பெயர் : அபூ அப்தில்லாஹ் முகம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி
புகாரா என்ற ஊரைச் சேர்ந்தவர். இந்த ஊரின் பெயரே இவர்களது பெயராக அழைக்கப்பெற்றது.
16 வருடங்கள் கடின உழைப்பால் தொகுத்த ஹதீஸ் தொகுப்பு நூல் புகாரி.
ஸிஹாய் ஸித்தா (ஸஹீஹான நூல்கள்) என்று ஆறு நூல்கள் அழைக்கப்பட்டன .
1.ஸஹீஹ் புகாரி
2.ஸஹீஹ் முஸ்லிம்,
3.திர்மிதி,
4.அபூதாவூத்,
5.நஸாயீ,
6.இப்னு மாஜா.
இதில் மிகவும் பிரபல்யமான நூல் புகாரி
இமாம் அவர்களின் தாய் தந்தை இஸ்லாத்தில் மிகவும் பற்று உள்ளவர்களாக இருந்தார்கள். இதனால் இவர்களையும் இஸ்லாமிய பற்று உள்ளவர்களாக வளர்த்தார்கள்.
சிறு வயதாக இருக்கும் பொழுது தந்தையை இழந்தார்கள். தாய் இவர்களை மார்க்கப் பற்றுள்ளவர்களாக, இல்முடையவர்களாக வளர்த்தெடுத்தார்கள்.
சிறு வயதிலேயே கண் தெரியாதவராக இருந்தார்கள் . இவர்கள் தாயின் துஆவினால் அல்லாஹ் இவர்களுக்கு கண்பார்வையை கொடுத்தான்.
இவர்களுடைய தந்தை இஸ்மாயில் (ரஹி) அவர்கள் ஒரு ஹதீஸ் கலை அறிஞர். இமாம் மாலிக் (ரஹி ) அவர்களின் மாணவர் .
கண்பார்வை இவர்களுக்கு வந்த பிறகு அல்லாஹ் இவர்களுக்கு மனனம் செய்யும் ஆற்றலையும் அருளினான்.
10 வயதிலேயே குர் ஆனை மனனம் செய்தார்கள். ஷுயூஹுள் முஹத்தீஸீன்களிடம் (ஹதீஸ் கலை அறிஞர்கள்) புகாரா ஊரிலேயே ஹதீஸ்களை கற்றுத்தேர்ந்தார்.
முஹம்மது இப்னு அபீ ஹாத்திம் (ரஹி ) அவர்கள் புகாரி அவர்களிடம் கேட்கிறார்கள், "உங்களுக்கு எப்படி இந்த ஹதீஸ் கலையில் ஆர்வம் வந்தது" ?
அதற்கு அவர்கள் சிறு வயதிலேயே குர்ஆனையும், ஹதீஸ்களையும் படிக்க ஆரம்பித்து விட்டதனால் அப்பொழுதிலிருந்தே ஆர்வம் வந்துவிட்டது என்று கூறினார்கள்.
ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் பள்ளிக்கூடமாக தாய் தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தாயாக இவர்கள் தாய் சிறு வயதிலேயே இவர்களுக்கு கல்வி ஆர்வத்தை மூட்டி வளர்த்தார்கள்.
இவர்களது தாய் ஹஜ் செய்வதற்காகவும், மகன் மக்காவிலுள்ள அறிஞர்களிடம் கல்வி கற்பதற்காகவும், இவர்களது மகன் புகாரி, அஹ்மது அவர்களை அழைத்துக்கொண்டு ஹஜ் செய்கிறார்கள்.
இமாம் புகாரி(ரஹி) அவர்கள் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தினால் தன் தாயிடம், இங்கேயே நான் தங்கி படிக்கிறேன் என்று கூறுகிறார்கள். அதற்கு அவர்கள் தாயும் சம்மதிக்கிறார்கள்.
கல்வி பயணத்தை மக்காவில் ஆரம்பித்து மதீனா , ஹிஜாஸ் போன்ற ஊர்களுக்கு சென்று கல்வி கற்றார்கள்.
14 ஆயிரம் மைல்கள் தூரம் அலைந்து கல்வியைத் தேடி கற்றார்கள்.
6 லட்சம் ஹதீஸ்களை மனனம் செய்துள்ளார்கள். இதில் 3 லட்சம் ஹதீஸ்கள் அறிவிப்பாளர்கள் தொடருடன் மனனம் செய்துள்ளார்கள்.
ஸஹீஹுல் புகாரி என்ற கிரந்தத்தில் இவர்கள் மனனம் செய்துள்ள அனைத்து ஹதீஸ்களும் இடம் பெறவில்லை.
புகாரி தமிழில், ஏழு பகுதிகளைக் கொண்ட புத்தகமாக பல்வேறு தலைப்புகளின் கீழ் ஏழாயிரம் ஹதீஸ்களுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் இவர்களுக்கு வழங்கிய இல்முடைய அருட்கொடையினால் இப்படிப்பட்ட சிறப்புமிக்க நூல் உருவாயிற்று
இமாம் புகாரி அவர்கள் 1080 இமாம்களிடம் கல்வியை கற்று உள்ளார்கள்.
இன்றைக்கு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வீட்டிலிருந்தே கல்வியை கற்று வருகின்றோம். ஆனால் அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஹதீஸ் கற்பதற்கும் பல மைல் தூரம் , பலநாட்கள் கஷ்டப்பட்டு பயணம் செய்து கல்வியை அன்றைய கால அறிஞர்கள் கற்றார்கள்.
புகாரி அவர்கள் 16 வயதிலேயே மற்ற ஆலிம்களின் புத்தகங்களை மனனம் செய்துள்ளார்கள்.
படிப்பினை:
இன்றைய காலகட்டத்தில் கணவனை இழந்த தாய்மார்களில் சில பேர் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள் அல்லது ஒழுக்கம் உள்ளவர்களாக வளர்க்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.
ஆனால் புகாரி (ரஹி) அவர்களின் தாய் எவ்வளவு பொறுப்புடன் தங்கள் குழந்தைக்கு மார்க்கப்பற்றுடன் சிறந்த முறையில் வளர்த்தார்கள்.
குழந்தைக்கு ஏதாவது வாங்கித் தருவது என்றால் இன்றைக்கு அதனுடைய கஷ்டம் தெரியாமல் வாங்கித் தந்து விடுகிறோம் . அதனுடைய வெகுமதியும் அவர்களுக்கு தெரிவதில்லை. அதனால் பல தீமைகளும் ஏற்படுகின்றன.
இன்றைக்கு குழந்தைகளுக்கு செல்போன்களை வாங்கிக் கொடுத்து கேட்க கூடாத , பார்க்கக் கூடாத விஷயங்களை பார்ப்பது, ஒழுக்கமில்லாமல் பேசுவது போன்ற கெட்ட குணங்களை கொண்டவர்களாக வளர்கிறார்கள்.
இந்த நிலைமைக்கு காரணம் பெற்றோர்கள்தான் எனவே ஒரு குழந்தையை நல்ல முறையில் வளர்க்க கூடிய பொறுப்பாளியாக தாய் இருக்கிறார்கள். எனவே அதை தாய்மார்கள் உணர்ந்து ஆரம்ப காலத்திலேயே கவனத்துடன் மார்க்க கல்வியை கொடுத்து வளர்க்க வேண்டும்.
நாம் ஆரம்ப காலகட்டத்தில் நல்ல முறையில் வளர்த்தால் தான் பருவ வயதை அடையும் பொழுது நல்ல குழந்தைகளாக உருவெடுப்பார்கள்.
இமாம் புகாரி (ரஹி) அவர்கள் பதினெட்டு, இருபது வயதில் முழுமூச்சுடன் கல்வியை கற்றார்கள். ஆனால் இன்றைக்கு குழந்தைகள் இந்த வயதில் கெட்டுப் போகக் கூடியவர் களாக, அவர்களின் பேச்சை பெற்றோர்கள் கேட்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
புகாரி அவர்களின் தாய் போல் நாமும் ஒழுக்கமுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
புகாரி அவர்கள் ஒரு பக்கத்தை பார்த்தால் அதை உடனே மனனம் செய்யும் ஆற்றல் பெற்றவர்களாக திகழ்ந்தார்கள்.
இமாம் புகாரி (ரஹி) அவர்கள், ஹாஷித் இப்னு இஸ்மாயில்(ரஹி ) இவர்களெல்லாம் நண்பர்கள்.
இவர்களின் நண்பர்கள் எல்லாம் மார்க்க அறிஞர்களிடம் கல்வியைக் கற்று அதை எழுதும் பழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். ஆனால் இமாம் புகாரி அவர்கள் எதையும் எழுதாமல் பாடத்தை கவனிக்க மட்டும் செய்தார்கள்.
ஒருநாள் ஹாஷித்(ரஹி) அவர்கள் இமாம் புகாரி இமாமிடம் "நாங்கள் எல்லாம் கற்பதை எழுதுகிறோம் ஆனால் நீ எதையும் எழுதாமல் உன் காலத்தை வீணாக்கிறாயா?" என்றார்கள் அதற்கு புகாரி அவர்கள் அமைதியாக இருந்து விடுகிறார்கள் .
இது மாதிரியான கேள்விகளை அவர்களது நண்பர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள் இமாம் புகாரி அவர்கள் நீங்கள் எழுதியதை கொண்டு வாருங்கள் என்றார்கள். அதில் மொத்தம் 18 ஆயிரம் ஹதீஸ்கள் எழுதப்பட்டிருந்தன அவற்றை சற்றும் தயங்காமல் மனனமாக எதையும் பார்க்காமல் ஒப்புவித்தாரகள்.
ஹாஷித்(ரஹி) அவர்கள் கூறுகிறார்கள் இமாம் புகாரி அவர்கள் ஒப்புவித்ததைக் கொண்டு எங்களின் எழுத்துப் பிழைகளை நாங்கள் திருத்தி கொண்டோம். என்று சொல்லும் அளவிற்கு அல்லாஹ் அவர்களுக்கு மனனம் செய்யும் ஆற்றலை தந்திருந்தான்
புகாரி (ரஹ்) அவர்களின் ஆற்றலை சோதிப்பதற்காக பாக்தாத் நகரில் 10 இமாம்கள் 100 ஹதீஸ்களை எடுத்து அதன் அறிவிப்பாளர் தொடரில் மாற்றம் செய்து கேள்விகள் கேட்டார்கள்.
அதற்கு இமாம் புகாரி அவர்கள் தெரியாது என்று பதிலையே எல்லா கேள்விகளுக்கும் கூறினார்கள். இதை கவனித்த மக்கள் இவர்களுக்கு எதுவும் தெரியாது என்று எண்ணிக் கொண்டார்கள்.
ஆனால் இமாம்களுக்கு தெரிந்துவிட்டது . இவர் நாம் தவறான கேள்விகளைக் கேட்கிறோம் என்பதை அறிந்துகொண்டு இப்படி பதில் கூறுகிறார்கள் என்று , இவர்களின் ஆற்றலை புரிந்து கொண்டார்கள்.
இறுதியில் புகாரி (ரஹி) அவர்கள் அந்த நூறு ஹதீஸ்களையும் சரியான அறிவிப்பாளர் தொடருடன் சொன்னார்கள் என்பதை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அல்லாஹ் இவர்களுக்கு கொடுத்த மிகப்பெரிய ஆற்றல் இது என்று வியப்படைந்து கூறினார்கள்.
இமாம் புகாரி (ரஹி)அவர்கள் கற்ற கல்வியை தன் வாழ்நாளில் அமல்படுத்தினார்கள். தன் வாழ்நாளில் யாரையும் தவறாக விமர்சனம் செய்ததில்லை . கொள்கை ரீதியாக மாறுபட்டு சிலர் இருந்தவர்கள் கொள்கையை மட்டுமே பேசுவார்கள்.
இமாம் புகாரி(ரஹி) அவர்களின் ஹதீஸ்களை வழிகெட்ட கூட்டத்தினர் இது ஸஹீஹ் இது ளயீப் என்று சாதாரணமாக விமர்சிப்பதும் மற்றும் அவர்களை கண்ணியக் குறைவாக பேசுவதும் இன்றைய காலகட்டத்தில் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றது.
யாரையும் விமர்சிக்காமல் இருப்பதற்கு இமாம் புகாரி(ரஹி) கூறுகிறார்கள் : புறம் பேசக்கூடாது அல்லாஹ் அதை ஹராமாக்கியுள்ளான் என்பதை நான் எப்பொழுது தெரிந்து கொண்டேனோ அன்றில் இருந்தே நான் பேசுவதில்லை என்று கூறினார்கள்.
இன்றைக்கு நாம் இன்னொருவருடன் சேர்ந்து விட்டால் சர்வசாதாரணமாக புறம் பேசி விடுகிறோம். ஆனால் அல்லாஹ் கூறுகிறான் புறம் பேசுவது தன் சகோதரனின் மாமிசத்தை சாப்பிடுவது போன்றதாகும் இப்படிப்பட்ட மோசமான விஷயத்திலிருந்து நம்மை நாம் பாதுகாக்க வேண்டும்.
இமாம் புகாரி (ரஹி) அவர்கள் தன் வாழ்வாதாரத்திற்காக மற்றும் கல்விக்காக யாரிடமும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தார்கள். அல்லாஹ் அவர்களை கண்ணியப் படுத்தினான். அவர்கள் வியாபாரம் செய்தும் தங்கள் குடும்பத்தின் ஒத்துழைப்பாலும் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொண்டார்கள்.
இமாம் புகாரி (ரஹி) அவர்கள் ஒரு சமயம் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவருடன் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டு தன்னிடம் பத்தாயிரம் தங்க காசுகள் இருக்கின்றது என்று சொல்லிவிடுகிறார்கள். இதை தெரிந்து கொண்ட அந்த மனிதர் ஒரு சூழ்ச்சி செய்கிறார் அதாவது, தன்னிடமிருக்கும் பத்தாயிரம் காசுகள் தொலைந்துவிட்டது என்று கூறுகிறார். உடனே அந்த கப்பலில் இருப்பவர்கள் அதை அனைவரிடமும் சோதனை செய்து பார்க்கிறார்கள் . இந்த சூழ்ச்சியை தெரிந்து கொண்ட இமாம் புகாரி (ரஹி)அவர்கள் அந்த பத்தாயிரம் தங்கக் காசுகளையும் ஒரு துணியில் கட்டி கடலில் எறிந்து விடுகிறார்கள்.
கப்பலை விட்டு இறங்கியதும் அந்த மனிதர் இமாம் புகாரி (ரஹி) அவர்களிடம் கேட்கிறார்கள் அந்த தங்ககாசுகளை என்ன செய்தீர்கள்? என்று அதற்கு அவர்கள் நான் அதை கடலில் எறிந்து விட்டேன் என்றார் , ஏன் இப்படி செய்தீர்கள் அது உங்களுக்கும் பயன்படாமல் எனக்கும் பயன்படாமல் போய்விட்டது என்றார்கள். அதற்கு இமாம் புகாரி ஒருவேளை அந்த காசு என்னிடமிருந்து நான் திருடன் என்று சொல்லிவிட்டால் நான் என் வாழ்நாளினை அர்ப்பணம் செய்து திரட்டி வந்த ஹதீஸ்களுக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் அதனால் அப்படி செய்தேன் என்றார்கள்.
ஹதீஸ்களை பாதுகாக்க அதனுடைய உண்மைத் தன்மைக்கு எந்த பாதிப்பும் வராமல் இருப்பதற்காக கண்ணும் கருத்துமாக அவர்கள் செயல்பட்டார்கள்.
இபாதத்திலும் சிறந்து விளங்கினார்கள். ரமலான் மாதத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குர்ஆனை ஓதி முடிப்பார்கள். கியாமுல் லைல் முழுக்க தொழக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இமாம் புகாரி அவர்கள் இரவு தூங்கும் பொழுது திடீர், திடீரென்று எழுந்து எழுதுவார்கள். இதைப்பற்றி அவர்களிடம் கேட்டபோது "ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் பற்றிய குறிப்பு எனது ஞாபகத்திற்கு வரும் அதை எழுதிக் கொள்வேன்" என்று கூறினார்கள்.
எனவே தூக்கத்தில் கூட ஹதீஸ் கலையில் அவர்களுக்கு இருந்த ஆர்வமும், பற்றும் இதன் மூலம் அறிய முடிகின்றது.
இமாம் புகாரி (ரஹி) அவர்கள் ஃபிக்ஹ் , ஹதீஸ், அகீதா என 3 துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்துள்ளார்கள்.
ஸஹீஹுல் புகாரியில் ஒரு ஹதீஸை சேர்ப்பதற்கு முன் இரண்டு ரகஅத் தொழுது விட்டு மற்றும் மூன்று முறை இமாம்களிடம் அந்த ஹதீஸை கொடுத்து சரி பார்த்துவிட்டு தான் சேர்ப்பார்கள்.
தங்கள் வாழ்நாளை மார்க்கத்திற்காக செலவழித்து தியாகம் செய்துள்ளார்கள்.
அல்லாஹ் தன் மார்க்கத்தை நிலை நாட்டுவதற்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தான் என்றால் அவர்களுக்கு எல்லா ஆற்றலையும் கொடுத்து சிறப்பிப்பான் என்பதே இவர்களின் மூலம் நாம் அறிய முடிகின்றது.
எனவே நாமும் இமாம் புகாரி அவர்களைப் போல் கல்வியை கற்று அதை அமல்படுத்த கூடியவர்களாக இருக்க அல்லாஹ்விடம் ஆதரவு வைப்போம்.
இமாம்களின் கண்ணியம் பேணுவோம்.