உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபூ சுஃப்யான் (ரலி)

உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபூ சுஃப்யான் (ரலி)

வரகா பின் நவ்பல், உதுமான் பின் ஹவீரத் பின் அஸத், ஸைத் பின் அம்ர் பின் நஃபீல் மற்றும் உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஸ் ஆகிய இந்த நான்கு நண்பர்களும் அரேபியா முழுவதும் கொள்ளை நோய் போல் பரவிக் கிடக்கும் சிலை வணக்கத்தைப் பற்றிக் கவலை கொள்கின்றார்கள். இன்னும் தங்களுக்குள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் பொழுது, இந்த நோயை எவ்வாறு அரேபியாவிலிருந்து துரத்தியடிப்பது என்பது குறித்து கலந்தாலோசனை செய்யலானார்கள். இந்த கலந்தாலோசனைகளை அவர்கள் வெளிப்படையாகப் பேசவில்லை, மாறாக உலகமே துயில் கொள்ளும் நடுஇரவில் தங்களுக்குள் சந்தித்துக் கொண்டு, இது குறித்துத் திட்டமிடலானார்கள்.

இன்னும் இந்த படுபாதகத்தை ஏதுமறியாத பாமரர்கள் என்பவர்கள் செய்திருந்தாலும் பரவாயில்லை, குறைஷிகளின் மிகப் பெரும் தலைவர்கள் கூட இந்த பஞ்சமா பாதகத்தில் விழுந்து கிடக்கின்றார்களே என்பது தான் அவர்களது மிகப் பெரும் வேதனையாக இருந்தது. தங்களது கைகளாலே வடித்த இந்த கற்கலால் ஆன இந்த சிலைகளை இவர்கள் எவ்வாறு வணங்கும் தெய்வமாக தேர்ந்தெடுக்கின்றார்கள், இவைகளால் இவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும். அவர்களது சுண்டு விரலைக் கூட சுயமாக அசைப்பதற்குக் கூட சக்தியற்றவர்களாயிற்றே அவைகள்? இத்தகைய இந்த சிலைகளின் முன்பு இவர்கள் எவ்வாறு சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்க முடிகின்றது? இன்னும் பிராணிகளை அறுத்து அவைகளுக்கு எவ்வாறு தான் பலியிடுகின்றார்கள், அந்தப் பிராணிகளின் இரத்தத்தை இவைகள் சீண்டக் கூட சக்தியற்றவைகளாக இருக்கின்றனவே!

சரி..! இனி மேல் இது பற்றி நாம் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. இந்தக் கொடுமையான பழக்கத்தை எவ்வாறு ஒழிப்பது என்பது பற்றி இனி நாம் ஒரு முடிவெடுத்தாக வேண்டும். இந்தக் குறைஷிகள் தங்களது நேர்வழியைத் தொலைத்து விட்டார்கள். இந்த வழியை நாமும் பின்பற்றுவது மடத்தனமானது. எனவே, நமது முன்னோரான நபி இப்றாஹீம் (அலை) அவர்களது மார்க்கத்தை இனி நாம் பின்பற்றுவது என்று முடிவு செய்தார்கள். இன்னும் இதுவே சிறந்த வழிமுறையும் கூட என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தார்கள். நமது முன்னோரான இப்றாஹீம் (அலை) அவர்கள் காட்டி விட்டுச் சென்ற நேர்வழி தான் நம்மைக் கரை சேர்க்க வல்லது, இதனைப் பின்பற்றுதவன் மூலமே இந்த கொடுமையான சிலை வணக்கத்தை நாம் முற்றாக ஒழிக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

இன்னும் இந்த உண்மையை அறிவதற்கு என்ன செலவானாலும் பரவாயில்லை, அதனைக் கண்டு பிடித்தே தீருவது என்ற முடிவுக்கும் வந்தார்கள். இந்த முடிவில் அவர்கள் இணக்கம் கண்டு, இப்றாஹீம் (அலை) அவர்களது மார்க்கத்தை எவ்வாறு பின்பற்றுவது என்ற ஆய்வை நோக்கி, அவர்கள் பல்வேறு திசைகளுக்கும் பிரிந்து சென்றார்கள்.

வரகா பின் நவ்பல் அவர்கள் அந்த கொடுமையான சிலைவணக்க காலத்திலும் கூட, சிலை வணக்கத்தை வெறுத்தொதுக்கியவராவார். இன்னும் அந்த சிலைகளுக்கு அறுத்துப் பலியிட்ட பிராணிகளின் மாமிசத்தைக் கூட அவர் தொடுவதில்லை. இன்னும் தௌராத்தையும், இன்ஜீலையும் மனனமிட்டும் இருந்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார், அன்னை கதீஜா (ரலி) அவர்கள் வரகா பின் நவ்பல் - க்கு மைத்துனி உறவு முறையாவார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி, வஹீயை அருளிய பின், அதனை என்னவென்று அறியாத இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது துணைவியரான கதீஜா (ரலி) அவர்களிடம் வந்த பொழுது, கதீஜா (ரலி) அவர்கள், தனது துணைவரை தனது மைத்துனரான வரகா பின் நவ்பல் அவர்களிடம் தான் கூட்டிக் கொண்டு சென்று, நடந்தவற்றை விளக்கியதோடு, அப்பொழுது இது இறைத்தூதின் வெளிப்பாடு என்று முதன் முதலாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது இறைநம்பிக்கை கொண்டவர் தான் இந்த வரகா பின் நவ்பல் ஆவார்கள்.

இறைவன் இவரைத் தனது இறுதித் தூதராகத் தேர்ந்தெடுக்கின்றான் என்ற நற்செய்தியை அப்பொழுது அறிவித்தார். இன்னும் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்புகள் தௌராத்திலும், இன்ஜீலில் காணப்படுகின்றன என்றும் அவர் கூறினார். இன்னும் சத்தியத்தூதராக அவரது அந்தஸ்து உயர்த்தப்படும் அதேவேளையில், அவருக்கு எதிராக இந்த உலகமே திரண்டு நிற்கும் என்றும், அவர் வாழுகின்ற இந்த பிறந்த தேசத்தை விட்டும் அவர் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்றும் இந்த வரகா பின் நவ்பல் முன்னறிவித்தார். இன்னும், அந்த நேரத்தில் நான் உயிர்வாழ்வேனேயாகில், நிச்சயமாக அவருக்கு நான் உதவிகரமாக இருப்பேன் என்றும் அப்பொழுது கூறினார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னை இறைத்தூதர் என்று அறிவிப்புச் செய்த காலத்தில், வரகா பின் நவ்பல் அவர்கள் உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது குழுவில் இருந்த இரண்டாவது நபரான, உதுமான் பின் ஹவீரா பின் அஸத் அவர்கள், சிரியாவை நோக்கிப் பயணம் செய்தார்கள். அங்கே தங்கி, கிறிஸ்தவ மார்க்கத்தை பிரச்சாரம் செய்யலானார். இன்னும் ரோமச் சக்கரவர்த்தியான சீஸருக்கு மிகவும் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார். இறுதியாக, மாதா கோயிலின் பிஷப் என்ற அந்தஸ்துக்கும் அவர் உயர்த்தப்பட்டார்.

ஸைத் பின் அம்ர் பின் நஃபீல், என்ற இந்த மூன்றாவது நபர், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை, யூத மதத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சிலை வணக்கத்தை முற்றிலும் தவிர்ந்து கொண்டு வாழ்ந்தார். இன்னும் இறந்த பிராணிகளின் மாமிசத்தை உண்பதையும், இரத்தத்தையும் குடிப்பதையும் நிறுத்திக் கொண்டார். இன்னும் சிலைகளுக்கு பலியிடப்பட்ட பிராணிகளின் மாமிசத்தையும் உண்ணாத இவர், இப்றாஹீம் (அலை) அவர்களது மார்க்கத்தைப் பின்பற்றலானார். இவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறைத்தூது வெளிப்படு முன்பே மரணமடைந்து விட்டார்.

நான்காவது நபர் உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஸ் அவர்கள், சத்தியம் எது அசத்தியம் எது என்று தேர்ந்தெடுப்பதில் தடுமாறிய இவர், எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று தீர்மானித்து அதனைப் பின்பற்றக் கூடியவராக மாறினார். இவர், குறைஷிகளின் மிகச் சிறந்த குலத்தைச் சேர்ந்த கல்விகளில் தேர்ச்சி பெற்றவரும், அழகுபடைத்தவருமான, அபூ சுஃப்யான் சக்ர் பின் ஹர்ப் அவர்களின் மகளை மணமுடித்துக் கொண்டார்.

இவர் மணமுடித்துக் கொண்ட இந்த நாளில் தான், முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவின் அனைத்துச் சிலைகளையும் புறக்கணித்து விட்டு, அவை வணங்குவதற்கு அருகதையற்றவைகள் என்று அறிவிப்புச் செய்தும், படைப்புகளை வணங்குவதை விட்டு விட்டு படைத்தவன் பக்கம் வாருங்கள் என்ற அறிவிப்புச் செய்தியானது, மக்காவை உலுக்கிக் கொண்டிருந்தது. இன்னும் அந்த நேரத்தில் தன்னை இறைவனின் இறுதித் தூதர் என்று அவர் அறிவிப்புச் செய்து கொண்டிருந்த நேரம் அது. இந்தச் செய்தியைக் கேட்ட குறைஷித் தலைவர்கள் வெகுண்டெழுந்ததோடல்லாமல், குறைஷித் தலைமையே இப்பொழுது செய்தவதறியாது இருகூறாகப் பிரிந்து நின்று கொண்டிருந்தது. இவர்களில் சிலர், இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து, சத்தியப் பிரமாணம் ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தைத் தழுவினார்கள். இன்னும் சிலர் தங்களது முன்னோர்களது மார்க்கத்தை உறுதியாகப் பின்பற்றுவது என்று உறுதி கொண்டு, எங்கே முஹம்மது உயிருடன் இந்தப் பூமியில் வாழ்ந்து விடுவரா எங்கே பார்ப்போம் ? என்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருந்த நேரமும் அது. இந்தச் சூழ்நிலைகள் முஸ்லிம்களுக்கு எதிரிகளைப் பெற்றுக் கொடுத்தன, எதிரிகளின் சொல்லொண்ணா துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தான், குறைஷிகளின் அன்புப் புதல்வியான ரம்லா பின் அபூசுப்யான் அவர்கள் தனது கணவர் உபைதுல்லாஹ் எவ்வாறு சத்தியப் பாட்டையைத் தேர்ந்தெடுத்து, முஸ்லிமாகிக் கொண்டாரோ, அவ்வாறு தானும் இஸ்லாத்தை உவந்தெடுத்துக் கொண்டார். இவர் மட்டுமல்ல, இவரது இரண்டு சகோதரர்களான, அப்துல்லா பின் ஜஹ்ஸ் மற்றும் அபூ அஹ்மத் பின் ஜஹ்ஸ் மற்றும் சகோதரிகளான ஜைனப் பின் ஜஹ்ஸ் மற்றும் ஹம்னா பின்த் ஜஹ்ஸ் ஆகியோர்களும் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார்கள். இவர்களின் முன்னவரான ஜைனப் பின்த் ஜஹ்ஸ் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணமுடித்துக் கொண்டு, இறைநம்பிக்கையாளர்களின் தாயாக மாறினார்கள்.

அபூ அஹ்மது அவர்கள் அன்றைய தினத்தில் கண்தெரியாத மற்றும் சிறந்த புலமை பெற்ற பாடகராகவும் விளங்கினார்கள். இவர் தனது புலமையின் காரணமாக, இஸ்லாத்திற்கு உத்வேகம் அளிக்கக் கூடிய பாடல்களை இயற்றிப் பாடலானார், இதன் மூலம் மிகச் சிறந்த பிரபல்யமான மனிதர்களில் ஒருவராகவும் அன்றைய காலத்தில் திகழ்ந்தவரானார். ஹம்னா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மிகச் சிறந்த தோழர் ஒருவரின் மனைவியாக வாழ்ந்தார்கள். சுருங்கச் சொன்னால், இவரின் அனைத்து குடும்பத்தவர்களும் இஸ்லாத்தின் அழைப்புக்குச் செவி மடுத்ததோடு, ஓரிறைக் கொள்கையை உவந்தெடுத்துக் கொண்டார்கள்.

துரதிருஷ்டவசமாக, இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பின் அபீசினிய்யா சென்ற உபைதுல்லாஹ் அவர்கள், இஸ்லாத்தைப் புறக்கணித்து விட்டுச் சென்று விட்டவராகி விட்டார். அவர் கிறிஸ்தவராக மாறி விட்டார். குடிப்பதில் ஆரம்பித்த அவரது அபீசினிய வாழ்வு, இறைநிராகரிப்பிலேயே வாழ்வும் முடிந்தது. இருப்பினும், இவரது மனைவியாகிய ரம்லா (ரலி) அவர்கள், தொடர்ந்தும் இஸ்லாத்தின் பூரண நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார்கள். கணவனை இழந்தாலும், தனது நம்பிக்கையை இழக்காமல், முன்னைக் காட்டிலும் மிகவும் துடிப்போடு மார்க்கத்தைப் பின்பற்றக் கூடியவராக இருந்தார்கள். இந்த கால கட்டத்தில், இவர் இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களில் ஒருவராகவும் இணைந்து கொண்டார்கள். இவரது வாழ்வின் மூலம் நாம் உறுதியையும், உத்வேகத்தையும், சத்தியத்தைப் பின்பற்றுவதில் அவர்கள் காட்டிய நெறிதவறா வாழ்வையும் கண்டு பாடம் பயின்று கொள்ளலாம்.

அபூசுஃப்யான் சக்ர் பின் ஹர்ப், குறைஷியர் குலத்தின் தலைவரான இவர், பல போர்களில் குறைஷிகளின் பக்கம் கலந்து கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் புரிந்தவராவார். ரம்லா என்ற மகளைத் தவிர்த்து, யஸீத் மற்றும் முஆவியா என்ற இரண்டு மகன்களையும் அவர் பெற்றிருந்தார். இந்த இருவரும் இஸ்லாத்திற்கு சேவையாற்றிய பெருமக்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்கள். முஸ்லிம்கள் சொல்லொண்ணா துன்பங்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்த அந்த ஆரம்ப கால கட்டத்திலேயே, ரம்ளா அவர்கள் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள். அவரது தந்தையான அபூ சுஃப்யான் அவர்கள் குறைஷிக் குலத்தின் மிகச் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தும் கூட, தனது மகள் விஷயத்தில் ஏதும் செய்யவியலாத நிலையிலேயே தான் இருந்தார். மனிதனது உளத் தேவையானது, எப்பொழுது சுதந்திரத்தையே வேண்டி நிற்கும், என்ன விலை கொடுத்தேனும் அந்த சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளத் தயாராகவே இருக்கும்.

அவ்வாறே, ரம்ளா (ரலி) அவர்கள் தான் ஏற்றுக் கொண்ட சத்திய மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு எந்த விலையையும் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார்கள். இன்னும் அவர், தான் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாக வெளிப்படையாக அறிவித்தும் கூட, அந்தக் குறைஷிகள் இவருக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கும் துணிவற்றிருந்தனர். அல்லாஹ் எதனை நாடி விட்டானோ, அதனை மாற்றுவதற்கு யாருக்குத் தான் அதிகாரம் இருக்கின்றது, நிச்சயமாக அவனே யாவரையும் மிகைத்தவன், சக்திமிக்கவன், அவனே இறந்த பின்னும் கூட உயிர் கொடுத்து எழுப்பக் கூடிய சக்தி பெற்றவனாக இருக்கின்றான்.

அபூசுப்யான் எத்தனை தான் பிரயத்தனப்பட்டாலும், தனது மகளை சத்தியப் பாதையிலிருந்து மாற்றி விட முடியவில்லை.

எனவே, குறைஷிகளின் கொடுமைகள் நாளுக்குள் நாள் வளர்ந்து கொண்டு போகவும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களைப் பாதுகாப்பதற்குண்டான அவசரமான நடவடிக்கை ஒன்றை எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். இன்னும் அவர்களை மக்காவை விட்டும் வெளிக்கிளம்பியாக வேண்டும் என்பதை தீர்மானித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறே தனது தோழர்களை அபீசீனியாவை நோக்கிப் பயணப்படுமாறு அறிவுறுத்தினார்கள். அபீசீனியா மன்னர், நீதமானவரும், நேர்மையானவரும் என்பதனால், அடைக்கலம் தேடி அங்கு செல்லுமாறு தனது தோழர்களைப் பணித்தார்கள்.

ரம்ளா பின் அபூசுப்யான் (ரலி) அவர்களும், அவரது கணவரான உபைதுல்லாஹ் அவர்களும் அபீசீனியாவிற்கு நாடு துறந்த சென்ற இரண்டாவது குழுவில் அங்கம் வகித்தார்கள். அங்கு இவர்களுக்கு ஹபீபா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதன் காரணமாக ரம்ளா அவர்கள், உம்மு ஹபீபா என்ற பெயரில் அழைக்கப்பட்டார்கள். உம்மு ஹபிபா (ரலி) அவர்கள் தனது நேரங்களைத் தனது மகளின் வளர்ப்பிலும், இன்னும் தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் இறைவணக்கத்திலும் ஈடுபட்டு, தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு வந்தார்கள்.

ஒருநாள் இரவு கனவில், தனது கணவரின் முகம் சிதைக்கப்படுவதாகக் கனவு கண்டார்கள். அந்த மாத்திரத்திலேயே பயந்து படுக்கையை விட்டு எழுந்த உம்மு ஹபீபா (ரலி), தான் கண்ட கனவைப் பற்றி தனது கணவரிடமே தெரிவிப்பதற்குப் பயந்தார்கள், தயங்கினார்கள். சில நாட்கள் கழித்து, தான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு கிறிஸ்தவனாக வாழ்ந்ததாகவும், பின்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகவும் மனைவியான உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம், உபைதுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். பின்பு, நாடு துறந்து அபீசீனியா வந்த நாள் முதல், தனது பழைய மதத்தைப் பற்றி மீண்டும் நினைத்துப் பார்த்த அவர், கிறிஸ்தவ நம்பிக்கை தான் வெற்றிகரமான வாழ்க்கைக்குரிய வழி என்பதைப் பற்றிய தீர்மானத்திற்கு வந்த உபைதுல்லாஹ், இஸ்லாத்தை விட்டு விட்டு மீண்டும் தனது பழைய மதமான கிறிஸ்தவத்திற்கு மதம் மாறி விடத் தீர்மானித்து, கிறிஸ்தவராக மாறியும் விட்டார். பின் அவர், தனது முடிவை தனது மனைவிக்குத் தெரிவித்ததோடு, உம்மு ஹபீபா (ரலி) அவர்களையும் கிறிஸ்தவத்திற்கு மாறி விடும் படி அறிவுத்தவும் செய்தார்.

அப்பொழுது தான், தான் கண்ட கனவின் விளக்கம் அவருக்குப் புரிய ஆரம்பித்தது. ஒளி படைத்த அவரது முகமானது, உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்த நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதை இறைவன் தனக்கு அறிவித்திருப்பதாக உணர ஆரம்பித்தார். முஸ்லிமாக கண்ணியமிக்க நிலைக்குச் சொந்தக்காரராக இருந்த அவர், கிறிஸ்தவத்திற்கு மாறியதன் மூலம் சிறுமை படைத்தவராக மாற்றப்பட்ட நிலையையும், தான் கண்ட கனவின் உள்ளர்த்தத்தையும் உணர்ந்து கொண்டார். தனது கணவரிடம் தான் கண்ட கனவைப் பற்றியும், அதன் விளக்கத்தையும் எடுத்துரைத்தார், அதன் மூலம் அவரது மனதில் இறைவனது அச்சம் மேலோங்கி தனது பாதையை மாற்றிக் கொள்ளக் கூடும் என்று உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதனை அவர் செவிமடுத்துக் கொண்டதாகத் தெரியிவில்லை, அவர் பாதை மாறிப் போய்க் கொண்டே இருந்தார். அவரது முகம் மட்டுமல்ல, அவரது இதயம் கூட அழுக்கடைந்து விட்டது. உபைதுல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த எந்த அறிவுரையும் பயனைத் தரவில்லை, முழுக் குடிகாரராக இப்பொழுது மாறி விட்டிருந்தார். குடிக்கு அடிமையாகி விட்ட அவர், தன்னுடைய பொழுதுகளை குடிப்பதிலேயே கழித்துக் கொண்டிருந்தார். தனது கணவனின் நிலையை நினைத்து கவலை அடைந்த உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், தனது வருங்காலம் எவ்வாறு இருக்கும், தனது குழந்தையின் நிலை என்னவாகுமோ என்று நினைத்து கவலை கொள்ள ஆரம்பித்தார்.

தனது நிலையை தன்னைப் படைத்த இறைவனிடமே முறையிட்டார், தனக்கு உறுதியான இறைநம்பிக்கையைத் தந்தருளுமாறு பிரார்த்தித்தார். அதிகமாகக் குடித்ததின் காரணமாக சில நாட்களிலேயே உபைதுல்லாஹ் மரணித்து விட்டார். கணவனது மரணத்திற்குப் பின் சற்று ஆறுதலடைந்த உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், இனி தனது வாழ்க்கைப் பாதை எவ்வாறு செல்லுமோ என்பதை நினைத்து கவலைப்படலானார்கள். இப்பொழுது அவரது கவலைகளை மறப்பதற்கு இரண்டு வடிகால்கள் அவரிடம் இருந்தன, ஒன்று தனது குழந்தையின் பராமரிப்பில் கவனம் செலுத்துவது, இன்னொன்று இறைவனைத் தொழுவதிலும், அவனை நினைவு கூர்வதிலும் தனது நேரங்களைச் செலவழிப்பது. அடுத்து, மக்காவில் நடந்து கொண்டிருக்கக் கூடிய நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யவும் ஆரம்பித்தார். இன்னும், அவருக்கு உறுதுணையாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளார் ருக்கையா (ரலி) அவர்களும், அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும், லைலா பின்த் அபீ ஹம்ஸா (ரலி) அவர்களும் இருந்ததோடு, தங்களது ஓய்வு நேரங்களில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் வந்து, அவர்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு, அவர்களது கவலைகளை மறக்கடிக்கச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் சில நாட்களில் மக்காவிற்குத் திரும்பி விட்டார்கள், அபீசீனியாவில் இப்பொழுது முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்குக் குறைந்தது, உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் ஏனைய மற்ற பெண்களுடன் நட்புடன் பழகி வந்து கொண்டிருந்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல முஸ்லிம்களின் நிலையும் மாறிக் கொண்டு வந்தது. மதீனாவிற்கு ஹிஜ்ரத், மற்றும் பத்ருப் போர், ஹுதைபிய்யா உடன்படிக்கை என்று இஸ்லாமிய வரலாறு பல்வேறு சம்பவங்களைப் பதிவு செய்து கொண்டே சென்று கொண்டிருந்தது. ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் குறைஷிகளின் பழிவாங்கும் நடவடிக்கை சற்றுக் குறைந்தது. இருப்பினும், முஸ்லிம்களில் பலர் இந்த உடன்படிக்கை மூலமாக இஸ்லாமிய வளர்ச்சியும், இஸ்லாமிய தாக்கமும் மட்டுப்படுத்தப்படுவதாக உணர்ந்தார்கள்.

ஒருநாள், உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொழுது, யாரோ இவர்களை, ‘இறைநம்பிக்கையாளர்களின் தாயே..!’ என்று அழைப்பதாகக் கண்டார்கள். உடனே, விழித்துக் கொண்ட உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், முன்னைக் காட்டிலும் தன்னை உற்சாகம் பற்றிக் கொண்டிருப்பதையும், புதுவிதமான உணர்வுகள் தன்னைச் சூழ்ந்து கொண்டிருப்பதையும், ஆனந்தமான உணர்வைப் பெற்றிருப்பதையும் உணர ஆரம்பித்தார்கள். இதே கால கட்டத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து, மதீனாவில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றை நிறுவியும் இருந்தார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் ஒருநாள் அபீசீனியாவில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களைப் பற்றி, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. அப்பொழுது உம்மு ஹபீபா (ரலி) அவர்களைப் பற்றிய பேச்சும் எழுந்தது. அப்பொழுது, கணவர் இஸ்லாத்தை விட்டு விட்டு கிறிஸ்தவத்திற்கு மாறியதையும், அதன் பின் குடி போதையின் காரணமாக மரணமடைந்ததையும், கணவனை இழந்த கைம்பெண்ணாக, கடுமையான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலை பற்றியும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்த அவையில் பேசப்பட்டது. மக்கத்துக் குறைஷிகளின் மிகப் பெரும் தலைவர்களில் ஒருவரான மகளின் நிலையை எண்ணி வருந்திய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது தோழர்களில் ஒருவரான அம்ர் பின் உமையா அத்மிரி (ரலி) என்பவரை அழைத்து, அவரை அபீசீனியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவரிடம், மன்னர் நஜ்ஜாஸி அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அதில், ‘உம்மு ஹபீபா அவர்கள் விரும்பினால் அவர்களை நான் மணந்து கொள்ளவிருப்பதாக இக் கடிதத்தில் எழுதியிருந்தார்கள்’.

மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் செய்தியைப் படித்தவுடன், தனது அடிமைப் பெண்ணான அப்ரஹாவை உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்து, அவர்களின் சம்மதத்தை கேட்டு வரும்படிக் கூறினார்கள். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் ஆனந்தப் பட்டார்கள், அவர்களையே அவர்களால் நம்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்தச் செய்தியைக் கொண்டு வந்தமைக்காக, அப்ரஹாவுக்குத் தான் அணிந்திருந்த அத்தனை வெள்ளி நகைகளையும் அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களி பரிசாக வழங்கி விட்டார்கள். இன்னும் திருமணத்திற்கான சாட்சியாக நீங்கள் ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும் என்று அப்ரஹா அப்பொழுது தெரிவித்ததை அடுத்து, தனது உறவினரும், குறைஷிக் குலத்தவருமான காலித் பின் ஸயீத் பின் ஆஸ் (ரலி) அவர்களை தன்னுடைய பொறுப்பாளாராக அன்னை அவர்கள் அறிவித்தார்கள்.

அன்றைய தினம் மாலை நேரத்தின் பொழுது, மன்னர் நஜ்ஜாஸி அவர்கள் ஜாபிர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் ஒருவரை அனுப்பி, அனைத்து முஸ்லிம்கள் மற்றும் நண்பர்களையும் தனது அரண்மனைக்கு அழைத்து வரும்படிக் கூறினார்கள். அனைத்து முஸ்லிம்களும் அரண்மனையில் ஒன்று கூடியதன் பின், மன்னர் நஜ்ஜாஸி அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் திருமணத்தை அறிவிப்புச் செய்தார்கள். இறைவனைப் புகழ்ந்த பின், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தனக்குச் செய்தி வந்திருப்பதாக அறிவித்த மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களை மணக்கச் சம்மதம் கேட்டு செய்தி வந்தபின், உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் சம்மதத்தைத் தான் பெற்றதாகவும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சார்பாக தான் 400 திர்ஹம்களை மணக் கொடையாக அளிப்பதாகவும் அப்பொழுது மன்னர் நஜ்ஜாஸி அவர்கள் அறிவித்தார்கள்.

உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்ட காலித் பின் ஸயித் (ரலி) அவர்கள், திருமண ஒப்பந்தத்தை வாசிக்க ஆரம்பித்தார்கள்,

எல்லாப் புகழும் ஏக இறையோனாகிய வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும், அவனையே நான் போற்றிப் புகழ்கின்றேன், அவனிடமே உதவியும் தேடுகின்றேன், அவனிடமே மன்னிப்பையும் வேண்டுகின்றேன். இன்னும், வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் இல்லை என்றும், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதராகவும், அடிமையாகவும் இருக்கின்றார்கள் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன். அவனே சத்திய மார்க்கமான இஸ்லாத்தை அருளினான், அதன் மூலம் அசத்தியமான மார்க்கங்கள் அனைத்தையும் மிகைக்கச் செய்தான். நிராகரிப்போர்கள் வெறுத்த போதிலும் அவன் தனது சத்திய மார்க்கத்தை மேலோங்கிடச் செய்திடுவான். ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, உம்மு ஹபீபா பின்த் அபீ சுஃப்யான் (ரலி) அவர்களை, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கச் சம்மதிக்கின்றேன். அல்லாஹ் அவர்களுக்கு அருள்பாளிப்பானாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இனிமையானதாக ஆக்கி வைப்பானாக..!

பின்பு மன்னர் நஜ்ஜாஸி அவர்கள் 400 திர்ஹம்களை மணக் கொடையாக காலித் பின் ஸயீத் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். திருமண வைபவம் நடந்து முடிந்ததும், வந்திருந்த முஸ்லிம்கள் அனைவரும் கலைந்து செல்ல எத்தணித்த பொழுது, மன்னர் நஜ்ஜாஸி அவர்கள் அனைவரையும் அமரச் செய்து, திருமண விருந்தளித்தார்கள்.

இறைவன் தன் மீது சொறிந்த அருட்கொடைகளையும், இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களின் வரிசையில் தன்னையும் இணைத்து வைத்து விட்டது குறித்து, அன்னையவர்கள் இறைவனுக்கு மிகவும் நன்றிப் பெருக்கோடு பிரார்த்தனை செய்தார்கள், செய்தியைக் கொண்டு வந்த அப்ரஹாவுக்கு மேலும் 50 தினார்களைப் பரிசாகவும் அளித்தார்கள்.

அல்லாஹ்வின் பேரருளால் என்னிடம் இப்பொழுது அதிகமாகவே இருக்கின்றன, நீங்கள் முன்பு செய்தி கொண்டு வந்த பொழுது இப்பொழுது என்னிடம் உள்ளது போன்ற ஆபரணங்கள் இல்லை, எனவே உங்களைச் சரியான முறையில் பரிசு கொடுத்துக் கௌரவிக்க முடியவில்லை, எனவே இந்தப் பணத்தை எனது பரிசாகப் பெற்றுக் கொள்ளுங்கள், இதன் மூலம் நல்ல உடைகளையும், நகைகளையும் செய்து அணிந்து கொள்ளுங்கள் என்று அன்னையவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அப்ராஹா அவர்கள் அன்னையவர்களுக்கு ஒரு பையைப் பரிசாக அளித்து, இதில் மன்னர் நஜ்ஜாஸி அவர்களின் மனைவியர் அனுப்பி வைத்திருக்கும், மிகவும் விலையுயர்ந்த வாசனைத் திரவியங்கள் இருப்பதாகவும், மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களது மனைவியர் அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறினார். இன்னும், அன்னையவர்களின் தான் முன்பு பரிசாகப் பெற்றுச் சென்ற அதே நகைகளை அப்ரஹா அவர்கள் மீண்டும் கொண்டு வந்து, அன்னையவர்களுக்கே பரிசாகக் கொடுத்து விட்டு, தன்னிடம் இதைத் தவிர வேறொன்றும் இல்லை மன்னித்துக் கொள்ளவும் என்று கூறி விட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு தான் தெரிவிக்கும் இந்த செய்தியை அறிவித்து விடும்படியும் கூறினார்கள்.

அன்னையே..! நான் இஸ்லாத்தில் இணைந்து விட்டேன், ஆனால் இதனை நீங்கள் யாரிடமும் கூற வேண்டாம். இறைத்தூதர் (ஸல்) அவர்களை நீங்கள் சந்திக்கும் பொழுது மறக்காமல், எனது ஸலாத்தை அவர்களுக்குத் தெரிவித்து விடுங்கள், அதுவே இந்த ஏழைப் பெண்ணுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரும் உதவியாக இருக்கட்டும் என்று அப்ரஹா அவர்கள் கண்ணீர் மல்கக் கூறி, அன்னைக்கு விடை கொடுத்து மதீனாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

அன்னையவர்கள் இப்பொழுது மதீனாவை வந்தடைந்து விட்டார்கள். அபீசீனியாவில் நடந்தவற்றையும், மன்னர் நஜ்ஜாஸி அவர்கள் திருமணத்தை எவ்வாறு நடத்தி வைத்தார்கள் என்பது பற்றியும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கமாக அன்னையவர்கள் தெரிவித்தார்கள். இன்னும், அந்த ஏழை அடிமைப் பெண்ணின் ஸலாத்தினையும் தெரிவித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காக இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். இந்தச் செய்தியின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்வுற்றதோடு, மன்னர் நஜ்ஜாஸி அவர்களுக்காகவும், அந்த அடிமைப் பெண்ணுக்கும் பதில் ஸலாம் கூறியதோடு, அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் தனது மகளுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது குறித்து, எரிச்சலைடைவார் என எதிர்பார்க்கப்பட்ட இஸ்லாத்தை இன்னும் ஏற்றுக் கொள்ளாத அபூ சுஃப்யான் அவர்கள், மிகவும் சந்தோஷப்பட்டார்கள். முஹம்மது..! அவர் சங்கையான முகத்துக்குரியவர், கண்ணியத்திற்குரியவர் என்று அபூசுஃப்யான் அவர்கள் கூறினார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையை குறைஷிகள் முறித்து விட்டிருந்த அந்த நிலையில், அதனை மீண்டும் புதுப்பித்துச் செல்வதற்காக அபூசுஃப்யான் அவர்கள் மதீனாவிற்கு வந்திருந்தார்கள். அப்பொழுது தனது மகளையும் சென்று பார்த்து வர அவரது இல்லத்துக்குச் சென்றார். அப்பொழுது அங்கு போடப்பட்டிருந்த பாயில் அபூசுப்யான் அவர்கள் உட்கார முயன்ற பொழுது, உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் வெடுக்கென்று அந்தப் பாயை இழுத்துக் கொண்டார்கள்.

ஆச்சரிப்பட்டுப் போன அபூசுஃப்யான் அவர்கள்,
மகளே..! இந்தப் பாயை விடவும் நான் தரம் தாழ்ந்து விட்டேனா அல்லது என்னை விட இந்தப் பாய் மதிப்பு வாய்ந்ததா? என்று தனது மகளைப் பார்த்துக் கேட்டார்.

உண்மையில், இது பரிசுத்தமானவரும் இறைத்தூதருமானவரும் அமரக் கூடியது. இதில் உங்களைப் போன்ற அசுத்தமானவரும், சிலைகளை வணங்கக் கூடியவரும் அமரக் கூடியதல்ல என்று கூறினார்கள். எனவே, தான் நான் அதனை சுருட்டிக் கொண்டேன் என்று தனது தந்தையைப் பார்த்துக் கூறினார்கள்.

மகளே..! நீ என்னை விட்டுப் பிரிந்து போனதிலிருந்து பழக்க வழக்கம் என்றால் என்ன என்பதை நீ மறந்து தான் போய் விட்டாய்.. என்றார் ஆச்சரியத்தோடு..!

அதுவல்ல..! இஸ்லாம் எனக்கு நல்ல பழக்க வழக்கங்களைத் தான் கற்றுத் தந்திருக்கின்றது. இஸ்லாமியப் பண்பாடுகளானது நீங்கள் கடைபிடிக்கும் பண்பாடுகளை விட மதிப்பு வாய்ந்தது, நாகரீகமானது, அதனினும் மாறுபட்டது என்று தனது தந்தைக்குப் பதில் கூறினார்கள் அன்னையவர்கள். அசுத்தம் என்பதற்கு இஸ்லாத்தில் இன்னொரு பொருளையும் குறிக்கக் கூடியதாக இருக்கின்றது.

தனது மகள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதை அறிய இயலாத அபூசுஃப்யான் தனது மகளை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது..,

தந்தையே..! இஸ்லாமானது எனக்கு நேர்வழியைக் காண்பித்துக் கொடுத்துள்ளது. குறைஷிகளின் மிகப் பெரும் தலைவராக இருக்கின்ற எனது தந்தை இன்னும் சத்தியத்தை அறிய இயலாதவராகவும், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவராகவும் இருப்பது தான் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த உலக வாழ்க்கைக்காக எனது தந்தை, குறைஷிகள் தந்திருக்கும் அந்தஸ்தின் காரணமாகத் தான் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள். ஆனால், இஸ்லாம் வழங்கும் கண்ணியத்தின் முன்பாக, இந்தக் குறைஷிகள் தந்திருக்கும் கௌரமும் அந்தஸ்தும் அற்பானவைகளாகும். பார்க்கவும், கேட்கவும், கேள்வி கேட்போருக்கு பதில் அளிக்க இயலாததுமான, உங்களது பிரார்த்தனைகளைச் செவிமடுக்க இயலாததுமானதொரு மரக்கட்டையை நீங்கள் எவ்வாறு தான் வணங்குகின்றீர்களோ..!

தனது மகளின் கேள்விகளால் சந்தோஷப்பட இயலாத அபூசுஃப்யான், தனது மகளைப் பார்த்து..,
காலம் காலமாக வழிவழியாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் மார்க்கத்தை எவ்வாறு உதறி விட்டு வர முடியும், இது சாத்தியமானது தானா என்று கேட்டு விட்டு, தனது மகளது வீட்டை விட்டும் வெளியேறினார், அபூ சுஃப்யான் அவர்கள்.

தனது தந்தையும், தனது சகோதரனும் இஸ்லாத்திற்குள் வந்து விட வேண்டும் என்பதே அன்னையவர்களின் விருப்பமாக இருந்தது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாது, நிராகரித்த நிலையில், சுவனத்தை அடையாமல் மறுமையைப் பாழாக்கி விடக் கூடாதே என்பதில் அன்னையவர்கள் அதிக அக்கறை கொண்டிருந்தார்கள். குறைஷிகளின் ஏனைய தலைவர்களான, அபூ ஜஹ்ல், வலீத் பின் முகீரா, ஆஸ் பின் வாயில், உத்பா பின் ராபிஆ மற்றும் ஷைபா பின் ராபிஆ போன்றவர்கள் போல இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாது மரணமடைந்து விடக் கூடாதே என்றும் கவலைப்பட்டார்கள். மக்காவின் வெற்றியின் பொழுது தான் அபூசுப்யான் அவர்களும், முஆவியா அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பொழுது, அன்னையவர்கள் அளவில்லாத ஆனந்தமடைந்தார்கள். அந்த சமயத்தில், கீழ்க்கண்ட இறைவசனம் இறக்கியருளப்பட்டது.

உங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்வன்; மிக்க கிருபையுடையவன். (60:7)

அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
மேற்கண்ட அந்த வசனம் அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் திருமணத்தின் காரணமாக இறக்கியருளப்பட்டது. அன்னையவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்து கொண்டதன் காரணமாக, குறைஷிகளின் மிகப் பெரும் தலைவர்களாகத் திகழ்ந்த அபூசுஃப்யான், முஆவியா மற்றும் யஸீத் பின் அபூ சுஃப்யான் போன்றவர்கள் இஸ்லாத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளவும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உற்ற தோழர்களாக மாறவும் வழியை ஏற்படுத்திக் கொடுத்தது.

அபு அல் காஸிம் பின் அஸாகிர் அவர்கள் குறிப்பிடுவதாவது,
ஹஸன் (ரலி) அவர்கள் கூறினார்கள், ஒருமுறை முஆவியா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்ற பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது முஆவியா (ரலி) அவர்கள் திரும்ப எத்தணித்த வேளையில், முஆவியா (ரலி) அவர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தன்னுடன் வந்தமருமாறு கேட்டுக் கொண்டார்கள்.

அப்பொழுது, இதனைப் போலவே நாம் மூன்று பேரும் அந்த சுவனச் சோலையில் ஒன்றாக அமர்ந்து, பரிசுத்தமான அந்த சுவனத்துப் பானங்களை அருந்துவதை ஆசைப்படுகின்றேன் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த ஆசையின் மூலமாக, அந்த மூன்று பேரும் இறைவனது நாட்டப்படி சுவனத்தை அனந்தரங் கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இன்னும், சுவனத்தை அனந்தரங் கொள்ளக் கூடிய பெண்மணிகள் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மனைவியாகவும் வாய்ப்பார்கள் என்ற இறைவனின் கட்டளையின்படி, சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்டவர்களில் அன்னையவர்களும் ஒருவராவார் என்பது புலனாகின்றது.

கல்வி ஞானத்தில் சிறந்த விளங்கியதன் காரணமாக, நபிமொழிகளை அறிவித்திருக்கும் அன்னையவர்களின் வரிசையில் அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கின்றார்கள். அன்னையவர்களில் முதலாவது இடத்தை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும், இரண்டாவது இடத்தை அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களும், மூன்றாவது இடத்தை அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களும் நிரப்புகின்றார்கள். அன்னையவர்கள் 65 நபிமொழிகளை அறிவித்திருக்கின்றார்கள். இவர்களது நபிமொழிகளை முஆவியா (ரலி), அப்துல்லா பின் உத்பா பின் அபீசுஃப்யான் (ரலி), உர்வா பின் சுபைர் (ரலி), சாலிம் பின் ஷவால் பின் மக்கி (ரலி) அவர்கள், அபூ அல் ஜர்ரா குர்ஸி (ரலி) போன்றவர்கள் அன்னையவர்களை மேற்கோள் காட்டி அறிவித்திருக்கின்றார்கள். இன்னும் பெண்களில், ஸைனப் பின் உம்மு ஸலமா மக்சூமிய்யா (ரலி) மற்றும் ஸஃபிய்யா பின்த் ஷைபா அப்தரிய்யா (ரலி) போன்றவர்களும் மேற்கோள்காட்டியுள்ளார்கள்.

ஸஹீஹ் புகாரியில் அன்னையை மேற்கோள் காட்டி, அன்னையவர்கள் தனது தந்தை இறந்த செய்தி கேட்ட மூன்றாவது நாள் கழித்து, அன்னையவர்கள் வாசனைத் திரவியங்களை பூசிக் கொண்டார்கள். அப்பொழுது, இந்த நாளில் நான் வாசனைத் திரவியத்தைப் பூசிக் கொள்ளத் தேவையில்லை எனினும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

‘அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசங் கொண்டிருக்கின்ற எந்தப் பெண்ணுக்கும், கணவன் இறந்தாலே தவிர, மற்றவர்கள் இறந்ததற்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிப்பதற்கு அனுமதியில்லை. (அவளது கணவன் இறந்து விட்டால்) அவள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் அனுஷ்டிக்கட்டும்’.

மிஸ்வாக் செய்வது (பல்துலக்குவது) குறித்து, அன்னையவர்கள் கூறியதாக அபுல் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் அறிவித்திருக்கும் நபிமொழி ஒன்று, முஸ்னத் அபூ யஃலா வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னையவர்கள் கூறுகின்றார்கள் :

எனது உம்மத்தவர்களுக்கு சிரமமில்லாதிருக்குமென்றால், ஒளுச் செய்யும் பொழுது எவ்வாறு பல்துலக்குவார்களோ அவ்வாறே, ஒவ்வொரு தொழுகைக்கும் முன்பதாக பல்துலக்கும்படி கூறுவதை நான் விரும்பியிருப்பேன்.

இன்னும் பல நபிமொழித் தொகுப்புகளில் அன்னையவர்கள் அறிவிப்புச் செய்திருக்கும் இன்னொரு நபிமொழியில்,

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னையவர்கள் அறிவிக்கின்றார்கள் :
எவரொருவர் பர்ளான (கடமையான) லுஹர் தொழுகைக்கு முன்பும் பின்பும், நான்கு சுன்னத்தான தொழுகைகளைத் தொழுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் நரக நெருப்பை ஹராமாக்கி விடுகின்றான், (நரக நெருப்பிலிருந்தும் அவரைப் பாதுகாத்து விடுகின்றான்).

உதுமான் (ரலி) அவர்களது வீட்டைக் கொலையாளிகள் முற்றுகையிட்டு, பின் அவர்களைக் கொலை செய்த செய்தியைக் கேள்விப்பட்ட அன்னையவர்கள், கடுமையான கவலைக்குள்ளானார்கள். அப்பொழுது,

இறைவா..! கொலையாளியின் கைகளை துண்டிப்பாயாக, பொதுமக்களின் முன்பாக அவரை அசிங்கப்படுத்துவாயாக..! என்று பிரார்த்தித்தார்கள்.

இறைவன் அன்னையவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்.

உதுமான் (ரலி) அவர்களைக் கொலை செய்த நபரின் வீட்டிற்குள் நுழைந்த ஒரு மனிதர், அந்தக் கொலையாளியை வாள் கொண்டு தாக்க முயற்சி செய்த பொழுது, அதனைத் தனது வலது கரத்தால் தடுக்க முயன்ற அந்தக் கொலையாளியின் வலது கரம் துண்டிக்கப்பட்டது. பின்பு தாக்கிய நபரிடமிருந்து தப்பிக்க முயன்ற அந்த மனிதர் தனது ஆடையை தனது வாயால் கவ்விக் கொண்டு தெருவில் ஓடிய பொழுது, அவரது வாயில் கவ்வியிருந்த அவரது கீழாடை நழுவி கீழே விழுந்து விட்டது, மீண்டும் அதனை எடுத்து அணிய இயலாத நிலையில், பொதுமக்கள் மத்தியில் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தார்.

முஆவியா (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தின் காலத்தின் பொழுது அன்னையவர்கள், டமாஸ்கஸ் நகருக்குச் சென்று வந்தார்கள். இன்னும் முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சியின் பொழுது ஹிஜ்ரி 44 ல் மதீனாவில் மரணமடைந்தார்கள். மரணமடைவதற்கு முன்பதாக, ஆயிஷா (ரலி) மற்றம் உம்மு ஸலமா (ரலி) ஆகியோர்களுக்குத் தகவல் தெரிவித்து, கருத்துவேறுபாடுகள் மற்றும் நமக்குள் எழுந்த பிரச்னைகள் காரணமாக நான் உங்களிருவரில் யாருக்காவது பாவம் செய்திருக்கும்பட்சத்தில் தன்னை மன்னித்து விடும்படி கோரினார்கள். அன்னையவர்களின் இந்தச் செயல் இருவரையும் மிகவும் பாதித்து விட்டது.

(அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (89:28-30)
أحدث أقدم