கடன் பற்றி அறிந்து கொள்ளுவோம்

இஸ்லாத்தில் அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது! மேலும் தேவைப்படுபவருக்குக் கடன் கொடுத்து உதவுவது ஆர்வமூட்டப்பட்ட நற்செயல் ஆகும்!

அல் குர்ஆனிலே மிக பெரிய வசனம் கடனை பற்றி தான் அல்லாஹ் கூறி உள்ளான்!

கடன் என்ற மூன்று எழுத்து பலரின் வாழ்கைக்கே முற்று புள்ளியாக அமைந்து உள்ளது! அந்த அளவிற்கு கடன் தற்போது உள்ள காலத்தில் மிகவும் கொடுமையானதாக ஆகிவிட்டது!

முடிந்த அளவுக்கு கடனை வாங்கமல் இருப்பதே சிறந்தது! கடன் வாங்குவதால் நம்முடைய நிம்மதி போகும் - தூக்கம் போகும் - மன கவலை என்று நிறைய ஏற்படும்!

நிர்பந்த சூழ்நிலை அல்லது அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டும் கடனை பெறுங்கள்!

இஸ்லாத்தில் கடனை எவ்வாறு வாங்க வேண்டும் எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக நமக்கு கூறி உள்ளது! கடன் பற்றி விரிவாக பார்ப்போம் :

கடன் நம்மிடம் கேட்டால் அதை பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும் பின்பு கொடுக்க வேண்டும் கேட்ட உடனே கொடுக்க கூடாது அவர்கள் என்ன நோக்கத்திற்கு அதை வாங்குகிறார்கள் என்பது நமக்கு தெரியாது!

கடனை பெற கூடியவர்கள் மூன்று வைகையினர்!

1) கல்வி - மருத்துவம் - உணவு, உடை, இருப்பிடம்,தொழில் தொடங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைக்காக கடன் கேட்பவர்கள்!

2) மது - சூதாட்டம் போன்ற தீய காரியங்களில் ஈடுபடுவதற்காக கடன் கேட்பவர்கள்!

3) ஆடம்பர திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பெயர் சூட்டுவிழா, கந்தூரி விழா, பிறந்தநாள் ஆடம்பர வாகனம் வாங்குதல் இது போன்ற மார்க்கத்தில் அனுமதி இல்லாத செயல்களுக்கு கடன் வாங்கி செலவு செய்தல்!

இதில் நாம் முதல் வகையினருக்கு மட்டும் கடன் வழங்கலாம்!

இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்!

(அல்குர்ஆன் : 5:2)

கடன் வாங்கும் போது கொடுக்கும் போது கடைபிடிக்க வேண்டியவைகள் :

எழுதி வைக்க வேண்டும் :

சிறியதோ அல்லது பெரியதோ கடன் வாங்கும் போதும் அல்லது கொடுக்கும் போதும் கட்டாயமாக அதை நாம் எழுதி வைத்து கொள்ள வேண்டும்!

(அல் குர்ஆன் : 2 : 282)

கடன் கொடுக்கல் வாங்கலின் ஒப்பந்தம் வேறும் பேச்சின் அடிப்படையில் மட்டும் இருந்தால் பின்பு வீண் பிரச்சனைகளும் சிக்கல்களும் வர வாய்ப்புகள் அதிகம்!

கடன் வாங்கியவர், பின்பு தான் கடனே வாங்க வில்லை என்று கூறலாம்! அல்லது தான் கடன் வாங்கியதை மறுக்கலாம் அல்லது தான் கடன் வாங்கியதை விட குறைந்த தொகை வாங்கியதாகக் கூறலாம்!

கொடுப்பவரும் வாங்குபவரும் நல்லவர்களாக இருந்தால் கூட மறதியின் காரணமாக மறந்து மாற்றிப் பேச வாய்ப்புள்ளது ஆனால் நாம் எழுதி வைத்து கொண்டாள் இவ்வாறு நிகழ்வுகள் தவிர்க்க முடியும்!

கடனை எழுதி கொள்ளுவது என்றால் விவரமாகவும் முழுமையாகவும் எழுதிக் கொள்ள வேண்டும். கடனின் அளவு, திருப்பிக் கொடுக்க வேண்டிய காலம், பல தவணைகள் என்றால் அது பற்றிய விவரம் எழுத வேண்டும்!

பின்னால் இருதரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கூட ஒப்பந்தம் பத்திரமே தீர்ப்பளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு விவரமாக தெளிவாக எழுதி இருக்க வேண்டும்!

இதனால் தான் அல்லாஹ் கடனை பற்றி கூறும் பொழுது முதலில் எழுதி வைத்து கொள்ளுங்கள் என்று கூறி உள்ளான்!

தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்!

(அல்குர்ஆன் : 2:282)

எழுத்தாளர் :

எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும்.

(அல்குர்ஆன் : 2:282)

கடன் வாங்க கூடியவர் அல்லது கொடுக்க கூடியவர் இருவரையும் சார்ந்தவர் இல்லாமல் இருவருக்கும் நீதமான ஒருவர் கடன் கொடுக்கல் வாங்கள் பற்றி எழுத வேண்டும்!

ஒப்பந்தம் எழுத கூடியவர் நீதி, நேர்மை உடையவராக இருக்க வேண்டும். அப்படி பட்ட நபரை தான் நாம் எழுத்தாளர் ஆக வைக்க வேண்டும்!

நேர்மையில்லாத அல்லது நம்பிக்கை இல்லாத ஒருவர் ஒப்பந்தம் எழுதும் போது பிற்காலத்திலும் தனக்கு வேண்டப்பட்டவருக்கு சாதகமாக பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது! 

ஒப்பந்தம் அல்லது பத்திரத்தை வாசிக்க கூடியவர் :

யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது!

(அல்குர்ஆன் : 2 : 282)

கடன் பெற்று கொண்ட போது எழுதிய ஒப்பத்தை கடன் பெற்றவர் அனைவரின் முன்பும் வாசிக்க வேண்டும் அல்லது சாட்சி மற்றும் கடன் கொடுத்தவர் முன்பு வாசிக்க வேண்டும்! இதில் எதையும் கூட்டியோ அல்லது குறைதோ வாசிக்க கூடாது!

கடனை வாங்குபவர் தன் வாயினாலே இவ்வளவு தொகை வாங்குகிறேன் என்றும் இத்தனை நாளில் திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்று கூற வேண்டும்! கடன் கொடுக்க கூடியவர் வாசிக்க கூடாது!

அதே போன்று கடன் பெற்றவர் படிக்க தெரியாதவர் அல்லது பலகீனமான வயதானவர் ஆக இருந்தால் அவர்களின் பொறுப்பு தாரிகள் அவர் சார்பாக வாசிக்க வேண்டும்!

கடன் கொடுத்தவர் ஏன் வாசிக்காமல் இருக்க வேண்டும் என்றால் : கடன் கொடுத்தவர் அல்லது வேறு ஒருவர் பத்திரத்தை வாசித்து விட்டால்!  கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுக்க தாமதம் ஆகினால் இந்த ஒப்பந்தை நீங்களே எழுதி படித்து கொண்டீர்கள் நான் எதுவும் கூற வில்லை என்று கூறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு!

இது போன்று தேவை இல்லாத பிரச்சனைகளை தவிர்க்க சரியான முறையை இதன் மூலம் அல்லாஹ் நமக்கு கற்றுத் தருகிறான்!

தவணை கொடுத்தல் :

ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன் : 2:282)

கடன் கொடுக்கும் போது அல்லது வாங்கும் போது தவனை தேவைப்பட்டால் நாம் அதனை ஏற்று தவனை கொடுக்கலாம்!

தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்!

(அல்குர்ஆன் : 2:282)

இந்த வசனத்தின் மூலம் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையோ கொடுக்கும் போது அதை கால வரையறையுடன் சரியான முறையில் எழுத வேண்டும் இதில் நாம் அலட்சியமாக இருக்க கூடாது!

தவணை முறை தேவைப்பட்டால் திருப்பிக் கடனை கொடுக்கும் நாள் பற்றிய மிக தெளிவாக விளக்க வேண்டும்.

அதே போல் ஒன்றுக்கு மேற்பட்ட தவணைகளில் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால் எத்தனைத் தவணைகள் என்பதும் கடைசித் தவணை எப்போது என்பதும் தெளிவுபடுத்தப்பட குறிப்பிட வேண்டும்!

சாட்சி :

எந்த ஒரு முக்கியமான செயலுக்கும் காரியத்திற்கும் சாட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் !

குறிப்பாக கடன் கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சி மிக முக்கியமானதாகும்!

(நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; 

(பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;

(அல்குர்ஆன் : 2:282)

கடன் வாங்கும் போது அல்லது கொடுக்கும் போது நீதியான நேர்மையான நபிக்கையான இரு ஆண்கள் சாட்சியாக ஆக்கி கொள்ள வேண்டும்!

இரு ஆண்கள் இல்லை என்றால் நம்பிக்கையான  ஒரு ஆணும் இரண்டு பெண்களும் சாட்சிகளாக இருக்க வேண்டும் !

பெண்கள் இரண்டு நபர் சாட்சியாக இருக்க காரணம்  ஒருவர் தவறாக கூறினாலும் மற்றொருவர் அவருக்கு நினைவுட்டலாம்!

சாட்சிகள் எப்போது அழைத்தாலும் வர வேண்டும் மறுக்க கூடாது! அதற்கு ஏற்ற நபரை சாட்சியாக நாம் வைத்து கொள்ள வேண்டும்!

மிக முக்கியமானது சாட்சிகளை பணம் அல்லது பொருள் கொடுத்தோ அல்லது பயத்தை ஏற்படுத்தியோ தங்களுக்கு சாதகமாக பேச வைக்க கூடாது! இது பெரும் பாவமாகும்!

அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன் : 2:282)

அதே போன்று சாட்சி எதையும் மறைக்காமல் கூற வேண்டும்!

அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது!

(அல்குர்ஆன் : 2:283)

அடமானம் வைத்து கடன் பெற்று கொள்ளலாம் :

கடன் கொடுக்க கூடியவர் தன் பொருள் திரும்பக் கிடைக்க உத்தரவாதம் வேண்டும் என்பதற்காக கடன் வாங்குபவரிடம் அடமானமாக ஏதேனும் பொருளை வாங்கிக் கொள்ளலாம்!

கடன் வாங்கியவரால் கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் போனால் இந்தப் பொருள் மூலம் தன் கொடுத்த கடனை பூர்த்தி செய்து கொள்ளலாம்!

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) தம் கவசத்தை அந்த யூதரிடம் அடகு வைத்தார்கள். 

(நூல் : புகாரி : 2513)

அடமானப் பொருளை பயன்படுத்தலாமா :

அடமானமாக பெற்றப் பொருளை பயன்படுத்த கூடாது. ஏனெனில் கடன் கொடுத்ததை வைத்து கூடுதல் பலன் அடைந்ததாக அது ஆகி விடும்!

ஆனால் அடமானமாகப் பெற்ற பொருள் கால்நடையாக இருந்தால் அந்த கால்நடையை பராமரிக்க வேண்டும் அதனால் கால்நடையாக இருந்தால் மட்டும் அதை பயன் படுத்தி கொள்ளலாம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கால்நடை அடமானம் வைக்கப்பட்டதாக இருந்தால் பிராணியின் முதுகில் பயணிக்கலாம், பால் தரும் பிராணி அடமானம் வைக்கப்பட்டிருந்தால் பாலை அருந்தலாம். வாகனிப்பவர், பால் அருந்துபவர் மீதே அப்பிராணிக்காக செலவு செய்வது கடமையாகும் !

(நூல் : திர்மிதி : 1254)

மறைமுக வட்டி :

கடன் வாங்கியவர், தான் கடன் வாங்கியதன் காரணத்தால் கடன் கொடுத்தவருக்கு ஏதேனும் கொடுத்தல் அல்லது செலவு செய்தல் போன்ற காரியங்கள் அனைத்தும் மறைமுகமான வட்டியாகும்!

(நூல் : புகாரி : 3814)

ஹவாலா என்றால் என்ன :

ஹவாலா எனும் சொல்லுக்கு திருப்புதல் என்பது பொருள் ஆகும்!

அதவாது ஒருவர் தான் வாங்கியக் கடனை இன்னொருவரிடம் பெற்றுக்கொள்ளுமாறு பொறுப்பை திருப்பி விடுவதற்கு ஹவாலா என கூறுவார்கள்! 

யாரிடம் கடனை அடைக்கும் பொறுப்பு புதிதாக கொடுக்க படுகிறதோ அவர் அப்பொறுப்பை ஏற்று கடனை அடைக்கும் அளவிற்கு வசதி படைத்தவராக இருக்க வேண்டும்!

கடன் கொடுத்தவருக்கு இதில் முழு சம்மதம் இருக்க வேண்டும் அதே போன்று புதியதாக பொறுப்பை ஏற்க கூடியவருக்கும் இதில் முழு சம்மதம் இருக்க வேண்டும்!

ஒருவேளை கடனை அடைக்க புதிதாக ஏற்று கொண்ட நபரால் கடனை  திருப்பி கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுவிட்டால், கடன் பெற்றவரே திருப்பிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும் 

(நூல் : புகாரி : 2287)

கஅபாலா என்றால் என்ன :

கஃபாலா என்றால் பொறுப்பேற்றுக் கொள்வதாகும்!

எந்த ஒரு உடன்படிக்கையாக இருந்தாலும் பேச்சுவார்த்தையாக இருந்தாலும் பொறுப்பை நிறைவேற்றக் கடமை பட்டவருக்காக ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்வது சிறந்த செயல் ஆகும்!

அதாவது கடன் பெறுபவர் தான் பெற்ற கடனை திருப்பிக் கொடுப்பார் என்பதற்கு ஒருவர் பொறுப்பேற்று கொள்ள வேண்டும்! ஒரு வேளை கடன் வாங்கியவர் கடனை திருப்பிக் கொடுக்காவிட்டால், தானே கடனை திருப்பி கொடுப்பதாக உறுதியளிக்க வேண்டும்!

(நூல் : புகாரி : 2291)

கடனை பாதியாக குறைத்தல் :

உங்களிடம் ஒருவர் கடன் பெற்று அதை திருப்பி அடைக்க கஷ்டம் பட்டால் நீங்கள் விருப்பம் பட்டால் கடனை பாதியாக தள்ளுப்படி செய்து கொண்டு மீதி பாதியை மட்டும் பெற்று கொள்ளலாம்!

(நூல் : புகாரி : 471)

கடன் கொடுத்தவர் கடுமையாக பேசவும் அனுமதி உண்டு :

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார்.

இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு' என்று கூறினார்கள்'

(நூல் : புகாரி : 2401)

கடன் பெற்றவரின் சூழ்நிலை அவரின் குடும்ப நிலையையும் மனதில் வைத்து கொள்ளுங்கள் அவசரம் பட்டு கடுமையாக பேச வேண்டாம்!

கடன் வாங்கியவர்க்கு அவகாசம் அளித்தல் :

கடன் பெற்றவர்கள் அனைவராலும் சொன்ன நாளில் சரியான முறையில் கடனை திருப்பி செலுத்த இயலாத நிலை ஏற்பட்டால்!

கடன் கொடுத்தவர்கள் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றால் போல் கடனை திருப்பி கொடுக்க அவகாசம் அளிக்கலாம்!

அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.

(அல்குர்ஆன் : 2:280)

கடன் வாங்கியவருக்கு அவகாசம் கொடுப்பதின் சிறப்பு :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன்.

கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்' என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது.

(நூல் : புகாரி : 2391)

கடன் பெற்றவரின் கடமைகள் :

ஒரு சிலர் கடன் வாங்கும் போது மிகவும் பணிவாக வந்து கேட்பார்கள் அல்லது கஷ்டங்களை முன் வைத்து கேட்பார்கள் ஆனால் கடனை அடைக்கும் அளவுக்கு பொருளாதாரம் வந்த உடன் பலருக்கு அதை திருப்பி செலுத்தும் எண்ணம் ஏற்படுவது கிடையாது!

இன்னும் சிலர் கடனை திருப்பி செலுத்தாமல் கடன் கொடுத்தவரை ஏமாற்றி விட்டு அல்லாஹ்விடம் தவ்பா செய்து கொள்ளுகிறார்கள் ஆனால் இது பெரும் பாவமாகும்!

கடன் பெரும் போதே அதை திருப்பி செலுத்தும் எண்ணத்துடன் கடனை வாங்க வேண்டும் அதே போன்று அழகிய முறையில் திருப்பி கொடுக்க வேண்டும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான்.

எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்.

(நூல் : புகாரி : 2387)

கடனை அடைக்காமல் தள்ளி போட கூடாது :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். 

(நூல் : புகாரி : 2400)

கடனை அடைக்க சிரமம் படுவோர்க்கு உதவி செய்வதின் சிறப்பு :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான்.

(நூல் : புகாரி : 2442)

கடனை திரும்ப வாங்கும் போது பெரும் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் : 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெரு தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

(நூல் : புகாரி : 2076)

கடன் இருந்த நிலையில் ஜனாஸா தொழுகை தொழ மறுத்த நபி (ஸல்) அவர்கள் :

ஒரு மய்யித் கொண்டுவரப்பட்டது. அவர்மீது கடன் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கிறதா? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்க்கு, ஆம் இரண்டு தினார்கள் என்று மக்கள் பதிலளித்தனர், அப்படியானால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகதாதா (ரலி) அல்லாஹ்வின் தூதரே அதை அடைப்பது என் பொறுப்பு என்றார். அதன் பின் நபி (ஸல்) அந்த மய்யித்திற்காக தொழுகை நடத்தினார்கள்.

(நூல் : அபூதாவூத் : 3345)

போரில் ஷஹீத் ஆனாலும் கடன் நம்மை விட்டு நீக்காது  :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த்தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன; கடனைத் தவிர.

(நூல் : முஸ்லிம் : 3832)

மரணம் அடைந்தவர்கள் மீது கடன் இருக்கும் வரை அவர்களுக்கு கபூரில் வேதனை நடைபெற்றது கொண்டு இருக்கும்!

அதனால் மரணித்தவரின் பொறுப்புதாரிகள் கடனை அறிந்து அதை முடிந்த அளவுக்கு விரைவாக அடைக்க முயற்சி செய்ய வேண்டும்!

வீணாக பாஃத்தியா ஓதுவதிலோ அல்லது அனைவரையும் அழைத்து ஹதியா அல்லது கத்தம் செய்கிறோம் செய்கிறோம் என்று பணத்தை வீண் ஆக்காமல் கடனை அடைக்க முயற்சி செய்யுங்கள்!

கடனில் இருந்து பாதுகாப்பு தேடுங்கள் :

நிர்ப்பந்த தேவை அல்லது அத்தியாவசிய இன்றி வேறு எதற்கும் கடனை பெறாதீர்கள்!

சில நாட்கள் மகிழ்ச்சிக்கு கடன் பெற்று வாழ்கை முழுவதும் மகிழ்ச்சியை தொலைத்தவர்களும் உண்டு!

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, 'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறுவார்கள்.

(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள்,

‘ மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான் ’ என்று பதிலளித்தார்கள். 

(நூல் : புகாரி : 2397)
أحدث أقدم