும் வெளியேற்றி விட்டதன் காரணமாக அவர்களும் முஸ்லிம்களின் மீது கடுஞ் சினம் கொண்டிருந்தார்கள். இன்னும் பனூ ஹதீல் மற்றும் பனூ கதஃபான் ஆகிய இரு யூதக் கோத்திரத்தார்களும் இயல்பாகவே முஸ்லிம்களின் மீது கடுமையான சினம் கொண்டிருந்தார்கள்.
இவர்களின் கோபத்திற்கும் சினத்திற்கும் காரணமிருந்தது. சற்று சில நாட்களுக்கு முன் மக்காவிலிருந்து வெறுங் கையுடன் ஓடி வந்த ஒரு மனிதர், மிகக் குறுகிய காலத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடல்லாமல், மதீனாவைத் தனது ஆட்சிப் பிரதேசமாகவும் இன்னும் புதியதொரு கொள்கைக்கு அடித்தளமிடக் கூடிய நகரமாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றாரே என்ற காழ்ப்புணர்ச்சி குறைஷிகளிடமும், இன்னும் மதினாவில் வாழ்ந்து வந்து கொண்டிருந்த யூதர்களிடமும் நிரம்பி வழிந்தது. இன்னும், இந்த முஹம்மதைப் பின்பற்றக் கூடிய அவரது தோழர்கள், எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாரானவர்களாக இருப்பதும் கூட அவர்களுக்குள் அச்சத்தை அனுதினமும் வளர்த்து வந்து கொண்டிருந்தது.
இவை அத்தனையையும் மனதில் எடை போட்டுப் பார்த்த அபூசுப்யான் அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும், அவரது மார்க்கத்திற்கும், முஸ்லிம்களுக்கும் யார் யார் எதிரிகளாக இனங் காணப்பட்டார்களோ அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, ஒருங்கிணைந்த படைப் பிரிவு ஒன்றை முஸ்லிம்களுக்கு எதிராகத் திரட்டி, மதீனாவை முற்றுகையிடத் தயாராகிக் கொண்டிருந்தார்.
அபூசுப்யான் அவர்களின் இந்தத் திட்டத்தை அறிந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவைச் சுற்றிலும் அகழிகளைத் தோண்ட ஆரம்பித்தார்கள். இதன் மூலம் எதிரிகள் வெகு எளிதாக மதீனா நகருக்குள் நுழைவது தடுக்கப்படுவதோடு, உள்ளிருந்து தாக்குதல் தொடுப்பதற்கு வசதியான அரணாகவும் இந்த அகழிகள் முஸ்லிம்களுக்கு பேருதவி புரிந்தன.
எந்த சூழ்நிலையையும் பெண்களும் கூட சமாளிக்கும் பொருட்டு, இஸ்லாமியப் பாடல்களை பாடுவதில் மிகவும் வல்லவராக ஹஸன் பின் தாபித் (ரலி) அவர்களது தலைமையில் பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்டார்கள். இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட பெண்களின் குழுவில், ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். ஒரு யூதன் மதீனாவின் எல்லைக்கு அப்பால் உளவு பார்த்துக் கொண்டிருந்ததை அறிந்து கொண்ட ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள், ஒரு கனமான கம்பை எடுத்து, அவனைத் தாக்கி அந்த இடத்திலேயே கொன்றும் விட்டார்கள். தங்களைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அறிந்த எதிரிகள் மிகவும் அச்சமும், கலவரமும் அடைய ஆரம்பித்தார்கள்.
மதீனாவைச் சுற்றிலும் தோண்டப்பட்டிருந்த அகழிகளில் ஒரு பகுதியில் ஏற்பட்டிருந்த வசதியான குறுகிய இடைவெளியைப் பயன்படுத்தி, உமர் பின் அப்தூத், தரார் பின் கத்தாப் மற்றும் அப்பொழுது இஸ்லாத்தைத் தழுவாதிருந்து இக்ரிமா (ரலி) ஆகிய மூவரும் தங்கள் குதிரைகளில் இருந்தபடியே தாவிக் குதித்து உள்ளே வந்து விட்டனர்.
அலீ (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இப்பொழுது அவர்களை மேலும் முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் அம்ர் பின் அப்தூத் என்பவனுடன் மோதி, அவனது தலையைத் துண்டித்தார்கள். தரார் பின் கத்தாப் ம் மற்றும் இக்ரிமா அவர்களும் தங்களது தோழருக்கு நேர்ந்த கதியைக் கண் முன்னால் கண்டு கொண்டிருந்த நிலையிலேயே, தப்பித்தால் போதுமென்று அங்கிருந்து உயிர் பிழைத்து ஓட ஆரம்பித்தார்கள்.
மக்கா வெற்றியின் பொழுது அன்றைய தினத்தில், மக்கத்துக் குறைஷிகள் அச்சம் மிகுந்தவர்களாக இன்னும் முஸ்லிம்களின் வெற்றியைக் குறித்து கலவரங் கொண்டவர்களாக மாறிய நிலையில், முஸ்லிம்களை நேருக்கு நேராக மோதுவதற்குப் பயந்தார்கள். மக்காவினுள் பிரவேசிக்க இருக்கின்ற முஸ்லிம்களை பிரவேசிக்க விடாத அளவுக்கு முஸ்லிம் படைகள் வருகின்ற வழிகளில் தடைகளை ஏற்படுத்துவது என்று தீர்மானித்தார்கள். அன்றைய தினத்தில் மக்காவில் உள்ள அனைத்து நிரகாரிப்பாளர்களுக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பொதுமன்னிப்பை வழங்கியிருக்கின்றார்கள் என்பதை இறைநிராகரிப்பாளர்கள் அறிந்தே வைத்திருந்தார்கள். இருப்பினும், அவர்களில் சிலர் முஸ்லிம்களின் மீதுள்ள கடுமையான வெறுப்பின் காரணமாக முஸ்லிம்களை எதிர்த்தே ஆவது என்று முடிவு செய்தவர்களாக தடையை ஏற்படுத்தக் கிளம்பினார்கள். அவர்களில் இக்ரிமா அவர்களும் ஒருவராவார். இவர் தன்னுடன் மக்காவின் சில இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு, காலித் பின் வலீத் (ரலி) அவர்களது தலைமையில் மக்காவினை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் படைகளைத் தடுப்பதற்காக ஒன்று திரண்டு கொண்டார்கள். இவர்களின் இந்த நடவடிக்கையில் தோல்வியைத் தழுவிய அவர்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களைத் தோற்கடிக்கத் திராணியற்றவர்களாகி, மக்காவை விட்டும் ஓடத் துவங்கினார்கள். அவ்வாறு ஓடியவர்களில், இந்தக் குழுவினரின் தலைவராகச் செயல்பட்ட, இக்ரிமாவும் முக்கியமானவர். தோல்வியைத் தழுவி விட்டோமே என்று இக்ரிமா அவர்கள் மிகவும் அவமானத்துடன் துடிக்கலானார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளித்திருந்த நிலையிலும் கூட, அவமானத்துடன் இனி மக்காவில் தன்னுடைய வாழ்வைக் கழிப்பது மிகவும் சங்கடமானது என்பதை இக்ரிமா உணர்ந்தார். இதில் சில நபர்களைக் குறித்து, இவர்கள் கஃபாவின் திரைச் சீலைகளுக்குப் பின்னால் ஒளிந்திருந்தாலும், அவர்களை இழுத்து வந்து அவர்களது தலையைத் துண்டிக்க வேண்டும் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள். அவ்வாறு மரண தண்டனைக்குரியவர்களாக இனங்காட்டப்பட்டவர்களில் இக்ரிமா அவர்களும் ஒருவராவார். இவர் தன்னுடைய வாழ்வுக்கு இனி மக்காவில் உத்தரவாதம் ஏதும் கிடையாது என்பதை உணர்ந்து, பயந்தவராக, யாருக்கும் தெரியாமல் மக்காவை விட்டும் வெளியேறி, ஜித்தாவை நோக்கிப் பயணமானார். அங்கிருந்து யமன் தேசத்திற்குச் செல்வதாக முடிவெடுத்திருந்தார். இப்பொழுது தான் அதிகாரத்துடன் பவனி வந்த வீதிகள்,இப்பொழுது தனது உயிருக்கு உத்தரவாதம் தரவில்லையே.., சற்று முன் கடந்து போன நாட்களில் நான் அபூஜஹலின் மகனாக வானளாவ அதிகாரத்துடன் இந்தத் தெருவில் தானே பவனி வந்தேன்.., இந்த நகரத்தின் மக்களின் மீதெல்லாம் எனது அதிகாரம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்ததே.., இந்த நகரம்.., இப்பொழுது என்னைப் பாதுகாக்கத் திராணியற்றதாக, என்னுடைய உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவியலாத நிலையில், பிரியா விடை தருகின்ற நிலைக்கு ஆளாகி விட்டேனே என்று தனது நகரத்திற்கு பிரியாவிடை பகர்ந்து விட்டு, மக்காவை விட்டும் வெளியேறினார். நேற்று வரை என்னுடைய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் தானே இந்த மக்கள், இன்றைக்கு இவர்களுக்கு என்ன ஆகி விட்டது. இந்தப் பூமியே தலைகீழாகப் புரட்டிப் போட்டது போலல்லவா மாறி விட்டிருக்கின்றது. நான் நடந்து திரிந்து இந்தத் தெருக்கள், வியாபாரத் தளங்கள் யாவும் என்னை நிராகரித்து விட்டனவே, இனி இங்கிருந்து என்ன பயன், என்னுடைய உயிரையே என்னால் பாதுகாக்க இயலாது போய் விட்டதே என்ற நினைவில் மூழ்கியவராகவே இக்ரிமா மக்காவை விட்டும் வெளியேறி, தனது பயணத்தை யமன் தேசத்தினை நோக்கி செலுத்தலானார்.
இப்பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்காவினை மிகவும் அமைதியான முறையில் கைப்பற்றியதுடன், அங்கிருந்த குறைஷிகளுக்கு பொதுமன்னிப்பையும் அறிவித்தார்கள். இந்தப் பொதுமன்னிப்பைப் பயன்படுத்திக் கொண்டவர்களாக இக்ரிமாவின் மனைவி உம்மு ஹகீம் மற்றும் ஹிந்தா பின்த் உத்பா ஆகியோர்களும் இன்னும் சில பெண்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முன்னிலையில் வந்து நின்று, தாங்கள் இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்கள். இன்னும்தங்களுக்காக இறைவனிடம்பாவ மன்னிப்புக் கோருமாறும், இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுப் பின்பற்றத் தயாராக இருப்பதாகவும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையிலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் வந்த அந்தப் பெண்மணிகள் தெரிவித்தார்கள். இந்தப் பெண்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் அந்த நேரத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களும், இன்னும் இரண்டு இறைநம்பிக்கையார்களின் தாய்மார்களும் அவ்விடத்தில் இருந்தார்கள். திரைமறைவுக்குப் பின்னால் இருந்து கொண்டு மிகவும் சன்னமான குரலில் ஹிந்தா பின்த் உத்பா அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம்,
இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! தனது சிறப்பு மிக்க இந்த நல்லடியாருக்கு வெற்றியை அளித்தவனான, வல்லோனாம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இந்த வெற்றிக்கு உரித்தானவர் தான் நீங்கள். இரத்த உறவுச் சொந்தங்கள் என்ற அடிப்படையில் உங்களிடம் நாங்கள் கருணையை எதிர்பார்க்கின்றோம், இன்னும் நான் மிகவும் நேர்மையான முறையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றேன், என்று கூறினார்கள்.
தனது முகத்தை மூடிக் கொண்டிருந்த அந்த திரையைச் சற்று விலக்கி தான் யார் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அடையாளப்படுத்திக் காட்டி, 'நான் தான் ஹிந்தா பின்த் உத்பா" என்றார்கள்.
மனித குலத்திற்கு அருட்கொடையாக அனுப்பி வைக்கப்பட்ட தூதராக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவர்களை வரவேற்றார்கள், இன்னும் சற்று முன் நீங்கள் கூறிய நேர்மையான நல்ல வாழ்த்துக்கள் குறித்து நான் மிகவும் சந்தோஷமடைகின்றேன் என்றும் கூறினார்கள். இதன் மூலம் இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கான பக்குவத்தை, இதயத்தின் ஓரத்தில் இதமானதொரு இடத்தை பெற்றிருந்தார்கள் ஹிந்தா பின்த் உத்பா அவர்கள்.
மீண்டும் இப்பொழுது ஹிந்தா பேசினார்கள் :
சற்று முன் நடைபெற்ற நிகழ்வுகளின் பொழுது கூட இஸ்லாத்தைப் பற்றியும், இன்னும் தங்களைப் பற்றியும் மிகவும் வெறுப்புணர்வைத் தான் என்னில் வளர்த்திருந்தேன். அந்த வெறுப்பு வளர்ந்திருந்த இடத்தை உங்களின் மீது அன்பு ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. இப்பொழுது நீங்களும் உங்களது மார்க்கமும் இந்த உலகத்தில் உள்ள அத்தனையையும்விட எனக்கு மிகவும் பிரியமானதொன்றாக மாறி விட்டது.
இப்பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களது இதயத்திலிருந்து வெளியாகி இருக்கின்ற, இந்த தூய்மையான நோக்கத்தையும், எண்ணத்தையும், உணர்வுகளையும் அல்லாஹ் மென்மேலும் அதிகரிக்கச் செய்வானாக, பிரகாசிக்கச் செய்வானாக!
இதற்குப்பின் ஹிந்தா பின் உத்பா இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்வதாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்கள். இவர்களை அடுத்து இக்ரிமா அவர்களின் மனைவி உம்மு ஹக்கீம் அவர்களும் முன்வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் உரைத்து விட்டு, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதன் பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கோரிக்கையை இக்ரிமா அவர்களின் மனைவியாகிய உம்மு ஹக்கீம் (ரலி) அவர்கள் வைத்தார்கள்.
உங்களது மற்றும் உங்களது அருமைத் தோழர்களின் வாளுக்குப் பயந்தவராக, இக்ரிமா தன்னுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக யமன் தேசத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார். தயவுசெய்து உங்களுக்கு நன்றி சொல்லக் கூடிய வாய்ப்பையும், இன்னும் பாதுகாப்பான வாழ்க்கையையும் அவருக்கு நீங்கள் வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். நீங்கள் மனித குலத்திற்கான முன்னுதாரணமிக்கவராக இருக்கின்றீர்கள், இறைவனுடைய படைப்பினங்களில் எல்லாம் மிகச் சிறந்த படைப்பாக இருக்கின்றீர்கள். இக்ரிமா பயன்படுத்தக் கூடியதொரு நல்ல மனிதன், அவரை நேர்வழிக்குக் கொண்டு வர நான் என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்கின்றேன், இன்னும் அவரது பழக்க வழக்கங்கள் பற்றியும், அவரது பண்புகளைப் பற்றியும் நான் மிகவும் அறிந்தவளாகவும் இருக்கின்றேன் என்று கூறினார்கள்.
உம்மு ஹக்கீம் (ரலி) அவர்களின் சோகமான அந்த வார்த்தைகளைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்த நாள் முதல் இக்ரிமாவிற்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது, (மக்காவிற்கு) திரும்பி வரவும் அனுமதியளிக்கப்படுகின்றது. அவரை கேள்வி கணக்கிற்கோ அல்லது விசாரணைக்கு உட்படுத்தவோ பட மாட்டார்" இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.