இமாம் அல் புகாரீ (ரஹ்)

ஹதீஸ் கலை அறிஞர்
இமாம் அல் புகாரீ (ரஹ்) (ஹிஜ்ரி 194 - 259)

இஸ்லாத்தின் அடிப்படை அறிவு இருவிதமான வழிகளில் நமக்குக் கிடைக்கின்றன. ஒன்று அல்லாஹ்வின் வேதவசனங்களை உள்ளடக்கிய திருமறைக்குர்ஆன், இரண்டாவது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மற்றும் அவர்களின் வாழ்வியல் கலைகள் அத்தனையையும் உள்ளடக்கியவைகளுமாக, ஆதாரப்பூர்வமானதுமான நூல்களைத் தான் 'ஹதீஸ் தொகுப்புகள்" என்றழைக்கப்படுகின்றன. இந்த வகையில், ஹதீஸ்கள் இஸ்லாமிய போதனைகளில் இரண்டாவது தரத்தை வகிக்கின்றன. திருமறைக் குர்ஆனினுடைய கட்டளைகளை, மேற்கோள்களை நடைமுறைப்படுத்துவதற்கான செயல் வேகத்தை ஹதீஸ்கள் ஊட்டுகின்றன. உதாரணமாக, ஒருவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வு எவ்வாறு அமைந்திருந்தது? என்று கேட்டதற்கு, ''அவர்களுடைய வாழ்வு திருமறைக்குர்ஆனாகவே இருந்தது"" என்று பதிலுரைத்தார்கள். அதாவது, அவர்களுடைய செயல்களும், நடைமுறைகளும் குர்ஆனின் கட்டளைகளுக்கு இயைந்து இருந்தது என்று குறிப்பிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குர்ஆன் அறிவுறுத்தக் கூடிய கடமைகளை குர்ஆனில் நாம் சுருக்கமாகவே காண முடிகின்ற வேளையில், அதனை விரிவாக அறிந்து கொள்வதற்கு ஹதீஸ்கள் துணை புரிகின்றன. உதாரணமாக, குர்ஆன் தொழுகையைப் பற்றி சுருக்கமாக, அதன் சில அம்சங்களாக ருகூஉ மற்றும் சுஜுது ஆகியவற்றைக் குறிப்பிடுகின்ற பொழுது, ஹதீஸ்களானது தொழுகையைப் பற்றிய முழு விபரங்களையும் விரிவாக, தெளிவாக மற்றும் மிகச் சரியான அளவில் நமக்கு தெளிவுபடுத்துகின்றது. இன்னும் ஐந்து வேளைத் தொழுகைகளையும், அதன் நேரங்களையும், முறைகளையும் நமக்கு தெளிவாக விளங்கப்படுத்துகின்றது. அதுமட்டுமல்ல, தொழுகை மற்றும் தொழுகைக்கு முன்னர் உள்ள ஒலு என்று சொல்லப்படக் கூடிய சுத்தம், அதன் வரிசைக்கிரமம் பற்றியும் ஹதீஸ்கள் நமக்குத் தெளிவாக விளக்குகின்றன. அதுபோலவே இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என்று சொல்லப்படக் கூடிய கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் பற்றியும் அதன் சட்டங்கள் பற்றியும் நமக்கு விரிவாக அறியத் தருவதில் ஹதீஸ்கள் பங்கு முக்கியமானது என்பதை மறுக்க முடியாதது.

சுருக்கமாக, ஹதீஸ்களை நாம் கவனமாக ஆராய்ந்தோமென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை மிகத் தெளிவாக அறிந்து கொள்வதோடு, அதனைவிட அவர்களின் வாழ்வை நமக்கு மிக நெருக்கமான சொந்தபந்தங்களிடமிருந்து அதனை அறிந்து கொள்வது போன்றதொரு உணர்வை இந்த ஹதீஸ் தொகுப்புகள் நமக்கு வழங்குகின்றன என்றால் அது மிகைப்படுத்தப்பட்டதொன்றல்ல. மேலும், இந்த உலகில் வாழ்ந்த எந்தவொரு மனிதருக்கும் இப்படியொரு வாழ்க்கைப் பதிவேடு இருந்ததில்லை, இருக்கப் போவதில்லை என்ற உணர்வையும் இந்த ஹதீஸ் தொகுப்புகள் நமக்கு அளிக்கின்றன. மேலும், இவற்றில் ஆன்மீக அறிவுரைகள் மட்டுமல்லாது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் அவர்கள் நடந்து கொண்ட முறைமைகளும் தொகுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாராயினும், இந்த ஹதீஸ் தொகுப்புகள் தலைமுறை தலைமுறையாக இஸ்லாமிய அறிவுரைகளைத் தாங்கிய வண்ணம் சென்று கொண்டிருக்கின்றன. மேலும், இந்த ஹதீஸ்களை அவர்கள் தொகுத்த விதங்கள் மிகவும் ஆச்சரியத்தையும், அதன் தொகுப்பிற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட சிரமங்களும் நம்மை வியக்க வைக்கின்றன. ஒரு ஹதீஸை ஒருவரிடம் பெற்றுக் கொள்ளும் பொழுது, அந்த ஹதீஸ் இவரை வந்தடைந்த விதம் பற்றி அறிந்து கொண்டு, அதில் திருப்தி ஏற்படாத வரைக்கும் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதனை அறிந்து கொண்ட நபர் முதல், இறுதியாக ஹதீஸ் தொகுப்பாளர் சந்தித்த நபர் வரைக்கும் உள்ள தொடர்புகளையும் சரியான அளவில் அறிந்து கொள்வதற்கு, ஹதீஸ் கலைத் தொகுப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதன் பின் அறிவிப்பாளரது குணநலன்கள், ஞாபக சக்தி மற்றும் இறையச்சம் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு தான் ஹதீஸ்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில், இவ்வாறான ஹதீஸ் தொகுப்புப் பணியில் ஈடுபட்டவர்களில் மிகப் புகழ் வாய்ந்தவர்கள் சிலர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள் இமாம் மாலிக் - அல் முவத்தா எனும் ஹதீஸ் நூலைத் தொகுத்தவர், மற்றும் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் - அல் முஸ்னத் அஹ்மத் எனும் ஹதீஸ் நூலைத் தொகுத்தவர் ஆகியோரைக் குறிப்பிடலாம். ஆனால், இவர்களையெல்லாம் விட சிறப்பு வாய்ந்தவராக இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் திகழ்கின்றார்கள். இவரது ஹதீஸ் தொகுப்பு நூலான 'ஸஹீஹ் அல் புகாரீ" மற்ற ஹதீஸ் நூல்களை எல்லாம் விட தலை சிறந்தது என்று சிறப்பைப் பெற்றிருக்கின்றது. இந்தத் தொகுப்பானது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரைகளை உள்ளடக்கிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை உள்ளடக்கி இருக்கின்றது. இமாம் அல் ஹாஃபிஸ் அல் ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது ஃபத்ஹ{ல் பாரி என்ற நூலின் முன்னுரையில், இமாம் புகாரீ அவர்கள் 7563 ஹதீஸ்களைப் பதிவு செய்திருக்கின்ற வேளையில், அவற்றில் 2602 ஹதீஸ்கள் மறுபதிவு செய்யப்படாமல், வார்த்தை மாற்றங்களில்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுப்பிற்காக கிட்டத்தட்ட அரை மில்லியன் ஹதீஸ்களைப் பெற்று, அதனை சரியான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தி, இன்றிருக்கும் தொகுப்பினை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி இமாம் அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

புகாரீ என்பது இவரின் பட்டப் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயற்பெயர் முஹம்மது பின் இஸ்மாயீல் என்பதாகும். சீனாவின் தென்பகுதியில் உள்ள புகரா என்னும் ஊரில் பிறந்தார். இவரது குடும்பம் மிகவும் செழிப்பான குடும்பமாகும். மற்ற இஸ்லாமிய அறிஞர்களைப் போலவே, பணமே வாழ்க்கையின் பிரதானம் என்ற கொள்கையை விட்டு, அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டவராகத் தம்பணியை ஆற்றியவர். வீடுகள் பள்ளிக் கூடங்கள் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்காக ஏராளமாகப் பொருளுதவி செய்யக் கூடியவராகவும், இன்னும் நூற்றுக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்குவதிலும் தன்னை அற்பணித்துக் கொண்டவராக இருந்தார். இருப்பினும், தன்னுடைய வாழ்வை மிகவும் எளிமையாகவே வைத்திருந்தார். ஒருமுறை அவர் சுகவீனமுற்ற பொழுது, அன்றைய வழக்கப்படி அவரது சிறுநீரை ஆய்வு செய்த மருத்துவர் – 'இந்த சிறுநீர் வெறும் கோதுமை ரொட்டியை மட்டுமே உணவாகக் கொண்டவரது சிறுநீர் போலல்லவா இருக்கின்றது" என்று கூறி விட்டு, இனிமேல் ரொட்டியுடன் எதையாவது சேர்த்து உண்ணும்படி அறிவுறுத்தினார். அந்த அளவுக்கு மிகவும் எளிமையான வாழ்கை இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.

அறிவுத் தாகத்தினால், அவரது வாழ்க்கையின் அநேகத் தருணங்களில் பயணத்திலேயே கழிக்கக் கூடியவராக, ஹதீஸ்களைப் பெற்றுக் கொள்வதற்காக முழு இஸ்லாமிய உலகத்தையும் வலம் வரக்கூடியவராகவும், இதற்காக ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்யக் கூடிய தேவையுடையவராகவும் அவர் இருந்தார். இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் குறைந்தது 4000 ஆசிரியர்களிடம் பாடம் பயின்ற பெருமையைப் பெற்றவராக இருந்தார். ஒரு ஹதீஸைப் பெற்றுக் கொள்வதற்கு, அல்லது பெற்ற அந்த ஹதீஸின் மூலம் மற்றும் அதனுடைய நம்பகத்தன்மை பற்றி அறிந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்யக் கூடியவராக இருந்தார்.
கல்வியைக் கற்றுக் கொள்ளும் தாகத்துடன், இறைவன் அதிகமான ஞாபக சக்தியையும் இமாம் அவர்களுக்கு வழங்கியிருந்தான்.

ஒருமுறை, அறிஞர் பெருமக்கள் சிலர் அன்னாரது ஞபாக சக்தியைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பினார்கள். அதற்காக 100 ஹதீஸ்களைத் திரட்டிக் கொண்டார்கள். அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களது பெயர்களை மாற்றி, அவற்றை பத்துப் பத்து ஹதீஸ்களாக பத்து மாணவர்களிடம் கொடுத்து அவற்றை மனனமிட்டுக் கொள்ளும்படிச் செய்தார்கள். இமாம் புகாரீ அவர்கள் ஹதீஸ்களைப் பற்றிய பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, தங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட அந்த 100 ஹதீஸ்களையும் வைத்து, இமாம் அவர்களிடம் கேள்விகளைக் கேட்டு முடித்தார்கள் அந்த மாணவர்கள். இவ்வாறு மாணவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, 'தனக்குப் பதில் தெரியாது" என்று கூறி விட்ட இமாமவர்கள், மாணவர்களால் சற்று முன் தவறாகக் கோடிட்டுக் காட்டப்பட்ட அறிவிப்பாளர்கள் தொடர்கள் அத்தனையையும் மறுபடியும் கூறி, அவற்றின் தவறான அறிவிப்பாளர்கள் தொடர்களை விளக்கப்படுத்தியதோடு, அந்த ஹதீஸ்களுக்கான சரியான அறிவிப்பாளர் தொடரை வரிசை மாறாமல் விளக்கப்படுத்திக் காட்டினார்கள். ஒரு ஹதீஸுக்கு மட்டுமல்ல, அந்த மாணவர்கள் கேட்ட 100 கேள்விகளுக்கும் உண்டான சரியான அறிவிப்பாளர் வரிசைத் தொடரை விளக்கினார்கள்.

அன்னாருக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளை மிகச் சரியான அளவில் பயன்படுத்திக் கொண்ட இமாமவர்கள், அடக்கமாகவும், பண்பாடாகவும் வாழக் கூடியவராக இருந்தார்கள். அவர்களது கல்வியறிவு அவர்களை எந்தவிதத்திலும் கர்வங் கொள்ளச் செய்யவில்லை. ஒருமுறை, அவரது அடிமைப்பெண் அவர்களை கோபமடையச் செய்து விட்டதோடு, அதற்காக இமாம் அவர்களிடம் மன்னிப்பும் கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில், ''நீ என்னிடம் மன்னிப்புக் கோரி பிராயச்சித்தம் தேடிக் கொள்ளவில்லை என்றால், நானே அதற்கான பிராயச்சித்தத்தைத் தேடிக் கொள்கின்றேன்"" என்று கூறி விட்டு, அந்த அடிமையை விடுதலை செய்து விட்டு, 'நான் இப்பொழுது பிராயச்சித்தம் தேடிக் கொண்டேன்" என்று கூறினார்கள். அதாவது, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தினைப் பெற்றுக் கொண்டவனாக ஆகி விட்டேன் என்றார்கள்.

ஹிஜ்ரி 259 ம் ஆண்டு (சில நூல்களில் 256 ம் ஆண்டு மரணமடைந்தார்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது), ரமளான் மாதத்தின் இறுதி நாளன்று, அதாவது ஈதுல் ஃபித்ரு பெருநாளைக்கு முன்பதாக, சாமர்கண்டில் வைத்து மரணமடைந்தார்கள். இமாமவர்கள் மரணமடைந்து விட்டாலும், அவர் செய்து முடித்து விட்டுச் சென்ற பணியின் மூலமாக, அவர்கள் தொகுத்தளித்து விட்டுச் சென்ற ஹதீஸ் நூல்களின் மூலமாக உலகமெங்கும் வாழுகின்ற முஸ்லிம்களின் உள்ளங்களில் வாழ்ந்து கெர்ணடிருக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியலைப் பாதுகாத்துத் தந்ததன் மூலமாக, அன்னாருடைய பெயரும் இஸ்லாமிய வரலாற்றில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து, அவர்களது பணிகளை ஒப்புக் கொண்டு நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக..! ஆமீன்..!
أحدث أقدم