ஆன்மீக சுய விசாரணை செய்வோம்.

ஒவ்வொரு முஸ்லிமும் தன் அன்றாட வாழ்வில்   தன்னைத்தானே சுயவிசாரணை செய்து கொள்வது அவசியமாகும் இதனை குர்ஆனும் ஹதீஸும்  வலியுறுத்துகின்றன. ஸஹாபாக்கள், ஸலபுகளும் இவ்விடயத்தில் அதீத கவனம் செலுத்திவந்துள்ளார்கள். ஆன்மீக சுய விசாரணை எனும் பிரயோகம் மூலம் இலக்காகக் கொள்ளப்படுவது யாதெனில் ஒவ்வொரு முஸ்லிமும் தனது கடந்த கால வாழ்வில் இடம்பெற்ற தவறுகளை நினைத்துப் பார்த்து  அவற்றை  திருத்திக்கொள்ள முயற்சிப்பதுடன் நிகழ்காலத்தில் அவ்வாறான தவறுகள் ஏற்படாமல் தன்னை பாதுகாத்துக் கொள்வதோடு எதிர்காலத்தில் ஆன்மீக நிலையில்  முன்னரை விட சிறந்த அடைவை அடையத் திட்டமிடுவதே ஆன்மீக சுய விசாரணையின் நோக்கமாகும்.

ஆன்மீக சுய விசாரணையின் அவசியம் பற்றி அல்குர்ஆன் இவ்வாறு பேசுகின்றது..
ஈமான் கொண்ட விசுவாசிகளே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைய மறுமை நாளுக்காக எவற்றை சேமித்து வைத்திருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்த்துக் கொள்ளட்டும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் சகல நடவடிக்கைகளையும் அறிந்தவனாகவும் அவதானிப்பவனாகவும் இருக்கின்றான். ஸுரா ஹஷ்ர் : 18. 

ஆன்மீக சுய விசாரணையை வலியுறுத்தும் நபி மொழிகள் ஹதீஸ்ளில் நிறைந்து காணப்படுகின்றன. 

நபியவர்கள் கூறினார்கள்.. இவ்வுலகில் யாரேனும் பிறருக்கு பண விடயத்திலோ மானம் மரியாதை விடயத்திலோ அநீதி இழைத்திருப்பின் தங்கமோ வெள்ளியோ பணமோ எந்தப் பயனும் அளிக்காத மறுமைநாளை அடைவதற்கு முன்னால் இவ்வுலகிலேயே அவற்றுக்கான பிராயச்சித்தத்தை தேடிக் கொள்ளவும். மறுமை வந்துவிட்டால்  ஒன்றில் இவரின் நன்மைகளிலிருந்து பாதிக்கப்பட்டவருக்கு பறித்து வழங்கப்படும், அன்றேல் பாதிக்கப்பட்டவரின் தீமைகளை இவர் சுமக்க வேண்டி வரும். நூல் : புகாரி.

என் உயிர் எவன் வசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களில் சிலர் சொர்க்கத்துக்கும் அவருக்கும் ஒரு சாணளவு இடைவெளி யிருக்கும் அளவுக்கு நற்செயல்கள் புரிந்து விட்டு இறுதிக்கட்டத்தில் ஒரு பாவ காரியத்தில் ஈடுபட்டு அத்தனை நல்லமல்களும் அழிக்கப்பட்டு நரகவாதியாகவும் மரணித்து விடுகிறார். மற்றொருவர் நரகத்துக்கும் அவருக்கும் ஒரு சாணளவு இடைவெளி இருக்கும் அளவுக்கு பாவகாரியங்கள் புரிந்து விட்டு கடைசி கட்டத்தில் சொர்க்கத்துக்குரிய ஒரு செயலைச் செய்யும் பாக்கியம் பெற்று மன்னிப்பு பெற்று சொர்க்கவாசியாக உடன் மரணித்தும் விடுகிறார். நூல்:புகாரி. நமது இறுதி முடிவு எப்படி அமையப்போகின்றது என சிந்தித்து கவலைப்பட்டு இறுதிநேரத்தில் கலிமாவுடன் மரணிக்கும் பாக்கியத்தை நல்க அல்லாஹ்வைப் பிரார்தித்து அச்சத்துக்கும் ஆதரவுக்குமிடையில் வாழ தன்னைத் தயார்படுத்துவதும் ஆன்மீக சுய விசாரணையின் அனுகூலமேயாகும். 

நிச்சயமாக நான் மறுமையில்  யாருக்கும் பண விடயத்திலோ மானம் மரியாதை விடயத்திலோ  அநீதிகளைத்ததாக குற்றஞ்சாட்டாத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பதற்கே விரும்புகின்றேன் என நபியவர்கள் கூறினார்கள். அபுதாவுத். 

உமர் ரலியல்லாஹு அவர்கள் அடிக்கடி இப்படி கூறுவார்கள் ...உங்களுக்கு மறுமையில்  விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னால் உங்களை நீங்களே விசாரணை செய்து கொள்ளுங்கள் உங்களுடைய செயல்கள் மறுமையில் நிறுக்கப்படுவதற்கு முன்னால் நீங்களே அச்செயல்களை நிறுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களது மறுமை விசாரணையை இலகுபடுத்தும். ஏனெனில் இன்று இவ்வுலகில் ஒருவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம், அவருக்கு இறைவனிடத்தில்  விசாரணை கிடையாது, மறுமையில் அவர் விசாரணைக்கு மட்டும் உட்படுத்தப்படுவார் எந்த நல்ல அமல்களும் செய்ய முடியாது.  நூல்: திர்மிதி . 

நபியவர்கள் சொன்னார்கள் ...
நிச்சயமாக மனிதர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களுக்கு மத்தியிலே தான் இருக்கின்றன அல்லாஹ் அவற்றை விரும்பிய படி மாற்றி விடுவதற்கு சக்திபெற்றவனாவான்.  நூல் : புகாரி. 

அவ்வாறே நபியவர்கள் உள்ளங்களை மாற்றி விடுபவனே! அல்லாஹ்வே என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தை எடுத்து நடப்பதன் மீது ஸ்திரப்படுத்துவாயாக உள்ளங்களை  புரட்டி விடுபவனே!  என்னுடைய உள்ளத்தை உனக்கு வழிப்பட்டு நடப்பதன் மீது பக்கம் புரட்டி விடுவாயாக என்று அடிக்கடி பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். நூல்: திர்மிதி. 

ஒரு முறை நபியவர்களிடத்தில் ஒரு வாலிபர் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விபச்சாரம் செய்வதற்கு அனுமதி தாருங்கள் ஒன்று கேட்டார் அங்கு குழுமியிருந்த மக்கள் அவரை ஆத்திரத்தோடு உற்று நோக்கினர். நபியவர்களோ கனிவுடன் அவரை அழைத்து நண்பரே நீங்கள் விரும்பும் அச்செயலை ஒரு ஆடவன் உங்கள் தாயுடன் ஈடுபடுவதற்கு விரும்புகிறார். அதற்கு நீர் சம்மதிப்பீரா?  என்று கேட்க ஒருபோதும் நான் விரும்ப மாட்டேன் என்றார். நபியவர்கள் மீண்டும் அச்செயலை அவன் உன் மனைவியுடன் உன் சகோதரியுடன் உன் மகளுடன் செய்வதற்கு முற்பட்டால்  நீ அதைப் பொருந்திக் கொள்வாயா? என கேட்க அதற்கும் அவர் கோபத்துடன் ஒருபோதும் அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்றார் . உடனே நபியவர்கள்  அவரிடம் " நீ ஒரு பெண்ணிடம் விபச்சாரம் செய்தால் அப்பெண்ணும்  ஒரு ஆடவனின் மனைவியாக தாயாக சகோதரியாக மகளாக இருப்பாள் தானே!  அப்படியாயின் நீ அப்பெண்ணுடன் புணர்வதால் அவர்களுக்கு எவ்வளவு ஆத்திமும் அவமானமும் ஏற்படும்? அப்படி நடப்பதை எப்படி  ஏற்றுக்கொள்வார்கள்? என  அவரின் தவறை புரிய வைத்தபோது அவர் அழுதவராக பாவ மன்னிப்பு கூறினார் . பின் நபியவர்கள் அவரின் நெஞ்சில் கையை வைத்து யா அல்லாஹ்!  இவரின் உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவாயாக,பாவங்களை மன்னிப்பாயாக.. இவரது மர்ம உறுப்பை ஹராத்தை விட்டும் காப்பாயாக.. என பிரார்த்தித்தார்கள் அதன் பின் விபச்சாரத்தை போல அவருக்கு வெறுப்பான விடயம் வேறு எதுவும் இல்லை என்ற அளவுக்கு   அச்செயல் மீது அவருக்கு விருப்பமற்றுப் போய்விட்டது நூல் : அஹ்மத், ஸில்ஸிலா ஸஹீஹா.

அன்பின் சகோதரர்களே புனித ரமலான்  எம்மை விட்டுச் சென்று ஒரு மாதம் கூட கடந்திருக்காத இந்நிலையில் புனித ரமலானில் எங்களது அமல் இபாதத்துகள் எப்படி சிறப்பாக அமைந்திருந்தன, இப்போது எப்படி குறைந்திருக்கின்றன, இன்னும் நாட்கள் செல்லச் செல்ல எம்மிடம் எவ்வளவு தூரம் ஆன்மீக வறுமையும் வங்கு ரோட்டுத்தனமும் திவால் நிலையும் ஏற்படுமோ என சற்று சுய விசாரணை செய்து பார்க்க வேண்டும்.  ரமலானில் செய்துவந்த  இரவுத் தொழுகை இப்போதும் எம்மிடம் உள்ளதா? ஐங்காலத் தொழுகையை ரமலானில் போன்று ஜமாத்துடன் இன்றும் நிறைவேற்றுகின்றோமா?, முன்பின் சுன்னத்துகளை முறையாக செய்கின்றோமா குர்ஆன் திலாவத் என்னிடம் தொடர்கிறதா விடைபெற்றுச் சென்று விட்டதா? பாவங்களைக் கண்டால் வறுத்து ஒதுங்கும் நிலை இப்போதும் தொடர்கிறதா அல்லது அறுந்து விட்டதா? என்று கவனித்துப் பார்க்க வேண்டும். 

நபியவர்கள் யுக முடிவின் அடையாளங்களாக கூறியவற்றில் அநேகமானவை கண்முன்னே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு முஸ்லிமை பாவச் செயல்களுக்குள் தள்ளி மறுமை வாழ்வை நாசமாக்கி நரகில் நுழைய வைக்கும் துர்க்காரியங்கள் அனைத்தும் சர்வசாதாரணமாக தாராளமாக இடம்பெறும் ஒரு காலத்தில் நாம் வாழ்கின்றோம் . இறையச்சம் இல்லாத ஒருவன் இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்து மரணிக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லுமளவுக்கு திரும்பும் பக்கமெல்லாம் தீமைகளும் அநியாயங்களும் மார்க்க விரோத செயல்களும் மலிந்து போய்விட்ட ஒரு காலத்தை அடைந்திருக்கின்றோம். எனவே அல்லாஹ்வுடனான எமது தொடர்பையும் நெருக்கத்தையும் அதிகப்படுத்துவது மாத்திரமே இவ்வுலகில் எம்மை  நல்லவனாக வாழ வழிசமைக்கும் . அதற்காக நம்மை நாமே சுய விசாரணை செய்யும் பொறிமுறையை வளர்த்து அதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். 

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருவர் "ஒருவரிடம் இறையச்சம்  இருப்பதற்கான  அடையாளங்கள்  எவை?" என வினவியதற்கு பின்வரும் 4 அடையாளங்களை இறையச்சத்தின் வெளிப்பாடெனச் சொல்லிக் காட்டினார்கள்.
அல்லாஹ் எந்த நிலையிலும் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அவனின் உள் மனம் சொல்ல வேண்டும், குர்ஆன் ஹதீஸின் வழியில் அவன் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும், தனக்கு அல்லாஹ் தந்தவற்றை பொருந்தி ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பெற்றவனாக மாறி , மறுமை நாளை முன்னிறுத்தி அதற்காக தன்னை தயார்படுத்துபவனாக இருப்பானாயின் அவன் ஒரு முழுமையான இறையச்சம் மிகு இறை விசுவாசி என்றார்கள் . 

எனவே நாமும் எமது வாழ்வில் அவ்வப்போது சுய விசாரணை மேற்கொண்டு கடந்த கால தவறுகளை திருத்தி சிறந்த எதிர்காலத்தை திட்டமிட்டு நல்ல அமல்கள் புரிவதற்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக ஆமீன். 

ஆக்கம் 
அப்துல் கபூர் முஹம்மது ஜலீல் மதனி பகுதித் தலைவர்,
மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரி
காத்தான்குடி.
أحدث أقدم