யவ்முந் நஹ்ர் - துல்ஹஜ் பத்தாம் நாள்

1. வருடத்தில் வரக்கூடிய நாட்களிலேயே மிகவும் சிறந்த ஒரு நாள் யவ்முந்_நஹ்ர் என்ற துல்ஹஜ் 10வது தினம் ஆகும்.

எவ்வாறு ஒவ்வொரு கிழமையிலும் ஜும்மா தினம் சிறந்ததோ அதேபோன்று ஒவ்வொரு வருடத்திலும் உள்ள சிறந்த நாள் துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாள் ஆகும். 

அப்துல்லாஹ் இப்னு குர்த் அல் அஸ்தி அல் ஸிமாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்,

'நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் நாட்களிலேயே மிகவும் மகத்துவமான நாளாக (துல்ஹிஜ்ஜாவின் பத்தாது தினமாகிய) யவ்முந் நஹ்ர் இருக்கின்றது என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள்.

நூல்: (முஸ்னத் அஹ்மத்)

2. அறுத்து பலியிடும் துல்ஹஜ் 10வது தினம் தான் பெரும் ஹஜ்ஜுடைய நாளாகும். அறுத்து_பலியிடுவது அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பத்திற்குரிய அமல் ஆகும். ஜின்களுக்கு அவ்லியாக்களுக்கு நபிமார்களுக்கு அறுத்து பலியிடுவது ஷிர்க்.

யவ்முந் நஹ்ர் (يوم النحر) என்றால் அறுத்து பலியிடும் தினமாகும். இந்த நாளில் தான் மக்கள் அல்லாஹ்விற்காக ஆடு மாடு ஒட்டகங்களை அறுத்து பலியிட்டு அல்லாஹ்வின்பால் நெருங்கக் கூடிய நாளாக இருக்கிறது. இது அல்லாஹ்விடத்தில் மிகவும் விருப்பத்திற்குரிய செயலாக இருக்கின்றது. 

அல்லாஹ் தன்னுடைய அடியார்களிடம் வழங்கியுள்ள செல்வத்தில் அவனுக்கு மிகவும் விருப்பமான செயல், அவர்கள் நாற்கால் பிராணிகளாகிய ஆடு மாடு ஒட்டகத்தை அல்லாஹ்வுக்காக வேண்டி அறுத்து பலி கொடுத்து அதன் ரத்தங்களை சிந்துவதாகும்.

அதேபோன்று இந்த பிராணிகளின் இரத்தத்தை அல்லாஹ்விற்காக இல்லாமல் ஜின்களுக்கு, நபிமார்களுக்கு அல்லது அவ்லியாக்களுக்காக வேண்டி சிந்துவது ஷிர்க்காகும். இது மிகப்பெரிய பாவமான செயலாக இருக்கிறது. எனவே முஸ்லிம்கள் அனைவரும் இத்தகைய செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். 

அறுத்து பலி கொடுக்க வேண்டிய இந்த செயல் அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலாவுக்கு மட்டுமே உரியதாகும். அதனால் தான் அல்லாஹ் கூறுகின்றான் :

(فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ)

ஆகவே, நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக.
[சூரா அல் கவ்ஸர்: 2]

இந்த வசனத்தில் அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா அறுத்து பலியிடுவதை தொழுகையுடன் சேர்த்து கூறுகிறான். இதை வைத்து உலமாக்கள் கூறுகிறார்கள் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் தொழுகையாகும். அதேபோன்று செல்வங்களில் இருந்து செய்யப்படக்கூடிய மிகவும் சிறந்த இபாதத் அறுத்து பலியிட்டு இரத்தத்தை சிந்தக்கூடிய இபாதத் ஆகும்.

அதேபோல் இந்த தினம் சம்பந்தமாக மற்றொரு ஹதீஸில் அலி ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் : 

'யவ்முந் நஹ்ர் என்ற அறுத்து பலியிடும் நாள் தான் பெரும் ஹஜ்ஜுடைய நாளாகும் என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள்.

நூல்: (ஸுனன் அத் திர்மிதி) இந்த ஹதீஸை அஷ்ஷெய்க் அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.

3. யவ்முந்_நஹ்ர் என்ற துல்ஹஜ் 10வது,தினம் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்ட ஒரு தினமாகும்.

இதைக்குறித்து அபூபக்ரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கக்கூடிய ஹதீஸில், 
'நிச்சயமாக உங்களுடைய இரத்தங்கள், உங்களுடைய மானங்கள், உங்களுடைய செல்வங்கள் அனைத்தும் ஹராம் ஆக்கப்பட்டுள்ளது. அவைகளை அநீதியாக எடுப்பது ஹராமாகும். எவ்வாறு இந்த தினம் (10வது தினம்), இந்த மாதம் (துல்ஹஜ்), இந்த இடம் (மக்கா) ஹராம் ஆக்கப்பட்டுள்ளதோ அதேபோன்று முஸ்லிம்களுடைய மானங்கள், அவர்களுடைய உயிர்கள், அவர்களுடைய செல்வங்களையும் அல்லாஹ் ஹராமாக்கி (புனிதமாக்கி) வைத்துள்ளான். அவைகளை அநீதியாக எடுப்பதோ, அநீதியாக செலவு செய்வதோ, அநீதியாக இரத்தங்களை சிந்துவதோ அல்லாஹ் ஹராமாக்கிய மிகவும் பாவமான விஷயமாகும்.'
நூல்கள்: (ஸஹீஹ் அல்-புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஆகவே இதிலிருந்து துல்ஹஜ் பத்தாவது நாள் புனிதமான நாள் என்பது தெளிவாகிறது.

மேலும் இந்த நாளில் ரஸுலுல்லாஹி ﷺ உள்ஹிய்யா கொடுக்கக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.

அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் :
'ரஸுலுல்லாஹி ﷺ அவர்கள் இரண்டு ஆடுகளை  அல்லாஹ்வுடைய பெயரைக் கூறி தக்பீர் கூறி அவர்களுடைய காலை அந்த ஆட்டின் மீது வைத்து தனது புனிதமான கைகளால் அறுத்து ரத்தத்தை சிந்த வைத்து உள்ஹிய்யா கொடுத்தார்கள்.
நூல்கள்: (ஸஹீஹ் அல்-புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உள்ஹிய்யாவை குறித்து உலமாக்களுக்கு மத்தியில் இருக்கும் கருத்துக்களில் அதிகமான உலமாக்கள் கூறிய சரியான கருத்து உத்ஹியா என்பது கடமை அல்ல மாறாக அல்லாஹ் விரும்பக்கூடிய முஸ்தஹபான செயலாகும். அதை விட்டுவிட்டால் பாவமல்ல. ஆனால் செல்வத்தை உடையவர்கள் உள்ஹிய்யா  கொடுப்பது மிகவும் சிறந்ததாகும். 

ரஸுலுல்லாஹி ﷺ அவர்கள் உள்ஹிய்யா கொடுப்பதில் எங்களுக்கு முன் மாதிரியாக செய்து காட்டியுள்ளார்கள். அதேபோல் உற்சாகப் படுத்தி உள்ளார்கள். அதே வேளையில் உள்ஹிய்யா என்பது பெருநாள் தொழுகையைத் தொழுது முடித்த பிறகுதான் கொடுக்க வேண்டும். யார் ஒருவர் தன்னுடைய உத்ஹியாவை தொழுகைக்கு முன்னால் கொடுத்து விடுகின்றாரோ அது உள்ஹிய்யாவாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

أحدث أقدم