மன்னிக்கப்படாத இரு பாவங்கள்

பாவங்களின் பரிகாரமாக தவ்பா எனும் இறைமன்னிப்புக் கோரலும் விடையளிப்பும் பரிகாரமாகக் கொள்ளப்பட்டாலும் அதுவும் அதன் நிர்ணய எல்லையை தாண்டுகின்ற போது  அல்லாஹ்விடம் அதுவும் அங்கீகாரத்தை இழக்கின்றது.

1). ஒருவர் தனது உயிர் தொண்டைக் குளியை அடைகின்ற வரை தவ்பாவைப் பிற்போடுவது.

2) சூரியன் மேற்கில் இருந்து இருந்து உதயமாகும் வரை தவ்பாவைத் தாமதிப்பது.

ஆகிய இரண்டு நிலைகளிலும் தவ்பா இறை அங்கீகாரத்தை இழப்பது போன்று பின்வரும் இரு வாபவங்கள் மறுமை நாளில் இறை மன்னிப்பை இழக்கின்றன என்றால் அதில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். 

1)  இணைவைத்த நிலையில் மரணிப்பது.

பின்வரும் குர்ஆன் வசனம் இதற்கு ஆதாரமாகும்.
إِنَّ ٱللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِۦ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُ ۚ وَمَن يُشْرِكْ بِٱللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَٰلًۢا بَعِيدًا. (النساء - 116)
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; அதுவல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.(அந்நிஸா: 116)

இணைவைப்பு காரணமாக அழிக்கப்பட்ட சமூகங்களின் முடிவு பற்றி குர்ஆன் ஹதீஸ்களில் வந்திருக்கின்ற எச்சரிக்கைகள் பற்றி நாம் படித்தாலே அதன் விபரீதம் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

நூஹ் நபியின் சமூகத்தவர் எவ்வாறு தண்டிக்கப்பட்டார்கள் என்பதும் ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட முறையும் இதற்கு ஒரு உதாரணமாகும்.

2) மனித உரிமை மீறல்களோடு  தொடர்புபட்டதாகும்.

ஒருவரை அநியாயமாக அடிப்பது, அவதூறு பேசுவது, அவருக்கு அநியாயம் செய்வது , ஒருவரின் சொத்துக்களை சூறையாடுவது, திருடுவது, எடுத்த கடனை திருப்பிக் கொடுக்காதிருப்பது போன்ற மனிதர்களோடு தொடர்பான உரிமை மீறல்கள் இதில் உள்ளடங்கும்

பின்வரும் ஹதீஸ் இதனை உறுதி செய்கின்றது.

عن أبِي هُرَيْرَةَ رضي الله عنه قالَ قالَ وسول اللَّهِ ﷺ: مَن كانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأخِيهِ مِن عِرْضِهِ أوْ شَيْءٌ فَلْيَتَحَلَّلْهُ مِنهُ اليَوْمَ قَبْلَ ألّا يَكُونَ لَهُ دِينارٌ ولا دِرْهَمٌ إنْ كانَ لَهُ عَمَلٌ صالِحٌ أُخِذَ مِنهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وإنْ لَمْ يَكُنْ لَهُ حَسَناتٌ أُخِذَ مِن سَيِّئاتِ صاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ [أخرجه البخاري ]

நீங்கள் யாராவது ஒரு சகோதரனுக்கு அவரது மானம் அல்லது (பொருளாதாரம் போன்ற) வேறு ஏதாவது ஒன்றில் அநீதி இழைத்திருந்தால், தங்கம், வெள்ளி ஆகிய நாணயங்களைக் கொடுத்து விடுதலை பெற முடியாத மறுமை நாள் வருவதற்கு முன்னால் இன்றே (இவ்வுலகிலேயே) அதில் இருந்து நிரபராதியாகுங்கள். குற்றத்தோடு சம்பந்தப்பட்டவரிடம் நன்மைகள் ஏதும் இருப்பின் அவர் செய்த அநீதியின்  அளவு அவரிடம் இருந்து எடுக்கப்பட்டு(பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும்). அவரிடம் நன்மைகள் இல்லாத போது பாதிக்கப்பட்டவரின் தீமைகள் அநீதி செய்தவர் மீது சுமத்தப்படும்.( புகாரி).
புகாரி, முஸ்லிம் கிரந்தங்களின்
 வேறு அறிவிப்புக்களில் : அநீதி இழைத்தவர் தனது நன்மைகளை இழந்த நிலையில் நரக செல்வார். அவர்தான் இந்த சமுதாயத்தில் مفلس நன்மைகளை இழந்த வங்கரோத்து மனிதன் எனக் கூறப்பட்டுள்ளது. 

மறுமையில்  நீதியே வெல்லும். நீதிமாளன் அல்லாஹ்வே அதன் நீதியரசனாக இருப்பான். 
 
பிறருக்கு அநீதி இழைப்பதை விட்டும் அல்லாஹ் நம்மைப்  பாதுகாப்பானாக! 

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

أحدث أقدم